மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

புதன், 2 ஜூன், 2021

அந்நாளை நினைக்கையிலே (28) தூணிலுள்ள முருகன் சிலைக்கு தனி சன்னதி அமைத்தது தவறு !

 1981ல் ஒரு வெள்ளிக்கிழமை காலை மதுசூதனப் பெருமாள் திருக்கோவிலுக்கு தரிசனத்திற்காகச் சென்ற எனது அப்பா கண்ட காட்சி அவரை வியப்பிலாழ்த்தியது !

 

கருடாழ்வார் சன்னதிக்கருகே தெற்கு நோக்கிய தூணில் எழுந்தருளியுள்ள சிறு ஆஞ்சநேயருக்கு பக்தர் ஒருவரின் முந்தைய நாள் வேண்டுதலான 'வெண்ணைய் காப்பின்' சிறு பகுதியை இட்லிக்கு தொட்டுக் கொள்ளும் பொருட்டு ஆஞ்சநேயர் சிலையிலிருந்து வழித்துக் கொண்டிருந்தார் மேல்சாந்தி !

 

அதிர்ச்சியுற்ற அப்பா, 'வெண்ணையை முழுமையாக நீக்கிய பின்னர் பிரசாதமாக உபயோகிப்பது தானே முறை ? பக்தர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய தாங்களே இந்த பாவத்தைச் செய்யலாமா ?  என அவரது நண்பருமான மேல்சாந்தி போற்றியிடம் வருத்தத்துடன் வினவிய போது சன்னதியில் வேறெவரும் இல்லை !

 

வியாழக்கிழமை தோறும் நாகர்கோவில்- பார்வதிபுரத்தை அடுத்த கள்ளியங்காட்டிலிருந்து பறக்கை பெருமாள் சன்னதிக்கு வருகை தருகின்ற அகவை ஐம்பதைக் கடந்த 'ஆஞ்சநேய சித்தி' கொண்ட அம்மா ஒருவர் கீழத்தெரு ராசா அண்ணாச்சியின் நெருங்கிய உறவினர் !

 

 2010 ல் ஒருமுறை நானும் தெற்குத் தெரு கேசவனும் பெருமாளை தரிசித்துக் கொண்டிருக்கும் வேளை கள்ளியங்காட்டு அம்மா பெருமாள் சன்னதி முன் மெய்மறந்த நிலையில் சமஸ்கிருதத்தில் சுருதி சுத்தமாக பெருமாளை கம்பீரத்துடன் வழிபட்டுக் கொண்டிருந்ததைக் கண்டு ராசா அண்ணாச்சியிடம் அவரது சமஸ்கிருத பாண்டித்தியம் குறித்து விசாரித்ததில் மூன்றாம் வகுப்பைத் தாண்டாத அவர் தமிழ் மொழியைத் தவிர பிற மொழிகளேதும் அறியாதவரென்ற உண்மை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது !

 

போக்குவரத்துத் துறையில் நடத்துனராகப் பணியாற்றிய அப்பா, இட்லி -வெண்ணெய் சம்பவம் நடந்த ஓரிரு தினங்களுக்குப் பின்னர் பெருமாள் கோவிலுக்கு சென்றபோது, அப்பாவுக்கு பிரசாதத்தை வழங்கி முடித்த மேல்சாந்தி, அப்பாவைத் தனியாக அழைத்து 'கடந்த வியாழக்கிழமை காலை பெருமாள் சன்னிதிக்கு வந்த ஆஞ்சநேயர் சித்தி கொண்ட கள்ளியங்காட்டு அம்மா வெண்ணெய் விவகாரம் குறித்துத் தன்னிடம் கோபத்துடன் வினவியதையும், இதுபோன்ற தவறுகளைத் தொடர மாட்டேன் என்ற வாக்குறுதியுடன் மன்னிப்பு கோரியதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார் !

 

அருகில் நின்ற கீழ் சாந்தி கோபாலன் போற்றியும் மேல்சாந்தியின் 'வெண்ணெய் அனுபவம்' போன்றே ஆஞ்சநேயருடனான தனது 'வடைமாலை அனுபவத்தை' அப்பாவிடம் பகிர்ந்து கொண்டார் !

 

பக்தர் ஒருவரின் வேண்டுதலின் படி சிறிய வடை மாலையொன்றை தயாரித்த பின்னர் மீதமுள்ள துகள்களை ஆஞ்சநேயருக்கு நிவேதனம் செய்யுமுன்னரே ஆவேசத்துடன் தின்று முடித்த கதையையும், மறுநாள் ஆஞ்சநேயர் சன்னதி முன் 'சுசீந்திரம் தாணுமாலையப் பெருமாள் கோவில் ஆஞ்சநேயராக' வடை மாலையுடனான விஸ்வரூப தரிசனம் கண்டு தான் மயங்கி விழுந்த கதையையும் கூறினார் !

 

தங்களுடைய தவறுகளை தயக்கமின்றி வெளிப்படையாகக் கூறி திருக்கோயில் அர்ச்சகர்கள் தங்களைத் திருத்திக் கொண்டாலும், தங்களுடைய இருப்பையும் வலிமையையும் காண்பித்தால் மட்டுமே கலியுகத்தில் இறைவன் மீதே மக்களுக்கு மரியாதை தோன்றுகிறதென்பதை மறுப்பதற்கில்லை !

 

பறக்கை பெருமாள் கோவிலில் அன்றாட பூஜைகள் நடைபெறுகின்ற பிரதிஷ்டை செய்யப்படாத தூண் சிற்பங்கள் மூன்று. மூலவரின் பிரகாரத்திலுள்ள தெற்கு நோக்கிய விநாயகர், மடப்பள்ளியின் எதிரே தெற்கு நோக்கிய ஆஞ்சநேயர், திருக்கோயிலின் நுழைவாயிலின் வலதுபக்க தூணில் கிழக்கு நோக்கிய முருகன். ஒவ்வொரு தமிழ் மாதம் ஒன்றாம் தேதியும் கணபதி ஹோமம் தூண் விநாயகர் முன்பு தான் நடத்தப்படுகிறது !

 

நாற்பது வருடங்களுக்கு முன்பு தூணிலுள்ள முருகன் சிலைக்கு தனி சன்னதி அமைக்க அன்றைய இளைஞர் அமைப்பு முடிவெடுத்த போது முழு விக்ரகத்தைப் போன்று தூணிலுள்ள முருகனுக்கு முழுமையாக அபிஷேகம் செய்யவியலாத நிலை, ஆகம விதிகளுக்குப் புறம்பானதென புதிய கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ராசா அண்ணாச்சியும் அப்பாவும் அன்று இளைஞர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுடன், எதிர்ப்புகளை மீறி தாங்கள் நினைத்ததை சாதிக்கவும் செய்தனர் !

 

பெரியோர்களின் தடைகளை மீறித் தூணிலுள்ள முருகன் சிலைக்கு தனி சன்னதி அமைத்தது தவறென காலம் நிரூபித்தது !

 

வெளிப்பிரகாரத்தில் தென் மேற்கு மூலையில் அமைக்கப் பட்டுள்ள சாஸ்தா சன்னதியும் , வடமேற்கு மூலையிலுள்ள முருகப் பெருமான் சன்னதியும் தேவபிரசன்னத்தின் அடிப்படையில் சேவா சங்கத்தின் முயற்சியால் நினைவில் வாழும் எங்கள் கணேசன் அண்ணன் (A.C.பிள்ளை) தலைமையில் அமைக்கப் பட்டதைப் போன்று , தில்லை நடராஜர் சன்னதியருகே ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி அமையவும் இராம பக்த ஆஞ்சநேயரே சேவா சங்கத்தினராகிய எங்களுக்கு வழி காட்டியருள வேண்டும் என்பதே உளமார்ந்த பிரார்த்தனை !

 

ஜெய் ஸ்ரீ ராம் ! ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேயா ! 

 

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை, 


தி.சேதுமாதவன்,

[sethumathavan2021@gmail.com]

கூடுதல் ஆட்சியர்

I.T.I. முகநூற் குழு,

{08-05-2021}

----------------------------------------------------------------------------------------

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக