மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

அந்நாளை நினைக்கையிலே (14) பக்தனா என்று மட்டுமே பார்க்கின்ற பரமன் !



பறக்கை மதுசூதனப் பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் விசேஷ வைபவங்களில் அழகிய வெள்ளிக் கருட வாகனத்தில் பெருமாள் பவனி வர மத்வாச்சாரியார் வழி வந்த போற்றி இனத்தவர்கள் சுமப்பது நீண்ட கால மரபு ! 
     

கர்நாடக மாநிலம் உடுப்பியை பூர்வீகமாகக் கொண்ட துளு மொழி (மராத்தி மொழியிலிருந்து பிறந்த கொங்கணி, மலையாளம், கன்னடம் கலந்த மொழி) பேசும் போற்றி இனத்தவர்கள் காலப் போக்கில் அரிதாகி விட்ட காரணத்தால் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக பிராமணர்கள் இத்திருப்பணியைத் தொடர்ந்து வருகிறார்கள் !


ஆடி சுவாதி, புரட்டாசி சனிக் கிழமை, வைகுண்ட ஏகாதசி ஆகிய வைபவங்களில் கோவிலுக்குள் திருவுலா வருகின்ற பெருமாள் பங்குனித் திருவிழாவின், ஒன்பது மற்றும் பத்தாம் நாளில் பள்ளி வேட்டை, ஆறாட்டு வைபவங்களில் வெள்ளிக் கருட வாகனத்தில் திருக்கோவிலை விட்டு வெளியே பவனி வருவார் !


பங்குனித் திருவிழாவிற்கு முன்னரே பத்மனாப அய்யரும் மாணிப் போற்றியும் தனது பரிவாரங்களுடன் திருப்பணிகளைத் துவங்கி விடுவர். வெள்ளிக் கருட வாகனத்தை எலுமிச்சை உபயோகித்து சுத்தம் செய்தல், திருவிளக்குகளைத் துலக்குதல், பாத்திரங்களை சுத்தம் செய்தல் ஆகிய பணிகளுக்கு அப்பாவையும் உடனழைத்துச் செல்வது வழக்கம். அந்தணர்களால் மட்டுமே சுமக்கப் படுகின்ற கருட வாகனத்தை அப்பாவும் இணைந்து சுத்தம் செய்வதை மகாபாவமாக நினைப்பவர் அம்மா !


"தனக்கு சேவை செய்பவர் பக்தனா என்று மட்டுமே பார்க்கின்ற பரமன், பார்ப்பனராவென ஒரு போதும் பார்ப்பதில்லை " என பரந்த உள்ளம் கொண்ட பத்பனாப அய்யர் வாதாடினாலும் பழைய சம்பிரதாயங்களில் ஊறிப் போன அம்மாவின் மனம் அக்கருத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்வதில்லை !


பேருந்து நடத்துனரான அப்பாவுக்கு பயணிகளால் தவறவிட்ட பணப்பைகளும் விலை உயர்ந்த பொருட்களும் பலமுறை பேருந்துகளிலிருந்து கிடைத்ததுண்டு. அதனைப் பத்திரமாக துறை நிர்வாகத்திடம் ஒப்படைத்து விடுவார் !


நாகர்கோவில் திருவனந்தபுரம் வழித்தடத்தில் நடத்துனராக பணியாற்றிய 1979 காலகட்டத்தில் கிறிஸ்துமசுக்கு முந்தைய தினம் பேரூந்தில் அப்பாவுக்கு கிடைத்த மூவாயிரம் ரூபாய்க்கு மேலடங்கிய பணப்பையை நிர்வாகத்திடம் ஒப்படைத்த போது அப்பாவின் பொருளாதார நிலை குறித்து நன்கறிந்த கண்டிப்புக்கு பெயர்போனவரும் அப்பா மீது நன்மதிப்பு கொண்டவருமான அந்த உயர் அதிகாரி பணப்பையை எடுத்துச் செல்ல பரிவுடன் வற்புறுத்திய போது "தனக்கு அருகதையில்லா எப்பொருளும் வேண்டாமென'த் திட்டவட்டமாக மறுத்துவிட்டார் அப்பா !

 
நானும் அக்காவும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் கல்விக் கட்டணத்தை உரிய சமயத்தில் செலுத்துவதற்கு அப்பாவின் அதிக உழைப்பு தேவைப்பட்ட சிக்கலான நேரம் அது !


"இறைவன் நல்வழி காட்டுவார்" எனச் சொல்லி வந்துவிட்ட நேர்மையான அப்பாவை இறைவன் ஒருபோதும் கைவிட்டதில்லை. முந்தைய இரவு சரிவரத் தூங்காமல் கண்விழித்துப் பணியாற்றி பிற்பகல் வீட்டிற்கு வருகின்ற அப்பா ஒரு மணி நேரம் ஒய்வெடுக்க நினைக்கும் வேளையில் திருப்பணிகள் தொடர்பாக அழைக்கின்ற நண்பர்களுடன் சென்று விடுவார் !


திடகாத்திரமான உடம்பும் வைராக்கியமும் ஆளுமையும் இறையருளால் ஒருங்கே பெற்றிருந்தார் அப்பா. வருமானமில்லா திருக் கோவில்களுக்கு வழங்கப் படுகின்ற குறைந்த அரசு நிதியில் திருவிழாக்களை நடத்துவது ஸ்ரீகாரியத்திற்கு ( கோவில் நிர்வாகி) சவாலான விசயம் !


திருவிழா முடிந்து மாதங்கள் பல கடந்த பின்னரே சமர்ப்பித்த செலவினப் பட்டியல்களுக்கான நிதி கிடைக்கும் வாய்ப்புள்ள காரணத்தால் தேவையான நிதியை மனைவியின் நகைகளை அடகு வைத்தாவது திருவிழாவிற்கு முன்னரே ஸ்ரீகாரியம் திரட்ட வேண்டும் !


ஊரிலுள்ள பக்தர்களின் பங்களிப்புடன் அமைக்கப் படுகின்ற உற்சவக் கமிட்டியில் முக்கிய பொறுப்பாளர்களில் ராசா அண்ணாச்சியும் அப்பாவும் நிச்சயமாக இடம் பெறுவார்கள். இறைவனுக்காக வசூலிக்கப் படுகின்ற ஒரு காசைக் கூட சொந்த செலவுகளுக்காக பயன்படுத்தக் கூடாதென்ற உறுதியான கொள்கை காரணமாக காலையில் வீட்டில் பழைய சாதம் சாப்பிட்ட பின்னரே திருவிழா நிதி வசூலுக்கு இவர்கள் கிளம்புவார்கள் !


-------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
தி.சேதுமாதவன்
[sethumathavan2021@gmail.com]
கூடுதல் ஆட்சியர்
I.T.I. முகநூற் குழுமம்
{26-12-2020}

-------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

அந்நாளை நினைக்கையிலே (13) திரைச்சி மீனின் வால் சண்டைகளில் ஆயுதமாகப் பயன்படும் !




ஓமம் சேர்த்து வறுத்தரைத்த வட்ட வடிவ திரைச்சி மீன்- கறுத்த கறியைப் போன்றே காரல் மீன் கறியும் பாலூட்டும் தாய்மார்களுக்கேற்றது. பள்ளம், மணக்குடி பகுதி மீனவர்கள் வீடுகளில் பாதுகாத்து வைத்திருக்கும் திரைச்சி மீனின் உறுதியான முட்கள் நிறைந்த நீண்ட வால் ஊர்ச் சண்டைகளின் போது ஆயுதமாக பயன்படுத்தப்படும் !


பச்சை மீன் கிடைக்காத சந்தர்ப்பங்களிலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் நெத்திலி, அயிலை, பாரை, விளமீன், நெய்மீன் கருவாடுகள் விற்பனைக்கு வரும். நெத்தோலிக் கருவாட்டை ஊறவைத்து முள் நீக்கி மாங்காய் சேர்த்து குறைவான உப்பு கலந்து சமைக்கும் அவியல் அல்லது குழம்பு கமகமக்கும் !


முள்ளும் மலரும் திரைப் படத்தில் போஜனப் பிரியை ஷோபா அன்புக் கணவனை உண்ண அழைக்கும் "நித்தம் நித்தம் நெல்லுச்சோறு" பாடலைப் போன்றே எல். ஆர். ஈஸ்வரி குரலில் "அயில பொரிச்ச துண்டு" என்ற மலையாளப் பாடலுண்டு. "குடம்புளி இட்டு வெச்ச நல்ல செம்மீன் கறி உண்டு" என்ற வரிகள் புளிக்குப் (வாளம்புளி) பதிலாக அடை மாங்காய் சுவை கொண்ட குடம்புளி கேரளாவில் உபயோகிப்பதைக் குறிப்பதாகும் !


அயிலை ,பாரை, விள மீன் முரல் கருவாடுகளுடன் பூசனிக்காய் அல்லது வாழைக்காய் சேர்த்த அவியல் அதிசுவையானது. நண்டுகள் அபூர்வமாக சந்தைக்கு வந்தாலும் தக்காளி சேர்த்து கோழி சாப்ஸ் போன்று தேங்காய் எண்ணெயில் வதக்கி சமைக்கும் தொழில் நுட்பமறியா காரணத்தால் விவரமான எவரேனும் அவற்றை வாங்கிச் செல்வர் !


அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் மீன் குழம்பின் வாசம் பக்கத்து வீட்டு போற்றி அம்மாவின் (நண்பன் சசியின் அம்மா) மூக்கைத் துளைக்க "மீன் வாசம் வருதே "எனச் சிரித்தவாறே உரிமையுடன் சமையலறைக்குள் நுழைவது தர்ம சங்கடத்தை ஏற்படுத்திடினும் அவர்கள் அதனை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை !
       

நாங்கள் உண்டது போக குழம்பில் எஞ்சியிருக்கும் மீனின் தலைப் பாகங்களை சாப்பிடுகின்ற அம்மாவையும் அக்காவையும் பார்த்து "தலையை சாப்பிட்ட பிறகாவது புத்தி வருகிறதாவெனப் பார்ப்போம்" என விவரமறியாமல் நாங்கள் கிண்டல் செய்ததுண்டு. மீன் சமைக்கப் படுகின்ற நாட்களில் குளித்த பின்னர் கூட கோவிலுக்குச் செல்வதை அம்மா ஒரு போதும் அனுமதிப்பதில்லை !


அப்பாவின் நெருங்கிய நண்பர்களில் பெரும்பாலானோர் பிராமணர்களாதலால், ஆடி அமாவாசை, தை அமாவாசை, ஆவணி அவிட்டம் போன்ற விசேஷ நாட்களில் அப்பாவையும் நாலாயுத மாமாவையும் வற்புறுத்தி தங்களுடன் அழைத்துச் செல்வது வழக்கம் !


இது போன்ற ஆன்மீகச் சடங்குகளில் அசைவம் உண்போர் பங்கு கொள்வது பாவமென அம்மா வாதிட்டாலும், அப்பாவின் நண்பர்கள் அதைப் பொருட் படுத்துவதில்லை. ஆனால் அப்பா சடங்குகளின் போது ஒதுங்கியே இருப்பார் !


மாணிப்போற்றி, பத்மநாப அய்யர் ,கிச்சா மணி அண்ணா, ஈஸ்வர அய்யர், சங்கரய்யர், நாராயணன் அண்ணா, அப்பி வாத்தியார்,தங்கம் வாத்தியார், நாலாயுத மாமா, ராமசாமி அய்யர் எனப் பெரிய நண்பர் குழு அப்பாவுக்கு உண்டு.சங்கீத ரசிகர்களாகிய இவர்கள் சுசீந்திரம் மார்கழித் திருவிழாவிற்கு மதுரை சோமு, மகாதானபுரம் சந்தானம், கே.ஜெ.ஏசுதாஸ், சீர்காழி,, குன்னக்குடி, ஏ.கெ.சி, பாலமுரளி கிருஷ்ணா,ஷேக் சின்ன மௌலானா போன்ற இசை ஜாம்பவான்களின் நிகழ்ச்சிகளைக் காண தலையில் தலைப்பாகை சுற்றிக் கொண்டு படுஉற்சாகமாக பேசிச் சிரித்த படியே இரவில் கூட்டமாகச் செல்வார்கள் !


கச்சேரி முடிந்து வீடு திரும்ப அதிகாலை மூன்று மணிக்கு மேலாகி விடும். இரு மாதங்களுக்கொரு முறை மருந்துவாழ் மலைக்கு பாத்திரங்களைச் சுமந்து நடந்தே சுற்றுலா சென்று சமைத்து சாப்பிட்டுத் திரும்புவதுண்டு. சுவையுடன் சமைக்கத் தெரிந்த இவர்கள் மருந்து வாழ் மலை மீது சமைக்கின்ற சுவையான கீரைக்கறி அடிவாரத்தைக் கடந்தால் கசப்பதாகச் சொல்வதுண்டு !


அருள்மிகு அக்கரை பெருஞ்சடை மகாதேவர் மற்றும் மதுசூதனப் பெருமாள் திருக்கோவில் இறைப் பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர்கள் மிகுந்த உற்சாகத்துடனேயே எப்போதும் காணப்படுவார்கள் !


-------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை

தி.சேதுமாதவன்
[sethumathavan2021@gmail.com]
கூடுதல் ஆட்சியர்
I.T.I. முகநூற் குழுமம்
{23-12-2020}

-----------------------------------------------------------------------------------------

அந்நாளை நினைக்கையிலே (12) நேத்து வச்ச மீன் குழம்பு என்னை இழுக்குதையா !



எனது அப்பாவுக்கு வாரமொரு முறையாவது மீன் உண்ண ஆவலிருப்பினும், எங்கள் வீடு அக்ரஹாரத்தில் அமைந்திருந்த காரணத்தால் செவ்வாய், வெள்ளி, பிரதோஷம், ஏகாதசி, சதுர்த்தி, கார்த்திகை, புரட்டாசி, மார்கழி மாதங்கள் பிற பண்டிகை நாட்கள் தவிர்த்து மாதமிருமுறை மட்டுமே மீன் உண்ணும் யோகம் அமையும் !


நானும் தம்பியும் மீன் கடைக்குச் சென்று சாளை,நெத்தோலி, கூனிப் பொடி (இறால் மீன் குஞ்சு), கூறு போட்டு வைத்திருக்கும் பெரிய மீனின் சிறு பங்கு, அயிலை போன்றவற்றில் ஏதாவதொன்றை வாங்கி வருவோம். வார விடுமுறை நாட்களில் அப்பாவுடன் கடைக்குச் சென்று அவர் வாங்கித் தருகின்ற காகிதத்தில் சுற்றிய தலை வால் வெளியே தெரிகின்ற பெரிய மீனை பிறர் பொருள் கவர்ந்த கள்வனைப் போன்று பதுங்கிய படியே நான் வீட்டின் கொல்லைப்புறமாகக் கொண்டு வருவதுண்டு !


சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கி பிரத்தியேக மண் சட்டியில் வீட்டின் பின்பக்க விறகடுப்பில் சமையல் செய்வார் அம்மா. சாளை, அயிலை, கெண்டை, கிளாத்தி, நெய் மீன், நெய்மீன் சூரை, வஞ்சிரம் ,கட்டா, மாவாளை,விள மீன், பாரை ஆகிய மீன்கள் மாங்காய் சேர்த்து குழம்பு மற்றும் அவியல் வைப்பதற்குகந்தவை !


 தேங்காய், கொத்தமல்லி, உள்ளி, கருவேப்பிலை,வத்தல் மிளகாய், பெருங்காயம் இவற்றை கரியாமல் வறுத்தெடுத்து அம்மியில் நன்கரைத்து உப்பிட்டு நீரூற்றி  மாங்காயின் புளிப்பிற்கேற்ப அளவாகப் புளி சேர்த்து வெட்டி வைத்த மீன் துண்டுகளை சட்டிக்குள் இட்டு  கொதிக்க வைக்கையில்  எழுகின்ற நறுமணம் பசியைத் தூண்டுவதோடு பக்கத்து வீடுகளுக்கும் "இன்று மீன்கறி" எனப் பறைசாற்றி விடும் !


கறுத்த நெத்தோலியும் வெள்ளை நெத்தோலியும்  மாங்காய் கலந்து கறி வைப்பதற்கேற்றதாயினும் வெள்ளையனின் முள் நீக்குவது சிரமமாதலால் கறுப்பனுக்கே கிராக்கி. அதிசுவை மிகுந்த கூனிப் பொடித் துவரனை (இறால் குஞ்சு) அளவுக்கதிகமாக உட்கொள்பவர்க்கு வயிற்று வலிக்கு உத்திரவாதண்டு. தக்காளி சேர்த்து சமைக்கின்ற விலையுயர்ந்த விரால் மீன் குழம்பின் மணமும் சுவையும் அலாதி !


கேரளத்தில் விராலை "செம்மீன்" என்றழைப்பார்கள்.(தகழி சிவசங்கர பிள்ளையின் கதையில் செம்மீன் என்ற  புகழ்பெற்ற  ஜனாதிபதி விருதைப் பெற்ற மலையாளத் திரைப்படம் நினைவிருக்கலாம்) பொரித்த இராலும் நெய்மீனும்  மேல்தட்டு வர்க்கத்தினரின் விருப்ப உணவு வகைகள். வெளிநாட்டுக்கு அதிகமாக ஏற்றுமதியாகின்ற  நெய் மீனையொத்த நெய்மீன் சூரையும் ருசி மிக்கது.  மருத்துவ குணம் பொருந்திய இம்மீனுக்கு கேரளத்தில் கேரை என்று பெயர். வெட்டினால் கருஞ்சிவப்பு வண்ணத்தில் காட்சியளிக்கும் சூரை மீனுக்கு விலையைப் போன்றே  வாடிக்கையாளரும் குறைவு !


உணவு விடுதிகளிலும் கல்யாண விருந்துகளிலும் அசைவ சாப்பாட்டின் பொருட்டு இதனை வாங்கிச் செல்வோர் அதிகம். அம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டுமென்றால் மத்திசசாளை போன்ற தோற்றமுடைய முட்கள் அதிகம் கொண்ட  பெரிய தலையுடைய பேய்ச் சாளை அல்லது மண்டைச் சாளையை வாங்கிச் சென்றால் போதும். வழுவழுப்பான கணவாய் மீன் துவரன் அதிசுவையானது !


எங்கள் ஊர் மீன் கடையில்  பெரிய சுறா மீனின் வயிற்றில் கருவுற்றிருந்த குட்டி சுறா உயிரின்றி வெளியே எடுக்கப் படுவதைக் கண்ட பின் அம்மீனை ருசிக்க எனக்கு மனம் ஒப்பவில்லை !


சுண்ணாம்பு சத்து மிக்க முட்கள் அதிகமுள்ள வாளை மீனுக்கு வாடிக்கையாளர் குறைவு. வெள்ளி நிறத் தோலிலுள்ள சுண்ணாம்பை நீக்கி சுத்தம் செய்து வறுத்தரைத்து கறி வைத்தால் ருசிக்குமெனினும், பசி மிகையால் வேகமாக உண்பதற்கு தடை போடும் முட்கள் வாயைப் பதம் பார்த்து விடுவதாலும். தொண்டைக்குள் குத்தி சிரமத்தை ஏற்படுத்துவதாலும் கொள்முதல் செய்வோர் குறைவு !


எங்கள் ஊர் தெப்பக் குளத்தை ஆக்ரமித்திருக்கின்ற சிலேபி, கெண்டை, கெளுத்தி மீன்களை அதன் தீவிர இரசிகர்கள் இரவில் இரகசியத் தூண்டில் போடுவதுண்டு. குளத்திலுள்ள கல்லிடுக்குகளில் வசிக்கின்ற நெய்சத்து நிறைந்த விலாங்கு மீன்களை பயிற்சியற்றவர்கள் பிடிக்கவியலாது !


புரதச்சத்து நிறைந்த  முட்கள் அதிகம் கொண்ட துப்பு வாளையை அவித்து நிதானமாக முள் நீக்கி சமைக்கப்படும் துவரனின் சுவையே  அலாதியானது. சிவப்பு நிற பளபள மேனியுடன் அழகிய பெரிய விழிகள் கொண்ட ஒரு வகை மீனுக்கு கேரளாவில் "உன்னி மேரி"என்று பெயர். ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வெச்ச கிளியாக வந்த மலையாள நடிகை கண்ணழகி தீபாவின் அசல் பெயர் தான் அது !


-------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை 


தி.சேதுமாதவன்
(sethumathavan2021@gmail.com)
கூடுதல் ஆட்சியர்
I.T.I. முகநூற் குழுமம்
{19-12-2020}
-------------------------------------------------------------------------------------------

அந்நாளை நினைக்கையிலே (11) பிறந்த நாளும் பாயசமும் !


போக்குவரத்து துறையில் பணியாற்றிய அப்பாவின் வார விடுமுறையில் அமைகின்ற பிறந்த நாளில் பாயசம் தயாரிப்பது அம்மாவின் வழக்கம். என் தம்பியின் பிறந்த நாளாக அந்நாள் அமைந்துவிட்டால் அவ்வினிய நாளை பேருவகையோடு கொண்டாடுவான் !


எனக்கோ அக்காவுக்கோ அந்நாள் பிறந்த நாளாக அமைந்து விட்டால் பாயசத்தை மிச்சம் மீதியின்றி சாப்பிட்டாலும், தனது பிறந்த நாளாக அமையவில்லையே என்ற மனக்குறையில் முறுமுறுப்பான் !


பாயசத்திற்கான நெய்யை வீட்டில் அன்றாடம் வாங்குகின்ற பாலிலிருந்தே வெண்ணையைக் கடைந்தெடுத்து உருக்கித் தயாரிப்பது வழக்கம் !


பாயசத் தயாரிப்பின் பொருட்டு பண்டிகை நாட்களில் அண்டி கிஸ்மிஸ்ஸை நெய்யில் வறுக்கத் துவங்கியதுமே வெகு தூரத்தில் விளையாடிக் கொண்டிருப்பினும் எங்கள் மூக்கு வேர்த்து விடும். கோழிக் குஞ்சைக் கவர்ந்து செல்கின்ற பருந்தின் லாகவத்தோடு கண்ணிமைக்கும் நேரத்தில் அள்ளிச் சென்று விடுவோம் !


மீதமிருக்கும் ஓரிரண்டை வைத்து என்ன செய்யவியலும் ? இதையும் எடுத்துச் செல்லுங்கள் எனக் கோபத்துடன் கூறுகின்ற , அம்மா சொல்லைத் தட்டாத பிள்ளைகளாக மீதத்தையும் எடுத்துச் செல்லத் தயாராகி விடுவோம் !


காலையில் காபி குடிப்பது முந்நூறு மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட வாயகன்ற பெரிய பித்தளைக் குவளையில் தான். அந்தக் காலத்தில் பித்தளை, வெண்கலம், செம்பு, வெள்ளிப் பாத்திரங்கள் சகஜமாக வீடுகளில் புழங்கும். பால் கலக்காத கொத்தமல்லி கருப்பட்டி காபி ,சுக்கு காபி ஆகியவை எங்களுக்கு மிகவும் பிடித்தமானவை !


குவளை நிறைய காபி வழங்கப்படுகிறதாவென உறுதி செய்த பின்னரே அருந்துவோம். பாத்திரங்களுக்கு ஈயம் பூசுபவர்களும், கத்தி, அருவாள் மனை சாணை பிடிப்பவர்களும் அம்மி ஆட்டுரல் கொத்துபவர்களும் வாரமொரு முறையாவது தவறாமல் ஊருக்கு வருவதுண்டு !
 

குண்டு பல்பின் மங்கிய வெளிச்சம் , சுசீந்திரம் பள்ளிக்கு ஒன்பது கிலோமீட்டர் நடந்து திரும்பிய அசதி, வரும் வழியில் குளத்தில் குளித்த அலுப்பு, பள்ளியிலிருந்து திரும்பியதும் உண்ட சாதம், உண்ட பின் நண்பர்களுடன் ஓட்டம் ஆகியவை பாடப்புத்தகத்தை திறந்ததுமே உறக்க தேவதை ஆரத் தழுவிக் கொள்வதற்கான காரணங்கள் !

 
பெருமாள் கோயில் நைவேத்தியத்தின் பொருட்டு இரவு ஏழரை மணிக்கு ஊதப்படுகின்ற சங்கின் ஒலியும் மணியின் நாதமும் ,மடியில் புத்தகத்துடன் வீட்டின் முன்பக்க அறையில் தூங்கி வழிகின்ற எங்கள் நித்திரைக்கு சிறு தடை போடும். உரக்கப் படித்தால் தூக்கம் வராதென்ற அம்மாவின் அறிவுரைக்கேற்ப சில வினாடிகள் சத்தமாகப் படித்தாலும் மெதுவாக சுரம் குறைந்து மீண்டும் தூக்கத்திற்கு இட்டுச் செல்லும் !


மாலை ஐந்தரைக்குச் சாப்பிட்டு விளையாடிக் களைத்து இரண்டு மணி நேரம் கூட ஆகாத நிலையில் பசிக்கிறது எனக் குரலெழுப்பி அம்மாவிடம் சாப்பாடு போடச் சொல்வோம். நான்கு நேர உணவு மட்டும் ஒழுங்காக நடக்கிறது. படிப்பைக் காணோம் என்று கூறும் அம்மாவிடம் அது மட்டுமாவது முறையாக நடக்கிறதே எனப் பெருமை கொள்வதை விடுத்து புலம்புவது மடமையெனப் புரிய வைப்போம் !


அப்பா சாதுவானவராக இருப்பினும் இனம் புரியா அச்சம் காரணமாக எங்கள் தேவைகளுக்கு மட்டுமே உரையாடுவது வழக்கம். தேவைகளையறிந்து அப்பா செயல்பட்டாலும் அம்மா வாயிலாகவே கோரிக்கைகளை வென்றெடுப்பது வழக்கம் !


மின்வெட்டு எங்கள் உயிர்த் தோழன். திடீரென ஏற்படுகின்ற மின்வெட்டில் ஊர் இருட்டில் மூழ்கும் போது எங்கள் முகங்களில் மட்டும் ஒளி படரும். எல்லையற்ற மகிழ்ச்சியுடன் ஓ ......என்ற சத்தத்துடன் அனைத்து வீடுகளில் இருந்தும் மடியில் புத்தகத்துடன் தூங்குகின்ற உடன்பிறப்புகள் தூக்கம் கலைந்து புத்துணர்ச்சியுடன் தெருவிற்கு பாய்ந்து வந்து விடுவர் !


எங்கள் அம்மா சிறு விளக்கு வெளிச்சத்தில் எங்களுக்கு சாப்பாட்டை தந்து மின்வெட்டு நேரத்தை பயனுள்ளதாக்கத் திட்டமிட்டாலும் செயலாக்கத்திற்கு நாங்கள் அனுமதிப்பதில்லை.மின்சாரம் மீண்டும் வந்து விடக் கூடாதென்ற பிரார்த்தனையுடன் விளையாடிக் கொண்டிருக்கும் எங்களை மின்வெட்டு நீங்கிய உடனேயே அம்மா படிக்க அழைப்பார்கள் !


மீண்டும் மின்வெட்டு வந்து விடாதாவென்ற நம்பிக்கையுடன் அம்மாவிடம் சாப்பாடு போட வலியுறுத்துவோம்.நம்பிக்கை தானே வாழ்க்கை. விளையாட்டினிடையில் மின்சாரம் வந்து விளக்குகள் பிரகாசிக்கும் வேளை எங்கள் முகங்கள் ஒளியிழந்து விடும் !

-------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை

தி.சேதுமாதவன்
{sethumathavan2021@gmail.com}
கூடுதல் ஆட்சியர்,
முகநூற் குழுமம்.
(16-12-2020)
-------------------------------------------------------------------------------------------

அந்நாளை நினைக்கையிலே (10) பேயன் பழம்-புட்டு, சீனி கூட்டணியே வெற்றிக் கூட்டணி !


அரிசி வடித்த கஞ்சியை சற்று வென்னீர் கலந்து உப்பு சேர்த்து அருந்தியவாறு இடையிடையே கையில் பிடித்திருக்கும் கருப்பட்டித் துண்டை நக்கிச் சுவைப்பது ஆனந்தம். உத்வேகத்தை அளிக்கின்ற சூடு பானத்தின் பொருட்டு விடுமுறை நாட்களில் நாங்கள் அரிசி வடிப்பதற்காக காத்திருப்போம் !
 
உரலில் இடித்த நார்சத்து மிகுந்த கைக்குத்தல் சம்பா அரிசித் தவிடு சுவை மிகுந்தது மட்டுமன்றி, உடலுக்கு உரம் சேர்ப்பதுமாகும் !

சிரட்டையிலான சில்லுடன் கூடிய மூங்கில் குழாயில் தயாரிக்கப் படுகின்ற "குழாய்ப் புட்டின்" ருசியே அலாதி. அவித்த சிறுபயறு, பப்படத்துடன் இணைந்த புட்டு சுவை மிக்கது மட்டுமன்றி ஐந்து மணி நேரம் பசியைத் தாங்க வல்லதாயினும், பேயன் பழம்-புட்டு ,சீனி கூட்டணியே எனக்குப் பிடித்தமான வெற்றிக் கூட்டணி !

கேரள மாநிலத்தில் புட்டுடன் கடலைக் கறி, முட்டைக்கறி, காய்கறி குருமா, மாட்டுக்கறி, சிக்கன் கறி மற்றும் அவித்த ஏத்தன் பழம் ஆகியவற்றை காலையில் கடின வேலைகளுக்குச் செல்பவர்கள் பசி தாங்கும் பொருட்டு சாப்பிடுவார்கள் !

அரிசியும் உளுந்தும் அரைத்து செய்யப்படும் வட்ட வடிவ தட்டைக் கொழுக்கட்டை சுவை மிகுந்ததாயினும், கடுகு , உளுத்தம் பருப்பு, வத்தல் மிளகு ,கறிவேப்பிலை சேர்த்து தேங்காய் எண்ணெயில் தாளித்தெடுத்த சிறு உருண்டை வடிவ அரிசிக் கொழுக்கட்டை சிறுவர்களாகிய எங்களுக்கு மிகவும் பிரியமானது. கொழுக்கட்டை அவித்த தண்ணீரையும் வயிறு நிறையக் குடித்தாலே எங்களுக்கு முழுமையான திருப்தி ஏற்படும் !

பழைய சோற்றை அளவுடன் கலந்து பச்சரிசியோடு ஆட்டுரலில் அரைத்த ஆப்பம் மறுநாள் மிருதுவாக இருக்கும். ஆப்பத்தின் மிருதுத் தன்மைக்காக மாவுடன் கள் சேர்ப்போருமுண்டு !

கள் வாங்க கடைக்குச் செல்லும் வாண்டுகள், வாங்கி வருகின்ற வழியிலேயே, பிற்கால வாழ்க்கைக்கு முன்னோடியாக சற்றே அதனை ருசிப்பதுண்டு. சீனி சேர்த்த பால் மற்றும் உருளைக்கிழங்கு மசால் கறி ஆப்பத்திற்கு சரியான இணை. இடியாப்பமும் ஆப்பமும் ஒரு அம்மா வயிற்று இரட்டை சகோதரிகள் !

உளுந்து, துவரம் பருப்பு, அரிசி, உள்ளி, வத்தல் மிளகாய், கறிவேப்பிலை,பெருங் காயத்துடன் ஆட்டுக்கல்லில் அரைத்து அளவாக உப்பிட்டு தேங்காய் சேர்த்த மாவை கல்லில் லேசாகத் தேய்த்து செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயை பரவலாக ஊற்றி கம கம மணத்துடன் முறுவலாக வார்த்தெடுக்கின்ற அடையை சாப்பிடும் மணமறியா கொரானா நோயாளி கூட அதன் ருசியில் சொக்கிப் போவான் !

 மரச்சீனிக் கிழங்கு சேர்த்து அரைத்த கிழங்கு அடையின் ருசியே தனி. ஊற வைத்த உளுந்தையும் (அரிசிக்குப் பதிலாக) கோதுமையையும் ஆட்டுக்கல்லில் நன்கரைத்து செய்யப்படுகின்ற மிருதுவான கோதுமை தோசைக்கு தேங்காய்த் துவையல் சரியான இணை !

உரலில் இடித்த ஏலம், சுக்கு, சர்க்கரை கலந்த அவல் அக்காலத்தின் சிறந்த மாலை நேர உணவு. வெளியூர் பயணம் செல்பவர்கள் இதனை தங்களுடன் எடுத்துச் செல்வது வழக்கம். அவலை சற்று ஊற வைத்த பின்னர் மல்லிப் பொடி , மிளகாய் பொடி, உள்ளி, கறிவேப்பிலை, தேங்காய்,உப்பு இவற்றுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தயாரிக்கப்படும் கலவையும் (மிக்சர்) அக்காலத்தில் மட்டுமன்றி எக்காலத்திற்குமேற்ற உணவு !

தமிழ்ப் புத்தாண்டு (சித்திரை விஷு ) என்றாலே எங்களுக்கு அவல் தான் ஞாபகம் வரும். சர்க்கரை, ஏலம், சுக்கு ,தேங்காய் கலந்த அவல் தனியாகவும் , துவையல் கலந்த அவல் தனியாகவும் வீடுகளில் தயாரிப்பார்கள். இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கையென்பதை உணவின் வாயிலாக உணர்த்துவது போன்று தித்திப்பும் காரமும் கலந்த அவல் சித்திரை விஷு நாளில் குமரி மாவட்டத்தின் பிரசித்த காலை நேர சிறப்புணவு !

அதிகாலைத் துயிலெழுந்து பூஜையறையில் கண்ணபெருமானைக் கணிகண்ட பின் குளித்து கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்து வீட்டிலுள்ள முதியோர்களிடமும் உறவுகளிடமும் கைநீட்டத்துடன் (நாணயம்) ஆசிர்வாதங்களையும் ஒருங்கே பெற்று நடக்கப் போகும் நாட்களெல்லாம் நல்லதாக நடக்க வேண்டுமென்ற பிரார்த்தனையுடனும் வாழ்த்துக்களுடனும் துவங்குகின்ற மங்களகரமான தமிழ்ப் புத்தாண்டு இன்று தொ(ல்)லைக்காட்சி பெட்டிகளுக்குள் தஞ்சமடைந்து விட்டது காலத்தின் கோலம் !

மிழகத்தில் அரிசிப் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் கோதுமையும் காய்ந்த கிழங்கும் குறைந்த விலைக்கு சந்தைகளில் சகஜமாக விற்பனைக்கு வந்ததன் விளைவாக , வீடுகளில் கோதுமை தோசையும் கிழங்குப் புட்டும் காலை நேர உணவாக அறிமுகமாயின. கிழஙகுப் புட்டு சூடாக சாப்பிட அருமையாக இருக்கும் !

இட்லிக் கொப்பரையில் மாவை சிறிது ஊற்றி அதன் மேல் அவித்த சிறுபயறு, சர்க்கரை ,ஏலம், சுக்கு கலந்த கலவையை சேர்த்து வேக வைத்து தயாரிக்கப்படுகின்ற "சினை இட்லி" சுவை மிக்கது. சிறுபயறு சர்க்கரை கலவை இட்லியின் வயிற்றுக்குள் கருவிருப்பதாலேயே தாய்மையுற்ற இட்லிக்கு அக்காரணப் பெயர் ஏற்பட்டது போலும் !

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

தி.சேதுமாதவன்.

[sethumathavan2021@gmail.com]

கூடுதல் ஆட்சியர்,

I.T.I.முகநூற் குழுமம்.

[10-11-2020]

----------------------------------------------------------------------------------



அந்நாளை நினைக்கையிலே (09) மாங்கனியும் கம்பளிப் பூச்சி நச்சரிப்பும் !


மாம்பழக் காலங்களில் "மாம்பழம்.... மாம்பழம்... "எனக் கூவியவாறு ஓலைப் பெட்டிகளில்  சுமந்தபடி   தெருவில் செல்கின்ற வியாபாரிகளுக்கு சிறுவர்கள் சிவப்புத் கம்பள வரவேற்பளிப்பார்கள். பெண் வாடிக்கையாளர்களிடம் வணிகம் செய்ய வேண்டிய நிலையில் அவர்களது பேரங்களுக்கேற்ற வகையில் புத்திசாலித்தனமாக விலையை  நிர்ணயிப்பார்கள் !
       

பானைக்குள் வைத்திருக்கும் புளியைக் கூட விட்டு வைக்காத நாங்கள் கனிகளின் தரத்தைப் பற்றி கவலை கொள்வதில்லை, அம்மாவை விடாது நச்சரித்து மாங்கனிகளை வாங்க வைத்து விடுவோம். கூடையை இறக்கி வைத்த வியாபாரி சுவையான கனியெனச் சுயச் சான்றளித்து ருசியான மாங்கனியொன்றை  வெட்டித் தருவார். அதிசுவை மிகுந்ததாயினும் ருசித்து விட்டு "பரவாயில்லை.சுமார் ரகம் தான்" " எனச் பொய்ச் சான்றுரைத்து "என்ன விலை ?" என்று  பேரத்தைத்  துவங்குகின்ற பெண்களிடம் "ரூபாய்க்கு ஐந்தென"க் கூறுவார் வியாபாரி !


" பன்னிரண்டு கிடையாதா ?" என அடிமாட்டு விலைக்கு கேட்கின்ற பெண்களிடம் "கட்டுப்படியாகாது அம்மா "  என்று கூறி சுமையைத் தலையிலேற்றி சற்று தூரம் சென்ற பின் திரும்பி வந்து "ரூபாய்க்கு ஏழு" என்றால் தருகிறேன் என்று சுமையைத் திண்ணையில்  இறக்கியதும் துடிதுடிக்கும் எங்கள் இதயம் சற்றே சீரடைந்து நிம்மதிப் பெருமூச்சு விடுவோம் !
     

சற்று முன் ஒருவர் நீல மாம்பழம் ரூபாய்க்கு பத்து தர முன் வந்ததாக வழக்கமாகக் கூறுகின்ற ஒரு பொய்யை கூறி வைப்பார்கள் பெண்கள். அந்த மகானிடமே பழங்களை கொள்முதல் செய்திருக்கலாமே ? என்று கேட்க மனம் துடித்தாலும் விவரமான வியாபாரிகள் அதிகப்பிரசங்கித் தனமான கேள்விகளைக் கேட்பதில்லை !


மாங்கனிகள் வாங்குவதற்கு எங்களின் கம்பளிப்பூச்சி போன்ற நச்சரிப்பும் முக்கிய காரணம். செட்டிவுட்டு, செங்கவரிக்கை, நீலம்  போன்ற  தரமான மாங்கனிகள் சில சமயங்களில் வீதிக்கு வருவதுண்டு. செங்கவரிக்கை மாம்பழத்தின் மணமும் சுவையும் அலாதியானது !


தரமிக்க  மாம்பழங்களை  ரூபாய்க்கு மூன்று அல்லது நான்கிற்கு மேல் கொடுத்தால் வியாபாரிக்கு கட்டுப்படியாகாது !
     

ஆனால் கிராமத்துப்  பெண்களில் பெரும்பாலானோர் பொருளாதாரச் சூழல் மற்றும் உறுப்பினர் எண்ணிக்கை மிகுதி காரணமாக "கழுதை விட்டை கை நிறைய" என்று ரூபாய்க்கு பத்து விலையுள்ள புளி மாம்பழங்களை இரண்டு ரூபாய்க்கு வாங்கி ஏமாந்தாலும், தரமான கனிகளை வாங்க முன்வருவதில்லை. நண்பர்கள் வீட்டில் புளிசேரி  என்றாலே முந்தைய தினம்  பை நிறைய பழம் வாங்கி ஏமாந்த விபரத்தை  எளிதாகப் புரிந்து கொள்ளலாம் !


சிறுவர்களின் நச்சரிப்பைப் பார்த்து பெரும்பாலான வியாபாரிகள் தங்களுடைய பொருளின் விலையைக் குறைப்பதில்லை. சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள  மாம் பழங்களைப் பயன் படுத்தும் பழக்கம் குமரி மாவட்டத்திலுண்டு. அரிவாள் மனையின் உதவியோடு அகற்றப் படுகின்ற மாம்பழத்தின் தோலிலுள்ள  சிறு அம்சத்தைக் கூட, அம்மா தலையில் அடித்துக் கொள்வதையும் பொருட்படுத்தாது எலிகளை விடத் துல்லியமாக பல்லால் துருவி எடுத்து விடுவோம் !


மாங்கனித் துண்டுகளைத் துல்லியமாக பங்கு வகிப்பதில்  நிபுணரான எனது தம்பி தனக்கு மட்டும் ஒரு துண்டை அதிகமாக ஒதுக்கி  வைக்க ஒருபோதும் தவறியதில்லை. "உங்களைப் போன்று மாம்பழத்திற்கு சண்டை போடுபவர்கள் உலகில் எவரும் இருக்க முடியாது" என்ற அக்காவிடம் , பழனி ஆண்டவன் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுத்தியதே  மாம்பழம் தான் என்பதை மறந்து விடாதே என நாங்கள் பதிலிறுப்போம் !


நண்பன் (குஞ்சான்) முருகனின் கால் மூட்டு வீக்கத்திற்கான  காரணத்தை அவன் கூறிய போது நண்பர்கள் வீட்டிலும் இது போன்ற  "சண்டைகள் சகஜமப்பா" என  ஒரு ஆசுவாசம் !


தாமரைக்குளம், இரணியல்  ஆகிய ஊர்களிலிருந்து கருப்பட்டி பொரி, பொரி உருண்டை மற்றும் அவல் ஆகியவற்றை பெரிய பெட்டிகளில் தலையில் சுமந்தபடி வருகின்ற பெண் வியாபாரிகள் நெல்லுக்கு பண்டமாற்று முறையில் வியாபாரம் செய்வதற்கு முன்னுரிமை அளிப்பவர்களெனினும் எங்கள் வீட்டில் காசு கொடுத்து வாங்குவோம். அம்மாவின்  வழக்கமான ஒதுக்கீட்டிற்கு மேலாக , எலிகளைக் கூட ஏமாற்றி மண் பானையிலிருந்து நாங்கள் களவாடிச் செல்லும் பொரியின் அளவு அதிகம். அப்படி ஒரு அதீத ருசி கருப்பட்டிப் பொரிக்கு  உண்டு !


வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் மட்டுமே பெரும்பாலான வீடுகளில் சிற்றுண்டி தயாரிப்பார்கள். அடுத்த நாள் என்ன சிற்றுண்டி என்பதை முந்தைய நாள் சாப்பாட்டின் போதே அம்மாவை  நச்சரித்துத் தெரிந்து கொள்வோம். உணவில் காண்பிக்கின்ற அக்கறை படிப்பில் ஏன் இல்லை ? என்ற அம்மாவின் கேள்விக்கு விடை கண்டுபிடிக்க நாங்கள் ஒருபோதும் முயன்றதில்லை !

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

தி.சேதுமாதவன்,
[sethumathavan2025@gmail.cim]
கூடுதல் ஆட்சியர்,
I.T.I. முகநூற் குழுமம்.
09-12-2020
------------------------------------------------------------------------------------------

அந்நாளை நினைக்கையிலே (08) தீப்பெட்டி விடு தூது !


எங்கள் தெருவில் வசித்து வந்த ராமன் அண்ணனிடம் ஒப்படைக்கும் பொருட்டு வாரமொரு முறை தீப்பெட்டியொன்றை அக்கா ஒருவர் என்னிடம் தருவார் !

 

புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட அவரிடம் அக்கா தந்த தீப்பெட்டியைத் தவறாமல் ஒப்படைப்பது எனது பணி. அதற்கான காரணத்தை ஆய்வு செய்யும் பகுத்தறிவேதும் சிறுவனான எனக்கில்லை. ஒரு நாள் மாலை தோழர்களோடு நான் விளையாடிக் கொண்டிருக்கும் வேளை அக்காவின் அவசர அழைப்பு வரவே அங்கு சென்று தீப்பெட்டியைப் பெற்று ராமண்ணனிடம் ஒப்படைத்து விட்டு தாமதமாக விளையாட்டில் வந்திணைந்தேன் !

 

தாமதத்திற்கான காரணத்தை எனது நண்பர்கள் வினவிய போது ராமண்ணனுக்கு வாரமொரு முறை அக்கா செய்கின்ற தீப்பெட்டி உபயத்தைக் குறித்து கூறினேன். "தீப்பெட்டியைக் குலுக்கிப் பார்த்தாயா ? திறந்தாவது பார்த்தாயா ? எனக் கேள்விகளை அடுக்கினான் சசி.  !

 

"இல்லை" என்ற எனது பதிலைக் கேட்டு , தீப்பெட்டி தொழிற்சாலையேதும் அக்கா வீட்டில் இருப்பதாக தெரியவில்லையெனவும் தீப்பெட்டிக்குள் காதல் கடிதமாகத் தான் இருக்க வேண்டும் எனக் கணித்தான் நண்பன் ராஜு. அடுத்த தடவை தீப்பெட்டியை ஆய்வின் பொருட்டு தங்களிடம் ஒப்படைக்கச் சொன்னான் சசி !

 

அடுத்த வாரம் அக்கா அளித்த தீப்பெட்டியைத் திறந்து நேர்த்தியாக மடித்து வைக்கப்பட்டிருந்த காதல் கடிதத்தை ஆவலுடன் எனது நண்பர்கள் படிக்கத் தொடங்கினர். ஐந்தாம் வகுப்புடன் தனது உயர் படிப்பை இடை நிறுத்தம் செய்த அக்கா அன்புள்ள 'அத்தானுக்கு " என்று துவங்குவதற்குப் பதிலாக "எத்தனுக்கு" என்று மடலை சரியாகவே தொடங்கியிருந்தார். விளையாட்டை நிறுத்தி விட்டு கடிதத்திலுள்ள அபத்தங்கள் அனைத்தையும் பேனாவால் சரி செய்ய ஒரு மணி நேரம் எங்களுக்கு தேவைப்பட்டது !

 

காதல் கடிதமாயினும் தமிழுக்கு இழுக்கு நேர்ந்து விடக்கூடாதென்ற அக்கரையில் இலக்கியத் தொண்டு செய்து, திருத்தங்கள் பல கொண்ட மடலை மீண்டும் தீப்பெட்டிக்குள் திணித்து ராமண்ணனிடம் பத்திரமாகப் கொண்டு சென்று சேர்த்தோம். அத்துடன் அக்காவின் "தீப்பெட்டி விடு தூது" முடிவுக்கு வந்தது !

 

திண்ணையில் அமர்ந்து கொண்டு பல்குத்திக் கொண்டிருக்கும் நடுத்தர வயதினரான மாமா ஒருவர் எனக்கு மிகவும் பிடித்தமானவர். அவரது வீட்டைக் கடந்து செல்லும் தருணங்களில் அவருடன் கருத்துப் பரிமாற்றம் செய்வது வழக்கம். சுசீந்திரம் உயர்நிலைப் பள்ளியில் படித்த அவருக்கு தமிழ்ப் புலமை உண்டென்ற விவரம் பெரும்பாலானோருக்கு தெரியாது !

 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையைப் பற்றியும் அவரது படைப்புகள் குறித்தும் இலக்கிய நயத்துடன் பேசுகின்ற அவர் ஒன்பதாம் வகுப்பில் இடை நின்றவர் என்று கற்பனை கூடச் செய்யவியலாது.


அவரது தமிழ் ஆர்வம் முறையாக ஊக்குவிக்கப் படாத தன் காரணமாக தலை சிறந்த தமிழ் சிந்தனையாளர் ஒருவரை இழந்து விட்டதாக பலமுறை நினைத்ததுண்டு !

 

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் கவலை கொள்ளாது வாழ்வில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை தைரியமாக நேரிட வேண்டுமென்பது அவரது சித்தாந்தம். வரவிருக்கும் பிரச்சினைகளை எங்ஙனம் எதிர் கொள்வதென்ற கவலையில் இன்றைய இன்பத்தை சுவைக்க மறப்பது எவ்விதத்தில் நியாயமென்ற அவரது தர்க்க வாதம் எனக்கு மிகவும் ஏற்புடையது. படிப்பை இடை நிறுத்தம் செய்தமைக்கான காரணத்தை வினவிய போது ஒன்பதாவது படிக்கும்போது கணக்கு ஆசிரியரிடம் சமர்ப்பித்த தனது நாலடி தமிழ்க்கவிதையே படிப்பை இடை நிறுத்தம் செய்வதற்கான காரணமாக என்னிடம் விவரித்தார் !

 

கணக்குப் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றமைக்காக பிற மாணவர்களின் முன்னிலையில் தனது உருவத்தை வைத்து கிண்டல் செய்தது மட்டுமன்றி பிரம்பால் அடித்ததும் மாமாவுக்கு கடுமையான அவமானத்தையும் சினத்தையும் ஏற்படுத்தியது !

 

கணக்குப் பாடத்தை பாடத்திட்டத்தில் சேர்ந்தவர்கள் மீது மாமாவுக்கு அடங்காத கோபம். கணக்கு ஆசிரியரைக் குறித்த தனது ஆதங்கத்தை அழகுத் தமிழில் கவிதை வடித்து மறுநாள் ஆசிரியர் வகுப்புக்கு வரும்போது அவரது கவனத்தைக் கவரும் வண்ணம் மேஜை மேல் வைத்தார் !

 

கவிதையைப் படித்ததும் ருத்ரனாக மாறிய ஆசிரியர் படைப்பாளியை இனம் கண்டு பிரம்பாலடித்தார். மாமாவுக்கு மட்டும் மானம்,சூடு, சொரணை இல்லையா என்ன ? வாட்டசாட்டமான அவர் ஆசிரியர் கையிலிருந்த பிரம்பைப் வெடுக்கேனப் பறித்து இரண்டு பிரம்படிகளை கணக்கு ஆசிரியருக்கு கணக்காகக் கொடுத்துவிட்டு புத்தகப் பையைத் எடுத்துக்கொண்டு ஒரு மத்தியான நேரம் வயல் வெளியில் நடந்து வீட்டுக்குத் திரும்பி விட்டார் !

 

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு மழைக்குக் கூட அந்தப் பக்கம் எட்டி பார்க்கவில்லை . மனிதனுக்கு சுய கௌரவம் படிப்பை விட முக்கியம் அல்லவா ? அவர் இயற்றிய அழகுத் தமிழ் கவிதை இதோ !

 

..................…...............................

" நெடுமால் திரு மருக !

நித்தம் நித்தம் இந்தெழவா !

வாத்தியார் சாவாரா !

வயத்தெரிச்சல் தீராதா"

..............................................

 

கணக்கு ஆசிரியரிடம் கைத்துப்பாக்கி இல்லாதது பாக்கியம் என மனதிற்குள் நினைத்துக் கொண்டதை மாமாவிடம் சொல்லவில்லை !

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

தி.சேதுமாதவன்,

[sethumaathavan2021@gmail.com]

கூடுதல் ஆட்சியர்

I.T.I. முகநூற் குழுமம்.

[05-12-2020}

-------------------------------------------------------------------------------------

அந்நாளை நினைக்கையிலே (07) நரியின் கண் கோழிக்கூடு மேலே தாம்மா தங்கச்சி !

 

மளிகைப் பொருட்கள் வாங்கும் பொருட்டு கடைக்குச் செல்ல மிதி வண்டி டயர் எங்களுக்கு அத்தியாவசியத் தேவையாதலால் சைக்கிள் கடை முஸ்தபா அண்ணாச்சியிடமிருந்து வாங்கி வருவோம். பால் வாங்கச் செல்லும் போதும் டயரை கம்பால் தட்டிய படியே தூக்கு வாளியில் வாங்கி வருகின்ற அரை லிட்டர் பாலை முந்நூறு மில்லியாக்கி அம்மா கையில் பத்திரமாக ஒப்படைப்பது வழக்கம் !

 

சீக்காமடத்தெரு பத்மனாபன் வீட்டில் சென்று பால் வாங்கி வருவதற்கு என்னுடன் என் தம்பியும் மதுவும் துணையாக வருவார்கள்.எங்கள் பாட்டி வீட்டு வாசலின் முன்னால் மாலை நேரத்தில் ஒரு டயரும் அதன் மேல் சிறிய குச்சியொன்றும் சுவரோடு சாய்த்து வைக்கப் பட்டிருப்பின், எனது தம்பி வீட்டின் உள்ளே இருக்கிறார் என்று பொருள் !

 

இடுப்பில் கட்டியிருக்கும் கால்சட்டை பாதி வழியில் அவிழ்ந்து விடாமல் ஒரு கையால் மானம் காத்து சாமான்கள் அடங்கிய பையைத் தோளில் தொங்கப் போட்டு டயரை மறு கையால் ஓட்டிச் செல்லும் சிறுவர்களுக்கு ஒரு சர்க்கஸ் காரனின் சாதுர்யம் அவசியம். நானும் தம்பியும் வார் வைத்த கால்சட்டை அணிந்திருப்பதால் வழியில் அவிழ்ந்து விடுமோவென அச்சம் எங்களுக்கில்லை !

 

வீட்டில் ஒரு டயர் மட்டுமே இருந்த காரணத்தால் தம்பி அதனை எடுத்துச் செல்லும் வேளைகளில் கைகளாலேயே கற்பனையாக ஸ்டீயரிங் பிடித்து எரிபொருள் சிக்கனத்தைக் கடைப்பிடித்து வாயாலேயே ஊர்தியை இயக்கி சிறிய சந்து வழியாக நான் வேகமாக ஓட்டிச் செல்வேன் !

 

சந்துக்குள் இரண்டு கார்கள் எதிரும் புதிருமாக செல்லும். திருப்பங்களில் செல்லும்போது கீ..... கீ...... என சத்தமிட்டு லாகவமாக ஸ்டியரிங்கைப் ஒடித்து திருப்பி வேகத்தைக் குறைத்து கியரை மாற்றி நான் கடைக்கு செல்கின்ற வழியில் என் போன்று எரிபொருள் சேமிப்பு ஊர்திகள் பல எதிரில் வேகமாகச் செல்வதுண்டு !

 

சனி ஞாயிறு நாட்களில் வாடகை மிதிவண்டியில் பயிற்சி எடுப்போம். தெற்குத் தெரு ஜெகதீசனின் அண்ணன் கடையில் நியாயமான வாடகைக்கு மிதி வண்டிகள் கிடைக்கும். பெருமாள் பிள்ளை அண்ணன் தான் எங்கள் அனைவருக்கும் ஆஸ்தான ‌குரு. மிதிவண்டி ஓட்டும் போது முதுகு சற்று வளைந்தால் கூட பலமாக அடித்து விடுவார். அடிக்குப் பயந்து நாங்கள் கவனமாக ஓட்டுவோம். மிதிவண்டிப் பயிற்சியின் ஆரம்பக் கட்டங்களில் எங்கள் தெருக் கோடியில் ஒருவர் நடந்து வந்தாலும் பிரேக்கை அழுத்தி விடுவோம் !

 

சிறிய மிதிவண்டி கிடைக்காத சந்தர்ப்பங்களில் பெரிய மிதிவண்டியை வாடகைக்கு எடுத்து இடைக்கால் போட்டு ஓட்டுவோம். பெருமாள் பிள்ளை அண்ணனிடம் பயிற்சி பெற்ற சசியும் கணேசனும் ராஜுவும் முதுகை வளைத்து மிதிவண்டி ஓட்டுகின்ற சிறுவர்களுக்கு பெருமாள் பிள்ளை அண்ணனிடம் தாங்கள் பெற்ற பரிசை வட்டியுடன் திருப்பிக் கொடுப்பார்கள் !

 

அக்காலத்தில் மிக அபூர்வமாக வயதான ஓரிருவருக்கு மட்டுமே நீரிழிவு நோய் காணப்படும். இந்நோய் உள்ள தாத்தா ஒருவர் புகழ் பெற்ற மருத்துவர்களான தனது மகன் மற்றும் மருமகளிடமிருந்து தப்பிப் பிழைத்து மருத்துவரல்லாத தனது மகள் வீட்டில் வசித்து வந்தார் !

 

மருந்து மாத்திரைகளை விட தாத்தாவுக்கு அத்தியாவசியத் தேவையான கருப்பட்டி, கல்கோனா ,தேன் மிட்டாய் போன்ற இனிப்புப் பண்டங்களை அவர்களது குடும்பத்தினருக்குத் தெரியாமல் இரகசிய வினியோகம் செய்கின்ற சிறார்கள் சிலர் தாங்களும் அதன் மூலம் பயன்பெற்றனர். பலத்த உணவு கட்டுப்பாடுகளுக் கிடையிலும் தாத்தாக்களுக்கு சர்க்கரை அளவு குறையாது பாதுகாத்து இறைவனடி சேர்த்த பெருமை எங்கள் தெரு சிறார்களையே சாரும் !

 

"ஒன் நாட் நயன் " என்று ஒரு அண்ணாச்சி எங்கள் தெருவில் வசித்து வந்தார். சாதாரண நிலையில் பரம சாதுவாகக் காட்சியளிக்கின்ற இம்மனிதர் அவரைவிட உயரமும் பருமனுமான மனைவியை சாதாரண கதியில் எதிர்த்துப் பேசாதவர். வெத்திலை பாக்கு, மிட்டாய் வகைகள், சிகரெட் ,பீடி ,பழம், போன்ற பொருட்களுடன் கூடிய சிறிய பெட்டிக் கடை ஒன்றை தனது வீட்டுடன் இணைந்தே நடத்தி வந்தார். !

 

நன்கு அறிமுகமானவர் களிடம் மட்டுமே சிறு புன்முறுவலுடன் அளவாக நகைச்சுவையாகப் பேசுவார் அண்ணாச்சி. மாதமொரு முறை தெங்கம்புதூர் சென்று உற்சாக பானம் அருந்தி விரிவடைந்த நிலையில் வருகின்ற சந்தர்ப்பங்களில் அன்றைய மாலைப் பொழுதை பொன்மாலைப் பொழுதாக மாற்றி விடுவார் !

 

தனது வீட்டின் முன் அஷ்ட கோணலாக நெளிந்து நின்று தொடை தெரிய வேட்டியை மடித்துக் கட்டி வலது கையால் தொடையைத் தட்டியவாறே "ஒன் நாட் நயன்" (இந்திய தண்டனை சட்டப்பிரிவு 109) தெரியுமாடி உனக்கு ? அடுப்பாங்கரையில் இருக்கும் உனக்கு என்ன தெரியும் ?" என மனைவியிடம் துணிச்சலாகக் கேட்டு விட்ட உலகின் முதல் கணவனாக எங்களைப் பெருமையுடன் பார்த்து ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரனைப் போல மந்தகாசப் புன்னகை புரிவார் !

 

" வாங்க மொதல்ல. எதுவானாலும் உள்ளே வந்து பேசிக்கலாம் " என அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அழைக்கின்ற மனைவியிடம் "கதவ சாத்திட்டு என்னைச் சாத்திடலாம்னு பாக்கிறியா ? நடக்காது. நடக்கவே நடக்காது மவளே! ஒன் நாட் நயனில் புக் பண்ணிருவேன் " என்று மீண்டும் கூறி விட்டு சற்றே பின் வாங்குவார் !

 

வேடிக்கை பார்ப்பவர்களை நோக்கி "காந்தி எனக்கும் சேர்த்து தான் சுதந்திரம் வாங்கித் தந்திருக்காரு. ஒருத்தனும் என்ன கேள்வி கேட்க முடியாது. பிரச்சினை எனக்கும் என் பொண்டாட்டிக்கும் தான். நீங்க உங்க வேலையை பாருங்க" என்று கூறி தனது விசிறிகளை விரட்டி விடுவார் ! நீண்ட நேரம் தெருவில் ஒற்றைக்காலில் நின்று அலுத்த பின் தனது வீட்டு வாசல் படியில் உட்கார்ந்து கொண்டு பழைய டி.எம்.எஸ் பாடல்களை இராகத்துடன் பாடுவார் !

 

"வரும் போது என்ன கொண்டு வந்தோம். போகும்போது என்னத்த கொண்டு போறோம் அன்பு சகோதரிகளே ! உங்களுக்கு ஓர் அறிவிப்பு. அதிரடி விற்பனையாக இன்று நமது கடையில் ஏத்தன் பழம் ஒன்றின் விலை பத்தே பத்து பைசா. ஓடி வாங்க" என்பார் !

 

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த எங்கள் தெருப் பெண்கள் சிலர் ஐம்பது பைசா எடுத்து வந்து ஐந்து ஏத்தன் பழங்களை சொந்தமாக்கி விடலாமென்ற பேராசையில் ஓடிச் செல்வர். ஆனால் உச்சக்கட்டப் போதையிலும் "செத்தாலும் நரியின் கண் கோழிக்கூடு மேலே தாம்மா தங்கச்சி ! நான் என்ன இளிச்சவாயனா ? ஐம்பது காசுக்கு ஐந்து தருவதற்கு. இந்தா பிடி ரெண்டு " என்று கூறி பழத்தை எடுக்காமலேயே காசுக்காக கையை நீட்டுவார் அண்ணாச்சி !

 

போதையிலும் விவரமாக பேசுகின்ற அவரிடம் "ஒம்ம பழத்தை நீரே வெச்சுக்கிடும்" என்று எரிச்சலுடன் திரும்புகின்ற பெண்களைப் பார்த்து "போனால் போகட்டும் போடா" என்று இராகத்துடன் பாடுவார் அண்ணாச்சி !

 

பார்வையாளர்கள் கூட்டம் சற்று குறைந்ததுமே அண்ணாச்சியின் வீட்டுக் கதவுகள் திருவரங்க நாதனின் சொர்க்க வாசலைப் போன்று திடீரென்று திறக்கப்பட. அக்காவும் அவரது மகளும் சரசரவென்று அண்ணாச்சியை மின்னல் வேகத்தில் வீட்டின் உள்ளே இழுத்து கதவை அடைத்து விடுவர். பலத்த சப்தங்களுக்கிடையே குளிர்ந்த நீரால் அண்ணாச்சியை அபிஷேகம் செய்து அடித்துக் காயப் போட்டு விடுவார்கள் !

 

நெற்றியில் நீறு பூசி அமைதியே வடிவாக சிவப்பழமாக பெட்டிக் கடையில் மறுநாள் அமர்ந்திருக்கும் அண்ணாச்சி ஒரு மாத இடைவெளிக்குப் பின்னர் மெல்ல "ஒன் நாட் நயன்" என மீண்டும் தவங்கி விடுவார். தனது இல்லத்தரசியை எதிர்த்துப் பேசத் துணிவில்லாத அண்ணாச்சி அவரைத் திட்டுவதற்கான மனோதத்துவ ரீதியிலான ஒரு வடிகாலாகவே உற்சாக பானத்தைப் பயன்படுத்தினார் என்று அனுபவசாலிகள் பேசிக் கொண்டார்கள் !

 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

தி.சேதுமாதவன்,

[sethumathavam2021@gmail.com] 

கூடுதல் ஆட்சியர்

I.T.I.முகநூற் குழுமம்.

{02-12-2020}

-------------------------------------------------------------------------------------

அந்நாளை நினைக்கையிலே (06) எங்கள் வீட்டுக் கோழி !

 

எங்கள் வீட்டுக் கோழி அடைகாத்த குஞ்சுகள் பொரித்தவுடனேயை எங்கள் மூவருக்குமாக பெட்டைக் கோழிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவற்றை பராமரிப்பதற்கான பொறுப்பும் வழங்கப்படும் !


மணிகண்டன் என்ற சேவல் மூவருக்கும் பொதுவானது. அறுவடை முடிந்து தெருவில் வைக்கோல் காயப்போடும் போது உதிர்கின்ற நெல்மணிகள் கோழிகளுக்கு சிறந்த உணவாதலால் விடுமுறை நாட்களில் போட்டியிட்டு எங்கள் கோழிகளை தெருவில் மேய விடுவோம் !

 

வசந்தி ,கஸ்தூரி போன்ற அழகிய பெயர்களை நானும் எனது அக்காவும் கோழிகளுக்கு சூட்டும் போது எனது தம்பி மட்டும்குளாய்ங் என்று அவனது கோழி எழுப்புகின்ற வித்தியாசமான ஒலியை வைத்துப் பெயரிட்டான். அவனைப் போலவே சேட்டைக்காரியாக அக் கோழியை வளர்த்தான் !

 

தம்பி அழைத்தால் மட்டுமே மடியில் ஓடி வந்து அமர்கின்ற அக்கோழி நாங்கள் அருகே சென்றால் கொத்தித் துரத்தி விடும். தான் முட்டையிட்ட விஷயத்தை குரலெழுப்பி தெரிவிக்கும் "குளாய்ங்" தனது பொன் முட்டையைத் தொடுவதற்கு என் தம்பியை மட்டுமே அனுமதிக்கும் !


விடுமுறைக் காலத்தில் நானும் (குஞ்சான்) முருகனும் தோப்புக்குச் சென்று கறையான் புற்றைக் கம்பால் தட்டிக் கண்டறிந்து உடைத்து பாம்புகளேதும் புற்றில் குடியிருக்க வில்லையென உறுதி செய்த பின்னர், கரையானை கைகளால் அள்ளி டப்பாவில் நிறைத்து கோழிக்கு உணவாகக் கொடுப்போம் !

 

ஒரு முறை பள்ளிக்குச் செல்லும் வழியில் வயல் வரப்பினருகிலுள்ள எலி வளை ஒன்றை உடைத்த போது இரு மரைக்கால் அளவு பதரேதுமில்லாத சுத்தமான நெல் மணிகள் எனக்கும் (குஞ்சான்) முருகனுக்கும் கிடைத்தது. எலிகள் தங்கள் வளைகளை சுரங்கத்தைப் போன்று கச்சிதமாக வடிவமைத்து நெல் மணிகளை சேமித்து வைத்திருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஊட்டியது !

 

முட்டையிடும் நேரத்தை கால்நடை மருத்துவரைப் போன்று சுண்டு விரலால் பின் பக்கப் பரிசோதனை மூலம் கண்டறிந்து கூண்டில் கோழியை அடைத்து விடுவோம். முட்டையின் இருப்பு சற்று உட்பக்கமாக அமைந்திருந்தால் முட்டையிடும் நேரத்தை அனுமானித்து பிற்பகல் ஒரு மணிக்கு மேல் சாவதானமாகக் கூட்டிலடைப்போம் !

 

அறுவடைக் காலங்களில் சுமார் பதினைந்து முட்டைகள் வரை போட்டு அலுத்த பின்னர் கோழியின் மெருகேறிய சிவப்பு வண்ண முகம் வெளிறத் துவங்கி அடை கிடக்க ஆரம்பித்து விடும். அனுமதித்த இரு வார காலத்திற்குள் அடை தெளியா விடின் தண்ணீரால் தொடர் அபிஷேகம் செய்து நாங்கள் தொந்தரவு செய்வதுடன் அதன் இறகையே மூக்குத்தியாக அணிவித்து விரட்டி விடுவோம் !

 

செள் படர்வதைத் தவிர்க்கும் பொருட்டு கூட்டிலிருந்து அடைக் கோழிகளை எத்தனை முறை விரட்டியடித்தாலும் விக்ரமாதித்தன் கதையில் வருகின்ற வேதாளத்தைப் போன்று முயற்சியை கைவிடாது தொடர்ந்து அடைகிடக்கும் கோழி மீது வசம்பு கலந்த நீரை செள் நீங்கும் பொருட்டு ஊற்றுவோம் !

 

அடை கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சுமார் பதினொன்று முட்டைகளை வளர்பிறை நாளில் முட்டைகளின் அருகே கரித்துண்டு மற்றும் இரும்புத் துண்டு வைத்து எங்கள் அம்மாவின் வழிகாட்டுதலுடன் அடைகாக்க வைப்போம் !

 

நீண்ட இருபத்தி ஒன்று நாட்கள் காத்திருப்பிற்குப் பின்னர் பொரித்து பூமியில் கால் பதிக்கின்ற சிவப்பு நிற அலகும் சிறிய இறகுகளும், இள மஞ்சள் நிறத்துடனும் கூடிய அழகிய கோழிக் குஞ்சுகளைக் காண அற்புதமாக இருக்கும் !

 

ஓடுகளின் கடினத்தன்மை காரணமாக பொரிக்காத முட்டைகளை சிறு கரண்டியால் மெதுவாகத் தட்டி பொரிக்க வைப்போம். ஓரிரண்டு கருவுறாத (கூ)முட்டைகள் பொரிப்பதில்லை. அரிசித் தவிட்டில் சற்று உப்பும் தண்ணீரும் கலந்து பிசைந்து தயாரிக்கப் படுகின்ற சத்துணவு மற்றும் பொடியரிசி கோழிகளுக்கு மிகவும் பிரியமானது !

 

எனது தம்பியின் கோழி, காகங்களை மட்டுமன்றி எங்களையும் அருகில் அண்ட விடாமல் பொறுப்புடன் குஞ்சுகளை கவனித்துக் கொள்ளும். வானத்தில் வட்டமடிக்கும் பருந்துகளுக்கும் காகங்களுக்கும் ஓரிரு குஞ்சுகள் இரையாவதுண்டு. பசி மிகுதியால் சில தருணங்களில் தாய்(அடை)க்கோழியே ஓரிரண்டு குஞ்சுகளை சாப்பிடுவதுமுண்டு !

 

என்னுடன் பயிலும் நண்பன் பத்மனாபனது அக்கா குடும்பம் மதுரையிலிருந்து இடம் பெயர்ந்து எங்கள் தெருவில் குடியேறியது .பாண்டி, கிட்டு ,முத்து.என்ற மூன்று சிறுவர்கள் எங்களுக்கு பாண்டி நாட்டு வித்தைகள் பல கற்றுத் தந்தனர் !

 

அரிசி வத்தல் ,உள்ளி வத்தல், பெரண்டை வத்தல், வடகம் போன்றவற்றை தயாரித்து அவர்களது வீட்டு முற்றத்தில் வெயிலில் காய வைக்கும்போது இந்த சிறுவர்கள் செங்குத்தாக நிறுத்தப்பட்ட கம்பின் மேல் முறத்தை கவிழ்த்து வைத்து கம்பில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றைப் பிடித்தபடியே வீட்டு முற்றத்தில் காவலிருப்பார்கள் !

 

காகம் வத்தலைத் தின்னத் துவங்கும் முன்னரே தருணம் நோக்கி பட்டென கயிற்றை இழுத்து அரசியல் வாதிகளுக்குக் கூட கைவராத காக்கா பிடிக்கும் யுத்தியை இள வயதிலேயே இச்சிறுவர்கள் இயல்பாகப் பெற்றிருந்தார்கள். ஊர் சிறுவர்களில் பலர் பல வழிகளில் பகீரதப் பிரயத்னம் செய்தும் சனி பகவானின் வாகனம் சிக்கியதில்லை !

 

எப்போதும் கலைடாஸ்கோப், லென்ஸ் வழியாக சினிமா பார்க்கும் கருவி, ரப்பர் கட்டிய கவிட்டைக் கம்பு ஆகியவற்றை கழுத்தில் தொங்க விட்டவாறே அலைகின்ற இவர்கள் பிற சிறுவர்களை விட முற்றிலும் வித்தியாசமானவர்கள் !

 

இச்சிறுவர்களுக்கு 'வித்தை மாற்று முறை'யில் நீச்சல் கற்றுக் கொடுத்து வித்தைகள் பலவற்றை எங்கள் தெரு சிறார்கள் கற்றனர். காலம் செல்லச் செல்ல எங்கள் கிராமத்துச் சூழலில் அவர்கள் மெல்ல இணையத் துவங்கினர். ஈஸ்வரன் வீட்டு மாமரத்தில் கல்லெறிவதற்குப் பதிலாக கவிட்டைக் கம்பை உபயோகித்து மாங்காயை குறி நோக்கி வீழ்த்துகின்ற நவீன தொழில் நுட்பத்தைப் புகுத்திய விஞ்ஞானிகள் இவர்கள் !

 

கல்லெறிந்து மாங்காய் பறித்த காரணத்தால் ஈஸ்வரனின் அப்பாவிடம் பல முறை பிடிபட்டு கோழிக் கூட்டுக்குள் இரு மணி நேரத்திற்கு மேலாக ஓய்வெடுத்த பின்னர் செள் கடி காரணமாக முட்டையிடாமலேயே வெளியேற்றப் பட்ட சசியும் ராஜுவும் நவீன மாங்காய் பறி தொழில் நுட்பத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள் !

 

முகம் பார்க்கும் கண்ணாடியை சூரிய வெளிச்சத்தில் சாய்வாக நிறுத்தி வீட்டிற்குள் ஒளியைச் செலுத்தி சுவரில் படம் காட்டும் மதுரை சகோதரர்களின் வித்தைகள் குழந்தைகள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றது. கிளியாந்தட்டு, கபடி ,கள்ளன் போலீஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகின்ற சிறார்கள் அறிமுகம் இல்லாத வீட்டிற்குள் கூட அடாவடியாகப் புகுந்து ஒளிந்து கொள்வார்கள்  !

 

கோடை விடுமுறையில் பத்மநாப புரத்திலிருந்து வந்திருந்த எனது தம்பி (சித்தப்பா மகன்) " கள்ளன் போலீஸ்" விளையாடும் போது தன்னைத் துரத்தி வருகின்ற சிறுவர்கள் நெருங்கிவிடவே தென்னை மரத்தின் பாதி உயரம் ஏறி விட்டான் !

 

தரையில் ஓடுவதற்கு மட்டுமே விளையாட்டு விதிகளில் இடமுண்டு என்று கூறிய எங்களிடம் பிற மார்க்கங்களேதுமில்லாத நிலையில் ஒரு திருடனுக்கு தென்னை மரத்தில் ஏறித் தப்பிப்பிதற்கு எங்கள் ஊர் விளையாட்டு விதிகளில் இடமுண்டெனச் சாதித்தான் !

------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

தி.சேதுமாதவன்

(sethumathavan2021@gmail.com)

கூடுதல் ஆட்சியர்,

I.T.I.முகநூற் குழுமம்,

{28-11-2020}

---------------------------------------------------------------------