அறுவடைக் காலம் வந்து விட்டாலே பாட்டி வீட்டில் நெல் குத்திக் கொடுக்கின்ற பச்சை மாமலை போல் மேனியொடு மாறு கண்ணும் கொண்ட பச்சைமாலுக்கு ஏக கிராக்கி. ஒரு வீட்டில் பணி முடித்தவுடன் அழைத்துச் செல்ல வாடிக்கையாளர் அவரைக் காத்து நிற்பதுண்டு. தலையில் நிரந்தரத் தலைப்பாகை தரித்த பச்சைமால் வாழ்நாளில் மேல் சட்டையே கண்டிராதவர் !
கூலியாகக் கொடுக்கின்ற ஒரு ரூபாயை ஐம்பது காசு நாணயங்களாக வழங்கினால் மட்டுமே ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பாடு வசமில்லாத பச்சைமால் நாலணா (இருபத்தைந்து காசு) நாணயங்களைக் கண்டு கொள்ளாத 'நாணயமான' மனிதர் ! கூலியாக செல்லாக் காசு கொடுத்து இந்த அப்பாவியை ஏய்க்கும் சிலரும் அக்காலத்தில் இருந்தார்கள் !
நாணயங்களாக மட்டுமே கூலி வழங்கப்பட வேண்டுமென்ற நிபந்தனையுடன் களமிறங்கும் கள்ளங் கபடமற்ற பச்சைமாலுக்கு மாலைக்கண் நோய் காரணமாக மாலை ஆறுமணிக்குள் வீடு திரும்ப வேண்டிய கட்டாயம். ஐந்து ரூபாய் பெறுமானமுள்ள அரிசியைக் கூலியாகக் கொடுத்தாலும் வாங்க மறுத்து ஒரு ரூபாய் நாணயத்தைப் பெற்றுச் செல்லும் வேடிக்கை மனிதரவர் !
சேட்டை செய்யும் சேய்களையும், உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளையும் பச்சை மாலிடம் பிடித்துக் கொடுப்பதாக பூச்சாண்டி காட்டி காரியம் சாதிக்கின்ற அம்மாக்கள் ஏராளம். காலில் அணிந்திருக்கும் தோலாலான காலணி ஓசை அவரது வருகையைக் கட்டியம் கூறும்.
மழலைகளிடம் அளவற்ற பாசங்கொண்ட பச்சைமாலுக்கு அவர்களைக் கொஞ்ச ஆசையிருப்பினும், கரிய உருவத்தைக் கதவிடுக்கு வழிக் காண்கின்ற குழந்தைகள் அச்சம் காரணமாக அருகில் நெருங்குவதில்லை. பச்சைமாலைக் கண்டு சிறு வயதில் அஞ்சிய குழந்தைகள் வால் முளைத்த பின்னர் மடித்துக் கட்டிய வேட்டியின் பின்புறம் எட்டிப் பார்க்கின்ற அவரது கோவணத்தை இழுத்து விளையாடுமளவுக்கு நெருக்கமாகி விடுவது வேடிக்கை !
அளவுக்கதிகமான பாரம் சுமந்து செல்கின்ற போது இடையிடையே அசிங்கமான வார்த்தைகளால் உரக்கச் சப்தமிட்ட படியே வீதி வழியாக செல்வது அவருக்கு ஆசுவாசம். "அய்யே" என நாணிச் செல்லும் சிறுவர்களிடம் சத்தமாக "டப்" என்று கூறியபடியே காவிப்பல் தெரிய சிரித்தபடி பாரத்துடன் வேகமாகச் செல்வார் பச்சைமால் !
நெல் குத்தும் பணி முடிந்தவுடன் பசித்திருக்கும் பச்சைமாலுக்கு உணவு வழங்கும் வேளை, சாப்பாட்டிற்கான காசைக் கூலியில் கழித்து விடக் கூடுமென்ற எச்சரிக்கை உணர்வுடன் முன்கூட்டியே கூலியைப் பெற்றுக் கொள்ளும் பச்சைமால் மீது அவரை நன்கறிந்த தாய்மார்கள் வருத்தம் கொள்வதில்லை !
ஊரில் நடைபெறும் பெரும்பாலான திருமணங்களுக்கும் இதர வைபவங்களுக்கும் அவருக்கு அழைப்பு உண்டு. எவ்வளவு வற்புறுத்தினாலும் பந்தியில் அமராத அவர், ஓலைப் பெட்டிக்குள் உணவடங்கிய பாத்திரங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று மனைவியுடன் மட்டுமே உணவருந்துவார் !
தீபாவளி, திருக்கார்த்திகை போன்ற பண்டிகை நாட்களில் வாடிக்கையாளர் இல்லங்களின் முன் குரல் கொடுக்கும் பச்சைமால் சிறப்பான முறையில் குறிப்பாக அவ்வீட்டு சிறுவர்களால் கவனிக்கப் படுவார் !
சுமடு தூக்கும் முன் தனது அழுக்கு வேட்டியில் இருப்பு வைத்திருக்கின்ற வெத்திலையுடன் பேனாக் கத்தியால் மேற்பகுதி சிரத்தையுடன் சுரண்டப்பட்டு சிறு துண்டுகளாக்கப் பட்ட கோரைப் பாக்குடன் லேசாக சுண்ணாம்பு தடவிய வெற்றிலைத் தாம்பூலத்தைச் சுருட்டி வாயினுள் ஒதுக்கி வைத்து நன்கு அசை போட்ட பின் வாய் சிவந்துள்ளதாவென நாக்கை நீட்டி உறுதி செய்த பின் 'அங்கு விலாஸ்' புகையிலையை சற்றே கிள்ளி வாயின் ஓரத்தில் ஒதுக்குவது அவருக்கு ஊட்டச் சத்துக்கு நிகரானது !
கிடைத்த காசை வீணடிக்காமல் மனைவி பத்திரகாளியிடம் பத்திரமாக ஒப்படைத்த பின் தாம்பூலத்திற்கும் உடல் அசதியைப் போக்க மாலைநேர மாம்பட்டை கசாயத்துக்கும் தேவையான காசைப் பெற்றுக் கொண்டு வீதியில் விழாமல் தினமும் மாலை ஆறு மணிக்குள் வீட்டிற்குள் நுழைந்து விடுவது பச்சைமாலின் வழக்கம் !
நெருக்கமான நண்பர்களேதும் இல்லாவிடினும் அனைவரிடமும் சிரித்த முகத்துடன் அளவாகப் பேசி குழந்தை போன்று பழகுகின்ற பச்சைமால் நேர்மையானவர் மட்டுமன்றி ஒழுக்கமானவரும் கூட. பொன் கொடுத்தாலும் நெல் குத்துவதைத் தவிர பிற பணி செய்யாதவர் !
விளையாட்டாக அவரது மடியிலிருக்கும் பணத்தை 'பார்த்து விட்டுத் தருகிறேன்' எனக் கூறி விளையாடுபவர்களிடம் "ஆத்தா வையும்.காசு குடு" என பரட்டையிடம் கூறுகின்ற பதினாறு வயதினிலே சப்பாணியைப் போன்று "பொண்டாட்டி திட்டுவா" எனப் பரிதாபமாகக் கெஞ்சுகின்ற பச்சைமால் என்ற வெள்ளை உள்ளம் கொண்ட கறுப்பு மனிதர் வித்தியாசமானவர் !
தி.சேதுமாதவன்.
கூடுதல் ஆட்சியர்.
I.T.I.முகநூற் குழு,
[தி.பி: 2052, ஆடவை (ஆனி) 05]
{19-06-2021}
--------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக