மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

சனி, 13 பிப்ரவரி, 2021

அந்நாளை நினைக்கையிலே (16) பளபள பல்வரிசை கொண்ட சிவ தாணு அண்ணன் !


நாகர்கோவிலில் நாங்கள் குடியிருந்த காலத்தில் பள்ளி விடுமுறைக்கு பாட்டி வீடான பறக்கைக்கு வருகின்ற தருணங்களில், உடை கூட மாற்றாமல் நேராகச் சென்று நிற்பது சிவ தாணு அண்ணன் வீட்டின் முன்பு தான் !

 

கீழத்தெரு திரு தனுஷ்கோடி அவர்களின் இளைய மகனும் என்னை விட சுமார் ஏழு வயது மூத்தவரும் பற்பசை விளம்பரத்தில் தோன்றுபவரைப் போன்ற பளபள பல்வரிசை கொண்ட களங்கமற்ற புன்னகை ததும்பும் முகத்தினருமான பெரிய கால் சட்டையணிந்த அண்ணன் எங்களுக்கு மிகவும் பிரியமானவர் !

 

பாட்டி வீட்டுக்குப் பக்கத்திலுள்ள பெரிய தென்னந் தோப்பில் காய்ந்த ஓலைகளை தரையில் பரப்பி அதன் மீது நடுநாயகமாக அமர்ந்திருக்கும் அண்ணனைச் சுற்றி குழந்தைகளாகிய நாங்கள் ஓடி விளையாடுவோம்.


காலணிகள் அணியும் வழக்கமில்லா அந்நாளில், பிஞ்சுக் கால்களை முட்களேதும் பதம் பார்த்து விடக் கூடுமென வேக ஓட்டத்திற்கு அண்ணன் தடை விதிப்பார் !

 

கால்சட்டைப் பையில் வைத்திருக்கும் சிறிய பேனாக் கத்தியால் தென்னை ஓலையில் வெகு நேர்த்தியுடன் அண்ணன் தயாரிக்கின்ற கடிகாரம், மோதிரம்,ஊத்து, கண்ணாடி, பாம்பு , பப்பாளி மரக் கம்பில் தயாரித்த புல்லாங்குழல் ஆகியவற்றைத் தாங்கியவாறு நாங்கள் பெருமையுடன் நிற்போம் !

 

ஆங்கில எழுத்தான "எல்" வடிவிலான உடை முள்ளின் கூரான ஒரு புற முனையை உடைத்து ஆட்டின் புளுக்கையைக் குத்தி மறுமுனை வழியாக கூட்டல் வடிவிலான காய்ந்த பனை ஓலையின் மையப் பகுதியை நுழைத்து பூவரசுக் கம்பு மேல் கூரான முனையை நிறுத்தி அழகிய காற்றாடி தயார் செய்து தருவார்.!

 

இளங்காற்றில் விரைவாக சுற்றுகின்ற காற்றாடியைப் போன்றே எங்கள் மனமும் மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளும். தேர் செய்வதன் பொருட்டு பாட்டிக்குத் தெரியாமல் வீட்டிலுள்ள வாரியலிலிருந்து ( விளக்கு மார்) தென்னை ஓலைக் குச்சிகளை கொத்தாகக் கவர்ந்து செல்வோம்.


சிறு குழந்தைகளுக்கு ஓரடுக்குத் தேர் செய்ய ஐந்து கொச்சங்காய்களும் (தென்னங் குறும்புகளும்) , பெரிய குழந்தைகளுக்கு ஈரடுக்கு தேர் செய்ய ஒன்பது கொச்சங்காய்களும் தோப்பிலிருந்து சேகரித்து அண்ணனிடம் கொடுப்போம் !

 

இளம் பூவரசங்கம்பை வளைத்து நூலால் இரு முனைகளையும் இணைத்து தயார் செய்த வில்லில் அம்பைச் செலுத்தி நாங்கள் விளையாடிய பின்னர், காகிதத்தை வில் அம்பு மீது பதித்து வேப்பமரத்தின் பசையால் ஒட்டி காய வைத்த பின்னர் பட்டமாகப் பறக்க விடுவதை வாய் பிளந்து விந்தையுடன் இரசிப்போம் !

 

தோப்பின் பின்பக்கம் கண்டாங் குளம் இருப்பதால் அண்ணன் எங்களை பொறுப்புடன் கண்காணிப்பார். வில்லாக வளைத்த தென்னங்குச்சியை கொச்சங் காயின் மேற்பாகத்தில் இருமருங்கிலும் குத்தி அதன் நடுவில் மற்றொரு தென்னங் குச்சியை நேராக நிறுத்திய பின்னர் குறுக்காக ஒரே அளவிலான இரு குச்சிகளை நுழைத்துச் சுற்றும் போது ஏற்படும் இரசிக்கும் படியான 'கிடு கிடு' ஒலியே 'கிடுவுடி' என்ற அவ்விசையின் நாமகரணத்திற்கு காரணமாக அமைந்தது !

 

" கிடுவுடி வேண்டும் " என நாங்கள் அடம் பிடிப்பதை அண்ணன் அட்டகாசமாகச் சிரித்து இரசிப்பார். பூவரசு இலையால் செய்யப்பட்ட ஊத்தை சிறு குழந்தைகள் ' பீ....பீ....என ஊதும் போது சிறு குழந்தை போல மகிழ்ச்சி கொள்வார். !

 

குழந்தைகள் அனைவருக்கும் அவரவர் விருப்பத்திற்கேற்ப தன் கைவண்ணத்தில் விளையாட்டு பொம்மைகளையும், பொருட்களையும் மிகுந்த தேர்ச்சி பெற்ற கைவினைஞரைப் போன்று உருவாக்கிப் பரிசளித்து மகிழ்ச்சியூட்டும் அண்ணன், தானும் எங்களில் ஒருவராகவே மாறி விடுவதுடன் 'மக்கா' என்று எங்களைப் பாசத்துடன் அழைப்பார் !

 

விளையாட்டுப் பொருட்களை தயாரித்து முடித்த பின்னர் 'அம்புலி மாமா ' கதைகளைச் சொல்லித் தருவார். இரு கைகளிலுள்ள ஆட்காட்டி விரல்களால் தனது இரு காதுகளையும் அடைத்துக் கொண்டு கண்களை லேசாக திறந்த படியே " காக்கா வருது கண்ணைப் புடுங்குது" எனப் பாடிக் கொண்டே எதிரே இரு கைகளையும் சேர்த்து நீட்டிப் பிடித்தவாறு உட்கார்ந்திருக்கின்ற எங்கள் கைகளின் மீதுப் பட்டென அடித்து சிரிக்க வைப்பார். கண்டாங் குளத்தின் கரையில் காய்த்துக் குலுங்கும் களச்சிக்காய்களை எங்களுக்குத் தெரியாமல் பறித்து வந்து ஒவ்வொன்றாக தூக்கிப்போட்டு விளையாடுவார் !

 

ஒருவர் பாடும் பாடலின் கடைசிச் சொல்லிலிருந்து அடுத்தவர் தொடங்குகின்ற 'அந்தாக்ஷரி ' விளையாட்டை அவர் எங்களுக்கு சொல்லித் தருவார் !

 

ஆண்டுக்கிரு முறை விடுமுறையில் ஊருக்கு வருகின்ற நான், பாட்டி வீட்டிற்கு வந்தவுடனே சிவதாணு அண்ணனைக் காண ஆவலுடன் புறப்பட்டேன். 'இப்போது அங்கு செல்ல வேண்டாம் ' எனத் தடுத்த பாட்டிக்குத் தெரியாமல் அண்ணனது வீட்டுக்குச் சென்று விட்டேன்.

அண்ணனது வீட்டின் முன் நின்று உரக்க அழைத்தபோது, வழக்கத்திற்கு மாறாக, களையிழந்து அரவமற்ற நிலையில் வீடு காணப்படுவதை உணர்ந்தேன். உற்சாகத்துடன் வரவேற்கின்ற அண்ணனின் அம்மா வீட்டினுள்ளேயே முடங்கியிருந்தார் !

 

அமைதியான ஓடிட்ட வீட்டுச் சுவரின் மேல் சில்லிட்ட சதுர வடிவ மரச் சட்டங்களுக்குள் புன்னகைத்தவாறே அண்ணன். காய்ந்த மலர்கள் கொண்ட மாலை அண்ணன் மறைந்து வெகு நாட்களானதைப் பறைசாற்றியது !


நான்கு மாதங்களுக்கு முன்னர் தந்தையுடன் ஏற்பட்ட சிறு பிணக்கில் களச்சிக் காய்களை அரைத்துண்டு சிவதாணு அண்ணன் உயிர் துறந்த விவரமறிந்து சிறு பாலகனான நானடைந்த தாங்கொணா வேதனையை வார்த்தைகளால் வடிக்கவியலாது !

 

நாங்கள் ஒடி விழுந்து புரண்டு மகிழ்ந்து விளையாடிய வெயில் தரையைத் தொடாத நெடிதுயர்ந்த தென்னை மரங்களாலான அழகிய தென்னந்தோப்பு , கால மாற்றத்தில் மாடி வீடுகளாய் உயர்ந்து நிற்கிறது.


அவ்விடத்தைக் காணும் போதெல்லாம் புன்னகை தவழும் சிவதாணு அண்ணனின் வதனமும், கவலைகளின்றி விளையாடி மகிழ்ந்த நினைவுகளும் பசுமையாக மனதில் தோன்றி மறைவதைத் தடுக்க முடியவில்லை !

 

நான் பெரியவனான பின்னர் சிறு குழந்தைகள் என்னிடம் 'கிடுவுடி' கேட்கும் வேளைகளில் பொருள் பொதிந்த விந்தையான அத்தமிழ்ச் சொல் புனைந்த அண்ணனையும் நினைக்கத் தவறுவதில்லை !

--------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை


 

தி.சேதுமாதவன்

[sethumathavan2021@gmail.com]

I.T.I. கூடுதல் ஆட்சியர்

முகநூற் குழுமம்

{16-01-2021}

--------------------------------------------------------------------------------------------

2 கருத்துகள்: