மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

செவ்வாய், 27 ஜூலை, 2021

அந்நாளை நினைக்கையிலே (38) தம்பி வரதராஜனும், இராஜுவும் அரசுப் பணிக்குத் தேர்வு !


அம்மாவின் பேச்சு ஏற்படுத்திய தாக்கத்தால் இடக்கையால் அம்மா முதுகில் ஓங்கி அடித்து விட்டு "இறைவன் தரும் போது பெற்றுக் கொள்ள வேண்டும். பக்தியை மட்டுமே நம்மிடம் எதிர்பார்க்கின்ற பகவானிடம் நிபந்தனைகள் விதிப்பது முறையல்ல" எனக்கூறிக் கோபத்துடன் அவரது நண்பர் மாணிப்போற்றி வீட்டிற்குச் சென்று விட்டார் அப்பா.

 

இன்பத்தையும் துன்பத்தையும் சமநிலையில் காண்கின்ற அப்பாவின் மனப்பாங்கு கண்டு நான் வியந்ததுண்டு. எளிதில் உணர்ச்சி வசப்படாத அப்பா , அம்மாவை அடிப்பது அதுவே முதல்முறை.

 

தட்டில் தேங்காய், பழத்துடன் மனதில் எதிர்பார்ப்புகளையும் சுமந்தவாறே பக்தர்களில் பலர் ஆலயத்திற்கு செல்வது இயல்பெனினும் , துன்பம் நேர்கையில் மனமுருகி பிரார்த்திக்கும் பலரும், இன்பத்தை துய்க்கையில் இறைவனை மறப்பதுடன், பிரார்த்தனை பலித்த பின்னர் காணாமல் போவதுமுண்டு.

 

கோரிக்கை நிறைவேறாமையால் வெறுப்புற்று இறைவனுக்காக தான் செய்த திருப்பணிகளைத் தியாகங்களாகவும் இறைவனை நன்றியற்றவராகவும் சித்தரித்து தம்மைக் கைவிட்டவரைக் காணச் செல்வதையே நிறுத்தியவர்கள் பலரையும் அனுபவத்தில் கண்டதுண்டு.

 

எந்நிலையிலும் மாறாத பக்தி செலுத்த வேண்டுமெனில் பகுத்தறிவு, தெளிந்த மனம், நல்லவர் சேர்க்கை ஆகியவற்றுடன் பூர்வஜென்ம புண்ணியமும் மிக அவசியம்.

 

'வறுமையில் வாடும் பக்தர் ஒருவர் குருவாயூரப்பனைத் தரிசிக்கச் செல்லும் போதெல்லாம் வித்தியாசமான வேண்டுதலொன்றை முன் வைப்பது வழக்கம். இறைவன் தனக்கு அளிக்கின்ற செல்வத்தின் சரிபாதியை அவருக்கே சமர்ப்பிப்பதான வினோத வேண்டுதல் வைத்த பக்தருக்கு திடிரென கோடி ரூபாய் லாட்டரி அடித்தது.

 

இறைவனுடனான ஒப்பந்தப்படி பாதிப் பங்கை சமர்ப்பிக்க மனம் ஒவ்வாத பக்தர் " கள்ள குருவாயூரப்பா ! என் மீதான அவநம்பிக்கையால் தானே , பாதியை நீயெடுத்துக்கொண்டு மீதியை எனக்கு அளித்திருக்கிறாய் " என ஒரு போடு போட்டார். இத்தகைய மனநிலை கொண்ட பக்தர்கள் இன்றும் நம்மிடையே உண்டு.

 

நண்பன் முருகனுக்கு நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழகத்தில் கம்மியராக (மெக்கானிக்) வேலை கிடைத்தாலும், வேலை முடித்து வந்தவுடன் குளித்து விட்டு என்னுடன் கோவிலுக்கு வரத் தவறுவதில்லை.

 

சுருக்கெழுத்து வகுப்புகள் முடிந்தவுடன் மாலை நேரம் திருப்பணிகளில் மும்முரமாக தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்ற என் தம்பியின் பள்ளித் தோழனான தம்பி இராஜு, அன்பின் நெருக்கத்தால் மதுசூதனப் பெருமாளை நெட்டையர் என்றும் மகாதேவரை கட்டையர் என்றும் குறிப்பிடுவதுண்டு. புன்னகை மாறாத முகத்துடன் அயராது திருப்பணி செய்யும் இராஜுவைக் கண்டு நான் வியந்ததுண்டு.

 

ஒரு 'பிரதோஷ நாள்' காலை ஏழு மணியளவில் பாதாதி கேசம் போர்த்தியவாறு சயனத்திலிருந்த அடியேனை , கையில் தினமலர் நாளிதழுடன் எழுப்பி , தமிழ் நாடு அரசு தேர்வாணையத்தால் 1986 ல் நடத்தப்பட்ட அமைச்சுப் பணியாளர்களுக்கானத் தேர்வில் நானும் அக்காவும் தேர்வாகியிருந்த நற்செய்தியைச் சொன்ன என் தம்பியின் முகம் இன்றும் என் நினைவில் உள்ளது.

 

சிறு விளக்கின் ஒளிக்கும் அந்தகாரத்தைப் போக்கும் வல்லமையுண்டென்ற இராம கிருஷ்ணரின் அருள்வாக்கைப் போன்றே அம்மாவின் நீண்ட நாள் கவலை இறைவனருளால் நொடிப்பொழுதில் முடிவுக்கு வந்தது. இறைவன் கருணையால் தம்பி வரதராஜனும், இராஜுவும் அடுத்த ஓராண்டுக்குள் அரசுப் பணிக்குத் தேர்வானது மட்டுமன்றி இன்று உயர் பதவிகளிலும் உள்ளனர்.

 

இறைவனது பெருமைகளை வர்ணிக்கும் புலமை எனக்கில்லாத காரணத்தால் , பெரிய புராணத்தை இயற்றத் துவங்கிய சேக்கிழார் பெருமானுக்கு எம்பெருமானே 'உலகெலாம் ' என அடியெடுத்துச் சிறப்பித்த முதற்பாடலுடன் பறக்கை -அக்கரை பெருஞ்சடை மகாதேவரை நன்றியுடன் தாழ்பணிந்து இப்பதிவை நிறைவு செய்கிறேன்.

 

"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் .

நிலவுலாவிய நீர் மலி வேணியன்.

அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்"

திருச்சிற்றம்பலம் !

-------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்.

ஆட்சியர்,

தமிழ்ப் புலம் வலைப்பூ,

[தி.: 2052, கடகம் (டி) 01]

{17-07-2021}

--------------------------------------------------------------------------------

திங்கள், 26 ஜூலை, 2021

அந்நாளை நினைக்கையிலே (37) பிள்ளைகளுக்கு வேலை கிடைத்தால் பிரதோஷம் நடத்துகிறேன் !


பறக்கை அக்கரை பெருஞ்சடை மகாதேவர் ஆலயத்தில் பிரதோஷ பூஜைகள் துவங்கத் தீர்மானித்ததைத் தொடர்ந்து 1984 ல் முதலாவது பிரதோஷ பூஜையை ஏற்கும் பேறு அப்பாவுக்கு வாய்த்தது.

 

---------------------------

பிரதோஷ வரலாறு:

----------------------------

மகாதேவரின் அனுமதியின்றி மந்திரகிரி மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அசுரர்களுடன் சேர்ந்து தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது களைப்பின் மிகுதியால் வாசுகியால் வெளியிடப்பட்ட ஆலகால விஷத்தின் வீரியம் சமுத்திரத்தை பொங்கியெழ வைத்தது மட்டுமன்றி தேவர்களையும் துரத்த கலக்கமுற்ற தேவர்கள் கயிலைக்கு விரைந்து மகாதேவரிடம் அடைக்கலம் புகுந்தனர்.

 

வானுலக தேவர்களே இடுக்கண் வருங்கால் இறைவனை நாடுபவர்களெனில் கலியுக மானுடர் எம்மாத்திரம் ?

 

தேவர்களைக் காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தைப் பருகிய சிவபெருமானின் கழுத்தை பார்வதி தேவி பிடிக்க , தேவர்களைத் துயரத்திலிருந்து மீட்ட நீலகண்டருக்கு நன்றி செலுத்தும் பொருட்டும், பிழை பொறுத்தருள வேண்டியும் பிரார்த்தித்த தேவர்களுக்கு நந்தி தேவரின் கொம்புகளுக்கிடையே நர்த்தனமாடிய படியே மகாதேவர் தரிசனமளித்த சனிக்கிழமை மாலை நேரமே பிரதோஷம் (பிரபாதம் என்றால் காலை நேரம்) எனப் படுகிறது. பிரதோஷம் என்பதற்கு குற்றமற்ற என்ற பொருளும் உண்டு.

 

அதிமகத்துவம் வாய்ந்த பிரதோஷ பூஜைகளைத் தொடர்ந்து தொழுகின்ற பக்தர்களைத் துன்பங்கள் அணுகாததுடன், வாழ்வில் மலை போல் தோன்றுகின்ற தடைகள் யாவும் பனிபோல் மறைந்து போகும்.

 

எதிர்பார்த்தது போலவே அக்கரைக் கோவில் பிரதோஷ பூஜைகளில் பெண்களின் பங்களிப்பு திருப்தி கரமாக அமைந்தது. மகாதேவருக்கு அபிஷேக அலங்காரங்கள் முடிந்து மாலை ஆறரை மணியளவில் பிரதோஷ பூஜைகளுக்குப் பின் பக்தர்களுக்கு தீர்த்தமும் திருநீறும் வழங்கிய பிறகு அடுத்த பிரதோஷ பூஜைக்கான தேதியை உரக்க அறிவித்து உபயதாரருக்கு பிரசாதத்தை வழங்கத் தயாரானார் மாணிப் போற்றி.

 

பிரதோஷ பூஜைகள் மக்களிடையே பிரபலமாகாத காலகட்டமாதலால், உபயதாரர் இல்லாத நிலையில் பிரசாதத்தை ஏற்றுக் கொண்டு வீட்டையடைந்தார் அப்பா.

 

முந்தைய இரவு தடம் எண் 36 எ. பள்ளம் பேருந்தினுள் கொசுக்கடியுடன் தூங்கி எழுந்து பகலில் படிக்கட்டில் நின்ற படியே பணியாற்றும் நடத்துனரான ஐம்பத்தேழு வயது அப்பா அன்று இரவு சுமார் எட்டு மணியளவில் களைப்பாக சாய்வு நாற்காலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது' அடுத்த பிரதோஷமும் நமக்குத் தான் ' என அம்மாவிடம் பேச்சினிடையே மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

 

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அக்கா தற்காலிகப் பணியிலிருக்கும் நிலையில் , படிப்பை முடித்து ஐந்தாண்டுகள் கடந்த பின்பும் அரசுப் பணியேதும் எனக்கு அமையாத கவலையில் , சாய்வு நாற்காலியில் ஓய்வெடுக்க அமரும் சந்தர்ப்பங்களில் அப்பாவிடம் புலம்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் அம்மா.

 

1985- ல் கல்லூரிப் படிப்பை முடித்த தம்பி நாகர்கோவிலில் சுருக்கெழுத்துப் பயிற்சி எடுத்து வந்த நேரம். நவம்பர்.1987 ல் பணி ஓய்வு பெறும் நிலையிலுள்ள அப்பாவுக்கு குறைவான பணிக்காலமே அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இருந்த காரணத்தால் ஓய்வூதியம் கிடையாது.

 

அரசுப் பணியேதும் எனக்கு கிடைக்காத பட்சத்தில் , சமூகத்தில் மதிக்கப்படுகின்ற அப்பா , ஓய்வுக்குப் பின் ஏதாவது திருமண மண்டபத்தில் காக்கிச் சட்டையுடன் காவலராகப் பணியாற்ற வேண்டிய கதியேற்படுமோவென்ற கவலை எங்களை ஆட்கொண்டது.

 

சிக்கலான பொருளாதார நிலையில் இரண்டாவது பிரதோஷத்தையும் ஏற்று வந்த அப்பாவிடம் "பிள்ளைகளுக்கு வேலை கிடைத்தால் பிரதோஷம் நடத்துகிறேன் என வேண்டிக் கொள்வது தானே" என அம்மா கூறினார்.

 

மாம்பழக்காரரிடம் பேசும் பாணியில் மகாதேவரிடமும் பேரம் பேசும் மனநிலை கொண்ட சாதாரண குடும்பத் தலைவிகளின் பிரதிநிதியான அம்மா அங்ஙனம் கூறியதில் வியப்பேதுமில்லை. இறைவனுக்கு தொண்டு செய்வதையே கடமையாகக் கொண்ட அப்பாவுக்கு, நிபந்தனைகளுடனான சுயநலம் சார்ந்த பக்தியின் வெளிப்பாடான அம்மாவின் வார்த்தைகள் கடுங்கோபத்தை ஏற்படுத்தியது.

-----------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்.

ஆட்சியர்,

தமிழ்ப் புலம் வலைப்பூ,

[தி.: 2052, ஆடவை (ஆனி) 26]

{10-07-2021}

-----------------------------------------------------------------------------           

 

அந்நாளை நினைக்கையிலே (36) எதிர்காலம் குறித்த கேள்விகளும் இனம்புரியா கவலைகளும் !

  

மாலை வேளைகளில் குளித்து விட்டு நண்பன் முருகனுடன் மதுசூதனப் பெருமாள் தரிசனம் முடித்து அக்கரை பெருஞ்சடை மகாதேவரையும் தரிசித்த பின் ஜவஹர் நூலகம் செல்வது வழக்கம்.

 

அதன் பின்னர் மேலத்தெரு கணேஷ் வீட்டின் பக்கவாட்டில் அமைந்துள்ள தாணு அண்ணனின் மாஸ் காபி நிறுவனத்திற்குச் சென்று நண்பர்களுடன் அளவளாவிய பின்னர் இரவு எட்டு மணியளவில் வீடு திரும்புவது வழக்கம்.

 

கிழக்கு திசை நோக்கிய சிறு கற்கோவிலின் எதிர்ப்புறம் பச்சைக் கம்பளம் போர்த்திய அழகிய வயல் வெளிகள், நண்டுகளுடன் மீன்களும் ஆமைகளும் விளையாடும் நீர் நிறைந்த வாய்க்கால்கள்.

 

அதன் பின்னே இராவணனுடான போரில் மயங்கி வீழ்ந்த இலக்குவனையும் வானரர்களையும் காப்பாற்றும் பொருட்டு ஆஞ்சநேயரால் எடுத்து வரப்பட்ட மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலையின் உடைந்த பகுதியாக கருதப்படும் மருந்துவாழ் மலை, மனதையும் உடலையும் இதமாகத் தடவிச் செல்லும் தென்றல் காற்று என இன்றளவும் பழைமை மாறா ஆலயத்தினுள் ஏகனாகவும் அனேகனாகவும் அருள் பாலிக்கின்ற அக்கரை மகாதேவரது திருவடிகளைப் பற்றுகின்ற பேறு பெற்றவர்கள் புண்ணியவான்களே.

 

கம்மியர் மோட்டார் வண்டி தொழிற்பிரிவில் தேசிய தொழிற் சான்றுடன் தொழிற்பழகுனர் பயிற்சியும் முடித்தபின் வேலைக்காக முயன்று கொண்டிருந்த முருகனுடன் , 1981ல் பட்டப்படிப்பை முடித்த பின் கஜினி முகமதுவின் சாதனைகளைக் கடந்து போட்டித்தேர்வுகளில் பங்கெடுத்து வந்த நானும் இணைந்தேன்.

 

தெப்பக் குளத்திற்குச் செல்லும் வழியில் அமைந்திருந்தது எனது வீடு. தலை நிறைய எண்ணெய் தேய்த்துச் செல்பவர்கள், மண்வெட்டியுடன் செல்பவர்கள், ஒற்றைப் பிராமணர், கணவனை இழந்தோர் போன்றோர் தேர்வெழுதக் கிளம்பும் வேளை எதிரில் தோன்றுவதைத் தவிர்க்கவியலாது.

 

சகுனப் பிழை காரணமாக உத்தேசித்த காரியம் கைகூடாதென்ற பிற்போக்கான எண்ணம் மேலிட இத்தகையோர் எதிரில் தோன்றும் போது ஒதுங்கி நின்றேன்.

 

குறிப்பாக பெண்கள் மனம் உளவியல் ரீதியாக பாதிக்கப்படக் கூடுமென்ற பகுத்தறிவும் , சகுனங்களை விட சக்தி வாய்ந்த இறையருளும், உழைப்பும் இது போன்றோரின் உளப்பூர்வமான பிரார்த்தனையும் கரை சேர்க்குமென்ற எண்ணம் மேலிட்ட போது சகுனம் பார்க்கும் வழக்கம் நாளாவட்டத்தில் என்னால் கைவிடப்பட்டது.

 

அக்கால கட்டத்தில் அக்கரை மகாதேவரை இடைவிடாது தரிசித்த இளைஞர்கள் பலர் தொடர்ச்சியாக வேலை வாய்ப்புகளைப் பெற்று நற்கதியடைந்த நிலையில், மகாதேவரது திருவடிகளை சரணடைந்தால் வாழ்வில் கரையேறி விடலாமென்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் பெற்றோரால் வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்ட இளைஞர்களுடன் மெய்யன்பர்களும் பகவானை மொய்த்தனர்.

 

எதிர்பார்ப்புகளேதுமின்றி இளைஞர்களும் பெரியவர்களும் மிகுந்த ஆன்மீக ஈடுபாட்டுடன் சிவத் தொண்டில் ஈடுபட்டிருந்த நிலையில், பெற்றோரின் உந்துதலால் இணைந்த இளைஞர்களில் பலரும் இறை காருண்யத்தால் மெய்யன்பர்களானதை பூர்வ ஜென்ம புண்ணியம் என்று தானே கூறவியலும் ?

 

ஆன்மீகப் பாதையில் பயணிக்கும் இளைஞர்கள் பலரும் தீய பழக்கங்களிலிருந்து முழுமையாக விடுபட்டு நல்ல பழக்கங்களுக்கு தம்மையறியாமலேயே தாவி விட்டதை எனது அனுபவத்தில் கண்டு வியந்திருக்கிறேன்.

 

சுற்றுப்பிரகார தீப ஒளியிலும் மூலஸ்தானத்திலுள்ள திருவிளக்குகளின் பிரகாசத்திலும் ஜொலிக்கின்ற பரம்பொருளை - இமைப் பொழுதும் நெஞ்சைவிட்டு நீங்கானைக் கைகூப்பி மெய் மறந்து 'ஓம் நமசிவாய ' என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உதடுகள் உச்சரிக்கும் வேளை சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சர் குறிப்பிட்டது போன்று பக்தவத்சலனின் காருண்யத்தால் ஒளி பரவி இருள் விலகுவதை மனதால் உணர முடியும்.

 

இறை வழிபாட்டின் போது நம்மையறியாமலேயே மின்னலெனத் தோன்றி மறைகின்ற புதிரான எதிர்காலம் குறித்த கேள்விகளும் இனம்புரியா கவலைகளும் , இறை தரிசனம் முடித்து திரும்பும் வேளை சிவன் தாழ் சமர்ப்பித்த தைரியத்தில் மாயமாகி விடுவதை உணர்ந்ததுண்டு.

 

ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள அக்கரை மகாதேவர் ஆலயத்தில் மகளிர் வருகை மிகக் குறைவானதாகவே இருந்தது. இறைவனின் அருள் வீச்சு எண்ணற்ற பக்தர்களைச் சென்றடைய வேண்டுமென்ற நல்லெண்ணம் காரணமாக புகழ்பெற்ற சிவனடியார் ஒருவரை பத்மனாபன் சார், மாணிப் போற்றி, எனது அப்பா, ராசா அண்ணாச்சி, மாதேவன் பிள்ளை மாமா, கங்கை மாமா மற்றும் பக்தர்களடங்கிய குழுவொன்று ஆலயத்திற்கு அழைத்து வந்தது.

 

இறை முன் ருத்ரம் பாடியமர்ந்த சிவனடியார் நீண்ட பிரார்த்தனைக்குப் பின்னர் பிரதோஷ பூஜைகளின் சிறப்புகளை விவரித்து விட்டு இறைவனது அருள் பெரும்பாலான பக்தர்களைச் சென்றடைய பிரதோஷ பூஜைகள் வழிவகுக்குமென அருளியதை சிரமேற்கொண்டு பக்தர்கள் குழு அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியது.

-----------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்.

ஆட்சியர்,

தமிழ்ப் புலம் வலைப்பூ,

[தி.: 2052, ஆடவை  (ஆனி) 19]

{03-07-2021}

----------------------------------------------------------------------------------

புதன், 30 ஜூன், 2021

அந்நாளை நினைக்கையிலே (35) சண்டியர் போல் வீதிகளில் நடை பயிலும் பசுக்கள் !

 

றுவடைக் காலம் வந்துவிட்டாலே கலகலப்புக்குப் பஞ்சமில்லை. வீட்டு முற்றங்கள் கொல்லைப் புறங்கள் மட்டுமன்றி வீதிகளும் மாடு கட்டி சூடடிக்கும் களங்களாக மாற, இரட்டை மாட்டு வண்டிகளில் மூட்டை மூட்டையாக பாட்டக்காரர்கள் (குத்தகைதாரர்கள் ) நில உடைமையாளர்களுக்கு நெல் கொண்டு செல்வதும், தெற்குத்தெரு மணியண்ணனைப் போன்ற அனுபவமிக்க அளவையாளர்கள் நெல்மணிகளைப் பாட்டாகப் பாடியே மரக்காலில் கண்ணிமைக்கும் நேரத்தில் அளந்து கொடுப்பதும், கண் கொள்ளாக்காட்சி !

 

தேரோடும் வீதியில் காய்ந்து கொண்டிருக்கும் வைக்கோல் மீது தங்கள் எதிர்ப்பையும் புறந்தள்ளி குட்டிக்கரணம் போடுகின்ற வாண்டுகளை "சவத்துக்குப் பொறந்த பயலுக" எனத் திட்டிய படியே கம்புடன் துரத்துகின்ற தாத்தாக்கள். வீதியில் மறுநாளும் உலர வைக்கும் பொருட்டு மலையெனக் குவித்து வைக்கப்பட்ட சரிவரக் காயாத வைக்கப்போர் மீது சறுக்கு விளையாடி அக்கப்போர் செய்யும் சிறுவர்கள் !

 

பூமிப்பந்து உங்களுக்கானது மட்டுமல்ல. எங்களுக்கும் அதில் உரிமையுண்டென முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொரிக்க வசதியாக வைக்கோலை அள்ளிச் செல்லும் காகங்கள் மற்றும் குருவி இனங்கள்.


'சொல் பேச்சு கேட்காவிட்டால் உங்களுக்கும் இதே கதி தான் ' என சூடடிக்கும் மாடுகளின் பின்பக்கத் தளும்புகள் இரண்டையும் காட்டி சிறு குழந்தைகளை சூசகமாக மிரட்டுகின்ற அம்மாக்கள் !

 

சூடடித்த பின் அதிகாலையிலேயே துணியில் கட்டி வந்த தேங்காய் துவையலுடனான கட்டிச்சோற்றை தெப்பக்குளத் தண்ணீரில் நனைத்து அரச மர நிழலிலமர்ந்து கோரப்பசியுடன் விழுங்குகின்ற தொழிலாளிகள்.


மிதிவண்டிச் சக்கரங்களின் இரும்புப் பற்களில் சிக்கிய வைக்கோலை விடுவிக்கும் போது இடம் மாறுகின்ற சங்கிலியை சரி செய்தபின் கைகளில் படிந்த கருப்பு மையை கால் சட்டைகளின் பின்புறம் தடவியபடியே வாடகை மிதிவண்டிகளில் பயிற்சி எடுக்கும் சிறுவர் கூட்டம் !

 

சண்டியர் போல் வீதிகளின் நடுவில் நடை பயிலும் பசுக்களும் எருமைகளும் காளைகளும் பொறுப்பின்றி விட்டுச் செல்லும் சாணத்தைப் பொறுப்புடனே அள்ளி வீட்டையும் முற்றத்தையும் மெழுகியது போக மிஞ்சியதை உமியுடன் கலந்து வீட்டுச் சுவர்களிலேயே வறட்டி அடிக்கும் கிராமத்து மங்கையர்கள் !

 

வைக்கோலில் புரண்ட நமைச்சல் தாங்காது பிறந்த கோலத்தில் தெப்பக்குளத்தில் குட்டிக்கரணம் அடித்துக் குளித்து கரைக்கு வந்த சிறுவர்களைப் புடைக்கக் காத்திருக்கும் அம்மாக்களிடம், பிடி கொடுக்காமல் கையிலேந்திய துகில்களுடன் ஓடுகின்ற விட்டில் பூச்சிகளையொத்த சிறுவர் கூட்டம் !

 

வீதியில் கிடக்கின்ற நெல் மணிகளைப் பொறுக்கித் தின்னும் குருவிகளையும் காகங்களையும் அணில்களையும் போட்டியாளர்களாக எண்ணி விரட்டுகின்ற குஞ்சுகளுடன் கூடிய கோழிக் கூட்டம். நிம்மதியாக உண்ண விடாமல் தங்கள் குஞ்சுகளைக் கண்வைத்து வானத்தில் வட்டமிடும் பருந்துகளிடமிருந்து பாதுகாக்க சிறகுகளை விரித்த படியே அலைபாயும் தாய்க் கோழிகள் !

 

அளவில் பெரிய அறுவடைக் கால கோழி முட்டைகளில் உபயோகித்தது போக மிஞ்சியவற்றை அக்கம் பக்கத்து வீடுகளில் விற்பவர்கள். விற்பனையின் பொருட்டுக் கடைக்கு எடுத்துச் செல்லும் முட்டைகளை வழியிலேயே உடைந்து விட்டதாக அம்மாவிடம் பச்சையாகச் புழுகி பச்சை முட்டை குடிக்கும் நிபுணர்கள் !

 

நீண்ட நாட்களாக குறி வைத்திருந்த அறுவடை வருமானத்தின் சிறு பகுதியை அப்பாவின் சட்டைப் பையிலிருந்து கவர்ந்து புத்தகப் பையினுள் உடைகளுடன் தலை துவட்டத் துண்டையும் முந்தைய நாளே பத்திரப்படுத்தி பள்ளி முடிந்தவுடன் பறக்கத் தயாராகின்ற பறவைகள் !

 

அறுவடை முடிந்த வயல்களில் மேய விடப் படும் ஆட்டு மந்தையை சங்கேதக் குரலால் கட்டுப்படுத்தும் மேய்ப்பர்கள். உயர்ந்து வளர்ந்த எழில்மிகு தென்னந் தோப்புகளில் அமைக்கப்படும் கூடாரங்கள். மேய்ப்பவருக்குத் தெரியாமலேயே தாமதமாகச் செல்லும் கறவை ஆட்டின் மடியில் இதமாகப் பால் கறந்து புழுதி படிந்த கையிலேந்தி ஒருவர் பின் ஒருவராக அருந்துகின்ற பள்ளிச் சிறுவர்கள் !

 

சுத்தமான நெல் மணிகள் சேகரித்து வைக்கப்படுகின்ற எலி வளைகளேதும் வரப்புகளில் உள்ளதாவென தங்கள் கையிலுள்ள கம்பினால் தட்டி ஆராய்ச்சி செய்கின்ற வயல் வரப்பின் மேல் நடந்து செல்லும் இளம் ஆராய்ச்சியாளர்கள் !

 

அறுவடை முடிந்த நீர் நிறைந்த வயல்களில் அழகுடன் அணி வகுக்கும் வெள்ளை நிற வாத்துக் கூட்டம். மேய்ந்த தடம் கணித்து வாத்து முட்டைகளைக் கண்டெடுக்க தேர்வுகளில் முட்டைகளெடுத்த அனுபவம் கைகொடுக்க முக மலர்ச்சியுடன் வீடு திரும்பும் வழியில், உடைகளைக் கழற்றி வைத்து பாசனக் குளத்தில் நீராடித் தலை துவட்டாமல் சேறு படிந்த ஆடைகளையே மீண்டுமணிந்து அம்மாக்களிடம் அடி வாங்கும் சிறுவர்கள் என அறுவடைக் காலம் அந்நாளில் எங்களுக்கு இன்பமயமாகவே அமைந்தது !

---------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்,

கூடுதல் ஆட்சியர்,

I.T.I..முகநூற் குழு,

[தி.பி.2052, (ஆடவை (ஆனி) 12]

{26-06-2021}

---------------------------------------------------------------------------


அந்நாளை நினைக்கையிலே (34) நெல் குத்திக் கொடுக்கின்ற பச்சை மால் !

 

அறுவடைக் காலம் வந்து விட்டாலே பாட்டி வீட்டில் நெல் குத்திக் கொடுக்கின்ற பச்சை மாமலை போல் மேனியொடு மாறு கண்ணும் கொண்ட பச்சைமாலுக்கு ஏக கிராக்கி. ஒரு வீட்டில் பணி முடித்தவுடன் அழைத்துச் செல்ல வாடிக்கையாளர் அவரைக் காத்து நிற்பதுண்டு. தலையில் நிரந்தரத் தலைப்பாகை தரித்த பச்சைமால் வாழ்நாளில் மேல் சட்டையே கண்டிராதவர் !

 

கூலியாகக் கொடுக்கின்ற ஒரு ரூபாயை ஐம்பது காசு நாணயங்களாக வழங்கினால் மட்டுமே ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பாடு வசமில்லாத பச்சைமால் நாலணா (இருபத்தைந்து காசு) நாணயங்களைக் கண்டு கொள்ளாத 'நாணயமான' மனிதர் ! கூலியாக செல்லாக் காசு கொடுத்து இந்த அப்பாவியை ஏய்க்கும் சிலரும் அக்காலத்தில் இருந்தார்கள் !

 

நாணயங்களாக மட்டுமே கூலி வழங்கப்பட வேண்டுமென்ற நிபந்தனையுடன் களமிறங்கும் கள்ளங் கபடமற்ற பச்சைமாலுக்கு மாலைக்கண் நோய் காரணமாக மாலை ஆறுமணிக்குள் வீடு திரும்ப வேண்டிய கட்டாயம். ஐந்து ரூபாய் பெறுமானமுள்ள அரிசியைக் கூலியாகக் கொடுத்தாலும் வாங்க மறுத்து ஒரு ரூபாய் நாணயத்தைப் பெற்றுச் செல்லும் வேடிக்கை மனிதரவர் !

 

சேட்டை செய்யும் சேய்களையும், உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளையும் பச்சை மாலிடம் பிடித்துக் கொடுப்பதாக பூச்சாண்டி காட்டி காரியம் சாதிக்கின்ற அம்மாக்கள் ஏராளம். காலில் அணிந்திருக்கும் தோலாலான காலணி ஓசை அவரது வருகையைக் கட்டியம் கூறும்.

 

மழலைகளிடம் அளவற்ற பாசங்கொண்ட பச்சைமாலுக்கு அவர்களைக் கொஞ்ச ஆசையிருப்பினும், கரிய உருவத்தைக் கதவிடுக்கு வழிக் காண்கின்ற குழந்தைகள் அச்சம் காரணமாக அருகில் நெருங்குவதில்லை. பச்சைமாலைக் கண்டு சிறு வயதில் அஞ்சிய குழந்தைகள் வால் முளைத்த பின்னர் மடித்துக் கட்டிய வேட்டியின் பின்புறம் எட்டிப் பார்க்கின்ற அவரது கோவணத்தை இழுத்து விளையாடுமளவுக்கு நெருக்கமாகி விடுவது வேடிக்கை !

 

அளவுக்கதிகமான பாரம் சுமந்து செல்கின்ற போது இடையிடையே அசிங்கமான வார்த்தைகளால் உரக்கச் சப்தமிட்ட படியே வீதி வழியாக செல்வது அவருக்கு ஆசுவாசம். "அய்யே" என நாணிச் செல்லும் சிறுவர்களிடம் சத்தமாக "டப்" என்று கூறியபடியே காவிப்பல் தெரிய சிரித்தபடி பாரத்துடன் வேகமாகச் செல்வார் பச்சைமால் !

 

நெல் குத்தும் பணி முடிந்தவுடன் பசித்திருக்கும் பச்சைமாலுக்கு உணவு வழங்கும் வேளை, சாப்பாட்டிற்கான காசைக் கூலியில் கழித்து விடக் கூடுமென்ற எச்சரிக்கை உணர்வுடன் முன்கூட்டியே கூலியைப் பெற்றுக் கொள்ளும் பச்சைமால் மீது அவரை நன்கறிந்த தாய்மார்கள் வருத்தம் கொள்வதில்லை !

 

ஊரில் நடைபெறும் பெரும்பாலான திருமணங்களுக்கும் இதர வைபவங்களுக்கும் அவருக்கு அழைப்பு உண்டு. எவ்வளவு வற்புறுத்தினாலும் பந்தியில் அமராத அவர், ஓலைப் பெட்டிக்குள் உணவடங்கிய பாத்திரங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று மனைவியுடன் மட்டுமே உணவருந்துவார் !

 

தீபாவளி, திருக்கார்த்திகை போன்ற பண்டிகை நாட்களில் வாடிக்கையாளர் இல்லங்களின் முன் குரல் கொடுக்கும் பச்சைமால் சிறப்பான முறையில் குறிப்பாக அவ்வீட்டு சிறுவர்களால் கவனிக்கப் படுவார் !

 

சுமடு தூக்கும் முன் தனது அழுக்கு வேட்டியில் இருப்பு வைத்திருக்கின்ற வெத்திலையுடன் பேனாக் கத்தியால் மேற்பகுதி சிரத்தையுடன் சுரண்டப்பட்டு சிறு துண்டுகளாக்கப் பட்ட கோரைப் பாக்குடன் லேசாக சுண்ணாம்பு தடவிய வெற்றிலைத் தாம்பூலத்தைச் சுருட்டி வாயினுள் ஒதுக்கி வைத்து நன்கு அசை போட்ட பின் வாய் சிவந்துள்ளதாவென நாக்கை நீட்டி உறுதி செய்த பின் 'அங்கு விலாஸ்' புகையிலையை சற்றே கிள்ளி வாயின் ஓரத்தில் ஒதுக்குவது அவருக்கு ஊட்டச் சத்துக்கு நிகரானது !

 

கிடைத்த காசை வீணடிக்காமல் மனைவி பத்திரகாளியிடம் பத்திரமாக ஒப்படைத்த பின் தாம்பூலத்திற்கும் உடல் அசதியைப் போக்க மாலைநேர மாம்பட்டை கசாயத்துக்கும் தேவையான காசைப் பெற்றுக் கொண்டு வீதியில் விழாமல் தினமும் மாலை ஆறு மணிக்குள் வீட்டிற்குள் நுழைந்து விடுவது பச்சைமாலின் வழக்கம் !

 

நெருக்கமான நண்பர்களேதும் இல்லாவிடினும் அனைவரிடமும் சிரித்த முகத்துடன் அளவாகப் பேசி குழந்தை போன்று பழகுகின்ற பச்சைமால் நேர்மையானவர் மட்டுமன்றி ஒழுக்கமானவரும் கூட. பொன் கொடுத்தாலும் நெல் குத்துவதைத் தவிர பிற பணி செய்யாதவர் !

 

விளையாட்டாக அவரது மடியிலிருக்கும் பணத்தை 'பார்த்து விட்டுத் தருகிறேன்' எனக் கூறி விளையாடுபவர்களிடம் "ஆத்தா வையும்.காசு குடு" என பரட்டையிடம் கூறுகின்ற பதினாறு வயதினிலே சப்பாணியைப் போன்று "பொண்டாட்டி திட்டுவா" எனப் பரிதாபமாகக் கெஞ்சுகின்ற பச்சைமால் என்ற வெள்ளை உள்ளம் கொண்ட கறுப்பு மனிதர் வித்தியாசமானவர் !

 -------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்.

கூடுதல் ஆட்சியர்.

I.T.I.முகநூற் குழு,

[தி.பி: 2052, ஆடவை (ஆனி) 05]

{19-06-2021}

--------------------------------------------------------------------------


சனி, 12 ஜூன், 2021

அந்நாளை நினைக்கையிலே (33) தாயுள்ளம் கொண்ட மரகதவல்லி டீச்சர் !



அறுவடைக் கால வருவாயை நம்பியே வாழ்க்கையை ஓட்டுகின்ற விவசாயிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட அந்நாளில் வீட்டிலுள்ள அண்டா குண்டாக்கள் மட்டுமன்றி நகைகளும் அவசரத் தேவைகளின் பொருட்டு அக்கம் பக்கத்து நடுத்தர வர்க்க வீடுகளில் குறைந்த வட்டிக்கு அடகு வைக்கப்படும் !

 

இட ஒதுக்கீடோ இதர கல்விச் சலுகைகளோ இல்லாத நிலையில் நன்கு படிக்கின்ற வாரிசுகளில் ஒருவரை கல்லூரிக்கு அனுப்பக் கூட விவசாயிகள் தெம்பற்றவர்களாகவே வாழ்ந்தார்கள் !

 

அறுவடை முடிந்த ஓரிரு மாதங்களிலேயே மீட்கப்பட்ட பொருட்கள் மீண்டும் புகுந்த வீட்டிற்கு மறவாமல் வந்து சேரும். அறுவடைக்குப் பின் நீர் பாய்ச்சுதல், தழை உரமிட்டு உழுதல், விதை விதைத்தல், நாற்று நடுதல், களையெடுத்தல், காயவைத்த மாட்டுச் சாணம் வேப்பிலை கலந்த உரமிடுதல், பூச்சி கொல்லி தெளித்தல், கொசுக்கடி ஏற்று இரவு முழுதும் விழித்திருந்து உடல் அசதியால் துண்டை தலைக்கு வைத்து வரப்பில் இளைப்பாறி தண்ணீர் பாய்ச்சி பயிர்களைப் பராமரித்தல் , பெருமழைக் காலங்களிலும், பருவ மழை பொய்க்கும் தருணங்களிலும் தூக்கமின்றித் தவித்தல் போன்ற சொந்தமாக விவசாயம் செய்வதிலுள்ள சிரமங்களைத் தவிர்க்க பெரும்பாலான நடுத்தர விவசாயிகள் தங்கள் வயல்களை பாட்டத்திற்கு (குத்தகை) விடுவது வழக்கம் !

 

சிறு விவசாயிகளில் சொந்தமாக மாட்டு வண்டி, காளை மாடுகள், ஏர் கலப்பை, பசுக்கள் வைத்திருப்பவர்களுக்கும் , தாமும் ஒருவராகப் வயலில் இறங்கிப் பணியாற்றுபவர்களுக்குமே விவசாயம் சிறிது இலாபகரமானதாக அமைவதுடன், கால்நடைகளுக்கான வைக்கோலும் மிஞ்சும். தங்களது வீட்டு உபயோகத்தை குறைத்துக் கொண்டு வீட்டுச் செலவுகளை சமாளிக்கும் பொருட்டு பால் விற்பனை செய்பவர்கள் அதிகம் !

 

என்னுடன் சுசீந்திரம் எஸ் எம் எஸ் எம் உயர் நிலைப் பள்ளியில் படித்த நண்பர்கள் பலரும் லாந்தர் வெளிச்சத்தில் படித்து அதிகாலை துயிலெழுந்து தந்தையுடன் விவசாயத்தைக் கவனித்து விட்டு அவசர அவசரமாக தெப்பக் குளத்தில் குளித்து அரை வயிற்றுக் கஞ்சியுடன் கையிடுக்கில் புத்தகப்பையுடன் வரப்பில் ஓடியபடியே பத்து மணியைக் கடந்தபின் பள்ளியை அடைந்து தலைமை ஆசிரியர் வேலு அவர்களின் கையால் வழக்கமாகப் பிரம்படி வாங்குபவர்களே !

 

வகுப்பறையில் அமர்ந்தவுடனே ஆங்கிலப் பாடத்தை தாலாட்டாக பாவித்து தூக்கத்தில் சொக்கி விழுபவர்கள் பலர் !அத்தகைய மாணவர்கள் மீது தண்டப்பிரயோகம் செய்யாமல் முகத்தைக் கழுவி உட்காரச் சொல்லும் தாயுள்ளம் கொண்டவர் மரகதவல்லி டீச்சர் !

 

சொந்த வயல்களை பாட்டத்திற்கு விடுவோர், நெருக்கடியான தருணங்களில் அக்கம்பக்கத்தில் பெற்ற கடன்களை நெல்மணிகளாகத் திருப்பிக் கொடுப்பதுண்டு.

 

சொந்தமாக வயல் இல்லாத காரணத்தால் ஈஸ்வர அய்யர் வீட்டிலிருந்து வாங்கப்படுகின்ற நெல்லைக் காயவைத்து குதிருக்குள் இருப்பு வைத்து (பத்தாயம் உள்ள வீடுகளில் மரப்பத்தாயத்தில் இருப்பு வைப்பதுண்டு) விடுவார் அம்மா !

 

தேவைக்கேற்றவாறு செம்புப் பானையில் அவித்து வெயிலில் உலர்த்தி ஓலைப் பெட்டியிலிட்டு எங்கள் தலை மேலேற்றி பறக்கை சந்திப்பிலுள்ள அரவை ஆலைக்கு விடுமுறை நாட்களில் அனுப்பி விடுவார்கள் !

 

தம்பியை விட சுமை தாங்கும் வீரராகக் காட்டிக் கொள்ளும் பொருட்டு அதிக சுமையை வீராப்பில் தூக்கி தள்ளாடி வழியில் இறக்கி வைத்து பரிதவித்த அனுபவங்களும் உண்டு !

 

வரிசையில் நின்று அரைக்கப் பொறுமையின்றி (குழாயடி இராணிகளைப் போன்றே) பரிதாபமாக நிற்கின்ற சிறுவர்களது முதுநிலையை புறக்கணித்து அடாவடியாக இரு கோட்டை நெல்மணிகளையும் மொத்தமாக அரைத்துச் செல்லும் வாடிக்கையாளத் தனவான்கள், தண்ணீர் கூட அருந்த வழியின்றி காவல் கிடக்கும் உரிமைக் குரலெழுப்புகின்ற சிறுவர்களை தலையில் குட்டும் போது அரவை ஆலையின் பொறுப்பாளர் கண்டு கொள்வதில்லை !

 

நமது சுற்று வரும் போது மின்சாரத் தடை, பட்டை அறுந்து போதல் போன்ற காரணங்களால் அன்றைய விடுமுறை நாளை ஆலையிலேயே செலவழிக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுவதுண்டு. காவல் இருந்து அரைத்த அரிசியையும் தவிட்டையும் பத்திரமாக வீட்டில் சேர்த்த பின் செம்பட்டைத் தலையர்களாக நானும் தம்பியும் தெப்பக்குளத்திற்குக் குளிக்கச் செல்வோம் !

 

--------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


தி.சேதுமாதவன்,

[sethumathavan2021@gmail.com]

கூடுதல் ஆட்சியர்

I.T.I. முகநூற் குழு,

{12-06-2021}

---------------------------------------------------------------------------