மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

புதன், 2 ஜூன், 2021

அந்நாளை நினைக்கையிலே (27) சந்தன மாரியம்மன் கோவில் திடல் "சைக்கிள் சுற்று" !


நவீன தொழில் நுட்பம் ஆக்ரமிக்காத 1970 களில் நகர்ப்புறத் திரையரங்குகளுக்கு மாதமொரு முறை படையெடுக்கும் கிராமப்புற மக்கள் குடும்பத்துடன் நாகராஜா கோவில் தரிசனம் நடத்தி கட்டுச்சோற்றை உண்டு முடித்து வண்ணத்திரை முன் அமர்ந்து படம் பார்த்து பக்கத்து உறவுகளுக்கு உணர்ச்சிப் பெருக்குடன் கதை சொல்வது வழக்கம் !


வருடந் தவறாமல் மேலத்தெரு சந்தன மாரியம்மன் கோவில் திடலில் ஒரு மாதகாலம் நடைபெறும் "சைக்கிள் சுற்று" அக்காலத்தில் எங்கள் ஊர் மக்களுக்கு பெரிய கேளிக்கையாக அமைந்ததில் வியப்பில்லை !

 

இரவு ஏழு மணியளவில் துவங்கப் படுகின்ற கலை நிகழ்ச்சிகளுக்கு ஆறரை மணிக்கே குடும்பத்துடன் இடம் பிடிப்பதுண்டு. கருமையான நீண்ட கூந்தலுடன் பெண்களைப் போன்றே நடைபயிலும் மணிகண்டனை 'கவர்ச்சிக் கன்னி மணிமாலா' என்று விளம்பரப் படுத்துவார்கள் !

 

ஜவஹர் நூலகத் திண்ணையில் தடித்த பீடி ஒன்றை மெய்மறந்து சுவைத்தவாறு விரலைச் சுட்டபின் கீழே போட்டு காலால் நசுக்கி அரைக்கச்சையையும் தாவணியையும் சரி செய்தபடியே திடலில் நுழையும் நகைச்சுவை நடிகர் வையாபுரியின் முகச்சாயல் கொண்ட மணி அண்ணனை கூட்டம் உற்சாகத்துடன் விசிலடித்து வரவேற்கும் !

 

தலையில் தொப்பி, கண்களில் குளிர் கண்ணாடி, முகத்தில் வெள்ளை, தண்ணீர் கண்டு காலங்கள் பலவான மேலங்கியுடன் "பார்வை ஒன்றே போதுமே" எனக் காதல் இரசத்துடன் பாடி ஆடுகின்ற கதாநாயகனுடன் வெட்கத்துடன் இணைவார் உயரமான நாயகி மணிமாலா !

 

கிராமபோன் தட்டில் பாடல் இசைக்கின்ற இலவச சேவைக்கு வாண்டுகளுக்கிடையில் பலத்த போட்டி உண்டு. "சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ" , "ஆயிரம் நிலவே வா", "சலக்கு சலக்கு சிங்காரி" போன்ற எம்ஜிஆர் பாடல்களுடன் ஊரிலுள்ள சிவாஜி இரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க "என்னடி இராக்கம்மா", "வரதப்பா வரதப்பா கஞ்சி வரதப்பா","ஆஹா மெல்ல நட' போன்ற பாடல்களும் ஒலிபரப்பப்படும் !


சில இரும்புக் குழாய்களும் காற்றடைத்த இரு இரப்பர் உருளைகளுமே கொண்ட அம்மிதிவண்டியில் ஒரு சாண் வயிற்றுக்காக நின்றபடியும் படுத்தபடியும் நன்கு பயிற்சி பெற்ற தன் குழந்தைகளுடன் வீரர் காட்டும் சாகச நிகழ்ச்சிகள் கலை நிகழ்ச்சிகளுக்கிடையே தொடர்ந்து கொண்டிருக்கும் !

 

நாயகி மணிமாலா என்ற மணி அண்ணனுக்கு புகைபிடித்து இளைப்பாற வசதியாக கதாநாயகன் "புதிய வானம்", பாடலுக்கு இரு கைகளிலும் காலிப்பெட்டி மற்றும் குறுந்தடியுடன் நடனமாடி விட்டு "நீ எங்கே ..என் நினைவுகள் அங்கே" என்ற பாடல் முடியும் வேளை மணிமாலாவின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருப்பார் !

 

நாயகனுக்கு ஓய்வு கொடுக்கும் பொருட்டு "லவ் பேட்ஸ்", " ஆலய மணியின் ஓசையை" போன்ற பாடல்களுக்கு 'தடி இடையாள்' மணிமாலா தாறுமாறாக இடையை ஆட்டி ஆடுவதுண்டு !

 

"அப்பப்பா நான் அப்பனல்லடா" பாடலுக்கு முன்வரிசையில் அம்மா மடியில் விரல் சூப்பியபடி உட்கார்ந்திருக்கும் ஓரிரண்டு குழந்தைகளை தூக்கி ஆடும் வேளை அடம் பிடிக்கும் குழந்தைகளை அம்மாக்களிடம் ஒப்படைத்து சமர்த்துக் குழந்தைகளை வைத்து ஆட்டத்தை முடிப்பர் !

 

நல்ல உயரமும் கனமும் கொண்ட நாயகி மணிமாலாவை கைகளில் தூக்கி ஆடும் தெம்பற்ற நாயகனை வெகு இலகுவாக கைகளில் தூக்கியபடி மணிமாலா ஆடுவதை இரசிகர்கள் விசிலடித்து இரசிப்பதுண்டு !

 

"குடி மகனே " பாடலின் குலுக்கல் ஆட்டத்தில் மயங்கிய இளவட்டங்களில் சிலர் , சேவித்தது போக சட்டைப்பையில் எஞ்சியிருக்கும் ஐந்து ரூபாயை மணிமாலாவின் மேற்சட்டையில் கிளுகிளுப்புடன் குத்த, தனது முரட்டுக் கையால் செல்லமாக கன்னத்தைக் கிள்ளிய மாலாவின் ஸ்பரிசத்தில் மயங்கி திருப்பித் தட்ட, முறைப்புடன் கவனித்துக் கொண்டிருக்கும் இல்லத்தரசிகள் வீட்டிற்கு சென்ற பின் தங்கள் பிராண நாதர்களுக்கு விசேஷ விருந்து வைப்பதுண்டு !

 

கலை நிகழ்ச்சிகளின் முடிவில் நடைபெறுகின்ற சைக்கிள் வீரரின் சாகச நிகழ்ச்சிகளில் குழல் விளக்கை மார்பின் மேல் அடித்து உடைப்பது, மிதிவண்டி டயருக்குள் சாகசமாக நுழைந்து வெளியே வருவது, வாய்க்குள் நிரப்பி வைத்திருக்கும் மண்ணெண்ணையை சீராகக் கொப்பளித்து பந்தத்தை பற்றவைப்பது போன்றவை அடக்கம் !

 

சைக்கிள் வீரரின் மனைவியும் குழந்தைகளும் பாத்திரத்தை ஏந்தி வர பார்வையாளர்கள் தங்களால் இயன்ற பண உதவியும் பொருள் உதவியும் செய்ய அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவடையும் !

 

மிதிவண்டியை நம்பியே வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டுகின்ற வீரரின் குடும்பம் அடுத்த கிராமத்து மக்களை நம்பி பிழைப்புக்காக பயணிக்கும். நவீன தொழில் நுட்ப வருகையால் வழக்கொழிந்து போன "சைக்கிள் சுற்று" என்ற கேளிக்கை அக்காலத்தில் எங்களை மிகவும் பரவசப்படுத்தியது என்றால் மிகையில்லை !

 

-----------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்,

[sethumathavan2021@gmail.com]

கூடுதல் ஆட்சியர்

I.T.I. முகநூற் குழு,

{01-05-2021}

----------------------------------------------------------------------

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக