மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

சனி, 13 பிப்ரவரி, 2021

அந்நாளை நினைக்கையிலே (17) வெள்ளை ஜிப்பாக்கார மத்தியாஸ் தாத்தா !


1970 கால கட்டங்களில் ஊரிலுள்ள எவரேனும் உடல் நலம் பாதிக்கப்பட்டால் பறக்கை சந்திப்பிலுள்ள எழுபதைக் கடந்த பெருந்தலைவரைப் போன்ற கம்பீரத்தோற்றமுடைய வெள்ளை ஜிப்பாக்கார மத்தியாஸ் தாத்தாவிடம் செல்வது வழக்கம்.


ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சையளித்து வந்த மருந்தாளுனராகிய தாத்தா நாடி பார்த்துக் கணிப்பதில் வல்லவர். நாடி பிடித்து நோய் கண்டறிதலில் சிறந்தவரான மற்றொருவர் கட்டைப் பிரம்மச்சாரியான பேதுரு தாத்தா.இவர் ஆயுர்வேத வைத்தியர் மட்டுமன்றி ஆஞ்சனேய சித்தி கொண்டவரும் கூட !

 

ஊரில் சிறுமிகள் எவரேனும் செவ்வாய்- வெள்ளிக் கிழமைகளில் கண்களை உருட்டிக் கண்டபடி பிதற்றிய மறு நிமிடம் பேதுரு தாத்தா மிதிவண்டியில் அழைத்து வரப்பட்டு வெற்றிலையில் மை தடவ, சுற்றியிருக்கும் சிறு குழந்தைகளின் வாயிலாக வெற்றிலைத் திரையில் காண்கின்ற காட்சியை விவரித்து விடுவார் !

 

கோலுக்குட்டி எனச் செல்லமாக அழைக்கப் படுகின்ற குமார பிள்ளை மாமா மேலாங்கோட்டு அம்மன் கோவிலில் சாமி ஆடுவார். பேதுரு தாத்தாவின் மறைவுக்குப் பின்னர் சிறுவர் சிறுமிகளுக்கு ஏற்படும் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பவர் அவரே.


மறைந்த கன்னிகைகளுக்கு சிறுகோவில் கட்டி வழிபடும் வீடுகளின் முன்பு செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் தலை நிறைய மல்லிகைப்பூவுடன் செல்லக் கூடாதென அறிவுறுத்துவார். !

 

நமது சிற்றறிவுக்கு அப்பாற்பட்ட பல விஷயங்களைச் மிகச்சரியாக கணித்துச் சொல்கின்ற மாமா தனது சேவைக்கு பேதுரு தாத்தாவைப் போன்றே தட்சிணை தவிர வேறெதுவும் பெற்றுக் கொள்வதில்லை.


மருந்துகள் நிறைத்த பல வண்ணக் குப்பிகளிலிருந்து அடிவயிற்றைக் குமட்டும் ஒரு மருந்தை சிறு குப்பியில் பகர்ந்து நோயாளிகளுக்கு கொடுக்கும் மத்தியாஸ் தாத்தா மிக அபூர்வமாக தனது ஆணி போன்ற ஊசியைப் போட்டு பின் பக்கத்தை பதம் பார்த்து விடுவார். அழுகின்ற குழந்தைகளின் வாயடைக்க அக்காலத்தில் தாத்தாவின் பெயர் பயன்பட்டது !

 

குழந்தையை மடியில் படுக்க வைத்து கால் கைகளை இருவர் பிடித்துக் கொள்ள , முனை மழுங்கிய சிறு சங்கில் ஊற்றப்பட்ட தாத்தாவின் குமட்டு மருந்தை குழந்தை உமிழ்ந்து விடாமலிருக்க நாக்கை அமுக்கி மூக்கைப் பிடித்து தீவிரவாதிகளை விடக் கொடுமையாக ஊட்டி விட்டதனால் பாதிக்கப் பட்டவர்களில் அடியேனும் ஒருவன்.


வன்கொடுமை மூலம் புகட்டப் படும் காய்ச்சல் மருந்தை ஊட்டியவரின் முகத்திலேயே உமிழ்ந்து விடும் என் தம்பியை மீண்டும் மடியில் படுக்க வைத்து கொடுமைப்படுத்தும் பாட்டியை கோபத்தில் நான் கிள்ளி விட்டதுண்டு !

 

சுசீந்திரத்திலுள்ள பாரம்பரியமிக்க வட்டப் பள்ளி மடத்திற்கு ஆயுர்வேத சிகிச்சையின் பொருட்டு எங்கள் ஊரிலிருந்து செல்லும் தாத்தா பாட்டிகள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாதென்ற வைத்தியரின் கடும் நிபந்தனையை தெப்பக்குளத்தில் இருமுறை குளிப்பதன் வாயிலாக அனுசரிப்பர் !

 

புளித்த உணவு, மீன் தவிர்க்க வேண்டுமென்ற நிபந்தனை பழைய கஞ்சி ,புளித்த பசுமோர், வறுத்தரைத்த மீன்கறியுடன் உண்பதன் வாயிலாக தவறாமல் மீறப்படும். பத்தியங்களை புறந்தள்ளிய பின்னரும் பிணி நீங்கா மூட்டு வலித் தாத்தாக்கள் வலி குறையவில்லையென திண்ணையிலமர்ந்து அங்கலாய்த்து முட்டுகளைத் தடவிய படியே இருப்பினும் வைத்தியர் கூறுகின்ற தியாகங்களுக்கு ஒரு போதும் தயாராவதில்லை !

 

மூட்டு வலிக்கு தடவி ஆவி பிடிக்க கொட்டஞ் சுக்காதித் தைலமும் விழுப்புண்களுக்குத் தடவ நாகர்கோவில் கோபாலன் ஆசான் கடையில் வாங்கப்பட்ட காயத்திருமேனித்தைலமும் அனைத்து இல்லங்களிலும் தவறாமல் இருப்பு வைத்திருக்கப்படும். ஒரு விரலை மட்டும் குப்பியினுள் செலுத்தி லேசாக எடுத்த எண்ணயை காலுக்குத் தேய்த்து மருந்தின் அளவு குறையாமல் பராமரிப்பார்கள் !

 

சிறு குழந்தைகளுக்கு உடலில் அக்கி ( புண்கள்) ஏற்பட்டால் இடலாக்குடி பட்டினம் வைத்தியரிடம் அழைத்துச் செல்வர். அவர் வழங்கும் கசாயமும் கோழி இறகால் தடவப்படும் சிரங்குத் தைலமும் எப்படிப்பட்ட சிரங்குகளையும் குணப்படுத்திவிட வல்லது !

 

கை கால் முறிவுக்கு இருக்கவே இருக்கிறார் மாஞ்சாங்குடி வைத்தியர். எலும்பு முறிவுகளையும் தசைச் சிதைவுகளையும் கையால் தடவியறிந்து அதன் தீவிரத்திற்கேற்றபடி முறிந்த கால், கை எலும்புகளை பனை மட்டையால் கட்டி மருந்தெண்ணெய் கலந்த துணியால் கட்டுப் போட்டு எளிதில் குணப்படுத்தி விடுவதால் வெளி மாவட்ட - மாநில நோயாளிகள் அதிகம் !

 

சிறு முறிவுகளுடன் வருபவர்களின் கையில் எண்ணெய் தடவி எம்.ஜி.ஆர் பட வில்லனைப் போன்று சட்டெனக் கையை முறுக்கி பாதிக்கப்பட்டவர் எதிர்பாரா தருணத்தில் அலற வைத்து சட்டென சுளுக்கெடுத்த பின் ஐந்து நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தி அனுப்பி விடுவர் !

 

பெரும்பாலான நோய்களுக்கு அக்காலத்தில் பாட்டி வைத்தியம் கைகொடுத்தது. சிறிய வயிற்றுப்போக்குக்கு பசு மோரில் பெருங்காயத்தைக் கலக்கி உப்பு சேர்த்துக் குடிக்க செய்வதுண்டு.கடுமையான வயிற்றுப்போக்குக்கு மாங்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பைப் பொடி செய்து கட்டித் தயிரில் கலக்கி குடிக்கச் செய்வார்கள் !

 

இதே மாங்கொட்டைப் பொடி தொண்ணூறுகளில் டயோகேப் என்ற பெயரில் விற்பனைக்கு வந்ததுடன் நல்ல பலனையும் அளித்தது. பக்க விளைவுகளற்ற விலை குறைந்த அம்மருந்து ஓரிரண்டு ஆண்டுகளிலேயே சந்தைக்கு வருவது நின்று விட்டது !

 

-------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை


 தி.சேதுமாதவன்

[sethumathavan2021@gmail.com]

கூடுதல் ஆட்சியர்

முகநூற் குழுமம்

{20-01-2021}

-------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக