அம்மாவின் பேச்சு ஏற்படுத்திய தாக்கத்தால் இடக்கையால் அம்மா முதுகில் ஓங்கி அடித்து விட்டு "இறைவன் தரும் போது பெற்றுக் கொள்ள வேண்டும். பக்தியை மட்டுமே நம்மிடம் எதிர்பார்க்கின்ற பகவானிடம் நிபந்தனைகள் விதிப்பது முறையல்ல" எனக்கூறிக் கோபத்துடன் அவரது நண்பர் மாணிப்போற்றி வீட்டிற்குச் சென்று விட்டார் அப்பா.
இன்பத்தையும் துன்பத்தையும் சமநிலையில் காண்கின்ற அப்பாவின்
மனப்பாங்கு கண்டு நான் வியந்ததுண்டு. எளிதில் உணர்ச்சி வசப்படாத அப்பா , அம்மாவை
அடிப்பது அதுவே முதல்முறை.
தட்டில் தேங்காய், பழத்துடன் மனதில் எதிர்பார்ப்புகளையும் சுமந்தவாறே
பக்தர்களில் பலர் ஆலயத்திற்கு செல்வது இயல்பெனினும் , துன்பம்
நேர்கையில் மனமுருகி பிரார்த்திக்கும் பலரும், இன்பத்தை
துய்க்கையில் இறைவனை மறப்பதுடன், பிரார்த்தனை பலித்த பின்னர்
காணாமல் போவதுமுண்டு.
கோரிக்கை நிறைவேறாமையால் வெறுப்புற்று இறைவனுக்காக தான் செய்த திருப்பணிகளைத்
தியாகங்களாகவும் இறைவனை நன்றியற்றவராகவும் சித்தரித்து தம்மைக் கைவிட்டவரைக் காணச்
செல்வதையே நிறுத்தியவர்கள் பலரையும் அனுபவத்தில் கண்டதுண்டு.
எந்நிலையிலும் மாறாத பக்தி செலுத்த வேண்டுமெனில் பகுத்தறிவு, தெளிந்த
மனம், நல்லவர் சேர்க்கை ஆகியவற்றுடன் பூர்வஜென்ம புண்ணியமும்
மிக அவசியம்.
'வறுமையில் வாடும் பக்தர் ஒருவர் குருவாயூரப்பனைத் தரிசிக்கச் செல்லும்
போதெல்லாம் வித்தியாசமான வேண்டுதலொன்றை முன் வைப்பது வழக்கம். இறைவன் தனக்கு
அளிக்கின்ற செல்வத்தின் சரிபாதியை அவருக்கே சமர்ப்பிப்பதான வினோத வேண்டுதல் வைத்த
பக்தருக்கு திடிரென கோடி ரூபாய் லாட்டரி அடித்தது.
இறைவனுடனான ஒப்பந்தப்படி பாதிப் பங்கை சமர்ப்பிக்க மனம் ஒவ்வாத
பக்தர் " கள்ள குருவாயூரப்பா ! என் மீதான அவநம்பிக்கையால் தானே , பாதியை
நீயெடுத்துக்கொண்டு மீதியை எனக்கு அளித்திருக்கிறாய் " என ஒரு போடு போட்டார்.
இத்தகைய மனநிலை கொண்ட பக்தர்கள் இன்றும் நம்மிடையே உண்டு.
நண்பன் முருகனுக்கு நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழகத்தில்
கம்மியராக (மெக்கானிக்) வேலை கிடைத்தாலும், வேலை முடித்து வந்தவுடன் குளித்து
விட்டு என்னுடன் கோவிலுக்கு வரத் தவறுவதில்லை.
சுருக்கெழுத்து வகுப்புகள் முடிந்தவுடன் மாலை நேரம் திருப்பணிகளில்
மும்முரமாக தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்ற என் தம்பியின் பள்ளித் தோழனான தம்பி
இராஜு, அன்பின்
நெருக்கத்தால் மதுசூதனப் பெருமாளை நெட்டையர் என்றும் மகாதேவரை கட்டையர் என்றும்
குறிப்பிடுவதுண்டு. புன்னகை மாறாத முகத்துடன் அயராது திருப்பணி செய்யும் இராஜுவைக்
கண்டு நான் வியந்ததுண்டு.
ஒரு 'பிரதோஷ நாள்' காலை ஏழு
மணியளவில் பாதாதி கேசம் போர்த்தியவாறு சயனத்திலிருந்த அடியேனை , கையில் தினமலர் நாளிதழுடன் எழுப்பி , தமிழ் நாடு
அரசு தேர்வாணையத்தால் 1986 ல் நடத்தப்பட்ட அமைச்சுப்
பணியாளர்களுக்கானத் தேர்வில் நானும் அக்காவும் தேர்வாகியிருந்த நற்செய்தியைச் சொன்ன என் தம்பியின் முகம் இன்றும் என் நினைவில் உள்ளது.
சிறு விளக்கின் ஒளிக்கும் அந்தகாரத்தைப் போக்கும் வல்லமையுண்டென்ற
இராம கிருஷ்ணரின் அருள்வாக்கைப் போன்றே அம்மாவின் நீண்ட நாள் கவலை இறைவனருளால்
நொடிப்பொழுதில் முடிவுக்கு வந்தது. இறைவன் கருணையால் தம்பி வரதராஜனும், இராஜுவும்
அடுத்த ஓராண்டுக்குள் அரசுப் பணிக்குத் தேர்வானது மட்டுமன்றி இன்று உயர்
பதவிகளிலும் உள்ளனர்.
இறைவனது பெருமைகளை வர்ணிக்கும் புலமை எனக்கில்லாத காரணத்தால் , பெரிய
புராணத்தை இயற்றத் துவங்கிய சேக்கிழார் பெருமானுக்கு எம்பெருமானே 'உலகெலாம் ' என அடியெடுத்துச் சிறப்பித்த
முதற்பாடலுடன் பறக்கை -அக்கரை பெருஞ்சடை மகாதேவரை நன்றியுடன் தாழ்பணிந்து இப்பதிவை
நிறைவு செய்கிறேன்.
"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் .
நிலவுலாவிய நீர் மலி வேணியன்.
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்"
திருச்சிற்றம்பலம் !
-------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
தி.சேதுமாதவன்.
ஆட்சியர்,
தமிழ்ப் புலம் வலைப்பூ,
[தி.ஆ: 2052, கடகம் (ஆடி) 01]
{17-07-2021}
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக