மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

அந்நாளை நினைக்கையிலே (19) சீக்காமடத் தெரு கம்பவுண்டர் மாதேவன் பிள்ளை!

 

எங்கள் ஊரில் சிறந்த மருத்துவ சேவையாற்றிய மருந்தாளுனர் மத்தியாஸ் மற்றும் பேதுரு வைத்தியரின் மறைவிற்குப்பின் சீக்காமடத் தெரு கம்பவுண்டர் மாதேவன் பிள்ளை அண்ணனால் அவ்விடம் நிரப்பப் பெற்றது !

 

அரசுப் பணியில் இருந்த போதிலும் எங்கள் ஊரில் மட்டுமன்றி சுற்று வட்டார மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் அவரே. அறிகுறிகளை வைத்தே நோயைச் சரியாகக் கண்டறியும் திறன் அவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தது !

 

1975 களில் உடல்நலக் குறைவென யார் அழைத்தாலும் பத்து நிமிடத்திற்குள் தனது மிதிவண்டியில் விரைந்து சிறந்த சிகிச்சை அளிப்பவர். மருத்துவ சேவைக்கான நியாயமான கட்டணத்தைக்கூட சிலர் வழங்காத நிலையிலும், சேவை மறுக்கப்பட்டதில்லை.


தனக்குச் சேர வேண்டிய தொகையை கறாராக வசூலிப்பதையோ, நிலுவையை முன்னிறுத்தி குறைப்பட்டுக் கொள்வதையோ சினங்கொண்டு திட்டுவதையோ அவர் ஒரு போதும் பின்பற்றியதில்லை !

 

அண்ணனது அயராத உழைப்பும் அர்ப்பணிப்புணர்வும் வியக்கத்தக்கவை. இச்சேவை வாயிலாக கணிசமான செல்வமீட்டும் வாய்ப்பு அமைந்த போதிலும் தொண்டுள்ளம் கொண்ட அவர் ஒரு போதும் அதைச் செய்ததில்லை !

 

நட்புக்களை சம்பாதித்த அவர் பணத்தின் மீது மிகை நாட்டமின்மையால் நிலுவை வைத்திருக்கும் ஏழைகளின் அழைப்பிற்கும் செவி சாய்த்தார். தனது சேவைக் கட்டணத்தையே கோரினால் மட்டுமே வெளியிடுவார்.


சேவை முடித்தபின் காசுக்காக ஒருபோதும் காத்திருப்பதில்லை. அவரது சிறந்த மக்கள் தொடர்பு சென்னையில் வசிக்கும் அவரது நெருங்கிய நண்பர்கள் வாயிலாக தனியார் காப்பீட்டு நிறுவனம் ஒன்றின் கள அலுவலராக்கியது !

 

மருத்துவ சிகிச்சையுடன் களப்பணியையும் இணைந்தே மேற்கொண்ட 1984 காலகட்டத்தில் , வேலை தேடிக் கொண்டிருந்த என்னை விடாமல் துரத்தி முகவராக்க அவருடனான நட்பு மேலும் வளர்ந்தது !


தேவையின்றி ஊர் சுற்றும் பழக்கமில்லாததால் பகல் பொழுதில் எனக்குப் பிடித்தமான ஜெயகாந்தன், ஜானகிராமன், கல்கி, புதுமைப்பித்தன், தாமரை மணாளன் படைப்புகளுடன் போட்டித் தேர்வுகளின் பொருட்டு பொது அறிவு புத்தகங்கள் படிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்த நான், மாலைப் பொழுதில் நண்பன் முருகனுடன் கோவில்களுக்கும் நூலகத்திற்கும் செல்வேன் !

 

என்னை முகவராக்கியது குறித்து நண்பர் ஒருவரிடம் விவரிக்கும் போது"உப்புக்கு சப்பாணியாக" தேர்வு செய்ததாக அண்ணன் நகைச்சுவையுடன் கூறினார். அதிகம் பேசாத குறைவான நட்பு வட்டம் கொண்ட என் மீதான நம்பிக்கையின்மையே அவ்வாறு அவரைக் கூற வைத்தது !

 

உறவினர்களிடம் பாலிசி கேட்ட போது பாலிசியேதும் வேண்டாமெனவும், ஐநூறோ ஆயிரமோ இனாமாகத் தருவதாகக் கூறி என்னை உழைக்காமல் பிழைக்க ஊக்குவித்ததால் ஆரம்பத்தில் சற்றே சோர்வடைந்தேன். வீதியில் ஓடி வரும் காளையை விட ஆயுள் காப்பீட்டு முகவர்களிடம் மிரண்ட மக்களே அதிகம் !

 

சப்பாணியாக என்னை உருவகப்படுத்தியது மனதில் வருத்தத்தை ஏற்படுத்த மாற்று வழியை ஆய்ந்தேன். அண்ணன் களப்பணியாற்றும் இடங்களைக் கண்டறிந்து அவரறியாமல் பின் தொடர்ந்து காகத்தின் கூட்டில் முட்டையிட்ட குயிலானேன். பல முறை விளக்கிப் புரிய வைத்தும் அண்ணனின் தூண்டிலில் சிக்காத மீன்களைக் குறிவைத்து சிறிது நேரம் பேசிப்புரிய வைப்பது எனக்கெளிதாக தோன்றியது. சந்திக்கும் நபர்களை சோர்வடைய வைக்காமல் மீண்டும் வருவதாகச் சொல்லிச் சென்று விடுவேன் !

 

‌‌தொடர்ந்து இம்சிக்காது சிறு இடைவெளி விட்டு இம்சித்தது கைமேல் பலன் தந்தது. தொழிலுக்குத் தொந்தரவின்றி அவர்களைத் தொடர்ந்ததன் வாயிலாக, வெற்றி என் கைகளில் மெல்ல எட்ட ஆரம்பித்தது.


எனக்குச் செய்யும் உதவி, பசித்தவனுக்கு வழங்கும் அன்னமெனவும் விருந்துண்டு முடித்த அண்ணனுக்கு வழங்கும் பாயாசத்தை விட வேலையில்லாப் பட்டதாரியான எனக்குச் செய்கின்ற உதவி மகத்தானதெனவும் சூசகமாக உணர்த்தினேன். எனது இம்முயற்சிக்கு அண்ணனின் ஆதரவும் இருந்தது !

 

ஒரு மாதத்திற்குள் பத்திற்கு மேற்பட்ட நல்ல பாலிசிகளை என்னால் பிடிக்க முடிந்தது கண்டு அண்ணன் மிகுந்த ஆச்சரியமுற்றார். திருநெல்வேலி அருணகிரி விடுதியில் மூர்த்தி அண்ணன் மற்றும் அவரது மாமனார் (கோசலா) சண்முகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற முகவர் கூட்டத்தில் தன்னம்பிக்கையுடன் நான் மேடையேறியது கண்டு அண்ணன் முகத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் மேலிட்டது !

 

உப்புக்குச் சப்பாணியென வர்ணிக்கப் பட்டதால் தூண்டப்பட்ட தன்மான உணர்வே என்னால் சிறிதளவேனும் சாதிக்கத் தூண்டியதெனவும், சாதிக்க உதவிய அண்ணனுக்கு நன்றியெனவும் மேடையில் கூறியது அண்ணனுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது..


மருந்தளவேனும் அழுக்காறில்லாத வெள்ளை உள்ளம் கொண்ட அண்ணன் எனது முன்னேற்றத்தைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார். அவரது நெருங்கிய நண்பர்களான தாணு அண்ணன், குமாரசாமி அண்ணன் ,மோகனன் அண்ணன்,மதுவைப் போலவே அவருடைய நெருங்கிய நட்பு வட்டத்திற்குள் நானும் இருந்தது எனக்குப் பெருமை !

 

எண்ணெயில் வறுத்த அசைவ உணவுகளின் தீவிரப் பக்தரான அண்ணனின் அயராத உழைப்பும், விடாத சைக்கிள் மற்றும் நீச்சல் பயிற்சியும் அவரது தொந்தியின் அளவைக் குறைக்க உதவவில்லை.தனிப்பட்ட விசயங்களையும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளும் அண்ணனது குடும்பத்தினரும் எங்கள் பால் மிகுந்த அன்பு கொண்டவர்கள் !

 

கடுமையான உழைப்பு, சிறந்த சேவையென தூய உள்ளத்திற்கு சொந்தக்காரரான அண்ணன் பணி ஓய்வு பெற்று ஓராண்டிலேயே மாரடைப்பின் காரணமாக இறைவனடி சேர்ந்தது எங்கள் ஊருக்கே பேரிழப்பு. அவருக்கென பறக்கை மக்கள் மனதில் இருக்கும் சிம்மாசனம் இன்றளவிலும் காலியாகவே உள்ளது !


--------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை

தி.சேதுமாதவன்

[sethumathavan2021@gmail.com]

கூடுதல் ஆட்சியர்

I.T.I. முகநூற் குழுமம்

{30-01-2021}

----------------------------------------------------------------------

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக