மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

புதன், 20 ஜனவரி, 2021

நான்மணிக்கடிகை (பாடல்.03) எளியவர்களை இகழாதீர் !

நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று ! கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த இலக்கியம். இதை இயற்றியவர் விளம்பி நாகனார் என்பவர். 101 பாடல்களைக் கொண்ட இந் நூலிலிருந்து ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------------------

பாடல் (03)

--------------------------------------------------------------------------------------------------

எள்ளற்க  என்றும்  எளியரென்று ! என்பெறினும்

கொள்ளற்க  கொள்ளார்கை  மேற்பட  உள்சுடினும்

சீறற்க சிற்றில் பிறந்தாரை ! கூறற்க !

கூறல்ல  வற்றை விரைந்து !

--------------------------------------------------------------------------------------------------

பொருள்

---------------------------------------------------------------------------------------------------

எவரையும் எந்தச் சிறப்பும் இல்லாத எளிய மனிதர் என்று, தாழ்வாக எண்ணாதே ! மதிப்பில் உயர்ந்த பொருளாயினும் பண்பில்லாத  மனிதர்களிடம் வாங்காதே ! தவறு செய்தாலுங்கூட ஏழை மக்களிடம் சினம் (கோபம்) கொள்ளாதே ! உள்ளம் பதை பதைப்பு அடைந்தாலும் கூட தகாத சொற்களைச் சொல்லி விடாதே !

----------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற் பொருள்:

---------------------------------------

எள்ளற்க  =  இகழ்ந்து பேசாதே; என்பெறினும்= மிகச் சிறந்த ஒன்றைப் பெறுவதானாலும் கூட; கொள்ளற்க = வாங்காதே ; கொள்ளார் கை = கொள்ளத் தகாதவருடைய கைகள் ; மேல = அவர் கை மேலேயும் உன் கை கீழேயும் ; உள் சுடினும் = ஏழையின் செய்கை உன் மனதை வருத்தினாலும்; சீறற்க = சினந்து பேசாதே ; சிற்றில் பிறந்தாரை = ஏழைகளை; கூறல்லவற்றை = சொல்லத் தகாத சொற்களை; விரைந்து = பதை பதைப்பு அடைந்து; கூறற்க = சொல்லிவிடாதே !

----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

தி.சேதுமாதவன்,

கூடுதல் ஆட்சியர்,

I.T.I.முகநூற் குழுமம்

[தி.:2052, சுறவம்(தை),07]

{20-01-2021}

----------------------------------------------------------------------------------------------------

1 கருத்து:

  1. மணி மணியான நான்கு கருத்துகள்; வாழ்க்கைக்குப் பயனுள்ள கருத்துகள் ! பதிவு மகிழ்ச்சியளிக்கிறது ! பாராட்டுகள் !

    பதிலளிநீக்கு