மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

அந்நாளை நினைக்கையிலே (11) பிறந்த நாளும் பாயசமும் !


போக்குவரத்து துறையில் பணியாற்றிய அப்பாவின் வார விடுமுறையில் அமைகின்ற பிறந்த நாளில் பாயசம் தயாரிப்பது அம்மாவின் வழக்கம். என் தம்பியின் பிறந்த நாளாக அந்நாள் அமைந்துவிட்டால் அவ்வினிய நாளை பேருவகையோடு கொண்டாடுவான் !


எனக்கோ அக்காவுக்கோ அந்நாள் பிறந்த நாளாக அமைந்து விட்டால் பாயசத்தை மிச்சம் மீதியின்றி சாப்பிட்டாலும், தனது பிறந்த நாளாக அமையவில்லையே என்ற மனக்குறையில் முறுமுறுப்பான் !


பாயசத்திற்கான நெய்யை வீட்டில் அன்றாடம் வாங்குகின்ற பாலிலிருந்தே வெண்ணையைக் கடைந்தெடுத்து உருக்கித் தயாரிப்பது வழக்கம் !


பாயசத் தயாரிப்பின் பொருட்டு பண்டிகை நாட்களில் அண்டி கிஸ்மிஸ்ஸை நெய்யில் வறுக்கத் துவங்கியதுமே வெகு தூரத்தில் விளையாடிக் கொண்டிருப்பினும் எங்கள் மூக்கு வேர்த்து விடும். கோழிக் குஞ்சைக் கவர்ந்து செல்கின்ற பருந்தின் லாகவத்தோடு கண்ணிமைக்கும் நேரத்தில் அள்ளிச் சென்று விடுவோம் !


மீதமிருக்கும் ஓரிரண்டை வைத்து என்ன செய்யவியலும் ? இதையும் எடுத்துச் செல்லுங்கள் எனக் கோபத்துடன் கூறுகின்ற , அம்மா சொல்லைத் தட்டாத பிள்ளைகளாக மீதத்தையும் எடுத்துச் செல்லத் தயாராகி விடுவோம் !


காலையில் காபி குடிப்பது முந்நூறு மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட வாயகன்ற பெரிய பித்தளைக் குவளையில் தான். அந்தக் காலத்தில் பித்தளை, வெண்கலம், செம்பு, வெள்ளிப் பாத்திரங்கள் சகஜமாக வீடுகளில் புழங்கும். பால் கலக்காத கொத்தமல்லி கருப்பட்டி காபி ,சுக்கு காபி ஆகியவை எங்களுக்கு மிகவும் பிடித்தமானவை !


குவளை நிறைய காபி வழங்கப்படுகிறதாவென உறுதி செய்த பின்னரே அருந்துவோம். பாத்திரங்களுக்கு ஈயம் பூசுபவர்களும், கத்தி, அருவாள் மனை சாணை பிடிப்பவர்களும் அம்மி ஆட்டுரல் கொத்துபவர்களும் வாரமொரு முறையாவது தவறாமல் ஊருக்கு வருவதுண்டு !
 

குண்டு பல்பின் மங்கிய வெளிச்சம் , சுசீந்திரம் பள்ளிக்கு ஒன்பது கிலோமீட்டர் நடந்து திரும்பிய அசதி, வரும் வழியில் குளத்தில் குளித்த அலுப்பு, பள்ளியிலிருந்து திரும்பியதும் உண்ட சாதம், உண்ட பின் நண்பர்களுடன் ஓட்டம் ஆகியவை பாடப்புத்தகத்தை திறந்ததுமே உறக்க தேவதை ஆரத் தழுவிக் கொள்வதற்கான காரணங்கள் !

 
பெருமாள் கோயில் நைவேத்தியத்தின் பொருட்டு இரவு ஏழரை மணிக்கு ஊதப்படுகின்ற சங்கின் ஒலியும் மணியின் நாதமும் ,மடியில் புத்தகத்துடன் வீட்டின் முன்பக்க அறையில் தூங்கி வழிகின்ற எங்கள் நித்திரைக்கு சிறு தடை போடும். உரக்கப் படித்தால் தூக்கம் வராதென்ற அம்மாவின் அறிவுரைக்கேற்ப சில வினாடிகள் சத்தமாகப் படித்தாலும் மெதுவாக சுரம் குறைந்து மீண்டும் தூக்கத்திற்கு இட்டுச் செல்லும் !


மாலை ஐந்தரைக்குச் சாப்பிட்டு விளையாடிக் களைத்து இரண்டு மணி நேரம் கூட ஆகாத நிலையில் பசிக்கிறது எனக் குரலெழுப்பி அம்மாவிடம் சாப்பாடு போடச் சொல்வோம். நான்கு நேர உணவு மட்டும் ஒழுங்காக நடக்கிறது. படிப்பைக் காணோம் என்று கூறும் அம்மாவிடம் அது மட்டுமாவது முறையாக நடக்கிறதே எனப் பெருமை கொள்வதை விடுத்து புலம்புவது மடமையெனப் புரிய வைப்போம் !


அப்பா சாதுவானவராக இருப்பினும் இனம் புரியா அச்சம் காரணமாக எங்கள் தேவைகளுக்கு மட்டுமே உரையாடுவது வழக்கம். தேவைகளையறிந்து அப்பா செயல்பட்டாலும் அம்மா வாயிலாகவே கோரிக்கைகளை வென்றெடுப்பது வழக்கம் !


மின்வெட்டு எங்கள் உயிர்த் தோழன். திடீரென ஏற்படுகின்ற மின்வெட்டில் ஊர் இருட்டில் மூழ்கும் போது எங்கள் முகங்களில் மட்டும் ஒளி படரும். எல்லையற்ற மகிழ்ச்சியுடன் ஓ ......என்ற சத்தத்துடன் அனைத்து வீடுகளில் இருந்தும் மடியில் புத்தகத்துடன் தூங்குகின்ற உடன்பிறப்புகள் தூக்கம் கலைந்து புத்துணர்ச்சியுடன் தெருவிற்கு பாய்ந்து வந்து விடுவர் !


எங்கள் அம்மா சிறு விளக்கு வெளிச்சத்தில் எங்களுக்கு சாப்பாட்டை தந்து மின்வெட்டு நேரத்தை பயனுள்ளதாக்கத் திட்டமிட்டாலும் செயலாக்கத்திற்கு நாங்கள் அனுமதிப்பதில்லை.மின்சாரம் மீண்டும் வந்து விடக் கூடாதென்ற பிரார்த்தனையுடன் விளையாடிக் கொண்டிருக்கும் எங்களை மின்வெட்டு நீங்கிய உடனேயே அம்மா படிக்க அழைப்பார்கள் !


மீண்டும் மின்வெட்டு வந்து விடாதாவென்ற நம்பிக்கையுடன் அம்மாவிடம் சாப்பாடு போட வலியுறுத்துவோம்.நம்பிக்கை தானே வாழ்க்கை. விளையாட்டினிடையில் மின்சாரம் வந்து விளக்குகள் பிரகாசிக்கும் வேளை எங்கள் முகங்கள் ஒளியிழந்து விடும் !

-------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை

தி.சேதுமாதவன்
{sethumathavan2021@gmail.com}
கூடுதல் ஆட்சியர்,
முகநூற் குழுமம்.
(16-12-2020)
-------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக