மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

அந்நாளை நினைக்கையிலே (21) எனது அம்மாவின் தாயான பாச்சம்மா பாட்டி !


ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது கணிதப் பாடத்தில் தருமியைப் போலெழும் சந்தேகங்களை எனது அம்மாவின் தாயான பாச்சம்மா பாட்டி கணிப்புக் கருவியின் துணையின்றி சமையலறையில் அம்மியில் தீயலுக்கு அரைத்த படியே இம்மி பிசகாமல் விடையளிப்பது கண்டு அதிசயித்திருக்கிறேன் !

 

முக்காணி, மாகாணி, அரைக்காணி, முக்காலே அரைக்கால் என்று ஏதேதோ முணுமுணுத்து கணிதப் புத்தகத்தை திரும்பிப் பார்க்காமலே மனக்கணக்கால் மிகச்சரியான விடையைச் சொல்வது ஆச்சரியம். அடிப்படை ஆங்கில அறிவும் பெற்றிருந்த பாட்டி ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் !

 

மிதிவண்டி உருளையைத் தட்டியபடி நானும் தம்பியும் குதிகால் பின்புறம் தட்ட ‌ஓடிச்சென்று வாங்கி வரும் பொருட்களில் வழியில் தொலைத்தது போக எஞ்சியதைப் பத்திரமாக ஒப்படைத்ததற்கு பாட்டியின் பிரதிபலனான பத்து காசுகள் கல்கோனா மிட்டாயாக மாற்றப்பட்டு வாயில் ஒதுங்கி விடும் !

 

நாங்கள் ஒப்படைக்கும் பலசரக்குக் கணக்கை வேகமாக கூட்டிச் சொல்லும் பாட்டியின் அதீத திறனுக்கு சிறந்த ஞாபக சக்தியும், வாய்ப்பாடுகளுடனான பரிச்சயமுமே காரணம் !

 

மிதிவண்டி மீன் வியாபாரிகளைப் போலன்றி பள்ளம், மணக்குடி கடற்கரைப் பகுதிகளிலிருந்து அலுமினிய பாத்திரத்தில் தலைச் சுமட்டுடன் வருகின்ற பெண் மீன் வியாபாரிகளிடம் பேரம் பேசும் வசதி காரணமாக ஊரில் ஏராளமான வாடிக்கையாளர்கள் உண்டு.


கட்டச்சி, நெட்டச்சி என்பவர்களுக்கு அவர்களின் உருவத்தை வைத்து பெயரிட்ட ஊர்ப் பெண்கள் , குணாதிசயத்தை வைத்து ஒருவருக்கு சூட்டிய பெயர் பத்ரகாளி. அடிமாட்டு விலைக்கு பேரம் பேசும் பெண்களிடம் பத்ரகாளி அவதாரமெடுப்பதால் கிடைத்த பட்டம் அது !

 

"இப்ப தான் சப்பான்ல இருந்து ஆள் வந்திருக்கு மீன் வாங்க. மூஞ்சியும் மொகரக்கட்டையும் பாரு " என இராகத்துடன் நீட்டி முழக்குகின்ற தொடர் அர்ச்சனைக்குப் பயந்த ஊர்ப் பெண்களில் சிலர் "வில குறச்சுக் கேட்டா திட்டப்பிடாது" என்ற பீடிகையுடன் பேரத்தைத் துவங்கினால் மட்டுமே பத்ரகாளியின் திரிசூலத் தாக்குதலிலிருந்தும் கோரத் தாண்டவத்திலிருந்தும் தப்பிக்கவியலும் !

 

எளிதில் உணர்ச்சி வசப்படுகின்ற பத்ரகாளி நேர்மையும் இரக்கமும் உள்ளவரென்பது, பேரம் பேசாதோருக்கு கூடையிலிருந்து தானாகவே கைநிறைய அள்ளிக் கொடுப்பதன் வாயிலாக அறிந்து கொள்ளவியலும்.


குறைந்த விலைக்கு பேரம் கேட்போரிடம் "புழுத்த மீனோட பின்னால வாறா கட்டச்சி. அவகிட்ட கைநிறைய வாங்கி வீடு நாறக் கறி வை " என்று தினமும் தாமதமாக வியாபாரத்திற்கு வருகின்ற தனது தம்பி மனைவி கட்டச்சியை கிண்டல் செய்வாள் நெட்டச்சி !

 

குழல் காரி என்ற அன்னமேரியின் அணுகுமுறை சற்று வித்தியாசமானது. வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீன்களின் செதில்களையும் தேவையற்ற உட்பாகங்களையும் தனது அரிவாள் மணையால் வெட்டி நீக்கி சுத்தம் செய்யும் போது பக்கத்தில் ஜொள் விட்டவாறு நெருங்கி வரும் நாய்களை கையில் இருக்கும் குழலால் பட்டென ஓங்கியடித்த பின்னர் "நீங்கி நில்லு நாயே. அறிவில்ல உனக்கு" என்ற வசனம் மீன்களின் செவிழ் பிளந்து சோதனை செய்வோர் மற்றும் மீனைக் கையால் அழுத்தி தரப் பரிசோதனை செய்வோருக்கானதே எனத் தரைவிலைப் பேரக் காரிகள் நன்கறிவர் !

 

"என்ன வேணும் ?" எனத் தனது பணியைத் தொடர்ந்தவாறே சற்று நிமிர்ந்த படிக் கேட்கின்ற குழல்காரியிடம் ஆரம்பத்தில் கேட்ட தொகையிலிருந்து இரண்டு ரூபாய் அதிகரித்து இருபது ரூபாய் பெறுமானமுள்ள பெரிய விளமீனை எட்டு ரூபாய்க்கு பேரம் பேசுவார்கள்.

"

இருபது ரூபாயும் தந்து ஒரு பாட்டும் பாடணும்" என்று சொல்லும் குழல் காரி "அஞ்சு உலுவையை (ரூபாயை)த் தூக்கிக்கிட்டு மீன் வாங்கப் புறப்பட்டுட்டா" என வாடிக்கையாளர் இடத்தை விட்டகன்ற பின் கிண்டல் செய்வார் !

 

தொழில் நுட்பம் வளராத அக்கால கட்டத்தில் அதிகாலையில் அரை வயிற்றுக் கஞ்சியுடன் வியாபாரத்திற்குப் புறப்படுகின்ற இவர்கள் வெயிலின் தீவிரத்தில் கெட்டு விடுகின்ற விற்காத மீன்களுடன் ஆதவன் மறையும் முன் ஊர் திரும்புவதை விரும்பாமையால், சற்றும் எதிர்பாராத வகையில் திட்டிய வாடிக்கையாளருக்கே குறைந்த விலைக்கு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுப்பதன் காரணத்தால், சில தந்திரசாலி வாடிக்கையாளர்கள் இத்தகைய சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருப்பதுண்டு !

 

புஷ்பம் என்னும் வியாபாரி தரை விலை பேரம் பேசுவோரிடம் கோபத்தை வெளிக்காட்டாமல் மீனை உள்ளங்கையில் வைத்து இதமாகத் தடவி மீனின் சிவந்த செவிளைப் பிளந்து காண்பித்து பொறுமையாக பதில் சொல்பவர். "இந்த செல்லக்குட்டிய வாங்க சீமையிலிருந்து சூட் போட்ட ஆளு வரும். பத்ரகாளி கிட்ட எட்டணாவுக்கு நெத்திலி வாங்கிட்டு போய்ச் சேருங்க. கழுத விட்ட கைநிறைய" எனக் கிண்டல் செய்வார் !

 

'உனக்கில்ல இது. உன் மகளுக்கு" எனப் பாலூட்டும் பிள்ளைத் தாச்சிகளுக்கு தரம் வாய்ந்த நற்சாளை, காரல், திரைச்சி (திருக்கை) மீன்களைக் கொண்டு வந்து கருணை உள்ளத்தோடு கறுத்த கறி வைப்பதற்காக விலை குறைத்து வழங்கும் பெண்மணிகளுமுண்டு. பசித்து வருகின்ற மீன் வியாபாரிகளுக்கு உணவளிக்கும் பாட்டியை கண்டு நான் அதிசயித்ததுண்டு !

 

விளமீன் ஒன்றை பேரம் பேசி முடித்து "கட்டுப்படியாகுமிண்ணா தா" என்று தனது நிதியிருப்பைக் கருத்திற் கொண்டு பாட்டி கூற "முதலாவாது (அசல் விலை கூட வரவில்லை) அம்மா" என்று மறுத்ததைக் கண்டிருக்கிறேன் !

 

பாரத்தைக் கீழே இறக்கி வைத்து தலைக்கு வைத்திருந்த செம்மாட்டை (சுமைதாங்கித் துணி) தலையணையாக்கி சற்றே ஓய்வெடுத்த பின்னர் ".ஏதாவது இருந்தா கொடுங்கம்மா. பசிக்குது" என்று கூறும் பெண்மணிக்கு அருகிலமர்ந்து வாஞ்சையோடு உணவளிக்கும் பாட்டி , தாமதமாக வருகின்ற பசிக்கும் பெண்களுக்கு உதவவியலாத தருணங்களில் மனம் வருந்துவதும் சிறுவனான எனக்கு அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது !

 

"அவளுக்கு கட்டுப்படியாகும்னா தருவா. விக்கத்தானே இவ்வளவு தூரம் சுமந்து வந்திருக்கா பாவம்". என்று கூறிய பாட்டியிடம் ' நாம் கோரிய விலைக்கு மீன் வழங்காதவர்க்கு உணவளிப்பது ஏன் ? ' என்ற சிறுபிள்ளைத் தனமான எனது கேள்விக்கு அளித்த பதில் பாட்டி மீதான மதிப்பை மேலும் உயர்த்தியது !

 

உணவு உடலுக்கு வழங்கப் படுவதேயானாலும், அது உள்ளிருக்கும் ஆத்மாவுக்குமானது. இறைவனின் அம்சமான ஆத்மா பசித்திருக்கலாது. இரு தலைமுறைகளுக்கு முன்பிருந்தது போன்று பசித்திருப்போருக்கு உணவளிக்கும் வல்லமை நம் குடும்பத்திற்கு இல்லையெனினும் , ஒரு வயிற்றுக்கேனும் தினம் உணவளிக்க ஆசையுள்ளதாகவும் கூறினார் நன்கு வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் அங்கமான பாச்சம்மா பாட்டி.


நோய் நொடிகள் ஏதுமில்லாத பாட்டி தனது தொண்ணூற்று மூன்றாம் வயதில் ஒரு வார காலம் மட்டுமே படுக்கையில் படுத்து இறைவனடி சேர்ந்தார் !

 

இன்னல்களைக் கலங்காது கடந்து செல்லும் திறன், விரைந்து முடிவெடுக்கும் ஆளுமை, தன்னம்பிககை, உழைப்பு, வெளிப்படைத் தன்மை, நேர்மை, கருணை, நுண்ணறிவு போன்ற அருங்குணங்களை ஒருங்கே பெற்றிருந்த பாட்டி எனது வாழ்வில் என்றும் மறக்க முடியாதவர்.

 

---------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

தி.சேதுமாதவன்

[sethumathavan2021@gmail.com]

கூடுதல் ஆட்சியர்

I.T.I. முகநூற் குழுமம்

{13-02-2021}

----------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக