எனது அப்பாவுக்கு வாரமொரு முறையாவது மீன் உண்ண ஆவலிருப்பினும், எங்கள் வீடு அக்ரஹாரத்தில் அமைந்திருந்த காரணத்தால் செவ்வாய், வெள்ளி, பிரதோஷம், ஏகாதசி, சதுர்த்தி, கார்த்திகை, புரட்டாசி, மார்கழி மாதங்கள் பிற பண்டிகை நாட்கள் தவிர்த்து மாதமிருமுறை மட்டுமே மீன் உண்ணும் யோகம் அமையும் !
நானும் தம்பியும் மீன் கடைக்குச் சென்று சாளை,நெத்தோலி, கூனிப் பொடி (இறால் மீன் குஞ்சு), கூறு போட்டு வைத்திருக்கும் பெரிய மீனின் சிறு பங்கு, அயிலை போன்றவற்றில் ஏதாவதொன்றை வாங்கி வருவோம். வார விடுமுறை நாட்களில் அப்பாவுடன் கடைக்குச் சென்று அவர் வாங்கித் தருகின்ற காகிதத்தில் சுற்றிய தலை வால் வெளியே தெரிகின்ற பெரிய மீனை பிறர் பொருள் கவர்ந்த கள்வனைப் போன்று பதுங்கிய படியே நான் வீட்டின் கொல்லைப்புறமாகக் கொண்டு வருவதுண்டு !
சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கி பிரத்தியேக மண் சட்டியில் வீட்டின் பின்பக்க விறகடுப்பில் சமையல் செய்வார் அம்மா. சாளை, அயிலை, கெண்டை, கிளாத்தி, நெய் மீன், நெய்மீன் சூரை, வஞ்சிரம் ,கட்டா, மாவாளை,விள மீன், பாரை ஆகிய மீன்கள் மாங்காய் சேர்த்து குழம்பு மற்றும் அவியல் வைப்பதற்குகந்தவை !
தேங்காய், கொத்தமல்லி, உள்ளி, கருவேப்பிலை,வத்தல் மிளகாய், பெருங்காயம் இவற்றை கரியாமல் வறுத்தெடுத்து அம்மியில் நன்கரைத்து உப்பிட்டு நீரூற்றி மாங்காயின் புளிப்பிற்கேற்ப அளவாகப் புளி சேர்த்து வெட்டி வைத்த மீன் துண்டுகளை சட்டிக்குள் இட்டு கொதிக்க வைக்கையில் எழுகின்ற நறுமணம் பசியைத் தூண்டுவதோடு பக்கத்து வீடுகளுக்கும் "இன்று மீன்கறி" எனப் பறைசாற்றி விடும் !
கறுத்த நெத்தோலியும் வெள்ளை நெத்தோலியும் மாங்காய் கலந்து கறி வைப்பதற்கேற்றதாயினும் வெள்ளையனின் முள் நீக்குவது சிரமமாதலால் கறுப்பனுக்கே கிராக்கி. அதிசுவை மிகுந்த கூனிப் பொடித் துவரனை (இறால் குஞ்சு) அளவுக்கதிகமாக உட்கொள்பவர்க்கு வயிற்று வலிக்கு உத்திரவாதண்டு. தக்காளி சேர்த்து சமைக்கின்ற விலையுயர்ந்த விரால் மீன் குழம்பின் மணமும் சுவையும் அலாதி !
கேரளத்தில் விராலை "செம்மீன்" என்றழைப்பார்கள்.(தகழி சிவசங்கர பிள்ளையின் கதையில் செம்மீன் என்ற புகழ்பெற்ற ஜனாதிபதி விருதைப் பெற்ற மலையாளத் திரைப்படம் நினைவிருக்கலாம்) பொரித்த இராலும் நெய்மீனும் மேல்தட்டு வர்க்கத்தினரின் விருப்ப உணவு வகைகள். வெளிநாட்டுக்கு அதிகமாக ஏற்றுமதியாகின்ற நெய் மீனையொத்த நெய்மீன் சூரையும் ருசி மிக்கது. மருத்துவ குணம் பொருந்திய இம்மீனுக்கு கேரளத்தில் கேரை என்று பெயர். வெட்டினால் கருஞ்சிவப்பு வண்ணத்தில் காட்சியளிக்கும் சூரை மீனுக்கு விலையைப் போன்றே வாடிக்கையாளரும் குறைவு !
உணவு விடுதிகளிலும் கல்யாண விருந்துகளிலும் அசைவ சாப்பாட்டின் பொருட்டு இதனை வாங்கிச் செல்வோர் அதிகம். அம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டுமென்றால் மத்திசசாளை போன்ற தோற்றமுடைய முட்கள் அதிகம் கொண்ட பெரிய தலையுடைய பேய்ச் சாளை அல்லது மண்டைச் சாளையை வாங்கிச் சென்றால் போதும். வழுவழுப்பான கணவாய் மீன் துவரன் அதிசுவையானது !
எங்கள் ஊர் மீன் கடையில் பெரிய சுறா மீனின் வயிற்றில் கருவுற்றிருந்த குட்டி சுறா உயிரின்றி வெளியே எடுக்கப் படுவதைக் கண்ட பின் அம்மீனை ருசிக்க எனக்கு மனம் ஒப்பவில்லை !
சுண்ணாம்பு சத்து மிக்க முட்கள் அதிகமுள்ள வாளை மீனுக்கு வாடிக்கையாளர் குறைவு. வெள்ளி நிறத் தோலிலுள்ள சுண்ணாம்பை நீக்கி சுத்தம் செய்து வறுத்தரைத்து கறி வைத்தால் ருசிக்குமெனினும், பசி மிகையால் வேகமாக உண்பதற்கு தடை போடும் முட்கள் வாயைப் பதம் பார்த்து விடுவதாலும். தொண்டைக்குள் குத்தி சிரமத்தை ஏற்படுத்துவதாலும் கொள்முதல் செய்வோர் குறைவு !
எங்கள் ஊர் தெப்பக் குளத்தை ஆக்ரமித்திருக்கின்ற சிலேபி, கெண்டை, கெளுத்தி மீன்களை அதன் தீவிர இரசிகர்கள் இரவில் இரகசியத் தூண்டில் போடுவதுண்டு. குளத்திலுள்ள கல்லிடுக்குகளில் வசிக்கின்ற நெய்சத்து நிறைந்த விலாங்கு மீன்களை பயிற்சியற்றவர்கள் பிடிக்கவியலாது !
புரதச்சத்து நிறைந்த முட்கள் அதிகம் கொண்ட துப்பு வாளையை அவித்து நிதானமாக முள் நீக்கி சமைக்கப்படும் துவரனின் சுவையே அலாதியானது. சிவப்பு நிற பளபள மேனியுடன் அழகிய பெரிய விழிகள் கொண்ட ஒரு வகை மீனுக்கு கேரளாவில் "உன்னி மேரி"என்று பெயர். ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வெச்ச கிளியாக வந்த மலையாள நடிகை கண்ணழகி தீபாவின் அசல் பெயர் தான் அது !
-------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
தி.சேதுமாதவன்
(sethumathavan2021@gmail.com)
கூடுதல் ஆட்சியர்
I.T.I. முகநூற் குழுமம்
{19-12-2020}
-------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக