மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

புதன், 30 ஜூன், 2021

அந்நாளை நினைக்கையிலே (35) சண்டியர் போல் வீதிகளில் நடை பயிலும் பசுக்கள் !

 

றுவடைக் காலம் வந்துவிட்டாலே கலகலப்புக்குப் பஞ்சமில்லை. வீட்டு முற்றங்கள் கொல்லைப் புறங்கள் மட்டுமன்றி வீதிகளும் மாடு கட்டி சூடடிக்கும் களங்களாக மாற, இரட்டை மாட்டு வண்டிகளில் மூட்டை மூட்டையாக பாட்டக்காரர்கள் (குத்தகைதாரர்கள் ) நில உடைமையாளர்களுக்கு நெல் கொண்டு செல்வதும், தெற்குத்தெரு மணியண்ணனைப் போன்ற அனுபவமிக்க அளவையாளர்கள் நெல்மணிகளைப் பாட்டாகப் பாடியே மரக்காலில் கண்ணிமைக்கும் நேரத்தில் அளந்து கொடுப்பதும், கண் கொள்ளாக்காட்சி !

 

தேரோடும் வீதியில் காய்ந்து கொண்டிருக்கும் வைக்கோல் மீது தங்கள் எதிர்ப்பையும் புறந்தள்ளி குட்டிக்கரணம் போடுகின்ற வாண்டுகளை "சவத்துக்குப் பொறந்த பயலுக" எனத் திட்டிய படியே கம்புடன் துரத்துகின்ற தாத்தாக்கள். வீதியில் மறுநாளும் உலர வைக்கும் பொருட்டு மலையெனக் குவித்து வைக்கப்பட்ட சரிவரக் காயாத வைக்கப்போர் மீது சறுக்கு விளையாடி அக்கப்போர் செய்யும் சிறுவர்கள் !

 

பூமிப்பந்து உங்களுக்கானது மட்டுமல்ல. எங்களுக்கும் அதில் உரிமையுண்டென முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொரிக்க வசதியாக வைக்கோலை அள்ளிச் செல்லும் காகங்கள் மற்றும் குருவி இனங்கள்.


'சொல் பேச்சு கேட்காவிட்டால் உங்களுக்கும் இதே கதி தான் ' என சூடடிக்கும் மாடுகளின் பின்பக்கத் தளும்புகள் இரண்டையும் காட்டி சிறு குழந்தைகளை சூசகமாக மிரட்டுகின்ற அம்மாக்கள் !

 

சூடடித்த பின் அதிகாலையிலேயே துணியில் கட்டி வந்த தேங்காய் துவையலுடனான கட்டிச்சோற்றை தெப்பக்குளத் தண்ணீரில் நனைத்து அரச மர நிழலிலமர்ந்து கோரப்பசியுடன் விழுங்குகின்ற தொழிலாளிகள்.


மிதிவண்டிச் சக்கரங்களின் இரும்புப் பற்களில் சிக்கிய வைக்கோலை விடுவிக்கும் போது இடம் மாறுகின்ற சங்கிலியை சரி செய்தபின் கைகளில் படிந்த கருப்பு மையை கால் சட்டைகளின் பின்புறம் தடவியபடியே வாடகை மிதிவண்டிகளில் பயிற்சி எடுக்கும் சிறுவர் கூட்டம் !

 

சண்டியர் போல் வீதிகளின் நடுவில் நடை பயிலும் பசுக்களும் எருமைகளும் காளைகளும் பொறுப்பின்றி விட்டுச் செல்லும் சாணத்தைப் பொறுப்புடனே அள்ளி வீட்டையும் முற்றத்தையும் மெழுகியது போக மிஞ்சியதை உமியுடன் கலந்து வீட்டுச் சுவர்களிலேயே வறட்டி அடிக்கும் கிராமத்து மங்கையர்கள் !

 

வைக்கோலில் புரண்ட நமைச்சல் தாங்காது பிறந்த கோலத்தில் தெப்பக்குளத்தில் குட்டிக்கரணம் அடித்துக் குளித்து கரைக்கு வந்த சிறுவர்களைப் புடைக்கக் காத்திருக்கும் அம்மாக்களிடம், பிடி கொடுக்காமல் கையிலேந்திய துகில்களுடன் ஓடுகின்ற விட்டில் பூச்சிகளையொத்த சிறுவர் கூட்டம் !

 

வீதியில் கிடக்கின்ற நெல் மணிகளைப் பொறுக்கித் தின்னும் குருவிகளையும் காகங்களையும் அணில்களையும் போட்டியாளர்களாக எண்ணி விரட்டுகின்ற குஞ்சுகளுடன் கூடிய கோழிக் கூட்டம். நிம்மதியாக உண்ண விடாமல் தங்கள் குஞ்சுகளைக் கண்வைத்து வானத்தில் வட்டமிடும் பருந்துகளிடமிருந்து பாதுகாக்க சிறகுகளை விரித்த படியே அலைபாயும் தாய்க் கோழிகள் !

 

அளவில் பெரிய அறுவடைக் கால கோழி முட்டைகளில் உபயோகித்தது போக மிஞ்சியவற்றை அக்கம் பக்கத்து வீடுகளில் விற்பவர்கள். விற்பனையின் பொருட்டுக் கடைக்கு எடுத்துச் செல்லும் முட்டைகளை வழியிலேயே உடைந்து விட்டதாக அம்மாவிடம் பச்சையாகச் புழுகி பச்சை முட்டை குடிக்கும் நிபுணர்கள் !

 

நீண்ட நாட்களாக குறி வைத்திருந்த அறுவடை வருமானத்தின் சிறு பகுதியை அப்பாவின் சட்டைப் பையிலிருந்து கவர்ந்து புத்தகப் பையினுள் உடைகளுடன் தலை துவட்டத் துண்டையும் முந்தைய நாளே பத்திரப்படுத்தி பள்ளி முடிந்தவுடன் பறக்கத் தயாராகின்ற பறவைகள் !

 

அறுவடை முடிந்த வயல்களில் மேய விடப் படும் ஆட்டு மந்தையை சங்கேதக் குரலால் கட்டுப்படுத்தும் மேய்ப்பர்கள். உயர்ந்து வளர்ந்த எழில்மிகு தென்னந் தோப்புகளில் அமைக்கப்படும் கூடாரங்கள். மேய்ப்பவருக்குத் தெரியாமலேயே தாமதமாகச் செல்லும் கறவை ஆட்டின் மடியில் இதமாகப் பால் கறந்து புழுதி படிந்த கையிலேந்தி ஒருவர் பின் ஒருவராக அருந்துகின்ற பள்ளிச் சிறுவர்கள் !

 

சுத்தமான நெல் மணிகள் சேகரித்து வைக்கப்படுகின்ற எலி வளைகளேதும் வரப்புகளில் உள்ளதாவென தங்கள் கையிலுள்ள கம்பினால் தட்டி ஆராய்ச்சி செய்கின்ற வயல் வரப்பின் மேல் நடந்து செல்லும் இளம் ஆராய்ச்சியாளர்கள் !

 

அறுவடை முடிந்த நீர் நிறைந்த வயல்களில் அழகுடன் அணி வகுக்கும் வெள்ளை நிற வாத்துக் கூட்டம். மேய்ந்த தடம் கணித்து வாத்து முட்டைகளைக் கண்டெடுக்க தேர்வுகளில் முட்டைகளெடுத்த அனுபவம் கைகொடுக்க முக மலர்ச்சியுடன் வீடு திரும்பும் வழியில், உடைகளைக் கழற்றி வைத்து பாசனக் குளத்தில் நீராடித் தலை துவட்டாமல் சேறு படிந்த ஆடைகளையே மீண்டுமணிந்து அம்மாக்களிடம் அடி வாங்கும் சிறுவர்கள் என அறுவடைக் காலம் அந்நாளில் எங்களுக்கு இன்பமயமாகவே அமைந்தது !

---------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்,

கூடுதல் ஆட்சியர்,

I.T.I..முகநூற் குழு,

[தி.பி.2052, (ஆடவை (ஆனி) 12]

{26-06-2021}

---------------------------------------------------------------------------


அந்நாளை நினைக்கையிலே (34) நெல் குத்திக் கொடுக்கின்ற பச்சை மால் !

 

அறுவடைக் காலம் வந்து விட்டாலே பாட்டி வீட்டில் நெல் குத்திக் கொடுக்கின்ற பச்சை மாமலை போல் மேனியொடு மாறு கண்ணும் கொண்ட பச்சைமாலுக்கு ஏக கிராக்கி. ஒரு வீட்டில் பணி முடித்தவுடன் அழைத்துச் செல்ல வாடிக்கையாளர் அவரைக் காத்து நிற்பதுண்டு. தலையில் நிரந்தரத் தலைப்பாகை தரித்த பச்சைமால் வாழ்நாளில் மேல் சட்டையே கண்டிராதவர் !

 

கூலியாகக் கொடுக்கின்ற ஒரு ரூபாயை ஐம்பது காசு நாணயங்களாக வழங்கினால் மட்டுமே ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பாடு வசமில்லாத பச்சைமால் நாலணா (இருபத்தைந்து காசு) நாணயங்களைக் கண்டு கொள்ளாத 'நாணயமான' மனிதர் ! கூலியாக செல்லாக் காசு கொடுத்து இந்த அப்பாவியை ஏய்க்கும் சிலரும் அக்காலத்தில் இருந்தார்கள் !

 

நாணயங்களாக மட்டுமே கூலி வழங்கப்பட வேண்டுமென்ற நிபந்தனையுடன் களமிறங்கும் கள்ளங் கபடமற்ற பச்சைமாலுக்கு மாலைக்கண் நோய் காரணமாக மாலை ஆறுமணிக்குள் வீடு திரும்ப வேண்டிய கட்டாயம். ஐந்து ரூபாய் பெறுமானமுள்ள அரிசியைக் கூலியாகக் கொடுத்தாலும் வாங்க மறுத்து ஒரு ரூபாய் நாணயத்தைப் பெற்றுச் செல்லும் வேடிக்கை மனிதரவர் !

 

சேட்டை செய்யும் சேய்களையும், உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளையும் பச்சை மாலிடம் பிடித்துக் கொடுப்பதாக பூச்சாண்டி காட்டி காரியம் சாதிக்கின்ற அம்மாக்கள் ஏராளம். காலில் அணிந்திருக்கும் தோலாலான காலணி ஓசை அவரது வருகையைக் கட்டியம் கூறும்.

 

மழலைகளிடம் அளவற்ற பாசங்கொண்ட பச்சைமாலுக்கு அவர்களைக் கொஞ்ச ஆசையிருப்பினும், கரிய உருவத்தைக் கதவிடுக்கு வழிக் காண்கின்ற குழந்தைகள் அச்சம் காரணமாக அருகில் நெருங்குவதில்லை. பச்சைமாலைக் கண்டு சிறு வயதில் அஞ்சிய குழந்தைகள் வால் முளைத்த பின்னர் மடித்துக் கட்டிய வேட்டியின் பின்புறம் எட்டிப் பார்க்கின்ற அவரது கோவணத்தை இழுத்து விளையாடுமளவுக்கு நெருக்கமாகி விடுவது வேடிக்கை !

 

அளவுக்கதிகமான பாரம் சுமந்து செல்கின்ற போது இடையிடையே அசிங்கமான வார்த்தைகளால் உரக்கச் சப்தமிட்ட படியே வீதி வழியாக செல்வது அவருக்கு ஆசுவாசம். "அய்யே" என நாணிச் செல்லும் சிறுவர்களிடம் சத்தமாக "டப்" என்று கூறியபடியே காவிப்பல் தெரிய சிரித்தபடி பாரத்துடன் வேகமாகச் செல்வார் பச்சைமால் !

 

நெல் குத்தும் பணி முடிந்தவுடன் பசித்திருக்கும் பச்சைமாலுக்கு உணவு வழங்கும் வேளை, சாப்பாட்டிற்கான காசைக் கூலியில் கழித்து விடக் கூடுமென்ற எச்சரிக்கை உணர்வுடன் முன்கூட்டியே கூலியைப் பெற்றுக் கொள்ளும் பச்சைமால் மீது அவரை நன்கறிந்த தாய்மார்கள் வருத்தம் கொள்வதில்லை !

 

ஊரில் நடைபெறும் பெரும்பாலான திருமணங்களுக்கும் இதர வைபவங்களுக்கும் அவருக்கு அழைப்பு உண்டு. எவ்வளவு வற்புறுத்தினாலும் பந்தியில் அமராத அவர், ஓலைப் பெட்டிக்குள் உணவடங்கிய பாத்திரங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று மனைவியுடன் மட்டுமே உணவருந்துவார் !

 

தீபாவளி, திருக்கார்த்திகை போன்ற பண்டிகை நாட்களில் வாடிக்கையாளர் இல்லங்களின் முன் குரல் கொடுக்கும் பச்சைமால் சிறப்பான முறையில் குறிப்பாக அவ்வீட்டு சிறுவர்களால் கவனிக்கப் படுவார் !

 

சுமடு தூக்கும் முன் தனது அழுக்கு வேட்டியில் இருப்பு வைத்திருக்கின்ற வெத்திலையுடன் பேனாக் கத்தியால் மேற்பகுதி சிரத்தையுடன் சுரண்டப்பட்டு சிறு துண்டுகளாக்கப் பட்ட கோரைப் பாக்குடன் லேசாக சுண்ணாம்பு தடவிய வெற்றிலைத் தாம்பூலத்தைச் சுருட்டி வாயினுள் ஒதுக்கி வைத்து நன்கு அசை போட்ட பின் வாய் சிவந்துள்ளதாவென நாக்கை நீட்டி உறுதி செய்த பின் 'அங்கு விலாஸ்' புகையிலையை சற்றே கிள்ளி வாயின் ஓரத்தில் ஒதுக்குவது அவருக்கு ஊட்டச் சத்துக்கு நிகரானது !

 

கிடைத்த காசை வீணடிக்காமல் மனைவி பத்திரகாளியிடம் பத்திரமாக ஒப்படைத்த பின் தாம்பூலத்திற்கும் உடல் அசதியைப் போக்க மாலைநேர மாம்பட்டை கசாயத்துக்கும் தேவையான காசைப் பெற்றுக் கொண்டு வீதியில் விழாமல் தினமும் மாலை ஆறு மணிக்குள் வீட்டிற்குள் நுழைந்து விடுவது பச்சைமாலின் வழக்கம் !

 

நெருக்கமான நண்பர்களேதும் இல்லாவிடினும் அனைவரிடமும் சிரித்த முகத்துடன் அளவாகப் பேசி குழந்தை போன்று பழகுகின்ற பச்சைமால் நேர்மையானவர் மட்டுமன்றி ஒழுக்கமானவரும் கூட. பொன் கொடுத்தாலும் நெல் குத்துவதைத் தவிர பிற பணி செய்யாதவர் !

 

விளையாட்டாக அவரது மடியிலிருக்கும் பணத்தை 'பார்த்து விட்டுத் தருகிறேன்' எனக் கூறி விளையாடுபவர்களிடம் "ஆத்தா வையும்.காசு குடு" என பரட்டையிடம் கூறுகின்ற பதினாறு வயதினிலே சப்பாணியைப் போன்று "பொண்டாட்டி திட்டுவா" எனப் பரிதாபமாகக் கெஞ்சுகின்ற பச்சைமால் என்ற வெள்ளை உள்ளம் கொண்ட கறுப்பு மனிதர் வித்தியாசமானவர் !

 -------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்.

கூடுதல் ஆட்சியர்.

I.T.I.முகநூற் குழு,

[தி.பி: 2052, ஆடவை (ஆனி) 05]

{19-06-2021}

--------------------------------------------------------------------------


சனி, 12 ஜூன், 2021

அந்நாளை நினைக்கையிலே (33) தாயுள்ளம் கொண்ட மரகதவல்லி டீச்சர் !



அறுவடைக் கால வருவாயை நம்பியே வாழ்க்கையை ஓட்டுகின்ற விவசாயிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட அந்நாளில் வீட்டிலுள்ள அண்டா குண்டாக்கள் மட்டுமன்றி நகைகளும் அவசரத் தேவைகளின் பொருட்டு அக்கம் பக்கத்து நடுத்தர வர்க்க வீடுகளில் குறைந்த வட்டிக்கு அடகு வைக்கப்படும் !

 

இட ஒதுக்கீடோ இதர கல்விச் சலுகைகளோ இல்லாத நிலையில் நன்கு படிக்கின்ற வாரிசுகளில் ஒருவரை கல்லூரிக்கு அனுப்பக் கூட விவசாயிகள் தெம்பற்றவர்களாகவே வாழ்ந்தார்கள் !

 

அறுவடை முடிந்த ஓரிரு மாதங்களிலேயே மீட்கப்பட்ட பொருட்கள் மீண்டும் புகுந்த வீட்டிற்கு மறவாமல் வந்து சேரும். அறுவடைக்குப் பின் நீர் பாய்ச்சுதல், தழை உரமிட்டு உழுதல், விதை விதைத்தல், நாற்று நடுதல், களையெடுத்தல், காயவைத்த மாட்டுச் சாணம் வேப்பிலை கலந்த உரமிடுதல், பூச்சி கொல்லி தெளித்தல், கொசுக்கடி ஏற்று இரவு முழுதும் விழித்திருந்து உடல் அசதியால் துண்டை தலைக்கு வைத்து வரப்பில் இளைப்பாறி தண்ணீர் பாய்ச்சி பயிர்களைப் பராமரித்தல் , பெருமழைக் காலங்களிலும், பருவ மழை பொய்க்கும் தருணங்களிலும் தூக்கமின்றித் தவித்தல் போன்ற சொந்தமாக விவசாயம் செய்வதிலுள்ள சிரமங்களைத் தவிர்க்க பெரும்பாலான நடுத்தர விவசாயிகள் தங்கள் வயல்களை பாட்டத்திற்கு (குத்தகை) விடுவது வழக்கம் !

 

சிறு விவசாயிகளில் சொந்தமாக மாட்டு வண்டி, காளை மாடுகள், ஏர் கலப்பை, பசுக்கள் வைத்திருப்பவர்களுக்கும் , தாமும் ஒருவராகப் வயலில் இறங்கிப் பணியாற்றுபவர்களுக்குமே விவசாயம் சிறிது இலாபகரமானதாக அமைவதுடன், கால்நடைகளுக்கான வைக்கோலும் மிஞ்சும். தங்களது வீட்டு உபயோகத்தை குறைத்துக் கொண்டு வீட்டுச் செலவுகளை சமாளிக்கும் பொருட்டு பால் விற்பனை செய்பவர்கள் அதிகம் !

 

என்னுடன் சுசீந்திரம் எஸ் எம் எஸ் எம் உயர் நிலைப் பள்ளியில் படித்த நண்பர்கள் பலரும் லாந்தர் வெளிச்சத்தில் படித்து அதிகாலை துயிலெழுந்து தந்தையுடன் விவசாயத்தைக் கவனித்து விட்டு அவசர அவசரமாக தெப்பக் குளத்தில் குளித்து அரை வயிற்றுக் கஞ்சியுடன் கையிடுக்கில் புத்தகப்பையுடன் வரப்பில் ஓடியபடியே பத்து மணியைக் கடந்தபின் பள்ளியை அடைந்து தலைமை ஆசிரியர் வேலு அவர்களின் கையால் வழக்கமாகப் பிரம்படி வாங்குபவர்களே !

 

வகுப்பறையில் அமர்ந்தவுடனே ஆங்கிலப் பாடத்தை தாலாட்டாக பாவித்து தூக்கத்தில் சொக்கி விழுபவர்கள் பலர் !அத்தகைய மாணவர்கள் மீது தண்டப்பிரயோகம் செய்யாமல் முகத்தைக் கழுவி உட்காரச் சொல்லும் தாயுள்ளம் கொண்டவர் மரகதவல்லி டீச்சர் !

 

சொந்த வயல்களை பாட்டத்திற்கு விடுவோர், நெருக்கடியான தருணங்களில் அக்கம்பக்கத்தில் பெற்ற கடன்களை நெல்மணிகளாகத் திருப்பிக் கொடுப்பதுண்டு.

 

சொந்தமாக வயல் இல்லாத காரணத்தால் ஈஸ்வர அய்யர் வீட்டிலிருந்து வாங்கப்படுகின்ற நெல்லைக் காயவைத்து குதிருக்குள் இருப்பு வைத்து (பத்தாயம் உள்ள வீடுகளில் மரப்பத்தாயத்தில் இருப்பு வைப்பதுண்டு) விடுவார் அம்மா !

 

தேவைக்கேற்றவாறு செம்புப் பானையில் அவித்து வெயிலில் உலர்த்தி ஓலைப் பெட்டியிலிட்டு எங்கள் தலை மேலேற்றி பறக்கை சந்திப்பிலுள்ள அரவை ஆலைக்கு விடுமுறை நாட்களில் அனுப்பி விடுவார்கள் !

 

தம்பியை விட சுமை தாங்கும் வீரராகக் காட்டிக் கொள்ளும் பொருட்டு அதிக சுமையை வீராப்பில் தூக்கி தள்ளாடி வழியில் இறக்கி வைத்து பரிதவித்த அனுபவங்களும் உண்டு !

 

வரிசையில் நின்று அரைக்கப் பொறுமையின்றி (குழாயடி இராணிகளைப் போன்றே) பரிதாபமாக நிற்கின்ற சிறுவர்களது முதுநிலையை புறக்கணித்து அடாவடியாக இரு கோட்டை நெல்மணிகளையும் மொத்தமாக அரைத்துச் செல்லும் வாடிக்கையாளத் தனவான்கள், தண்ணீர் கூட அருந்த வழியின்றி காவல் கிடக்கும் உரிமைக் குரலெழுப்புகின்ற சிறுவர்களை தலையில் குட்டும் போது அரவை ஆலையின் பொறுப்பாளர் கண்டு கொள்வதில்லை !

 

நமது சுற்று வரும் போது மின்சாரத் தடை, பட்டை அறுந்து போதல் போன்ற காரணங்களால் அன்றைய விடுமுறை நாளை ஆலையிலேயே செலவழிக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுவதுண்டு. காவல் இருந்து அரைத்த அரிசியையும் தவிட்டையும் பத்திரமாக வீட்டில் சேர்த்த பின் செம்பட்டைத் தலையர்களாக நானும் தம்பியும் தெப்பக்குளத்திற்குக் குளிக்கச் செல்வோம் !

 

--------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


தி.சேதுமாதவன்,

[sethumathavan2021@gmail.com]

கூடுதல் ஆட்சியர்

I.T.I. முகநூற் குழு,

{12-06-2021}

---------------------------------------------------------------------------

அந்நாளை நினைக்கையிலே (32) உயிரோட இருந்தப்போ கிடச்சிருந்தா செத்திருக்க மாட்டாரு !


வீட்டிற்கு வந்த விருந்தினரை குடிதண்ணீர் வழங்கி உபசரித்த பின்னரே சிற்றுண்டியோ உணவோ வழங்குவது கிராமத்து மரபு. நண்பகல் வேளை வருகை தருகின்ற விருந்தினரையும் வற்புறுத்தி விருந்தோம்பல் செய்யும் உயரிய பண்பு கிராமங்களில் இன்றும் உயிர்ப்புடன் உள்ளது !

 

அயல் வீட்டில் விருந்தினர் வருகையை அறிந்தவுடனேயே பின்பக்க வாசல் வழியாக குறிப்பறிந்து உதவுகின்ற பக்கத்து வீட்டு உறவுகள் இருக்கும் தைரியத்தில் அஞ்சாமல் விருந்தோம்பல் செய்யும் வழக்கம் கிராமங்களில் உண்டு !

 

தங்கள் வீட்டுக் கொல்லைப் புறத்தில் விளைகின்ற வாழைப்பூ, காய் மற்றும் தண்டு, கீரை, முருங்கை, மாங்காய், பலா, பப்பாளி, மரச்சீனி போன்ற காய்கனிகள் பக்கத்து உறவுகளுக்கும் பகிரப்படும் !

 

கடைக்குச் செல்லும் சிறுவர்கள் பக்கத்து வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்க சற்றும் தயங்குவதில்லை. கடைக்குச் செல்வதையறிந்து மிதிவண்டியின் முன்பக்கத்தில் அயல் வீட்டு வாண்டுகள் தொற்றிக் கொள்வதுண்டு !

 

மீன் கடைக்குச் செல்கின்ற பெண்கள் பக்கத்து வீடுகளுக்கும் குறிப்பறிந்து வாங்கி வருவர். கிராமங்களில் தனிமையில் வாழ்கின்ற வயோதிகர்களும் குழந்தைகள் இல்லாதவர்களும் தனிமையை ஒரு போதும் உணர்வதில்லை !

 

தங்கள் வீட்டில் சமைத்த சிறப்பு உணவு வகைகளும் தின்பண்டங்களும் மட்டுமன்றி விருந்தினர் கொண்டு வந்த பண்டங்களும் அயல் வீடுகளுக்குப் பரிமாறும் அளவுக்கு குடும்பங்களிடையே நெருக்கமான உறவு காணப்பட்டது !

 

பணிகள் முடித்தபின் வீட்டுத் திண்ணையில் ஓய்வாக அமர்ந்து குடும்பப் பிரச்சனைகளை அக்கம் பக்கத்து உறவுகளிடம் வெளிப்படையாகப் பகிர்வதன் வாயிலாக தீர்வுகள் பல ஏற்பட்டது. குடும்பத்தில் ஒருவராக அன்புடனும் அக்கரையுடனும் இரகசியம் காத்து நெடிய அனுபவங்கள் வாயிலாக பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு கண்டனர் !

 

எங்கள் தெருவில் வசித்து வந்த முதியவர் ஒருவர் வீட்டிலுள்ள பட்டறையில் தனது ஆண் மக்களுடன் பணி முடித்த பின்னர், மாலை நேரம் உற்சாக பான உந்துதலால் வயதிற்கு வந்த மக்கள் முன்னரே மனைவியை உதைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார் !


தள்ளாடிய நிலையில் ஒரு நாள் வீட்டுக்குள் நுழைந்த முதியவரை வாசலிலேயே தடுத்து 'அம்மாவைத் தொந்தரவு செய்யும் அப்பா எங்களுக்கு தேவையில்லை. மரியாதையாக இருப்பதானால் மட்டும் வீட்டிற்குள் நுழைந்தால் போதுமென' கறாராகக் கூறி விட்டனர் தந்தையிடம் எதிர்த்துப் பேசிப் பழக்கமில்லாத அவரது ஆண் மக்கள் !

 

அதிர்ச்சி வைத்தியத்தை சற்றும் எதிர்பாராது உடுத்தியிருந்த உடையுடன் ஊரைவிட்டுச் சென்று ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு அதிகாலையில் வாசலில் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார். 'மனம் திருந்தியிருந்தால் மட்டும் வீட்டிற்குள் நுழையலாம்' என்றதும் கண்கலங்கிய அப்பாவை ஆதரவுடன் அணைத்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர் அவரது ஆண் மக்கள். திண்ணை மகளிர் சங்கத்தின் அற்புதத் தீர்வுகளில் இதுவும் ஒன்று !

 

நண்பர்களும் உறவுகளும் புடைசூழ எப்போதும் காணப்படுகின்ற உடல் வலிமையுள்ள கிராமத்தினருக்கு மன இறுக்கமோ தனிமைச்சூழலோ எதிர்மறை எண்ணங்களோ தலைதூக்குவதில்லை !

 

குற்றங்குறைகளை மறைக்காமல் நேருக்கு நேராகச் சொல்லும் துணிச்சல் கிராமங்களில் அதிகம். பக்கத்து தெரு தாத்தா ஒருவர் மறைந்த பதினாறாம் நாள் விசேஷத்தன்று அவரது புகைப்படத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த வகை வகையான பதார்த்தங்களைப் பார்வையிட்டு " உயிரோட இருந்தப்போ இதில் கொஞ்சம் கிடச்சிருந்தாக் கூட மாமா செத்திருக்க மாட்டாரு" எனப் பிறர் கூறத் தயங்கிய உண்மையை அந்த வீட்டு மருமகளைப் பார்த்து போட்டுடைத்தார் ஒரு வாயாடி அக்கா !

 

 --------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


தி.சேதுமாதவன்,

[sethumathavan2021@gmail.com]

கூடுதல் ஆட்சியர்

I.T.I. முகநூற் குழு,

{05-06-2021}

---------------------------------------------------------------------------

 

 

 

வெள்ளி, 4 ஜூன், 2021

அந்நாளை நினைக்கையிலே (31) தந்தி அலுவலர் சீருடையில் மிதிவண்டியில் வரும் போதே !

 

தெருவிலுள்ள எவருக்காவது டிரங்க் கால் வந்த தகவல் பெறப்பட்டவுடன் , சம்பந்தப்பட்டவர் மட்டுமன்றி தெருவே இனம் புரியாத உணர்வுடன் தபால் அலுவலகத்தில் குவிந்து விடும். உடற்தளர்ச்சியாலும் அச்சத்தாலும் கழிப்பறையிலேயே முடங்கி பக்கத்து வீட்டாரை தபாலகத்திற்கு அனுப்புவோருமுண்டு !

 

செய்தியின் தன்மையறியாது அழைப்பிற்காக தபால் அலுவலகத்தின் முன்பக்க இருக்கை விளிம்பில் திகைப்புடனும் பலத்த இதயத் துடிப்புடனும் சோர்ந்திருப்போர்க்கு காத்திருக்கும் நொடிகள் யுகமாகத் தோன்றும் !


அழைப்பு வந்தவுடன் நடுங்கும் கைகளுடன் ஒலிவாங்கியை பெற்றுக் கொள்ள, முகபாவத்தைக் கொண்டே கிடைத்த செய்தியை இனங்கண்டு காத்திருக்கும் உறவுகளையும் மகிழ்ச்சி தொற்றிக் கொள்வது கிராமங்களுக்கே உரித்தானது. ஒளியை விட வேகமாக ஊரெங்கும் செய்திகளைக் கொண்டு செல்வதில் கிராமத்துப் பெண்கள் கைதேர்ந்தவர்கள் !

 

தந்தி அலுவலர் சீருடையில் மிதிவண்டியில் வரும் போதே சம்பந்தப்பட்ட வீட்டின் முன் குவிந்து விடுகின்ற கூட்டம், தந்தி அலுவலரால் செய்தி விவரிக்கப்பட்ட பின்னரே அவ்விடத்தை விட்டு நகரும் !

 

கிடைத்த செய்தி நற்செய்தியாயினும் துயரத்தைத் தருவதாயினும் அக்குடும்பத்திற்கு வெளியூர் செல்வதற்கான ஏற்பாடுகள், பண உதவி , ஊர் திரும்பும் வரை குழந்தைகளை பாதுகாப்பது அனைத்தையுமே கேட்காமலேயே பொறுப்புடன் செய்து முடித்து பேருந்திலோ புகை வண்டியிலோ ஏற்றிவிடும் அக்கம்பக்கத்து சொந்தங்கள் இன்றும் ஊரிலுண்டு !

 

நேரடியாக தந்தியனுப்பும் வசதி பறக்கையில் இல்லாத காரணத்தால், நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்திற்கு தொலைபேசி வழியாக தபால் அலுவலரால் தகவலளிக்கப்படும். படிப்பறிவில்லாத பாமர மக்களிடம் தகவலை உள்வாங்கி தந்திச் செய்தியை இரத்தினச் சுருக்கமாக அனுப்புவதற்கு அன்றைய தபால் அலுவலர்கள் காட்டிய பொறுப்பும் பொறுமையும் அசாத்தியமானது !

 

காலப்போக்கில் ஊரிலுள்ள ஓரிரு நடுத்தரக் குடும்பங்களில் தரைவழி தொலைபேசி இணைப்பு வசதி வந்த பின்னரும் சிரமத்தைப் பொருட்படுத்தாது அத்தியாவசிய செய்திகளை சலிப்பின்றி வீடுகளுக்கு நேரில் சென்று தெரிவிக்கும் மனித நேயம் அன்று மக்களிடையே காணப்பட்டது !

 

கைபேசியின் வருகையால் உறவுகளுக்கு கடிதமெழுதும் பழக்கம் வழக்கொழிந்து விட்டதைப் போலவே, தீர்வை எதிர்நோக்கி கிராமங்களில் வசிக்கும் குடும்பத்தினர் கூறும் அதிமுக்கியமான குடும்பப் பிரச்சினைகளை பொறுமையுடன் கேட்கின்ற மனோபாவமோ அக்கரையோ நேரமோ , வேலை நிமித்தமாகப் பட்டினத்தில் வசிக்கும் வேர்களை மறந்த மெத்தப் படித்தவர்கள் பலருக்கு இல்லாதது துரதிர்ஷ்டம் !

 

தங்கள் விருப்பத் தொடர்களைக் காணும் பொருட்டு அவசர - அதிரடிச் சமையலை முடித்து விட்டு தொலைக்காட்சிப் பெட்டி முன் தவமிருக்கும் தருணங்களில் வீட்டிற்குச் செல்கின்ற விருந்தினர்களிடம் விளம்பர இடைவேளையின் போது தொலைக்காட்சி பெட்டியிலிருந்து விழிகளை அகற்றாமலேயே ஏதோ ஒப்புக்குப் பேசுகிறார்கள் !

 

பட்டணத்திற்கு புலம் பெயர்ந்த நண்பர் ஒருவரிடம் தொலைக்காட்சித் தொடரில் மனைவியுடன் மூழ்கியிருக்கும் மாலை வேளையில் அவரது தூரத்து உறவினரான மாமா நீண்ட நாளைய மருத்துவச் சிகிச்சைக்குப் பின் உடல்நலம் சற்றே தேறி நலமுடனிருக்கும் செய்தியைக் கூறினேன் !

 

விளம்பர இடைவேளையின் போது எங்களிருவருக்கும் தேநீர் வழங்கிய பின் வாயைத் திறந்த நண்பரின் மனைவி " மாமா இறந்த விவரம் எங்களுக்கு தெரிவிக்காதது ஏன் ?" என தொலைக்காட்சித் திரையிலிருந்து விழிகளை அகற்றாமலேயே கேட்ட போது நானும் நண்பரும் அதிர்ச்சியுற்றோம் !

 

தனக்கு விருப்பமில்லாத மாமியார் மருமகள் தொடர் சதி குறித்த நீண்ட காலத்தொடரில் மூழ்கியிருந்த மனைவியை இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கடிந்து கொண்டார் நண்பர் !

 

மாநகரங்களைப் போன்று இல்லாவிடினும் மனித நேயத்தை நீர்த்துப் போகச் செய்கின்ற ஆபத்தான- உடனடியாக களையப்பட வேண்டிய இத்தொற்று கிராமங்களிலும் வியாபித்து வெகு காலமாகி விட்டதென்பதை மறுக்கவியலாது !

 

----------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


தி.சேதுமாதவன்,

[sethumathavan2021@gmail.com]

கூடுதல் ஆட்சியர்

I.T.I. முகநூற் குழு,

{29-05-2021}

----------------------------------------------------------------------

 

 

அந்நாளை நினைக்கையிலே (30) அம்பது கேட்டதுக்கு பய நூறு அனுப்பியிருக்கான் மக்கா !


அன்புத் தூதுவர்களாக கடிதங்களமைந்த பால்யத்தில் ஐந்து ரூபாயுடன் அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று உற்றார் உறவுகளுக்கு எங்கள் அன்பைப் பகிர்ந்து கொள்ள தபால் அட்டைகள், இன்லெண்ட் தபால் மற்றும் தபால் உறைகளை நானும் தம்பியும் வாங்கி வருவோம் !

 

தபால் அட்டைகள் பத்து காசுக்கும் இன்லென்ட் இருபது காசுக்கும் உறைகள் முப்பது காசுகளுக்கும் அன்று கிடைத்தன. இராணிப்பேட்டையில் பணியாற்றிய எனது சின்ன மாமாவுக்கும், சென்னையில் பணியாற்றிய சித்திக்கும், விடுமுறை நாட்களில் அம்மா எழுதும் கடிதங்களில் இன்லென்டின் ஒட்டும் பாகத்தில் மை சரிவர பதியாத காரணத்தாலேயே அதை விட்டு வைப்பது வழக்கம் !

 

அன்று புழக்கத்திலிருந்த கேமல் மற்றும் பிரில் நீல நிற சிறு மைக்குப்பியொன்று வீட்டில் எப்போதும் இருப்பிலிருக்கும். அம்மா எழுதியது போக மீதமுள்ள பாகத்தை மூன்றாக பிரித்து நாங்கள் மூவரும் சிக்கனமாக எழுதுவோம் !

 

அம்மா தனது தம்பிக்கு எழுதும் கடிதங்கள் ஒவ்வொன்றும் 'காலையில் விழித்தெழு, எண்ணெய் தேய்த்து குளி, நேரத்திற்கு சாப்பிடு, தேவையின்றி சுத்தாதே', உடனே பதில் போடு போன்ற மாமாவால் அனுசரிக்கவியலாத பல்லவிகளால் நிறைந்திருக்கும் !

 

நாங்கள் எழுதும் போது ' தீபாவளிக்கு ஊருக்கு வரும் போது வாங்கப்பட வேண்டிய பட்டாசு, பேட்டரி கார் போன்ற அதிமுக்கியமான தேவைப்பட்டியல்களுடன் , 'எத்தனை நாள் எங்களுடன் தங்குவீர்கள் ?' என்ற கேள்வியும் தவறாமல் இடம் பெறும் !

 

சென்னையில் பணியாற்றும் சித்திக்கு அம்மா எழுதுகின்ற கடிதத்தில் 'வேளைக்குச் சாப்பிடு, வாரமொரு முறை சீயக்காய் தூள் பயன்படுத்து, பிரிவை நினைந்து வருந்தாதே' போன்ற வாசகங்கள் தவறாமல் இடம் பெறும். நாங்கள் சித்திக்கு எழுதும் போது கோழிகள் இட்ட முட்டை விபரங்களுடன் , எங்கள் மதிப்பெண் விவரம் குறித்தும் எழுதுவதுண்டு !

 

ஒவ்வொரு கடிதத்தையும் தூக்கணாங்குருவிக் கூட்டைப் போன்ற அந்த சிவப்பு நிறப் பெட்டிக்குள் போட்ட பின்பு உச்சியிலும் உடலிலும் தட்டிப் பார்த்து கடிதம் பத்திரமாக உள்ளே உள்ளதாவென உறுதி செய்வோம் !

 

ஒவ்வொரு நாளும் தபால் அலுவலர் மிதிவண்டியில் வீட்டைக் கடந்து செல்லும் போதும் கடிதமேதும் உள்ளதாவென ஆவலுடன் உற்று நோக்கத் தவறுவதில்லை !

 

மாமாவிடமிருந்தோ சித்தியிடமிருந்தோ பெறப்படும் கடிதங்களைப் படிப்பதற்கான போட்டியில் கடிதம் கிழிந்து விடாமலிருக்க எங்கள் அம்மாவே கடிதத்தைப் படித்து காண்பிப்பது வழக்கம். தனது உடன்பிறப்புகள் எழுதிய கடிதங்களை பொழுது கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் படிக்கும் வழக்கம் அம்மாவுக்கு உண்டு !

 

பக்கத்து வீட்டு தாத்தாவின் மகனுக்கு கடிதம் எழுதும் பணி என்னுடையது."நான் ஒருத்தன் இங்க உயிரோட இருக்கது ஞாபகம் இருக்கால ? எல ! ஒன்னத் தான் கேக்கேன். கடிதாசிய பாத்தவுடனே அம்பது ரூபா அனுப்பு ' என்று நேரில் தனது மகன் உட்கார்ந்திருப்பதாகவே பாவித்து அந்த அப்பாவி மனிதர் உணர்ச்சி வசப்பட்டுச் சொல்வதை கடித நடையிலாக்க வேண்டிய பெரும்பொறுப்பு என்னுடையது ! தாத்தாவின் தாம்பூலத் தூறலில் குளித்து விடாமலிருக்க ஐந்தடி தள்ளி உட்கார்ந்தே கடிதமெழுதுவேன் ! 

 

இருவார இடைவெளியில் தனது மகனிடமிருந்து நூறு ரூபாய் பணவிடையாகப் பெறப்பட்ட மகிழ்ச்சியில் காவியேறிய சொத்தைப் பற்களைக் காட்டியபடியே 'அம்பது கேட்டதுக்கு பய நூறு அனுப்பியிருக்கான் மக்கா ! கெட்டிக்காரப்பய ! ' என ஐம்பது ரூபாய் அதிகமாகக் கோரியது நானென்று அறியாமலேயே புளகாங்கிதமடைவார் தாத்தா !

 

பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ்,புத்தாண்டுப் பண்டிகைகளுக்கான வாழ்த்து அட்டைகள் வாங்குவதன் பொருட்டு சேர்த்து வைத்த காசுக்கேற்றவாறு உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்து அட்டைகளை தேர்வு செய்து அனுப்புவோம் !

 

எங்கள் தபால்காரர் தங்கையா அண்ணாச்சிக்கு பண்டிகை கால வாழ்த்து அட்டைகள் மீதான ஒவ்வாமை காரணமாக 'இந்தப் பயலுகளுக்கு வேற வேலயும் சோலியும் இல்ல' என அலுத்துக் கொண்டே தபால் அலுவலகத்திற்கு செல்பவர்களுக்கு மட்டும் வேண்டா வெறுப்பாக இடக்கையால் வாழ்த்து அட்டைகளை எறிவார் அந்த புண்ணியவான் !

 

தொலைக்காட்சிப் பெட்டிகளோ இதர பொழுதுபோக்கு அம்சங்களோ இல்லாத காலகட்டத்தில், தங்கள் அன்பைப் பரிமாறும் ஈடு இணையற்ற தூதுவனாக அஞ்சல் அலுவலகங்களை சாதாரண மக்கள் அன்று நோக்கினார்கள். எழுதப்படிக்கத் தெரியாதவர்களும் முதியவர்களும் தங்கள் வீட்டுப் பிள்ளையாக தபால் காரர்களை பானங்கள் கொடுத்து உபசரித்தனர் !

 

மனித நேயமுள்ள தபால்துறை பணியாளர்களும் பொறுமையாக கடிதத்தைப் படித்துக் காட்டி ஒப்பற்ற சேவை புரிந்தனர். மனிதநேயத்தின் வடிகாலாக அன்றிருந்த கடிதங்களும் வாழ்த்து அட்டைகளும் மனதநேயத்தைப் போலவே இன்று தொ(ல்)லைக் காட்சிப் பெட்டிக்குள் தஞ்சம் புகுந்து விட்டன.

 

--------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


தி.சேதுமாதவன்,

[sethumathavan2021@gmail.com]

கூடுதல் ஆட்சியர்

I.T.I. முகநூற் குழு,

{22-05-2021}

--------------------------------------------------------------------------