எங்கள் தெருவில் வசித்து வந்த ராமன் அண்ணனிடம் ஒப்படைக்கும் பொருட்டு வாரமொரு முறை தீப்பெட்டியொன்றை அக்கா ஒருவர் என்னிடம் தருவார் !
புகை பிடிக்கும்
பழக்கம் கொண்ட அவரிடம் அக்கா தந்த தீப்பெட்டியைத் தவறாமல் ஒப்படைப்பது எனது பணி.
அதற்கான காரணத்தை ஆய்வு செய்யும் பகுத்தறிவேதும் சிறுவனான எனக்கில்லை. ஒரு நாள்
மாலை தோழர்களோடு நான் விளையாடிக் கொண்டிருக்கும் வேளை அக்காவின் அவசர அழைப்பு வரவே
அங்கு சென்று தீப்பெட்டியைப் பெற்று ராமண்ணனிடம் ஒப்படைத்து விட்டு தாமதமாக
விளையாட்டில் வந்திணைந்தேன் !
தாமதத்திற்கான காரணத்தை
எனது நண்பர்கள் வினவிய போது ராமண்ணனுக்கு வாரமொரு முறை அக்கா செய்கின்ற தீப்பெட்டி
உபயத்தைக் குறித்து கூறினேன். "தீப்பெட்டியைக் குலுக்கிப் பார்த்தாயா ? திறந்தாவது
பார்த்தாயா ? எனக் கேள்விகளை அடுக்கினான் சசி. !
"இல்லை" என்ற
எனது பதிலைக் கேட்டு , தீப்பெட்டி தொழிற்சாலையேதும் அக்கா வீட்டில்
இருப்பதாக தெரியவில்லையெனவும் தீப்பெட்டிக்குள் காதல் கடிதமாகத் தான் இருக்க
வேண்டும் எனக் கணித்தான் நண்பன் ராஜு. அடுத்த தடவை தீப்பெட்டியை ஆய்வின் பொருட்டு
தங்களிடம் ஒப்படைக்கச் சொன்னான் சசி !
அடுத்த வாரம் அக்கா
அளித்த தீப்பெட்டியைத் திறந்து நேர்த்தியாக மடித்து வைக்கப்பட்டிருந்த காதல்
கடிதத்தை ஆவலுடன் எனது நண்பர்கள் படிக்கத் தொடங்கினர். ஐந்தாம் வகுப்புடன் தனது
உயர் படிப்பை இடை நிறுத்தம் செய்த அக்கா அன்புள்ள 'அத்தானுக்கு " என்று
துவங்குவதற்குப் பதிலாக "எத்தனுக்கு" என்று மடலை சரியாகவே
தொடங்கியிருந்தார். விளையாட்டை நிறுத்தி விட்டு கடிதத்திலுள்ள அபத்தங்கள்
அனைத்தையும் பேனாவால் சரி செய்ய ஒரு மணி நேரம் எங்களுக்கு தேவைப்பட்டது !
காதல் கடிதமாயினும்
தமிழுக்கு இழுக்கு நேர்ந்து விடக்கூடாதென்ற அக்கரையில் இலக்கியத் தொண்டு செய்து, திருத்தங்கள்
பல கொண்ட மடலை மீண்டும் தீப்பெட்டிக்குள் திணித்து ராமண்ணனிடம் பத்திரமாகப் கொண்டு
சென்று சேர்த்தோம். அத்துடன் அக்காவின் "தீப்பெட்டி விடு தூது" முடிவுக்கு
வந்தது !
திண்ணையில் அமர்ந்து கொண்டு பல்குத்திக் கொண்டிருக்கும் நடுத்தர வயதினரான மாமா ஒருவர் எனக்கு மிகவும் பிடித்தமானவர். அவரது வீட்டைக் கடந்து செல்லும் தருணங்களில் அவருடன் கருத்துப் பரிமாற்றம் செய்வது வழக்கம். சுசீந்திரம் உயர்நிலைப் பள்ளியில் படித்த அவருக்கு தமிழ்ப் புலமை உண்டென்ற விவரம் பெரும்பாலானோருக்கு தெரியாது !
கவிமணி தேசிக விநாயகம்
பிள்ளையைப் பற்றியும் அவரது படைப்புகள் குறித்தும் இலக்கிய நயத்துடன் பேசுகின்ற
அவர் ஒன்பதாம் வகுப்பில் இடை நின்றவர் என்று கற்பனை கூடச் செய்யவியலாது.
அவரது தமிழ் ஆர்வம்
முறையாக ஊக்குவிக்கப் படாத தன் காரணமாக தலை சிறந்த தமிழ் சிந்தனையாளர் ஒருவரை இழந்து
விட்டதாக பலமுறை நினைத்ததுண்டு !
உச்சி மீது வானிடிந்து
வீழுகின்ற போதிலும் கவலை கொள்ளாது வாழ்வில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை தைரியமாக
நேரிட வேண்டுமென்பது அவரது சித்தாந்தம். வரவிருக்கும் பிரச்சினைகளை எங்ஙனம் எதிர்
கொள்வதென்ற கவலையில் இன்றைய இன்பத்தை சுவைக்க மறப்பது எவ்விதத்தில் நியாயமென்ற
அவரது தர்க்க வாதம் எனக்கு மிகவும் ஏற்புடையது. படிப்பை இடை நிறுத்தம்
செய்தமைக்கான காரணத்தை வினவிய போது ஒன்பதாவது படிக்கும்போது கணக்கு ஆசிரியரிடம்
சமர்ப்பித்த தனது நாலடி தமிழ்க்கவிதையே படிப்பை இடை நிறுத்தம் செய்வதற்கான காரணமாக
என்னிடம் விவரித்தார் !
கணக்குப் பாடத்தில்
குறைந்த மதிப்பெண்கள் பெற்றமைக்காக பிற மாணவர்களின் முன்னிலையில் தனது உருவத்தை
வைத்து கிண்டல் செய்தது மட்டுமன்றி பிரம்பால் அடித்ததும் மாமாவுக்கு கடுமையான
அவமானத்தையும் சினத்தையும் ஏற்படுத்தியது !
கணக்குப் பாடத்தை
பாடத்திட்டத்தில் சேர்ந்தவர்கள் மீது மாமாவுக்கு அடங்காத கோபம். கணக்கு ஆசிரியரைக்
குறித்த தனது ஆதங்கத்தை அழகுத் தமிழில் கவிதை வடித்து மறுநாள் ஆசிரியர்
வகுப்புக்கு வரும்போது அவரது கவனத்தைக் கவரும் வண்ணம் மேஜை மேல் வைத்தார் !
கவிதையைப் படித்ததும்
ருத்ரனாக மாறிய ஆசிரியர் படைப்பாளியை இனம் கண்டு பிரம்பாலடித்தார். மாமாவுக்கு
மட்டும் மானம்,சூடு, சொரணை இல்லையா என்ன ? வாட்டசாட்டமான
அவர் ஆசிரியர் கையிலிருந்த பிரம்பைப் வெடுக்கேனப் பறித்து இரண்டு பிரம்படிகளை
கணக்கு ஆசிரியருக்கு கணக்காகக் கொடுத்துவிட்டு புத்தகப் பையைத் எடுத்துக்கொண்டு
ஒரு மத்தியான நேரம் வயல் வெளியில் நடந்து வீட்டுக்குத் திரும்பி விட்டார் !
இந்நிகழ்ச்சிக்குப்
பிறகு மழைக்குக் கூட அந்தப் பக்கம் எட்டி பார்க்கவில்லை . மனிதனுக்கு சுய கௌரவம்
படிப்பை விட முக்கியம் அல்லவா ? அவர் இயற்றிய அழகுத் தமிழ் கவிதை இதோ !
..................…...............................
" நெடுமால்
திரு மருக !
நித்தம் நித்தம் இந்தெழவா
!
வாத்தியார் சாவாரா !
வயத்தெரிச்சல்
தீராதா"
..............................................
கணக்கு ஆசிரியரிடம்
கைத்துப்பாக்கி இல்லாதது பாக்கியம் என மனதிற்குள் நினைத்துக் கொண்டதை மாமாவிடம்
சொல்லவில்லை
!
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
தி.சேதுமாதவன்,
[sethumaathavan2021@gmail.com]
கூடுதல் ஆட்சியர்
I.T.I. முகநூற் குழுமம்.
[05-12-2020}
-------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக