பிறருடன் கலந்தாலோசிக்காமல் தனது மனதிற்கு சரியென்று தோன்றுபவற்றை விமர்சனம் குறித்த கவலையின்றி செயலாக்கம் செய்பவர்களைத் 'தான்தோன்றி' (சுயம்பு) என்றழைப்பதுண்டு. பெரும்பான்மைக் கருத்துக்களுடன் உடன்படாது எதிர்மறைக் கோணத்திலும் சிந்தித்து அலசி விவாதம் செய்கின்ற மாறுபட்ட சிந்தனையாளர்களை 'அகராதி' எனவும் ஊரார் அழைப்பதுண்டு !
மேற்கண்ட குணாதிசயம் கொண்ட ஒருவர் தான் நமது நாயகன் தாடி நீலகண்டன் தாத்தா. அகவை அறுபதைக் கடந்த தாத்தாவின் பாதங்கள் மனைவியின் மறைவுக்குப் பின் வாழ்வியல் கடமைகளை முடித்த பின்னர் ஆன்மீக நாட்டம் காரணமாக புனிதத் தலங்களை நோக்கிப் பயணித்தது !
இடுப்பில் காவி வேட்டி அதன் மேல் ஒரு
வெள்ளை ஜிப்பா, தோளில் ஓரிரு மாற்றுடைகளுடன் கூடிய நீண்ட பையுடன் தேசாடானம் செல்லும் தாத்தா
ஆண்டுக்கொரு முறை தனது சொந்த ஊரான பறக்கைக்கு திரும்புவார். ஒரு மாத காலம் தங்கி
ஊர் அலுத்த பிறகு ஆன்மீக பயணத்தை மீண்டும் துவங்கிவிடும் அவர் ஓடுகின்ற ஆறு போல
ஓரிடத்தில் நிலைத்திருப்பதில்லை !
கூர்மையான புத்தியும் இசை குறித்த
கேள்வி ஞானமும் கொண்ட அவர் வேங்குழல் நாதத்தின் பால் கொண்ட அதீத ஆர்வத்தின்
அடையாளமாக புல்லாங்குழல் ஒன்றைத் தன் பையில் எப்போதும் வைத்திருந்து பாலைவனத்தில் அணுகுண்டு
சோதனை செய்வது போன்று,
ஆள் நடமாட்டமில்லாப் பகுதியில் மனித இனத்துக்கு ஆபத்தில்லாமல் ஆலமரத்தடியில்
அமர்ந்து சாதகம் செய்வார் !
கோகுலத்தில் பசுக்களெல்லாம் கார்முகில் வர்ணனின் வேணு கானத்தைக் கேட்டு தன்னை மறந்து பால் சுரந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.ஆனால் தாத்தாவின் குழலோசை கேட்கும் திசையில் எந்த கால்நடைகளும் தலை வைத்து படுப்பதில்லை !
வாடகைக்குக் கொடுத்திருந்த தனது சிறிய வீட்டை கடிதங்கள் பல அனுப்பிய பின்னரும் வாடகை தராது இலவசமாக குடியிருந்து காலி செய்யாமல் அடம்பிடித்த குடித்தனக்காரரை தனது வேணு கானத்தால் காலி செய்ய வைத்தவர் தாடித்தாத்தா !
குடித்தனக்காரரிடம் தனக்கு
தங்குவதற்கு அவ்வீட்டின் ஒரு சிறிய அறையை நயமாகப் பெற்றுக் கொண்ட தாத்தா தனது சிறு
அறையில் விறகடுப்பில் சமையலைத் துவங்கி குடித்தனக் காரரை குடும்பத்துடன் இரும
வைத்ததுடன், இரவு உணவை முடித்த பின் ஊராரை உணர்த்தும் வகையில் குறட்டை விட்டு
தூங்கினார் !
தொடர் யோகாசானப் பயிற்சிகளின் பலனாக
திடமான தேகத்தைப் பெற்றிருந்தாலும் , அறிவு பூர்வமாக பிரச்சினைகளை அணுகுவதில்
ஆர்வம் கொண்டவர் தாத்தா !
ஊர் உறங்கும் நேரத்தில் தனது
பையிலிருந்து புல்லாங்குழலை வெளியிலெடுத்து தனக்கு வசமில்லாத ஒரு இராகத்தில்
சாதகம் செய்யத் துவங்கினார். மதங்கொண்ட யானை பிளிர்வதைப் போன்ற தாத்தாவின் நாராச
இசையைக் கேட்டு விழித்தெழுந்த குடித்தனக்காரர் "இந்த இரவு நேரத்திலா சாதகம்
செய்ய வேண்டும் ?
காலையில் செய்தால் ஆகாதா ? "எனக்
கோபத்துடன் கேட்ட போது , அமைதியான இரவு நேரமே தனக்கு சாதகம்
செய்ய உகந்ததென மென்மையாகக் கூறி 'மௌலியாக' இராக ஆலாபனையைத் தொடர்ந்தார் !
நடுநிசியில் கோரமாக புல்லாங்குழல் இசைப்பதற்கு
குடித்தனக்காரர் கண்டிப்புடன் விதித்த தடையை அனுசரணையுடன் ஏற்றுக் கொண்ட
தாடித்தாத்தா, அரைமணி நேரம் கடந்த பின்னர் விட்ட இடத்திலிருந்து தூக்கத்தைத் தொடர்ந்த
குடித்தனக்காரரை கோரைப்பாய் மேலமர்ந்து தகர டப்பாவைச் சுரண்டியது போன்ற தனது இனிய
தேவகானத்தால் எழுப்பி விட்டார் !
தாத்தாவிடம் மீண்டும் ஓடி வந்த
குடித்தனக்காரரின் "வாயைத் திறந்து பாடக் கூடாதென்ற" கட்டளையை சிரமேற்கொண்ட
தாத்தா, வாய்ப்பாட்டை
விடுத்து விக்கிரமாதித்தனும் வேதாளமும் போல மீண்டும் முரளி கானம் இசைக்கும்
பொருட்டு தனது புல்லாங்குழலை புன்னகையுடன் மெதுவாகக் கையிலெடுத்தார் !
ஊர் உறங்கும் வேளையில் தாத்தாவின் இசையெனும் கரைபுரண்ட காட்டாற்று வெள்ளத்தில் தூக்கத்தை இழந்த குடித்தனக்காரரும் குடும்பமும் கையறு நிலையில் மறு நாளே வேறு வீட்டிற்கு குடி பெயர்ந்தது. கத்தியின்றி இரத்தமின்றி தனது இசை ஆக்ரமிப்பால் அகிம்சா முறையில் குடித்தனக்காரரை வீட்டை விட்டுத் துரத்திய தாடித்தாத்தாவுக்கு விருதுகளேதும் வழங்கப் பட்டதாக நினைவில்லை !
"சன்மனசுள்ளவர்க்கு (நல் மனதுள்ளவர்க்கு ) சமாதானம்" என்ற மோகன்லால் நடித்து சத்யன் அந்திக்காட்டின் இயக்கத்தில் வெளிவந்த அருமையான மலையாளத் திரைப்படம் தாடித் தாத்தாவின் கதை போன்றது !
அடிப்படை வசதிகளேதுமில்லாத
அக்காலகட்டத்தில் வசதி படைத்தோரைத் தவிர இதர ஆண்களும் பெண்களும் இயற்கை உபாதைகளைக்
கழிப்பதற்கு ஊரிலுள்ள தென்னந் தோப்புகளை நாடுவது வழக்கம். சுகாதாரப் பணியாளர்களாக
பன்றிகள் இலவச சேவையாற்றி வந்தன !
ஒருநாள் இரவு நேரம் தலையில் துண்டுடன்
ஒரு ஓரத்தில் ஒதுங்கிய தாடித் தாத்தாவிடம், தனக்குத் துணையாகக் கிடைத்த பெண்ணென நினைத்து
சற்று தூரத்தில் உட்கார்ந்திருந்த பெண்மணி "இன்னிக்கு அமாவாசையா அக்கா
?" எனக் கேட்டார். தாடி தாத்தாவிடமிருந்து பதிலேதும் வராத
நிலையில் கேள்வியை "என்னிக்கு அக்கா அமாவாசை ?" எனச்
சற்று மாற்றிக் கேட்டார் !
கேள்வியை விடாது மூன்று முறை தொடர்ந்த
பெண்மணியிடம் மௌனத்தை மெல்லக் கலைத்தார் தாத்தா. "ஆணும் பெண்ணும் ஒண்ணா
வெளிக்குப் போற நாள் தான் அமாவாசை." என அன்றைய நாள் அமாவாசை என்பதை சூசகமாக
உணர்த்திய பின் மெல்ல இடத்தைக் காலி செய்தார் தாத்தா. பின் பக்கத்திலிருந்து கேட்ட
'பதினாறு வயதினிலே
குருவம்மா பாணி' அர்ச்சனைக்கு செவி சாய்க்காது தனது தனி
வழியில் கம்பீரமாக பயணத்தைத் தொடர்ந்தார் தாடி நீலகண்டன் தாத்தா !
---------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
தி.சேதுமாதவன்
[sethumathavan2021@gmail.com]
கூடுதல் ஆட்சியர்,
I.T.I. முகநூற் குழு,
{13-03-2021}
-----------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக