மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

அந்நாளை நினைக்கையிலே (06) எங்கள் வீட்டுக் கோழி !

 

எங்கள் வீட்டுக் கோழி அடைகாத்த குஞ்சுகள் பொரித்தவுடனேயை எங்கள் மூவருக்குமாக பெட்டைக் கோழிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவற்றை பராமரிப்பதற்கான பொறுப்பும் வழங்கப்படும் !


மணிகண்டன் என்ற சேவல் மூவருக்கும் பொதுவானது. அறுவடை முடிந்து தெருவில் வைக்கோல் காயப்போடும் போது உதிர்கின்ற நெல்மணிகள் கோழிகளுக்கு சிறந்த உணவாதலால் விடுமுறை நாட்களில் போட்டியிட்டு எங்கள் கோழிகளை தெருவில் மேய விடுவோம் !

 

வசந்தி ,கஸ்தூரி போன்ற அழகிய பெயர்களை நானும் எனது அக்காவும் கோழிகளுக்கு சூட்டும் போது எனது தம்பி மட்டும்குளாய்ங் என்று அவனது கோழி எழுப்புகின்ற வித்தியாசமான ஒலியை வைத்துப் பெயரிட்டான். அவனைப் போலவே சேட்டைக்காரியாக அக் கோழியை வளர்த்தான் !

 

தம்பி அழைத்தால் மட்டுமே மடியில் ஓடி வந்து அமர்கின்ற அக்கோழி நாங்கள் அருகே சென்றால் கொத்தித் துரத்தி விடும். தான் முட்டையிட்ட விஷயத்தை குரலெழுப்பி தெரிவிக்கும் "குளாய்ங்" தனது பொன் முட்டையைத் தொடுவதற்கு என் தம்பியை மட்டுமே அனுமதிக்கும் !


விடுமுறைக் காலத்தில் நானும் (குஞ்சான்) முருகனும் தோப்புக்குச் சென்று கறையான் புற்றைக் கம்பால் தட்டிக் கண்டறிந்து உடைத்து பாம்புகளேதும் புற்றில் குடியிருக்க வில்லையென உறுதி செய்த பின்னர், கரையானை கைகளால் அள்ளி டப்பாவில் நிறைத்து கோழிக்கு உணவாகக் கொடுப்போம் !

 

ஒரு முறை பள்ளிக்குச் செல்லும் வழியில் வயல் வரப்பினருகிலுள்ள எலி வளை ஒன்றை உடைத்த போது இரு மரைக்கால் அளவு பதரேதுமில்லாத சுத்தமான நெல் மணிகள் எனக்கும் (குஞ்சான்) முருகனுக்கும் கிடைத்தது. எலிகள் தங்கள் வளைகளை சுரங்கத்தைப் போன்று கச்சிதமாக வடிவமைத்து நெல் மணிகளை சேமித்து வைத்திருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஊட்டியது !

 

முட்டையிடும் நேரத்தை கால்நடை மருத்துவரைப் போன்று சுண்டு விரலால் பின் பக்கப் பரிசோதனை மூலம் கண்டறிந்து கூண்டில் கோழியை அடைத்து விடுவோம். முட்டையின் இருப்பு சற்று உட்பக்கமாக அமைந்திருந்தால் முட்டையிடும் நேரத்தை அனுமானித்து பிற்பகல் ஒரு மணிக்கு மேல் சாவதானமாகக் கூட்டிலடைப்போம் !

 

அறுவடைக் காலங்களில் சுமார் பதினைந்து முட்டைகள் வரை போட்டு அலுத்த பின்னர் கோழியின் மெருகேறிய சிவப்பு வண்ண முகம் வெளிறத் துவங்கி அடை கிடக்க ஆரம்பித்து விடும். அனுமதித்த இரு வார காலத்திற்குள் அடை தெளியா விடின் தண்ணீரால் தொடர் அபிஷேகம் செய்து நாங்கள் தொந்தரவு செய்வதுடன் அதன் இறகையே மூக்குத்தியாக அணிவித்து விரட்டி விடுவோம் !

 

செள் படர்வதைத் தவிர்க்கும் பொருட்டு கூட்டிலிருந்து அடைக் கோழிகளை எத்தனை முறை விரட்டியடித்தாலும் விக்ரமாதித்தன் கதையில் வருகின்ற வேதாளத்தைப் போன்று முயற்சியை கைவிடாது தொடர்ந்து அடைகிடக்கும் கோழி மீது வசம்பு கலந்த நீரை செள் நீங்கும் பொருட்டு ஊற்றுவோம் !

 

அடை கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சுமார் பதினொன்று முட்டைகளை வளர்பிறை நாளில் முட்டைகளின் அருகே கரித்துண்டு மற்றும் இரும்புத் துண்டு வைத்து எங்கள் அம்மாவின் வழிகாட்டுதலுடன் அடைகாக்க வைப்போம் !

 

நீண்ட இருபத்தி ஒன்று நாட்கள் காத்திருப்பிற்குப் பின்னர் பொரித்து பூமியில் கால் பதிக்கின்ற சிவப்பு நிற அலகும் சிறிய இறகுகளும், இள மஞ்சள் நிறத்துடனும் கூடிய அழகிய கோழிக் குஞ்சுகளைக் காண அற்புதமாக இருக்கும் !

 

ஓடுகளின் கடினத்தன்மை காரணமாக பொரிக்காத முட்டைகளை சிறு கரண்டியால் மெதுவாகத் தட்டி பொரிக்க வைப்போம். ஓரிரண்டு கருவுறாத (கூ)முட்டைகள் பொரிப்பதில்லை. அரிசித் தவிட்டில் சற்று உப்பும் தண்ணீரும் கலந்து பிசைந்து தயாரிக்கப் படுகின்ற சத்துணவு மற்றும் பொடியரிசி கோழிகளுக்கு மிகவும் பிரியமானது !

 

எனது தம்பியின் கோழி, காகங்களை மட்டுமன்றி எங்களையும் அருகில் அண்ட விடாமல் பொறுப்புடன் குஞ்சுகளை கவனித்துக் கொள்ளும். வானத்தில் வட்டமடிக்கும் பருந்துகளுக்கும் காகங்களுக்கும் ஓரிரு குஞ்சுகள் இரையாவதுண்டு. பசி மிகுதியால் சில தருணங்களில் தாய்(அடை)க்கோழியே ஓரிரண்டு குஞ்சுகளை சாப்பிடுவதுமுண்டு !

 

என்னுடன் பயிலும் நண்பன் பத்மனாபனது அக்கா குடும்பம் மதுரையிலிருந்து இடம் பெயர்ந்து எங்கள் தெருவில் குடியேறியது .பாண்டி, கிட்டு ,முத்து.என்ற மூன்று சிறுவர்கள் எங்களுக்கு பாண்டி நாட்டு வித்தைகள் பல கற்றுத் தந்தனர் !

 

அரிசி வத்தல் ,உள்ளி வத்தல், பெரண்டை வத்தல், வடகம் போன்றவற்றை தயாரித்து அவர்களது வீட்டு முற்றத்தில் வெயிலில் காய வைக்கும்போது இந்த சிறுவர்கள் செங்குத்தாக நிறுத்தப்பட்ட கம்பின் மேல் முறத்தை கவிழ்த்து வைத்து கம்பில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றைப் பிடித்தபடியே வீட்டு முற்றத்தில் காவலிருப்பார்கள் !

 

காகம் வத்தலைத் தின்னத் துவங்கும் முன்னரே தருணம் நோக்கி பட்டென கயிற்றை இழுத்து அரசியல் வாதிகளுக்குக் கூட கைவராத காக்கா பிடிக்கும் யுத்தியை இள வயதிலேயே இச்சிறுவர்கள் இயல்பாகப் பெற்றிருந்தார்கள். ஊர் சிறுவர்களில் பலர் பல வழிகளில் பகீரதப் பிரயத்னம் செய்தும் சனி பகவானின் வாகனம் சிக்கியதில்லை !

 

எப்போதும் கலைடாஸ்கோப், லென்ஸ் வழியாக சினிமா பார்க்கும் கருவி, ரப்பர் கட்டிய கவிட்டைக் கம்பு ஆகியவற்றை கழுத்தில் தொங்க விட்டவாறே அலைகின்ற இவர்கள் பிற சிறுவர்களை விட முற்றிலும் வித்தியாசமானவர்கள் !

 

இச்சிறுவர்களுக்கு 'வித்தை மாற்று முறை'யில் நீச்சல் கற்றுக் கொடுத்து வித்தைகள் பலவற்றை எங்கள் தெரு சிறார்கள் கற்றனர். காலம் செல்லச் செல்ல எங்கள் கிராமத்துச் சூழலில் அவர்கள் மெல்ல இணையத் துவங்கினர். ஈஸ்வரன் வீட்டு மாமரத்தில் கல்லெறிவதற்குப் பதிலாக கவிட்டைக் கம்பை உபயோகித்து மாங்காயை குறி நோக்கி வீழ்த்துகின்ற நவீன தொழில் நுட்பத்தைப் புகுத்திய விஞ்ஞானிகள் இவர்கள் !

 

கல்லெறிந்து மாங்காய் பறித்த காரணத்தால் ஈஸ்வரனின் அப்பாவிடம் பல முறை பிடிபட்டு கோழிக் கூட்டுக்குள் இரு மணி நேரத்திற்கு மேலாக ஓய்வெடுத்த பின்னர் செள் கடி காரணமாக முட்டையிடாமலேயே வெளியேற்றப் பட்ட சசியும் ராஜுவும் நவீன மாங்காய் பறி தொழில் நுட்பத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள் !

 

முகம் பார்க்கும் கண்ணாடியை சூரிய வெளிச்சத்தில் சாய்வாக நிறுத்தி வீட்டிற்குள் ஒளியைச் செலுத்தி சுவரில் படம் காட்டும் மதுரை சகோதரர்களின் வித்தைகள் குழந்தைகள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றது. கிளியாந்தட்டு, கபடி ,கள்ளன் போலீஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகின்ற சிறார்கள் அறிமுகம் இல்லாத வீட்டிற்குள் கூட அடாவடியாகப் புகுந்து ஒளிந்து கொள்வார்கள்  !

 

கோடை விடுமுறையில் பத்மநாப புரத்திலிருந்து வந்திருந்த எனது தம்பி (சித்தப்பா மகன்) " கள்ளன் போலீஸ்" விளையாடும் போது தன்னைத் துரத்தி வருகின்ற சிறுவர்கள் நெருங்கிவிடவே தென்னை மரத்தின் பாதி உயரம் ஏறி விட்டான் !

 

தரையில் ஓடுவதற்கு மட்டுமே விளையாட்டு விதிகளில் இடமுண்டு என்று கூறிய எங்களிடம் பிற மார்க்கங்களேதுமில்லாத நிலையில் ஒரு திருடனுக்கு தென்னை மரத்தில் ஏறித் தப்பிப்பிதற்கு எங்கள் ஊர் விளையாட்டு விதிகளில் இடமுண்டெனச் சாதித்தான் !

------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

தி.சேதுமாதவன்

(sethumathavan2021@gmail.com)

கூடுதல் ஆட்சியர்,

I.T.I.முகநூற் குழுமம்,

{28-11-2020}

---------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக