மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

புதன், 20 ஜனவரி, 2021

அந்நாளை நினைக்கையிலே (01) தாயைக் காட்டாமலேயே குட்டியை மட்டும் எனக்குத் தருவான் !


மூன்றாம் வகுப்பு வரை நாகர்கோவில் கோட்டாரிலுள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் பயின்ற பின்னர் சொந்த ஊரான பறக்கைக்கு குடும்பம் குடி பெயர்ந்தததன் காரணமாக நான்காம் வகுப்பை பறக்கையில் தொடர்ந்தேன் !

 

நாகர்கோவிலில் நான் பயின்ற போது முத்துசாமி, முருகன் , சுபாஷ் ,ஆறுமுகம் ஆகியோர் எனது நெருங்கிய தோழர்கள்.மூக்குத்தி அணிந்து எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சியளிக்கின்ற முத்துசாமி எனது நெருங்கிய நண்பன். தனது புத்தகத்தின் நடுப் பக்கத்தில் மயிலிறகை வைத்திருந்து குட்டி போட்ட பின்னர் தாயைக் கண்ணில் காட்டாமலேயே குட்டியை மட்டும் எனக்குத் தருவான் !

 

பென்சில் சீவும் போது கிடைக்கின்ற துகள்களை கஞ்சித் தண்ணியிடன் கலந்து தயாரித்ததாகக் கூறி "அப்சரா" என்ற முத்திரை பதித்த அழி ரப்பரை எனக்குத் தருவான். ரப்பரை தனது எண்ணெய் தலையில் தேய்த்து புத்தகத்திலுள்ள படத்தின் மேல் அழுத்தி ரப்பர் மேல் படத்தை பதியச் செய்து என்னை வியப்பில் ஆழ்த்துவான் !

 

தன்னை வீரசூர பராக்கிரமியாகச் சித்தரிக்கும் கதைகளையே முத்துசாமி எங்களிடம் எப்போதும் கூறுவான்.தனது கதைகளில் உப்பு போன்று சிறிது உண்மையையும் அவன் கலப்பதுண்டு. ஐந்தாம் வகுப்பு படிக்கின்ற ஐயப்பன் அண்ணன் பெரிய கால்சட்டையும் தொளதொள வென்ற மேற்சட்டையும் அணிந்திருப்பான். கனத்த கரகரப்பான குரலில் பேசுகின்ற சற்று உயரமான அண்ணன் தன்னை கண்டு கொள்ளாமல் செல்கின்ற ஒன்பதாம் வகுப்பு மாணவர்களைக் கூட "ஏலே"என்றழைப்பது கண்டு நாங்கள் வியந்ததுண்டு !

 

 " குமார் எங்கூட நாலாங் கிளாஸ் படிச்சான். கெட்டிக் காரப்பய" என பெருமையாக கூறுவான். ஒவ்வொரு வகுப்பிலும் அய்யமறக் கற்றுத் தெளிந்த பின்னரே அடுத்த வகுப்புக்கு செல்வதென்ற உயரிய உறுதியான கொள்கை உடையவன் ஐயப்பன் அண்ணன். இளமையான எங்கள் வகுப்பு வாத்தியார் அண்ணனுடன் படித்திருப்பாரோவென்ற சந்தேகம் பலமுறை எனக்கு எழுந்ததுண்டு.

 

அண்ணனுடைய அப்பா கோட்டாறு பயோனியர் ராஜ்குமார் திரையரங்கில் பணியாற்றி வந்த காரணத்தால் படம் பார்க்க அவனுக்கு இலவச அனுமதி உண்டு !

 

 மதியச் சாப்பாட்டிற்கு வீட்டிற்குச் சென்று நாங்கள் வேகமாக திரும்பி விடுவதால் காலையில் பள்ளி செல்லும் போதும் வகுப்பு முடிந்து மாலையில் வீடு திரும்பும் போதும் முத்துசாமி நிறைய கதையளப்பான். காளையின் இரு கொம்புகளையும் தன் கைகளினால் பிடித்து சண்டையிட்டு வீழ்த்திய கதை, . நான்கு குண்டர்களை " டுசிம்...டுசிம்" என அடித்து விரட்டி ஊர்ப் பெண்களை விடுவித்த கதையையெல்லாம் முத்துசாமி சொல்லும் போது நானும் அய்யப்பன் அண்ணனும் இடைமறித்து கேட்கின்ற கேள்விகள் முத்துசாமிக்கு எரிச்சலை வரவழைக்கும் !

 

"இந்த டவுன்ல ஒரு மாட்டையாவது முழுசாப் பார்த்திருக்கியால ? கதை விடுகான் சவம் " என்று ஐயப்பன் அண்ணன் கிண்டல் செய்யும் போது நண்பனான நானும் உடன் சிரிப்பதை முத்துசாமி சற்றும் ரசிப்பதில்லை.


காலையில் குளித்து விட்டு வந்த முத்துசாமியின் தாத்தா கொடியில் காயப்போட்டிருந்த தனது கோவணத்தை பலமுறை தேடியும் கிடைக்காமல் துவண்டு நிற்க, விரைப்பாக கொடியில் நின்று கொண்டிருந்தது இட்லித் துணி. மல்லிகைப்பூ போன்ற இட்லியை முத்துசாமியின் பாட்டி வழக்கமான அளவை விட அதிகமாக அன்று சாப்பிட்டதாக முத்துசாமி கூறிய கதை ஓரளவு நம்பத் தகுந்ததாக இருந்தது !

 

ஐயப்பன் அண்ணனும் முத்துசாமியும் தீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் மட்டுமன்றி எல்லா சனிக்கிழமை இரவுகளிலும் இரண்டாம் ஆட்டம் தவறாமல் பார்ப்பவர்கள். "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு" பாடலை அண்ணன் தனது கர கரத்த குரலில் பாடும் போது முத்துசாமி புத்தகத்தால் தனது முகத்தை மறைத்த படியே சிரிப்பான் !

 

அண்ணனும் கதைவிடுவதில் முத்துசாமிக்கு சற்றும் சளைத்தவனல்ல. தன்னை வம்புக்கிழுத்த பத்து பேரை தனது நீண்ட கம்பை லாவகமாக சுற்றியே துரத்தியடித்த கதையை அண்ணன் சொல்லும்போது " பெரிய இடத்துப் பெண்" திரைப்படத்தை நேற்று அண்ணன் பார்த்த விசயத்தை முத்துசாமி எனது காதில் மெல்ல கிசு கிசுத்தான் !

 

" ஏல ! நீ சேது கிட்ட கிசு கிசுக்கத நான் கேட்டுகிட்டு தாம்ல இருக்கென். நீ ஆனைய கையால அடிச்சு கொண்ணது மாதிரி கதை விட்டா நாங்க எப்படில நம்புகது" என்று முத்துசாமியின் கதைகளில் தன்னை விட கலப்படம் அதிகமென்பதை சூசகமாகத் தெரிவித்தான் அண்ணன்.


உப்பிய கன்னங்கள் கொண்ட அண்ணன் தனது காற்சட்டைப் பையில் ஒழக்கு சம்பா அரிசியாவது இருப்பு வைத்திருப்பான். கொஞ்சம் கொஞ்சமாக கடலை மாதிரி கொறித்துக் கொண்டே தான் பள்ளிக்கு வருவான். தனது சிகையை பத்து நிமிடம் ஒதுக்கி கண்ணாடி முன் நின்று நன்கு வாரிய பின்னர், தாறுமாறாகக் குலைத்து விட்டு வருவது அண்ணனுடைய பாணி !

 

தலையில் நிறைய தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்ற ஏறிய நெற்றியும் நீளமான சிகையுமுடைய முத்துசாமி தனது சிகையை குருவிக்கூடு போல அழகாக சுருட்டி வைத்திருப்பதுடன், கூடு கலையாமல் இருக்கிறதாவென அடிக்கடி கைகளால் உறுதி செய்து கொள்வான் !

 

துடுக்கான பேச்சு, சுறுசுறுப்பான செயல்பாடுடைய முத்துசாமி எங்கள் ஒன்றாம் வகுப்பு அ.பிரிவின் மாணவர் தலைவர். வருகைப் பதிவேடு, சாக் பீஸ், கரும்பலகை துடைப்பான் ஆகியவற்றை தலைமையாசிரியர் அறையிலிருந்து வகுப்புக்கு எடுத்து வருவது கரும்பலகையை துடைப்பது, மாணவர்கள் எவரேனும் இயற்கை உபாதைகள் கழித்துவிட்டால் தனது நண்பர்களுடன் சேர்ந்து மண்ணை அள்ளி மேலே போடுகின்ற அவசர‌சேவை புரிவது, ஆசிரியர் வேறு பணிகளின் பொருட்டு வகுப்பை விட்டு சென்றாலோ, விடுப்பில் செல்கின்ற தருணங்களிலோ, வகுப்பில் பேசுபவர் பெயர் எழுதுவது போன்ற பணிகள் மாணவர் தலைவருடையது !

 

நல்ல மணல் எங்கு செழிப்பாக கிடைக்குமென்பதை ஒரு மாணவர் தலைவர் அறிந்திருப்பது அத்தியாவசியம். மண்ணை அள்ளிப் போட்ட பின்னர் தனது மேற்சட்டையிலோ காற் சட்டையிலோ அல்லது பிற மாணவர்களின் சட்டைகளிலோ உள்ள பச்சை நிறத்தை தொட்டுக் கொண்டால் தீட்டு நீங்கிவிடும் என்பது முத்துசாமியின் ஐதீகம் !


ஒரு விரல் நுனியை மற்றொரு விரல் நுனியுடன் இணைத்துப் பிடித்தால் தீட்டில்லை என்பது அவனது வாதம். அவனது சட்டையில் யாரேனும் சாக்கடைக் கழிவைத் தேய்த்தால் கூட பின் பக்கத்தில் மறைத்து வைத்திருந்த தனது இணைந்த விரல்களை முன்னே காட்டி "டொட்டொடைங்" என்று தன் வாயால் இசைத்து தீட்டிலிருந்து விடுபட்டதாக வெற்றிச் சிரிப்பை உதிர்ப்பான் முத்துசாமி !

 

பேசுபவர்கள் பெயர் எழுதும் போது சற்று அழகான மாணவிகளின் பெயரை எழுதாமல் அழகை ஆராதனை செய்பவன் அவன்.அவர்கள் வம்பேதும் பேசவில்லை யெனவும் கல்வி குறித்த விவாதத்தில் ஈடுபட்டிருந்த தாகவும் தனது சிகையை சரி செய்தவாறே எங்களிடம் கதை விடுவான். உற்ற நண்பன் என்ற வகையில் எனது பெயரையும் அவன் எழுதுவதில்லை என்பது எனக்கு ஆசுவாசம் !

-------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

தி.சேதுமாதவன்.

ஆட்சியர்,

I.T.I.முகநூற் குழுமம்.

[10-11-2020]

---------------------------------------------------------------------------


1 கருத்து:

  1. கதையளக்கும் முத்துச்சாமி கட்டுரைக்குக் கல கலப்பு ஊட்டும் கதை மாந்தன் ! பாராட்டுகள் !

    பதிலளிநீக்கு