1980 களில் மாலை நேரம் நான்கு மணியாகி விட்டாலே எங்கள் ஊர் சிறு குழந்தைகள் வீடுகளின் முன்னால் தங்கள் அன்பு மாமாவின் வருகைக்காக வழி மேல் விழி வைத்துக் காத்து நிற்பதைக் காணலாம் !
"ஆமை
வடை, உளுந்த வடை, சுசியன், உண்ணியப்பம்" என உற்சாகமாக இராகத்துடன் பாடி வருகின்ற கோலண்ணன் என்ற
கோலப்ப பிள்ளை தனது வரவைக் காத்து பிஞ்சுக் கைகளை நீட்டியபடி பூக்களைப் போன்று
புன்னகை பூத்து நிற்கின்ற குழந்தைகளுக்கு தனது ஓலைப் பெட்டியிலிருந்து தின்பண்டங்களைக்
கொடுக்கும் வேளை தானும் ஒரு குழந்தையாகவே மாறிவிடுவது வழக்கம் !
அகவை ஐம்பதைக் கடந்த சிவப்பு
நிறமும் ஆறடி உயரமும் கொண்ட கட்டைப் பிரம்மச்சாரியான கோலண்ணன் கேரளாவில்
பணியாற்றிய எங்கள் ஊர் மருத்துவரது வீட்டின் சமையலறையிலேயே தனது வாழ்வின் பெரும்
பாகத்தை கழித்துவிட்டவர். தனக்கென ஏதும் சேமித்து வைக்காத கோலண்ணன் பிறர் படும்
துயரை நினைந்துருகி தனது தகுதிக்கு மிஞ்சி ஈகை செய்ய விழையும் மனதினர் !
எங்கள் வீட்டினருகில் அண்டாளி
மதுசூதனன் அண்ணன்("இறைவனின் நாமத்தில்" என்ற பதிவில் இவரைப் பற்றி
குறிப்பிட்டுள்ளேன்) முன்பு குடியிருந்த சிறு வீட்டில் குடிபுகுந்தார். கையிருப்பு
பத்து பைசாவேவாயினும் தன்னைவிட வறியவர்க்குக் கொடுத்து சேமிப்பேதுமின்றியே மட்டற்ற
மகிழ்ச்சியுடனிருக்கும் அவர் எனக்கு எட்டாவது அதிசயம் !
கல்லூரியில் படித்துக்
கொண்டிருந்த நான் ஓய்வு நேரத்தை நெருங்கிய நண்பரான அண்ணனுடன் செலவிடுவது வழக்கம்.
ஒரு பாய், தலையணை,
சில உடுக்கைகள். பனை விசிறி, சிறு அடுப்பு,
சில பாத்திரங்கள் மட்டுமே அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள்.
பண்டிகை நாட்களில் தனது
அண்ணன் குழந்தைகள் அன்புடன் அளிக்கின்ற புத்தம் புது உடைகளுடன் பணத்தையும்
வறியவர்க்கு கொடுத்து பழைய உடுக்கையுடனும் வெறுங்கையுடனும் நிற்கும் சித்தரான
சித்தப்பாவிடம் அவர்கள் குறைப்பட்டுக் கொண்டாலும் ,இயல்பை மாற்ற அவர்
முயற்சித்ததில்லை !
கேரளாவிலிருந்து வந்த
பின்னர் பிழைப்புக்கு என்ன செய்வதென ஆலோசித்த போது அவருக்கு கைவந்த தொழிலான
சமையலையே எனது சிறு முதலீட்டுடன் தொடங்கினார். உண்ணியப்பம்,கேக்,
சுசியன், வடை வகைகள் செய்ய தேங்காய் எண்ணெய்
அல்லது கடலை எண்ணெயை பயன்படுத்தும் அவர் தனது மழலை வாடிக்கையாளர்களின்
தின்பண்டங்களின் தரத்தில் சிறு சமரசமும் செய்து கொள்வதில்லை !
மாலை நான்கு மணியளவில்
தின்பண்டங்களுடன் உரக்கச் சப்தமிட்டபடியே வியாபாரம் (?) செய்கின்ற
கோலண்ணனின் கலகலப்பான பேச்சினால் விரைவாக விற்று முடிக்கின்ற பலகாரங்களில் ஐம்பது
விழுக்காடும் கடனுக்கானவையே !
வீட்டு முற்றத்தில்
தனது வரவைக் காத்து நிற்கும் குழந்தைகளுக்கு அவர்தம் விருப்பத்திற்கேற்ப வழங்கும்
பலகாரங்களுக்கான கட்டணத்தை வற்புறுத்தினாலும் கோலண்ணன் பெற்றுக் கொள்வதில்லை !
வியாபாரம் முடித்து வீட்டிற்கு திரும்பியவுடன் என்னை அழைத்து ' மக்கா எவ்வளவு இருக்குன்னு பாரு' என்று என்னிடம் சுருக்குப்பையைத் தருவார். "வரவு எட்டணா. செலவு பத்தணா" என்ற மாநில அரசின் நிதி நிலை போன்றிருக்கும் அன்றைய வருமானத்திலிருந்து எனது கடனை ஞாபகமாக திருப்பித் தருவதும் , இரு தினங்கள் கழித்து மீண்டும் பெற்றுக் கொள்வதும் வாடிக்கையான வேடிக்கைகள் !
பகவதியப்பண்ணன் கடையில்
கொள்முதல் செய்த பொருட்களுக்கான ஐம்பது விழுக்காட்டுத் தொகையை மட்டுமே வியாபாரத்தை
பொழுதுபோக்காகக் கொண்ட அண்ணனால் திருப்பிச் செலுத்த இயலுமெனினும் , கடனுக்கு
விடாது பொருட்களை வழங்க பகவதியப்பண்ணனும் சற்றும் சளைப்பதில்லை. "மீதி காசு
என்ன ஆச்சு ஓய் ?" என சிரித்துக்கொண்டே கேட்கின்ற
பகவதியப்பண்ணனின் வழக்கமான கேள்விக்கு "தாரேன் ஓய்" என்ற பொறுப்பான
பதில் கோலண்ணனிடமிருந்து வரும் !
மதுசூதனப் பெருமாள்
முன் சில நொடிகள் மட்டுமே பிரார்த்திக்கும் அண்ணனிடம், சாவதானமாக
பிரார்த்திக்காததன் காரணத்தை வினவிய போது, குடும்பஸ்தர்களின்
பிரச்சினைகளை கேட்டுச் சலித்திருக்கும் பெருமாளிடம் , துன்புறுத்தாமல்
தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஒற்றைக் கோரிக்கையே இருப்பதாக கலங்கிய கண்களுடன்
கூறுவதைக் கண்டிருக்கிறேன் !
1987 ல் அரசுப்பணியில்
அரியலூரில் சேர்ந்த பின்னர் ஆண்டுக்கொரு முறையே வருகின்ற எனக்கு கோலண்ணனைக் காணும்
வாய்ப்பு அரிதானது. அடுத்த சில ஆண்டுகளில் வியாபாரத்தை தொடரவியலாத நிலையில்
கைவிட்ட அண்ணன், ஆறு மாதங்களுக்கு ஒரு உணவு விடுதியென்ற
முறையில் பணியாற்றி வந்ததாக அறிந்தேன்..
2002 ல்
இயக்குனரகத்திலிருந்து நாகர்கோவிலுக்கு பணிமாற்றத்தில் வந்த பின்னர் பறக்கைச்
சந்திப்பிலுள்ள உணவு விடுதியொன்றில் பணியாற்றிய அவரை அடிக்கடிக் காணும் பேறு _ஏற்பட்டது !
எனது பணப்பையை_ அவரிடம் காட்டி எடுத்துக் கொள்ளக் கூறும் போதும் ஐம்பது ரூபாய்க்கு மேல் அவர் ஒரு போதும் எடுத்ததில்லை. சில சமயங்களில் தன்னிடம் பணம் இருப்பிலுள்ளதாக அவர் கூறினாலும் உண்மைத் தன்மையறியாமல் அவ்விடத்தை விட்டு அகலாமைக்கு வெள்ளை உள்ளம் கொண்ட உயர்ந்த மனிதர் மீது நான் கொண்ட எல்லையற்ற அன்பே காரணம் !
வெளியூர் செல்லும்
பொருட்டு பேருந்திற்குக் காத்திருந்த ஒரு இரவு நேரத்தில் வீங்கிய முகத்துடன் நின்ற
அண்ணனைக் கண்டேன். இரு தினங்களுக்கு முன்பு தன்னை நாய் கடித்து விட்டதாகக் குழந்தையைப்
போன்று கூறிய அவர் முறையான சிகிச்சை மேற் கொள்ளாத காரணத்தால், நான்
வெளியூர் சென்று திரும்புவதற்குள் அதிக இன்னல்களுக்கு ஆட்படாமலேயே இறைவனது திருப்பாதங்களை
சரணடைந்திருந்தார் !
வாழ்வில் நான் கண்ட
மனிதநேயமிக்க- தனக்கில்லா நிலையிலும் பிறர்க்குதவுகின்ற அபூர்வமான மனிதர்களில்
ஒருவரான கோலண்ணனின் நினைவுகள் நெஞ்சை விட்டென்றும் அகலாதவை !
---------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
தி.சேதுமாதவன்
[sethumathavan2021@gmail.com]
கூடுதல் ஆட்சியர்
I.T.I. முகநூற் குழுமம்
{06-02-2021}
-------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக