தெய்வங்களிடம்
பிரார்த்தனை செய்யும் வழக்கம் உண்டெனினும், கோரிக்கைகளை முன்வைக்கும் பழக்கமோ வேண்டுதல்களோ செய்யாத நான், திருச்செந்தூரில்
பணியாற்றிய காலத்தில் சன்னதித் தெரு ஆஞ்சநேயரிடம் வெண்ணெய் சார்த்துவதாக வேண்டிக்
கொண்டேன் !
என்னுடன் பணியாற்றும் அம்பி என்று அழைக்கப்படுகின்ற இலக்குமி நரசிம்மன் அண்ணனிடம் வெண்ணெய் சார்த்தும் பொறுப்பை ஒப்படைத்து மாதமொன்று கடந்த போதும் வேண்டுதல் நிறைவேறாத நிலையில், வெயிலு கந்தம்மன் தெருவிலுள்ள சிறு வீட்டில் நண்பர் 'அரியலூர்' தனபாலுடன் தங்கியிருந்த நான் படுத்தபடியே பேசிக்கொண்டு கண்கள் சற்றே மயங்க தூக்கத்திற்கு தாவிய நிலையில் சிறு குரங்கொன்றின் ஸ்பரிசத்தால் தூக்கம் கலைந்து பாயில் அமர்ந்தேன் !
நான் கண்டது கனவல்லவென்று மனதிற்கு நன்கு புலப்பட்ட காரணத்தால், மறு நாள் அம்பி அண்ணனிடம் வேண்டுதலை விரைந்து நிறைவேற்றுமாறு கூறும் பொருட்டு அக்ரஹாரத்திலுள்ள அவரது வீட்டை அடைந்தேன் !
கிடைக்கும் சமயத்தை அரட்டையில் பாழடித்து விட்டு அலுவலகம் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பூஜைக்குரிய முன்னேற்பாடுகளைச் செய்யாமலேயே சம்மணமிட்டு உட்கார்ந்து அண்ணியையும் குழந்தைகளையும் விரட்டுவதை வழக்கமாகக் கொண்ட அண்ணன், இறைவனிடம் மந்திரங்களை உச்சரித்தபடி "மணியை எங்கே வைத்தாய் சனியனே " "பூப்பறிக்க இவ்வளவு நேரமா முண்டை ? " என்றும் தனது குடும்பத்தாரையும் இடையிடையே அர்ச்சித்துக் கொண்டிருந்தார் !
பூஜை முடித்து பக்திப் பழமாக வந்த அம்பி அண்ணன், எனது 'வேண்டுதல் நிலுவையை ' மறுநாளே முடித்து விடுவதாக வாக்குறுதியளித்து விட்டு பிற பணிகளைப் பார்க்கத் துவங்கி விட்டார் !
மாதமொன்று கடந்த பின்னரும் வேண்டுதல் நிறைவேற்றப்படாத நிலையில் ஒரு புதன் கிழமை இரவு , பாயில் படுத்திருந்த நான் , தூக்க நிலைக்குச் செல்லும் முன்னரே பெரிய குரங்கொன்று எனது காலில் நகத்தால் பிராண்டிய வேதனையில் கண்விழித்து நண்பர் தனபாலை எழுப்பினேன். நகத்தால் பிராண்டிய வேதனை அரை மணி நேரத்திற்கு மேலாக நிலைத்திருந்தது !
மறுநாள் காலை அம்பி அண்ணனின் வீட்டிற்குச் சென்ற நாங்கள், வெண்ணெயுடன் ஆஞ்சநேயர் சன்னதிக்கு அழைத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றினோம்.
எப்போதாவது ஒரு முறை ஆஞ்சநேயர் சித்து வருகின்ற என் பாட்டி (அப்பாவின் அம்மா) ஆர்ப்பாட்டமேதுமின்றி அமைதியாகவே இருப்பார் !
பொறியியல் இளங்கலை படித்து வந்த மைத்துனன் , ஆஞ்சநேயரின் இயந்திரவியல் அறிவைச் சோதிக்கும் பொருட்டு சந்தேகமொன்றை ஆங்கிலத்தில் கேட்டு வைக்க, அனுபவமிக்க பேராசிரியரின் இலாகவத்தோடு மூன்றாம் வகுப்பைத் தாண்டாத பாட்டி ஆங்கிலத்தில் விளக்க சந்தேகம் தெளியுமுன்னரே வியர்வையில் குளித்து மூர்ச்சையாகி விழுந்திருந்தான் மைத்துனன் !
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளத்தில் ஒரு ஓலைக் குடிசையில் தரையில் அமர்ந்தவாறே ஆர்ப்பாட்டமேதுமின்றி மக்களுக்கு சேவை செய்யும் ஆஞ்சநேயர் சித்தி கொண்ட ஒரு பிரம்மச்சாரியை 1983 ல் கண்டு நான் அதிசயித்திருக்கிறேன் !
பறக்கையில் எனது சின்ன மாமாவின் நெருங்கிய நண்பரான ஆஞ்சநேயர் சித்தி கொண்ட பேதுரு தாத்தா செய்துள்ள அற்புதங்களை சிறு பருவத்தில் அறிந்துள்ளேன். சிரஞ்சீவியான ஆஞ்சநேய பகவான் நம்மிடம் எதிர்பார்ப்பது பக்தி ஒன்றையே !
ஆபத்தில் துணை நிற்கின்ற பகவானிடம், நாமாகவே வேண்டுதலை முன்வைத்து விட்டு நிறைவேற்றாமலிருக்கும் பட்சத்தில், பக்தர்களிடமிருந்து உரிமையுடன் பெறாமல் விடுவதில்லை என்பதே அனுபவ பூர்வமான உண்மை !
ஜெய் ஸ்ரீ ராம் ! ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேயா!
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
தி.சேதுமாதவன்,
[sethumathavan2021@gmail.com]
கூடுதல் ஆட்சியர்
I.T.I. முகநூற் குழு,
{15-05-2021}
------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக