மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

சனி, 17 ஏப்ரல், 2021

அந்நாளை நினைக்கையிலே (26) "ரெண்டும் பீடி சுத்தி பொழச்சிக்கிடும் மக்கா " - மஸ்தான் அண்ணன் !


கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் வேலைக்காக முயன்று வந்த காலகட்டம். எனது சித்தப்பாவும் சித்தியும் நெல்லையில் பணியாற்றி வந்த காரணத்தால் 1984 ஆம் ஆண்டு என்.ஜி.ஓ.காலனியிலுள்ள சித்தி வீட்டின் கட்டுமான மேற்பார்வை என்னிடம் ஒப்படைக்கப்பட்டது !


தச்சுப் பணிகளை அப்பு அண்ணன் தலைமையில் முத்தையா அண்ணனும் நண்பன் முருகனும் கவனித்து வந்தனர். தங்கள் கருவிகளை தீட்டி கூர் நோக்கி பணியைத் துவங்கும் போது தேநீர் இடைவேளை வந்து விடுவதால், கூர் நோக்கும் பணிகளை விடுமுறை நாட்களில் மேற்கொள்தல் நலமென நாசூக்காக கூறினாலும் பணி நேரத்தின் பெரும்பகுதி தீட்டுவதில் கழிந்தது !


மிதிவண்டியில் தேநீர் விற்பனை செய்யும் நவாஸ் என்ற நண்பர் எங்கள் வீட்டின் அருகே வந்தவுடன் "லே ! அப்பன் வர்றது கூட தெரியாம அப்படி என்னல வேல ?" என்று இளைஞன் முருகனைப் பார்த்து கிண்டலடிப்பதைக் கேட்டு அப்பு அண்ணன், முத்தையா அண்ணன், மின் பணியாளர் மஸ்தான் அண்ணன் ஆகியோர் சிரிப்பதற்கு முருகன், ஆசாரி இனத்தைச் சாராதவர் என்பதே காரணம் !


தினமும் தேநீர் வேளைகளில் தொடர்ந்து வந்த நவாசின் அப்பன் - மகன் கிண்டலைத் தனது புன்னகையால் சமாளித்து வந்தான் முருகன். ஒரு நாள் நேருக்கு நேராக நின்ற நவாஸ் "அப்பன் நேரில வந்து நிண்ணா நிமிர்ந்து பாருல" எனப் பொய்க்கோபத்துடன் கூற "தேவையில்லாம தொந்தரவு பண்ணினா அப்பன்னு கூட பாக்காம ஒரே போடா போட்டிருவேன்" எனச் சிரித்துக் கொண்டே சுத்தியலை முருகன் தூக்கிக் காட்ட அனைவரும் அதனை சிரித்து இரசித்தனர் !


1984 ல் அமெரிக்காவில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டிருந்த நேரம் கவலை தோய்ந்த முகத்துடனும் கனத்த இதயத்துடனும் தனது பணியை செய்து கொண்டிருப்பார் அதிதீவிர எம்ஜிஆர் இரசிகரான அப்பு அண்ணன். தலைமைக் கொத்தனார் துரை அண்ணனோ தீவிர சிவாஜி இரசிகர் !


பணி முடித்து வீடு திரும்பும் வழியில் பறக்கை சந்திப்பு பெட்டிக் கடையில் இரகசியமாக விற்கப் படுகின்ற மாம்பட்டை கசாயத்தை விஷத்தைக் குடிப்பது போன்ற அருவருப்பான முகபாவத்துடன் குடித்த பிறகு காலிகண்ணாடிக் குவளையை சப்தத்துடன் வைத்த பின் அஷ்ட கோணலான முகத்துடன் நின்ற இடத்திலேயே உமிழ்ந்து வேட்டியால் வாய் துடைத்து வீட்டிற்கு சென்று மீன்கறியுடன் கஞ்சியைக் குடித்து அலுப்பு தீர குறட்டை விட்டு தூங்கி எழுந்து மறுநாள் காலையில் வேலைக்கு வருகின்ற துரை அண்ணனிடம் முந்தைய நாள் நெடி அப்படியே இருக்கும் !


என்னிடம் பாசம் கொண்ட அப்பு அண்ணனைத் தேற்றும் பொருட்டு எம்ஜிஆரின் உடல்நலம் தேறி வருவது குறித்த பத்திரிகை செய்திகளை நான் வாசித்துக் காட்ட வேட்டியின் முனையால் பெருகி வரும் கண்ணீரைத் துடைத்துக் கொள்வார். பள்ளி விடுமுறை தினங்களில் தனது மகன் நாகராஜனை துணைக்கு அழைத்து வருகின்ற அப்பு அண்ணனுக்கு அவனது வளமையான எதிர்காலம் குறித்த கனவு இருந்தது !


நல்ல உடற்கட்டுடைய அப்பு அண்ணனது கண்கள் எம்ஜிஆரின் உடல்நிலை குறித்து கலங்குவது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் அப்பு அண்ணனைப் போன்றே எம்ஜிஆர் மீது எல்லையற்ற பாசங்கொண்ட ஏராளமானோரைப் பிற்காலத்தில் நான் காண நேர்ந்தது !


மஸ்தான் அண்ணன் நுட்பமான வேலைக்காரர். பணிக்கு வந்து விட்டால் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து வேலை செய்வார். 'மக்கா' என அன்புடன் என்னை விளிக்கும் அவர் ,தொடர்ந்து பணிக்கு வராமல் அலைக்கழிக்கும் சந்தர்ப்பங்களில் பறக்கை விலக்கிலிருக்கும் பழைய மாடிக் குடித்தனத்திற்குச் சென்று மறுதினம் கண்டிப்பாக வேலைக்கு வந்து விட வேண்டும் என வெளியே நின்றபடியே கண்டிப்புடன் கூறுவது வழக்கம் !


பாசத்துடன் அண்ணி அழைத்தும் கோபத்துடன் வெளியே நிற்கும் என்னைக் கைகளைப் பிடித்து உள்ளே அழைத்து வந்து தரையில் அமரச் செய்து எனக்குப் பிரியமான உள்ளி வடையையும் தேநீரையும் தந்து அருகிருந்து உபசரிக்கும் அண்ணனிடம் கோபம் கொள்ள மனம் ஒப்பாது."நாளைக்கு நிச்சயமா வந்திருவேன் மக்கா" என்று உறுதி அளித்து விட்டால் தவறாமல் வந்து விடுவார் !


மின்சாரக் கம்பிகளை எவ்வித பாதுகாப்பு முறைகளையும் கடைப்பிடிக்காமல் நல்ல பாம்பை பிடித்து வருவதைப் போன்று தூக்கி வருவதைக் கண்டு "அண்ணே ! உங்களை நம்பி ரெண்டு குடும்பம் இருக்குண்ணே " என்று கிண்டல் செய்யும் போது "ரெண்டும் பீடி சுத்தி பொழச்சிக்கிடும் மக்கா " என்று நகைச்சுவையாக கூறுவார் மஸ்தான் அண்ணன். சிக்கன நடவடிக்கையாக தனக்கு உதவியாக ஒருவரை மட்டுமே பணியமர்த்துவது அவரது வழக்கம் !


காலச்சுழற்சியில் பதினைந்து வருடங்களாக முழு ஈடுபாடின்றி செய்து வந்த தச்சுத் தொழிலை கைவிட்ட நண்பன் முருகன் தனது உணவு விடுதியில் தொந்தியும் தொப்பையுமாக உட்கார்ந்து இருக்கிறார் !


மகனை அரசு பணியாளராக்கும் பகீரத முயற்சி பலனளிக்காத நிலையில் அப்பு அண்ணனின் மறைவுக்குப் பிறகு பாரம்பரிய தச்சுத் தொழிலில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வெற்றி நடை போடுகிறான் நாகராஜன் !


காலப்போக்கில் மாம்பட்டை கசாயம் காலாவதியாகி விட்ட காரணத்தால், உற்சாக பானத்துக்கு மாறிவிட்ட துரை அண்ணன் தற்போது அரசின் வருவாயை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறார் !


உற்சாக பானத்திற்கு அடிமையான சிறந்த பணியாளரான மஸ்தான் அண்ணனின் அகால மறைவுக்குப் பின்னர் அவரது குடும்பம் பீடி சுற்றத் துவங்கினாலும் , அவரது வாரிசுகள் குடும்ப பாரத்தைத் தாங்கி வருவதறிந்து ஆறுதலடைந்தேன் !

----------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


தி.சேதுமாதவன்,
[sethumathavan2021@gmail.com]
கூடுதல் ஆட்சியர்
I.T.I. முகநூற் குழு,
{17-04-2021}
------------------------------------------------------------------------------------------


 

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

அந்நாளை நினைக்கையிலே (25) வேறு பாதை வழியாகச் செல்லும் விடாக்கண்டன் மாமா !


1981ல் கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் அரசாங்க வேலையின் பொருட்டு போட்டித் தேர்வுகளை எழுதிக் கொண்டிருந்த சமயம். மேலத்தெரு ஜவஹர் நூலகத்திற்குச் சென்று தினமணி நாளிதழை புரட்டி முடித்து வீட்டிற்கு வந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் செய்திகளைப் புரிந்து கொண்ட பின்னர் புரியாத ஆங்கில வார்த்தைகளை குறிப்பேட்டில் எழுதி வைத்து ஆங்கில அகராதியில் அர்த்தம் புரிந்து வந்தேன். என் போன்ற இளைஞர்களுக்கு ஜவஹர் நூலகம் அக்காலத்தில் ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்தது !


கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் பயின்ற தமிழ் -ஆங்கில சுருக்கெழுத்தும் தட்டச்சு உயர்நிலையும் என் அக்காவுக்கும் தம்பிக்கும் பணியில் விரைவாக பதவி உயர்வு பெற உதவிய நிலையில், சோம்பேறித்தனத்தால் சுருக்கெழுத்து கற்க மறுத்தது மட்டுமன்றி குட்டையான கைகளைக் (Short hand) கொண்டவர்களுக்குகந்த பயிற்சியெனக் கிண்டல் செய்ததன் பலனை பிற்காலத்தில் நான் அனுபவிக்க நேர்ந்தது !


தட்டச்சையும் தாமதமாகவே பயின்றதன் காரணமாக மத்திய அரசுப் பணி வாய்ப்புகளை கைக்கெட்டும் தூரத்தில் இரு முறை கோட்டை விட்டதுண்டு. உயர் நிலை அலுவலர்களுக்கான தேர்வுகளை மட்டுமே தேர்வு செய்து எழுதி ஓரிரண்டில் இறுதிச் சுற்றில் கோட்டை விட்ட நான், மாநில தேர்வாணையத்தின் அமைச்சுப் பணியாளர் தேர்வுகளை மெத்தனத்துடன் தவிர்த்து வந்தேன் !


வருடத்திற்கிரு முறை இராணிப்பேட்டையிலுள்ள எனது சின்ன மாமா வீட்டுக்குச் சென்று ஓரிரு மாதங்கள் தங்கி விட்டு ஊருக்கு திரும்புவேன். எங்கள் ஊரிலுள்ள தட்டச்சுப் பயிற்சி மையத்தில் தமிழ் ஆங்கில தட்டச்சு இளநிலை முடித்த நான் உயர்நிலை தட்டச்சை இராணிப்பேட்டையில் பயின்றேன் !


வட ஆற்காடு மாவட்ட வெயிலின் உக்கிரத்தில் வதனம் வாடி விடாமலிருக்க அக்காலத்தில் பிரபலமான மஞ்சள் வண்ண முகக் களிம்பைக் கட்டியாகத் தேய்த்து அதன் மேல் வெள்ளை பூசி முகத்தில் குளிர் கண்ணாடியை பொருத்தி இருசக்கர ஊர்தியில் தட்டச்சு நிலையத்திற்குச் சென்று வருவேன் . கட்டியாக களிம்பு பூசியும் கரி படிந்த விறகடுப்பு சமையலறையில் வெள்ளை வண்ணம் பூசியது போன்றே அமைந்தது !


இராணிப்பேட்டையிலிருந்து ஊர் திரும்பிய மறுநாள் காலை நேரம் பறக்கை தெப்பக் குளத்தருகே என்னை கண்ட ஊர் பெரியவர் ஒருவர் " ஏய் ! என்ன ஆள கொஞ்ச நாளா காணல ? எங்க வேலை பார்க்க ?" என்று கேட்டதற்கு சிரிப்பை மட்டுமே பதிலாக அளித்தேன் !


தொடர்ந்து விடாது கேள்விக்கணை தொடுத்ததற்கு "எம்.என்.ஓ.பி.யில்" என்று பதிலளித்தேன் . "அது எங்கடே இருக்கு?" என்று கேட்டதற்கு "என்ன மாமா எம். என்.ஒ.பி தெரியாத்த ஆளா இருக்கீங்க" என்று கேட்டவுடன் சுதாரித்துக்கொண்டு "அது பெரிய கம்பெனினு தெரியும் டே ! எந்த கிளையில வேலை பார்க்கன்னு தான் கேட்டேன்" என்று சமாளித்தார். " ராணிப்பேட்டை" என்றேன்." சரி !


.. சரி.. ஒழுங்கா வேலய பாருடே" என்ற அறிவுரையுடன் நகர்ந்தார் !


ஓரிரு வாரங்களுக்கு அவரைத் தூரத்தில் கண்டதுமே வேறு பாதை வழியாக ஓடித் தப்பித்த நான், ஒரு நாள் பொறியில் மாட்டிக் கொண்டேன். "ஏய் ! வேலைக்கு போல்லியா ?" என்று கேட்க மேலும் ஒரு வாரத்திற்கு விடுப்பை நீட்டித்துள்ளதாக சமாளித்தேன் !


சரியாக மறுவாரம் பாராமுகமாக சென்ற என்னை பின்பக்கமாகத் துரத்தி அருகில் வந்து மூச்சிரைக்க நின்றார் விடாக்கண்டன் மாமா. "இன்னுமா போல்ல ?" என்று அவர் கேட்டு முடிக்குமுன்னரே, "இ.எப்.ஜி" கம்பெனியில அதிக சம்பளத்தில வேலை கெடச்சிருக்கு. அடுத்த வாரம் மெட்ராஸ் போறேன்" என வேண்டா வெறுப்புடன் அளித்த பதிலில் திருப்தியுறாமலேயே மெல்ல நகர்ந்தார் மாமா !


ஓரிரு தினங்கள் கடந்த நிலையில் என்னை கண்ட மாமா "இன்னும் நீ போல்லியா ?" என்று கேட்டவுடன் கோபத்தை அடக்கியவாறு "மாமா ! உங்களுக்கு இப்ப என்ன பிரச்சனை ? " என்று கேட்டேன். 'பெற்றோர் ஆதரவில் இருக்கும் நான், தங்களிடம் உணவுக்கு யாசித்து நின்றால் இவ்வாறு நச்சரிப்பதில் அர்த்தமுண்டு. வேலைக்காக தொடர்ந்து முயன்று வரும் என்னிடம் எனது பெற்றோர் கூட இதுவரை கேட்டிராத கேள்விகளைக் கேட்டு என்னைப் பொய் பேச வைப்பது அழகல்ல' என அமைதியாகவும் கண்டிப்புடனும் கூறி நகர்ந்த பின்னர், என்னைத் தூரத்தில் கண்டாலே வேறு பாதை வழியாகச் சென்று விடுவார் விடாக்கண்டன் மாமா !

--------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்,
[sethumathavan2021@gmail.com]
கூடுதல் ஆட்சியர்,
I.T.I. முகநூற் குழு,
{10-04-2021}
---------------------------------------------------------------------------------------------




 

அந்நாளை நினைக்கையிலே (24) எங்கள் தெருவில் நடை பயிலும் பக்கத்து தெரு கருப்பழகி !


எங்கள் தெருவில் வசித்து வந்த ஒன் நாட் நயனின் (அ.நினைக்கையிலே பாகம் 7 ல் பதிவிடப் பட்டுள்ளது) மாநிறம் பொருந்திய மகளுடன், இலவச இணைப்பான மாமனாரைச் சுமக்கின்ற வலிமையின்மையும், ஒன் நாட் நயனிடம் தங்கள் காதல் படைப்புகள் சிக்கினால் சந்தி சிரிக்க வைத்து விடுவாரென்ற அச்சமும் இளைஞர்களைச் சிந்திக்க வைத்தது !


உற்சாக பானத்தின் உந்துதலில் ஒன் நாட் நயன் செய்யும் அட்டகாசங்கள் பிரசித்தமானதால், மகள் சாதுவாகவிருந்தும், கடிக்கும் மாமனாருக்கு மருமகனாக இளைஞர் எவரும் விரும்பவில்லை  !


காலையும் மாலையும் கோவில் சுவரை உரசியபடி எதிரே வருகின்ற கால்நடைகளையும் விலகச் செய்கின்ற - மண்பார்த்து நடக்கும் பெண்மைக்கு இலக்கணமாக ஊராரால் மெச்சப்பட்ட மங்கை திடீரென காணாமல் போனார். அவரைப் போன்றே அடக்க ஒடுக்கமான இளைஞன் ஒருவருடன் திருச்சியில் குடும்பம் நடத்தி வரும் விவரம் இளைஞர் குழு வாயிலாக அறிய நேர்ந்தது !


தினம் காலை ஒன்பது மற்றும் பிற்பகல் இரண்டு மணியளவில் காலில் கொலுசு, காதில் ஜிமிக்கி கம்மலுடன் எங்கள் தெருவில் நடை பயிலும் பக்கத்து தெரு கருப்பழகியின் தரிசனத்திற்காக குளிக்காமலேயே முகத்தில் வெள்ளை பூசி கண்ணாடி முன் நின்று தலையை வாரிக் கலைத்து முன் பக்கம் குருவிக்கூடு சுற்றி விடுமுறை நாட்களில் தெரு முனையில் தேவதை வரவுக்காக இளைஞர் கூட்டம் ஒன்று காத்திருக்கும் !


ஒன் நாட் நயனின் உறவினரான இவர் அவரது மகளுடன் உலக விசயங்களைப் அலசி விட்டு "போய் வருகிறேன்" என ஊருக்கே கேட்கும் படியாகச் சொல்லிக் கிளம்பும்போது 'அடக்கமான' இளைஞர்கள் சிலர் கலைந்த முடியை சரி செய்து தங்கள் வீட்டினுள் நின்றவாறே இலவச தரிசனம் பெறுவது வழக்கம் !


காலில் கொலுசுடன் கடைக்குச் செல்லும் மணமான பெண்ணொருவர் இதே நேரத்தில் தேவையின்றி நடை பயின்று அப்பாவி இளைஞர்களின் சாபத்தை ஏற்றுக் கொள்வார் !


தரிசனத்திற்காக பக்த கோடிகள் தயாராக நிற்கிறார்களாவென உறுதி செய்த பின்னர் புன்னகையை வீசியவாறே திருவுலா முடித்து வீட்டிற்கு திரும்பும் கொலுசுப்பெண் மறுமுனையை அடைந்தவுடன், முன்பக்கம் வைத்திருந்த குஞ்சலங்களுனான பின்னல் சடையை பின்பக்கத்திற்கு மாற்றியவாறே ஒயிலாகக் கழுத்தைத் திருப்பும் போது தெருமுனை இளைஞர்கள் தங்கள் விழிகளை கழற்றி விட்டு விடுவர் !


முரட்டுக் காளைகள் இருவரை சகோதரர்களாகக் கொண்ட கொலுசுப் பெண்ணுக்கு காதல் மடல் பரிமாறும் தைரியம் எங்கள் பகுதி இளைஞர்களுக்கு இல்லை !


பள்ளி - கல்லூரி மாணவ மாணவியரால் நிரம்பி வழியும் மாலை நேர அரசுப் பேருந்திற்குள் அங்குமிங்குமாக ஓடி பேருந்துச் சீட்டை குறித்த சமயத்தில் கொடுத்து முடித்து படிக்கட்டில் நின்றபடி கணக்கை வேகமாக முடிக்கின்ற அகவை ஐம்பதைக் கடந்த எனது தந்தையின் சிரமத்தை நன்குணர்ந்த காரணத்தால் கல்லூரி வகுப்புகள் முடிந்து வீடு செல்லும் வேளை அப்பா பணியாற்றும் பேருந்தில் ஏறுவதை நான் தவிர்ப்பதுண்டு !


தந்தை ஓய்வு பெறும் 1987 ற்குள் ஓய்வூதியம் ஏதுமில்லாத அப்பாவின் குடும்ப பாரத்தை ஏற்க வேண்டுமென்ற உணர்வு தேவையற்ற விஷயங்களின் பால் கவனம் சிதறாமல் தடுத்தது எனலாம் !


ஒரு சனிக்கிழமை காலை பத்து மணியளவில் 'அண்ணே" என்று பின்பக்கத்திலிருந்து வந்த பெண் குரல் கேட்டு கால்நடையாக கடைக்குச் சென்று கொண்டிருந்த நான் திரும்பிப் பார்த்தேன். எதிரே கொலுசுப் பெண். "கடைக்குப் போகிறீர்களா அண்ணே ? " என ஆரம்பித்து சிறிது தூரம் என்னுடன் பேசிக் கொண்டு வந்தார் !


நன்கு படித்து வேலையில் ஏற முயற்சிக்குமாறு அறிவுரை கூறிய களங்கமில்லாத அவ் வெகுளிப்பெண் ஒன்பதாம் வகுப்பில் தோல்வியுற்ற காரணத்தால் பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்தவர் !


சமையலறைப் பணிகளனைத்தும் முடித்த பின் சற்றே இளைப்பாறும் பொருட்டு தனது உறவினர் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும் விளக்கினார். படிப்பைத் தொடர மிகுந்த ஆவலிருப்பினும் சகோதரர்கள் சம்மதிக்கவில்லையெனவும் பேச்சிலிருந்து விளங்கியது !


மறுநாள் மாலை வேளை அக்கரை சிவன் கோவிலுக்கு நண்பன் முருகனுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது அடிவானில் பல உருவங்களுடன் காட்சியளித்த கலைந்த மேகக் கூட்டங்களுக்கிடையில் ஆதவன் கீழ் நோக்கி மெல்ல மறையத் துவங்கியிருந்தான். இறை தரிசனம் முடித்து எதிர்ப்பட்ட கொலுசுப் பெண் "கோவிலுக்கு போறீங்களா அண்ணே?" எனப் பரிவுடன் கேட்டதும் "ஆமாம்மா " என அன்புடன் பதிலளித்த என்னைக் கண்டு நண்பன் முருகன் "அண்ணன் வரிசையில் நீ சேர்ந்தது எப்போ ? என சற்று ஆச்சரியத்துடனே கிண்டல் செய்தான். மேகங்கள் நீங்கிய அடிவானம் நிர்மலமாகக் காட்சியளித்தது !


------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்,

[sethumathavan2021@gmail.com]

கூடுதல் ஆட்சியர்,

I.T.I. முகநூற் குழு,

{27-03-2021}

---------------------------------------------------------------------------------------------



அந்நாளை நினைக்கையிலே (23) ’கொடம்’ என்ற பெயரால் சிறப்பிக்கப்பட்ட தங்கம் !


கவச குண்டலங்களுடன் அவதரித்த கர்ணனைப் போன்று இடுப்பில் செம்புக் குடத்துடன் தெருக்குழாயில் தண்ணீர் எடுப்பதற்காக பாவாடை தாவணியில் அங்குமிங்குமாக எப்போதும் அலைவதன் காரணமாக 1980 களில் எங்கள் தெருவில் வசித்து வந்த அந்த இளம்பெண் 'கொடம்' என்ற பெயரால் சிறப்பிக்கப்பட்டார் !


சுமாரான உயரமும் மாநிறமும் கொண்ட இருபத்தைந்து அகவை மதிக்கத்தக்க அப்பெண்ணின் சிரிப்பு மோனலிசாவைப் போன்றே மர்மமானது !


அங்கீகரிக்கப்பட்ட குழாயடி ராணிகளுக்கிணையாக வாய்ப்போர் புரியுமளவிற்கு வாடகைக்கு குடி வந்த ஓரிரு மாதங்களிலேயே திறமையை வளர்த்துக் கொண்ட 'கொடம்', தான் வசித்துவந்த முந்தைய ஊர்களிலேயே இந்த அருங்கலையில் தேர்ச்சி பெற்றிருக்கவும் வாய்ப்புண்டு !


குழாயடிகளுக்குச் செல்லும் 'பயிற்சியற்ற' பெண்கள் சட்டம் குறித்து பேசினால் "உன்னைத் தெரியாதா ? " எனத் துவங்கி கூச்சமின்றி அபாண்டமான - ஆபாச அர்ச்சனைகளால் ஆவேசத்துடன் ஆக்ரமிக்கின்ற (பி) ராணிகளை எதிர்கொள்ளவியலாது தண்ணீருக்குப் பதிலாக கண்ணீருடன் திரும்ப வேண்டியிருக்கும். சுயமரியாதை கொண்ட ஆண்கள் எவரும் அப்பக்கத்தில் தலை வைத்துப் படுப்பதில்லை !


எங்கள் தெரு இளைஞர்களுக்கு 'கொடத்தின்' அழகின் பால் ஈர்ப்பிருப்பினும், குழாயடி யுத்தங்களில் அவரால் பிரயோகிக்கப்படும் நாகரிகமற்ற வார்த்தைக் கணைகள் அவர் பால் நெருங்க விடாமல் தடுத்தது !


குழாயடி இராணிகள் தினசரி தண்ணீர் எடுப்பதில் தங்கள் முதுநிலையை நிர்ணயிப்பதற்காக வரிசையில் வைத்திருக்கும் நிற்கத் திராணியற்ற அலுமினியக் குடங்கள் அனைத்துமே களங்கள் பல கண்டதன் பலனாக தலை, வயிறு, கழுத்து, அடிப்பாகம் நசுங்கியவையாகவே இருக்கும். குழாயடி சண்டைகளின் போது இத்தகைய குடங்களுடனேயே தொழில்முறை ராணிகள் களம் காண்பது மரபு !

' குட ' யுத்தத்தில் வல்லமை பெற்றிருந்த 'கொடத்தின்' மாவீரம் கண்டு அதிசயித்த ராணிகள் மெல்லமெல்ல அவர்களது கூட்டணியில் இவரையும் ஐக்கியப் படுத்திக் கொண்டார்கள் !


தெருக் குழாயில் தண்ணீர் நின்ற பின்னரும் குடம் குடமாக குளத்திலிருந்து நீர் சேகரிக்கும் இவரது வீட்டினுள் நீச்சல் குளமேதும் பராமரிக்கப் படுகிறதாவென்ற பலத்த சந்தேகம் எங்கள் தெருக்காரர்களுக்குண்டு !


பிற பெண்களுடான இவரது அரட்டை கூட பெரும்பாலும் குழாயடி பிரதாபங்கள் பற்றியதாகவே இருக்கும் !


இடமாறுதலில் புதிதாக எங்கள் ஊருக்கு வந்த மத்திய வயது தபால்காரர் "ஜொள்ளு " தங்கையா 'கொடத்தை' பார்த்து அசடு வழிவது வழக்கம் !


ஒரு முறை ஜொள் விட்டவாறு மிதிவண்டியில் மெல்ல அருகில் வந்த தங்கையா கிசுகிசுப்பான குரலில் " தண்ணி எடுத்துட்டுப் போறியா "என வினவ "குடத்திலே தண்ணி எடுக்காம ம.......யா எடுத்துட்டுப் போவாங்க?" என்ற எதிர்பாராத ' மயிர்க்' கூச்செறியும் பதிலால் அதிர்ச்சியுற்ற தங்கையா, ஒரு வாரகாலம் தெருப் பக்கம் தலை காட்டாதது மட்டுமன்றி கொடத்திற்கு வருகின்ற கடிதங்களை வேறு தெருக்களில் கொடுத்துச் சென்று விடுவார் !


ஒரு நாள் எங்கள் தெருவிலுள்ள ஒரு வீட்டின் முன் கண்ணகியாக கையில் ஒரு மடலுடன் வந்த கொடம் " அக்கா ! ஒங்க மூத்த மகனைக் கூப்பிடுங்க " என்றார். இலக்கணப் பிழைகளில் குளித்த அந்த காதல் அபத்தத்தை மிகுந்த சிரமத்திற்கிடையில் பொறுமையாகப் படித்துக் காட்டிய பின்னர் " முதல்ல இரட்டை வரி ஏட்டில் கோணாம தப்பில்லாம ஒழுங்கா எழுதிப் படில ! சவம் ! " என "அன்புள்ள கதலிக்கு" எனத் துவங்கப்பட்ட அம்மடலை சுக்கு நூறாகக் கிளித்து அவனுடைய முகத்திலேயே எறிந்து விட்டு வேகமாகச் சென்று விட்டார் !


இச்சம்பவத்தின் தாக்கத்தால் எங்கள் தெருக் கலைஞர்களின் காதல் இலக்கிய படைப்புகள் பல பட்டுவாடா செய்யப்படாமலேயே அழிக்கப்பட்டது தமிழுக்கு பேரிழப்பு !


'கொடத்தின்' அறிவுரையை சிரமேற்கொண்டு தவறுகளை குறைத்துக் கொண்ட காதல் மன்னன், வழக்கம்போல பக்கத்து தெரு இளம் பெண்களுக்கு குறைந்த எழுத்துப் பிழைகளுடன் கூடிய காதல் கடிதங்களை பகிர்ந்து கொண்டிருந்தான் !


தங்கள் வீட்டினுள்ளிருந்தபடியே 'கொடம்' எனக் குரலெழுப்பும் இளைஞர்களின் கிண்டலுக்கு மதிப்பளித்து அவர்கள் வீட்டின் முன் சென்று "இங்க வால ! காணிச்சு தரேன் " என மல்லுக்கு நிற்பது அவரது சிறப்பு !


நாகர்கோவிலிலுள்ள கடையொன்றில் காலையில் கணக்கெழுதச் சென்று இரவு வீடு திரும்புகின்ற திருமணமாகாத அண்ணனின் வருமானத்தில் ஓடிக் கொண்டிருந்த 'கொடத்தின்' குடும்பத்தில் மூத்த உறுப்பினரான எதிர்நீச்சல் திரைப்பட 'இருமல் தாத்தா'வையொத்த நோய்வாய்ப்பட்ட தந்தையை தெருவிலுள்ள எவருமே நேரில் கண்டதில்லை !


அதீத தண்ணீர் சேகரம் தந்தையின் உபயோகத்திற்கானதெனவும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகவே எங்கள் ஊருக்கு அவரது குடும்பம் குடி பெயர்ந்துள்ளதெனவும் தாமதமாகவே புரிந்தது. தங்கம் என்ற இயற்பெயரால் அவரை விளிப்பது அனேகமாக அவரது சகோதரரும் வயதான தாயாரும் மட்டுமே !


தெப்பக்குளத்தில் துணி மூட்டைகளுடன் துவைக்க வருகின்ற மூதாட்டிகளுக்கு உதவுகின்ற கருணை உள்ளம் கொண்ட 'கொடம்' குற்றம் புரிவதற்கும் தற்காப்புக்குமான ஆயுதமாக (Organ of offence and defence) பல்லிக்குதவுகின்ற வாலைப் போன்று தனது நாவைப் பயன் படுத்தினாலும் , அதீதமான பயன்பாடே அவ்விளம்பெண்ணை பிற பெண்களிடமிருந்து விலக்கி வைத்தது !


இருமலிலிருந்து தாத்தாவிற்கு நிரந்தர விடை கிடைத்த பின் எங்கள் ஊரை விட்டு காலி செய்து நாகர்கோவிலுக்குச் சென்ற "கொடம்" அப்பகுதியிலுள்ள குழாயடியொன்றை கைப்பற்றியிருக்கக்கூடும் !


யுத்தங்கள் பல கண்டு தமிழுக்கு குழாய் இலக்கியமென்ற புதிய பரிமாணம் வகுத்த எங்கள் ஊர் குழாயடிகள் அப்பாவிப் பெண்களின் சாபமேற்று சிதிலமடைந்து இன்று நினைவுச் சின்னங்களாக நிற்கின்றன !


-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


தி.சேதுமாதவன்,

[sethumathavan2021@gmail.com]

கூடுதல் ஆட்சியர்,

I.T.I. முகநூற் குழு.

{20-03-2021}

-------------------------------------------------------------------------------------------

அந்நாளை நினைக்கையிலே (22) தாடி நீலகண்டன் தாத்தா !


பிறருடன் கலந்தாலோசிக்காமல் தனது மனதிற்கு சரியென்று தோன்றுபவற்றை விமர்சனம் குறித்த கவலையின்றி செயலாக்கம் செய்பவர்களைத் 'தான்தோன்றி' (சுயம்பு) என்றழைப்பதுண்டு. பெரும்பான்மைக் கருத்துக்களுடன் உடன்படாது எதிர்மறைக் கோணத்திலும் சிந்தித்து அலசி விவாதம் செய்கின்ற மாறுபட்ட சிந்தனையாளர்களை 'அகராதி' எனவும் ஊரார் அழைப்பதுண்டு !


மேற்கண்ட குணாதிசயம் கொண்ட ஒருவர் தான் நமது நாயகன் தாடி நீலகண்டன் தாத்தா. அகவை அறுபதைக் கடந்த தாத்தாவின் பாதங்கள் மனைவியின் மறைவுக்குப் பின் வாழ்வியல் கடமைகளை முடித்த பின்னர் ஆன்மீக நாட்டம் காரணமாக புனிதத் தலங்களை நோக்கிப் பயணித்தது !


இடுப்பில் காவி வேட்டி அதன் மேல் ஒரு வெள்ளை ஜிப்பா, தோளில் ஓரிரு மாற்றுடைகளுடன் கூடிய நீண்ட பையுடன் தேசாடானம் செல்லும் தாத்தா ஆண்டுக்கொரு முறை தனது சொந்த ஊரான பறக்கைக்கு திரும்புவார். ஒரு மாத காலம் தங்கி ஊர் அலுத்த பிறகு ஆன்மீக பயணத்தை மீண்டும் துவங்கிவிடும் அவர் ஓடுகின்ற ஆறு போல ஓரிடத்தில் நிலைத்திருப்பதில்லை !


கூர்மையான புத்தியும் இசை குறித்த கேள்வி ஞானமும் கொண்ட அவர் வேங்குழல் நாதத்தின் பால் கொண்ட அதீத ஆர்வத்தின் அடையாளமாக புல்லாங்குழல் ஒன்றைத் தன் பையில் எப்போதும் வைத்திருந்து பாலைவனத்தில் அணுகுண்டு சோதனை செய்வது போன்று, ஆள் நடமாட்டமில்லாப் பகுதியில் மனித இனத்துக்கு ஆபத்தில்லாமல் ஆலமரத்தடியில் அமர்ந்து சாதகம் செய்வார் !


கோகுலத்தில் பசுக்களெல்லாம் கார்முகில் வர்ணனின் வேணு கானத்தைக் கேட்டு தன்னை மறந்து பால் சுரந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.ஆனால் தாத்தாவின் குழலோசை கேட்கும் திசையில் எந்த கால்நடைகளும் தலை வைத்து படுப்பதில்லை !


வாடகைக்குக் கொடுத்திருந்த தனது சிறிய வீட்டை கடிதங்கள் பல அனுப்பிய பின்னரும் வாடகை தராது இலவசமாக குடியிருந்து காலி செய்யாமல் அடம்பிடித்த குடித்தனக்காரரை தனது வேணு கானத்தால் காலி செய்ய வைத்தவர் தாடித்தாத்தா !


குடித்தனக்காரரிடம் தனக்கு தங்குவதற்கு அவ்வீட்டின் ஒரு சிறிய அறையை நயமாகப் பெற்றுக் கொண்ட தாத்தா தனது சிறு அறையில் விறகடுப்பில் சமையலைத் துவங்கி குடித்தனக் காரரை குடும்பத்துடன் இரும வைத்ததுடன், இரவு உணவை முடித்த பின் ஊராரை உணர்த்தும் வகையில் குறட்டை விட்டு தூங்கினார் !


தொடர் யோகாசானப் பயிற்சிகளின் பலனாக திடமான தேகத்தைப் பெற்றிருந்தாலும் , அறிவு பூர்வமாக பிரச்சினைகளை அணுகுவதில் ஆர்வம் கொண்டவர் தாத்தா !


ஊர் உறங்கும் நேரத்தில் தனது பையிலிருந்து புல்லாங்குழலை வெளியிலெடுத்து தனக்கு வசமில்லாத ஒரு இராகத்தில் சாதகம் செய்யத் துவங்கினார். மதங்கொண்ட யானை பிளிர்வதைப் போன்ற தாத்தாவின் நாராச இசையைக் கேட்டு விழித்தெழுந்த குடித்தனக்காரர் "இந்த இரவு நேரத்திலா சாதகம் செய்ய வேண்டும் ? காலையில் செய்தால் ஆகாதா ? "எனக் கோபத்துடன் கேட்ட போது , அமைதியான இரவு நேரமே தனக்கு சாதகம் செய்ய உகந்ததென மென்மையாகக் கூறி 'மௌலியாக' இராக ஆலாபனையைத் தொடர்ந்தார்  !


நடுநிசியில் கோரமாக புல்லாங்குழல் இசைப்பதற்கு குடித்தனக்காரர் கண்டிப்புடன் விதித்த தடையை அனுசரணையுடன் ஏற்றுக் கொண்ட தாடித்தாத்தா, அரைமணி நேரம் கடந்த பின்னர் விட்ட இடத்திலிருந்து தூக்கத்தைத் தொடர்ந்த குடித்தனக்காரரை கோரைப்பாய் மேலமர்ந்து தகர டப்பாவைச் சுரண்டியது போன்ற தனது இனிய தேவகானத்தால் எழுப்பி விட்டார் !


தாத்தாவிடம் மீண்டும் ஓடி வந்த குடித்தனக்காரரின் "வாயைத் திறந்து பாடக் கூடாதென்ற" கட்டளையை சிரமேற்கொண்ட தாத்தா, வாய்ப்பாட்டை விடுத்து விக்கிரமாதித்தனும் வேதாளமும் போல மீண்டும் முரளி கானம் இசைக்கும் பொருட்டு தனது புல்லாங்குழலை புன்னகையுடன் மெதுவாகக் கையிலெடுத்தார் !


ஊர் உறங்கும் வேளையில் தாத்தாவின் இசையெனும் கரைபுரண்ட காட்டாற்று வெள்ளத்தில் தூக்கத்தை இழந்த குடித்தனக்காரரும் குடும்பமும் கையறு நிலையில் மறு நாளே வேறு வீட்டிற்கு குடி பெயர்ந்தது. கத்தியின்றி இரத்தமின்றி தனது இசை ஆக்ரமிப்பால் அகிம்சா முறையில் குடித்தனக்காரரை வீட்டை விட்டுத் துரத்திய தாடித்தாத்தாவுக்கு விருதுகளேதும் வழங்கப் பட்டதாக நினைவில்லை !


"சன்மனசுள்ளவர்க்கு (நல் மனதுள்ளவர்க்கு ) சமாதானம்" என்ற மோகன்லால் நடித்து சத்யன் அந்திக்காட்டின் இயக்கத்தில் வெளிவந்த அருமையான மலையாளத் திரைப்படம் தாடித் தாத்தாவின் கதை போன்றது !


அடிப்படை வசதிகளேதுமில்லாத அக்காலகட்டத்தில் வசதி படைத்தோரைத் தவிர இதர ஆண்களும் பெண்களும் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு ஊரிலுள்ள தென்னந் தோப்புகளை நாடுவது வழக்கம். சுகாதாரப் பணியாளர்களாக பன்றிகள் இலவச சேவையாற்றி வந்தன !


ஒருநாள் இரவு நேரம் தலையில் துண்டுடன் ஒரு ஓரத்தில் ஒதுங்கிய தாடித் தாத்தாவிடம், தனக்குத் துணையாகக் கிடைத்த பெண்ணென நினைத்து சற்று தூரத்தில் உட்கார்ந்திருந்த பெண்மணி "இன்னிக்கு அமாவாசையா அக்கா ?" எனக் கேட்டார். தாடி தாத்தாவிடமிருந்து பதிலேதும் வராத நிலையில் கேள்வியை "என்னிக்கு அக்கா அமாவாசை ?" எனச் சற்று மாற்றிக் கேட்டார் !


கேள்வியை விடாது மூன்று முறை தொடர்ந்த பெண்மணியிடம் மௌனத்தை மெல்லக் கலைத்தார் தாத்தா. "ஆணும் பெண்ணும் ஒண்ணா வெளிக்குப் போற நாள் தான் அமாவாசை." என அன்றைய நாள் அமாவாசை என்பதை சூசகமாக உணர்த்திய பின் மெல்ல இடத்தைக் காலி செய்தார் தாத்தா. பின் பக்கத்திலிருந்து கேட்ட 'பதினாறு வயதினிலே குருவம்மா பாணி' அர்ச்சனைக்கு செவி சாய்க்காது தனது தனி வழியில் கம்பீரமாக பயணத்தைத் தொடர்ந்தார் தாடி நீலகண்டன் தாத்தா !


---------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

தி.சேதுமாதவன்

[sethumathavan2021@gmail.com]

கூடுதல் ஆட்சியர்,

I.T.I. முகநூற் குழு,

{13-03-2021}

-----------------------------------------------------------