மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

அந்நாளை நினைக்கையிலே (21) எனது அம்மாவின் தாயான பாச்சம்மா பாட்டி !


ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது கணிதப் பாடத்தில் தருமியைப் போலெழும் சந்தேகங்களை எனது அம்மாவின் தாயான பாச்சம்மா பாட்டி கணிப்புக் கருவியின் துணையின்றி சமையலறையில் அம்மியில் தீயலுக்கு அரைத்த படியே இம்மி பிசகாமல் விடையளிப்பது கண்டு அதிசயித்திருக்கிறேன் !

 

முக்காணி, மாகாணி, அரைக்காணி, முக்காலே அரைக்கால் என்று ஏதேதோ முணுமுணுத்து கணிதப் புத்தகத்தை திரும்பிப் பார்க்காமலே மனக்கணக்கால் மிகச்சரியான விடையைச் சொல்வது ஆச்சரியம். அடிப்படை ஆங்கில அறிவும் பெற்றிருந்த பாட்டி ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் !

 

மிதிவண்டி உருளையைத் தட்டியபடி நானும் தம்பியும் குதிகால் பின்புறம் தட்ட ‌ஓடிச்சென்று வாங்கி வரும் பொருட்களில் வழியில் தொலைத்தது போக எஞ்சியதைப் பத்திரமாக ஒப்படைத்ததற்கு பாட்டியின் பிரதிபலனான பத்து காசுகள் கல்கோனா மிட்டாயாக மாற்றப்பட்டு வாயில் ஒதுங்கி விடும் !

 

நாங்கள் ஒப்படைக்கும் பலசரக்குக் கணக்கை வேகமாக கூட்டிச் சொல்லும் பாட்டியின் அதீத திறனுக்கு சிறந்த ஞாபக சக்தியும், வாய்ப்பாடுகளுடனான பரிச்சயமுமே காரணம் !

 

மிதிவண்டி மீன் வியாபாரிகளைப் போலன்றி பள்ளம், மணக்குடி கடற்கரைப் பகுதிகளிலிருந்து அலுமினிய பாத்திரத்தில் தலைச் சுமட்டுடன் வருகின்ற பெண் மீன் வியாபாரிகளிடம் பேரம் பேசும் வசதி காரணமாக ஊரில் ஏராளமான வாடிக்கையாளர்கள் உண்டு.


கட்டச்சி, நெட்டச்சி என்பவர்களுக்கு அவர்களின் உருவத்தை வைத்து பெயரிட்ட ஊர்ப் பெண்கள் , குணாதிசயத்தை வைத்து ஒருவருக்கு சூட்டிய பெயர் பத்ரகாளி. அடிமாட்டு விலைக்கு பேரம் பேசும் பெண்களிடம் பத்ரகாளி அவதாரமெடுப்பதால் கிடைத்த பட்டம் அது !

 

"இப்ப தான் சப்பான்ல இருந்து ஆள் வந்திருக்கு மீன் வாங்க. மூஞ்சியும் மொகரக்கட்டையும் பாரு " என இராகத்துடன் நீட்டி முழக்குகின்ற தொடர் அர்ச்சனைக்குப் பயந்த ஊர்ப் பெண்களில் சிலர் "வில குறச்சுக் கேட்டா திட்டப்பிடாது" என்ற பீடிகையுடன் பேரத்தைத் துவங்கினால் மட்டுமே பத்ரகாளியின் திரிசூலத் தாக்குதலிலிருந்தும் கோரத் தாண்டவத்திலிருந்தும் தப்பிக்கவியலும் !

 

எளிதில் உணர்ச்சி வசப்படுகின்ற பத்ரகாளி நேர்மையும் இரக்கமும் உள்ளவரென்பது, பேரம் பேசாதோருக்கு கூடையிலிருந்து தானாகவே கைநிறைய அள்ளிக் கொடுப்பதன் வாயிலாக அறிந்து கொள்ளவியலும்.


குறைந்த விலைக்கு பேரம் கேட்போரிடம் "புழுத்த மீனோட பின்னால வாறா கட்டச்சி. அவகிட்ட கைநிறைய வாங்கி வீடு நாறக் கறி வை " என்று தினமும் தாமதமாக வியாபாரத்திற்கு வருகின்ற தனது தம்பி மனைவி கட்டச்சியை கிண்டல் செய்வாள் நெட்டச்சி !

 

குழல் காரி என்ற அன்னமேரியின் அணுகுமுறை சற்று வித்தியாசமானது. வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீன்களின் செதில்களையும் தேவையற்ற உட்பாகங்களையும் தனது அரிவாள் மணையால் வெட்டி நீக்கி சுத்தம் செய்யும் போது பக்கத்தில் ஜொள் விட்டவாறு நெருங்கி வரும் நாய்களை கையில் இருக்கும் குழலால் பட்டென ஓங்கியடித்த பின்னர் "நீங்கி நில்லு நாயே. அறிவில்ல உனக்கு" என்ற வசனம் மீன்களின் செவிழ் பிளந்து சோதனை செய்வோர் மற்றும் மீனைக் கையால் அழுத்தி தரப் பரிசோதனை செய்வோருக்கானதே எனத் தரைவிலைப் பேரக் காரிகள் நன்கறிவர் !

 

"என்ன வேணும் ?" எனத் தனது பணியைத் தொடர்ந்தவாறே சற்று நிமிர்ந்த படிக் கேட்கின்ற குழல்காரியிடம் ஆரம்பத்தில் கேட்ட தொகையிலிருந்து இரண்டு ரூபாய் அதிகரித்து இருபது ரூபாய் பெறுமானமுள்ள பெரிய விளமீனை எட்டு ரூபாய்க்கு பேரம் பேசுவார்கள்.

"

இருபது ரூபாயும் தந்து ஒரு பாட்டும் பாடணும்" என்று சொல்லும் குழல் காரி "அஞ்சு உலுவையை (ரூபாயை)த் தூக்கிக்கிட்டு மீன் வாங்கப் புறப்பட்டுட்டா" என வாடிக்கையாளர் இடத்தை விட்டகன்ற பின் கிண்டல் செய்வார் !

 

தொழில் நுட்பம் வளராத அக்கால கட்டத்தில் அதிகாலையில் அரை வயிற்றுக் கஞ்சியுடன் வியாபாரத்திற்குப் புறப்படுகின்ற இவர்கள் வெயிலின் தீவிரத்தில் கெட்டு விடுகின்ற விற்காத மீன்களுடன் ஆதவன் மறையும் முன் ஊர் திரும்புவதை விரும்பாமையால், சற்றும் எதிர்பாராத வகையில் திட்டிய வாடிக்கையாளருக்கே குறைந்த விலைக்கு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுப்பதன் காரணத்தால், சில தந்திரசாலி வாடிக்கையாளர்கள் இத்தகைய சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருப்பதுண்டு !

 

புஷ்பம் என்னும் வியாபாரி தரை விலை பேரம் பேசுவோரிடம் கோபத்தை வெளிக்காட்டாமல் மீனை உள்ளங்கையில் வைத்து இதமாகத் தடவி மீனின் சிவந்த செவிளைப் பிளந்து காண்பித்து பொறுமையாக பதில் சொல்பவர். "இந்த செல்லக்குட்டிய வாங்க சீமையிலிருந்து சூட் போட்ட ஆளு வரும். பத்ரகாளி கிட்ட எட்டணாவுக்கு நெத்திலி வாங்கிட்டு போய்ச் சேருங்க. கழுத விட்ட கைநிறைய" எனக் கிண்டல் செய்வார் !

 

'உனக்கில்ல இது. உன் மகளுக்கு" எனப் பாலூட்டும் பிள்ளைத் தாச்சிகளுக்கு தரம் வாய்ந்த நற்சாளை, காரல், திரைச்சி (திருக்கை) மீன்களைக் கொண்டு வந்து கருணை உள்ளத்தோடு கறுத்த கறி வைப்பதற்காக விலை குறைத்து வழங்கும் பெண்மணிகளுமுண்டு. பசித்து வருகின்ற மீன் வியாபாரிகளுக்கு உணவளிக்கும் பாட்டியை கண்டு நான் அதிசயித்ததுண்டு !

 

விளமீன் ஒன்றை பேரம் பேசி முடித்து "கட்டுப்படியாகுமிண்ணா தா" என்று தனது நிதியிருப்பைக் கருத்திற் கொண்டு பாட்டி கூற "முதலாவாது (அசல் விலை கூட வரவில்லை) அம்மா" என்று மறுத்ததைக் கண்டிருக்கிறேன் !

 

பாரத்தைக் கீழே இறக்கி வைத்து தலைக்கு வைத்திருந்த செம்மாட்டை (சுமைதாங்கித் துணி) தலையணையாக்கி சற்றே ஓய்வெடுத்த பின்னர் ".ஏதாவது இருந்தா கொடுங்கம்மா. பசிக்குது" என்று கூறும் பெண்மணிக்கு அருகிலமர்ந்து வாஞ்சையோடு உணவளிக்கும் பாட்டி , தாமதமாக வருகின்ற பசிக்கும் பெண்களுக்கு உதவவியலாத தருணங்களில் மனம் வருந்துவதும் சிறுவனான எனக்கு அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது !

 

"அவளுக்கு கட்டுப்படியாகும்னா தருவா. விக்கத்தானே இவ்வளவு தூரம் சுமந்து வந்திருக்கா பாவம்". என்று கூறிய பாட்டியிடம் ' நாம் கோரிய விலைக்கு மீன் வழங்காதவர்க்கு உணவளிப்பது ஏன் ? ' என்ற சிறுபிள்ளைத் தனமான எனது கேள்விக்கு அளித்த பதில் பாட்டி மீதான மதிப்பை மேலும் உயர்த்தியது !

 

உணவு உடலுக்கு வழங்கப் படுவதேயானாலும், அது உள்ளிருக்கும் ஆத்மாவுக்குமானது. இறைவனின் அம்சமான ஆத்மா பசித்திருக்கலாது. இரு தலைமுறைகளுக்கு முன்பிருந்தது போன்று பசித்திருப்போருக்கு உணவளிக்கும் வல்லமை நம் குடும்பத்திற்கு இல்லையெனினும் , ஒரு வயிற்றுக்கேனும் தினம் உணவளிக்க ஆசையுள்ளதாகவும் கூறினார் நன்கு வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் அங்கமான பாச்சம்மா பாட்டி.


நோய் நொடிகள் ஏதுமில்லாத பாட்டி தனது தொண்ணூற்று மூன்றாம் வயதில் ஒரு வார காலம் மட்டுமே படுக்கையில் படுத்து இறைவனடி சேர்ந்தார் !

 

இன்னல்களைக் கலங்காது கடந்து செல்லும் திறன், விரைந்து முடிவெடுக்கும் ஆளுமை, தன்னம்பிககை, உழைப்பு, வெளிப்படைத் தன்மை, நேர்மை, கருணை, நுண்ணறிவு போன்ற அருங்குணங்களை ஒருங்கே பெற்றிருந்த பாட்டி எனது வாழ்வில் என்றும் மறக்க முடியாதவர்.

 

---------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

தி.சேதுமாதவன்

[sethumathavan2021@gmail.com]

கூடுதல் ஆட்சியர்

I.T.I. முகநூற் குழுமம்

{13-02-2021}

----------------------------------------------------------------------------------

அந்நாளை நினைக்கையிலே (20) கோலண்ணனின் நினைவுகள் நெஞ்சை விட்டு அகலாதவை !


1980 களில் மாலை நேரம் நான்கு மணியாகி விட்டாலே எங்கள் ஊர் சிறு குழந்தைகள் வீடுகளின் முன்னால் தங்கள் அன்பு மாமாவின் வருகைக்காக வழி மேல் விழி வைத்துக் காத்து நிற்பதைக் காணலாம் !

 

"ஆமை வடை, உளுந்த வடை, சுசியன், உண்ணியப்பம்" என உற்சாகமாக இராகத்துடன் பாடி வருகின்ற கோலண்ணன் என்ற கோலப்ப பிள்ளை தனது வரவைக் காத்து பிஞ்சுக் கைகளை நீட்டியபடி பூக்களைப் போன்று புன்னகை பூத்து நிற்கின்ற குழந்தைகளுக்கு தனது ஓலைப் பெட்டியிலிருந்து தின்பண்டங்களைக் கொடுக்கும் வேளை தானும் ஒரு குழந்தையாகவே மாறிவிடுவது வழக்கம் !

 

அகவை ஐம்பதைக் கடந்த சிவப்பு நிறமும் ஆறடி உயரமும் கொண்ட கட்டைப் பிரம்மச்சாரியான கோலண்ணன் கேரளாவில் பணியாற்றிய எங்கள் ஊர் மருத்துவரது வீட்டின் சமையலறையிலேயே தனது வாழ்வின் பெரும் பாகத்தை கழித்துவிட்டவர். தனக்கென ஏதும் சேமித்து வைக்காத கோலண்ணன் பிறர் படும் துயரை நினைந்துருகி தனது தகுதிக்கு மிஞ்சி ஈகை செய்ய விழையும் மனதினர் !

 

எங்கள் வீட்டினருகில் அண்டாளி மதுசூதனன் அண்ணன்("இறைவனின் நாமத்தில்" என்ற பதிவில் இவரைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன்) முன்பு குடியிருந்த சிறு வீட்டில் குடிபுகுந்தார். கையிருப்பு பத்து பைசாவேவாயினும் தன்னைவிட வறியவர்க்குக் கொடுத்து சேமிப்பேதுமின்றியே மட்டற்ற மகிழ்ச்சியுடனிருக்கும் அவர் எனக்கு எட்டாவது அதிசயம் !

 

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நான் ஓய்வு நேரத்தை நெருங்கிய நண்பரான அண்ணனுடன் செலவிடுவது வழக்கம். ஒரு பாய், தலையணை, சில உடுக்கைகள். பனை விசிறி, சிறு அடுப்பு, சில பாத்திரங்கள் மட்டுமே அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள்.


பண்டிகை நாட்களில் தனது அண்ணன் குழந்தைகள் அன்புடன் அளிக்கின்ற புத்தம் புது உடைகளுடன் பணத்தையும் வறியவர்க்கு கொடுத்து பழைய உடுக்கையுடனும் வெறுங்கையுடனும் நிற்கும் சித்தரான சித்தப்பாவிடம் அவர்கள் குறைப்பட்டுக் கொண்டாலும் ,இயல்பை மாற்ற அவர் முயற்சித்ததில்லை !

 

கேரளாவிலிருந்து வந்த பின்னர் பிழைப்புக்கு என்ன செய்வதென ஆலோசித்த போது அவருக்கு கைவந்த தொழிலான சமையலையே எனது சிறு முதலீட்டுடன் தொடங்கினார். உண்ணியப்பம்,கேக், சுசியன், வடை வகைகள் செய்ய தேங்காய் எண்ணெய் அல்லது கடலை எண்ணெயை பயன்படுத்தும் அவர் தனது மழலை வாடிக்கையாளர்களின் தின்பண்டங்களின் தரத்தில் சிறு சமரசமும் செய்து கொள்வதில்லை !

 

மாலை நான்கு மணியளவில் தின்பண்டங்களுடன் உரக்கச் சப்தமிட்டபடியே வியாபாரம் (?) செய்கின்ற கோலண்ணனின் கலகலப்பான பேச்சினால் விரைவாக விற்று முடிக்கின்ற பலகாரங்களில் ஐம்பது விழுக்காடும் கடனுக்கானவையே !

 

வீட்டு முற்றத்தில் தனது வரவைக் காத்து நிற்கும் குழந்தைகளுக்கு அவர்தம் விருப்பத்திற்கேற்ப வழங்கும் பலகாரங்களுக்கான கட்டணத்தை வற்புறுத்தினாலும் கோலண்ணன் பெற்றுக் கொள்வதில்லை !

 

வியாபாரம் முடித்து வீட்டிற்கு திரும்பியவுடன் என்னை அழைத்து ' மக்கா எவ்வளவு இருக்குன்னு பாரு' என்று என்னிடம் சுருக்குப்பையைத் தருவார். "வரவு எட்டணா. செலவு பத்தணா" என்ற மாநில அரசின் நிதி நிலை போன்றிருக்கும் அன்றைய வருமானத்திலிருந்து எனது கடனை ஞாபகமாக திருப்பித் தருவதும் , இரு தினங்கள் கழித்து மீண்டும் பெற்றுக் கொள்வதும் வாடிக்கையான வேடிக்கைகள் !

 

பகவதியப்பண்ணன் கடையில் கொள்முதல் செய்த பொருட்களுக்கான ஐம்பது விழுக்காட்டுத் தொகையை மட்டுமே வியாபாரத்தை பொழுதுபோக்காகக் கொண்ட அண்ணனால் திருப்பிச் செலுத்த இயலுமெனினும் , கடனுக்கு விடாது பொருட்களை வழங்க பகவதியப்பண்ணனும் சற்றும் சளைப்பதில்லை. "மீதி காசு என்ன ஆச்சு ஓய் ?" என சிரித்துக்கொண்டே கேட்கின்ற பகவதியப்பண்ணனின் வழக்கமான கேள்விக்கு "தாரேன் ஓய்" என்ற பொறுப்பான பதில் கோலண்ணனிடமிருந்து வரும் !

 

மதுசூதனப் பெருமாள் முன் சில நொடிகள் மட்டுமே பிரார்த்திக்கும் அண்ணனிடம், சாவதானமாக பிரார்த்திக்காததன் காரணத்தை வினவிய போது, குடும்பஸ்தர்களின் பிரச்சினைகளை கேட்டுச் சலித்திருக்கும் பெருமாளிடம் , துன்புறுத்தாமல் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஒற்றைக் கோரிக்கையே இருப்பதாக கலங்கிய கண்களுடன் கூறுவதைக் கண்டிருக்கிறேன் !

 

1987 ல் அரசுப்பணியில் அரியலூரில் சேர்ந்த பின்னர் ஆண்டுக்கொரு முறையே வருகின்ற எனக்கு கோலண்ணனைக் காணும் வாய்ப்பு அரிதானது. அடுத்த சில ஆண்டுகளில் வியாபாரத்தை தொடரவியலாத நிலையில் கைவிட்ட அண்ணன், ஆறு மாதங்களுக்கு ஒரு உணவு விடுதியென்ற முறையில் பணியாற்றி வந்ததாக அறிந்தேன்..


2002 ல் இயக்குனரகத்திலிருந்து நாகர்கோவிலுக்கு பணிமாற்றத்தில் வந்த பின்னர் பறக்கைச் சந்திப்பிலுள்ள உணவு விடுதியொன்றில் பணியாற்றிய அவரை அடிக்கடிக் காணும் பேறு _ஏற்பட்டது !

 

எனது பணப்பையை_ அவரிடம் காட்டி எடுத்துக் கொள்ளக் கூறும் போதும் ஐம்பது ரூபாய்க்கு மேல் அவர் ஒரு போதும் எடுத்ததில்லை.‌ சில சமயங்களில் தன்னிடம் பணம் இருப்பிலுள்ளதாக அவர் கூறினாலும் உண்மைத் தன்மையறியாமல் அவ்விடத்தை விட்டு அகலாமைக்கு வெள்ளை உள்ளம் கொண்ட உயர்ந்த மனிதர் மீது நான் கொண்ட எல்லையற்ற அன்பே காரணம் !

 

வெளியூர் செல்லும் பொருட்டு பேருந்திற்குக் காத்திருந்த ஒரு இரவு நேரத்தில் வீங்கிய முகத்துடன் நின்ற அண்ணனைக் கண்டேன். இரு தினங்களுக்கு முன்பு தன்னை நாய் கடித்து விட்டதாகக் குழந்தையைப் போன்று கூறிய அவர் முறையான சிகிச்சை மேற் கொள்ளாத காரணத்தால், நான் வெளியூர் சென்று திரும்புவதற்குள் அதிக இன்னல்களுக்கு ஆட்படாமலேயே இறைவனது திருப்பாதங்களை சரணடைந்திருந்தார் !

 

வாழ்வில் நான் கண்ட மனிதநேயமிக்க- தனக்கில்லா நிலையிலும் பிறர்க்குதவுகின்ற அபூர்வமான மனிதர்களில் ஒருவரான கோலண்ணனின் நினைவுகள் நெஞ்சை விட்டென்றும் அகலாதவை !

 

---------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை


 

தி.சேதுமாதவன்

[sethumathavan2021@gmail.com]

கூடுதல் ஆட்சியர்

I.T.I. முகநூற் குழுமம்

{06-02-2021}

-------------------------------------------------------------------------

அந்நாளை நினைக்கையிலே (19) சீக்காமடத் தெரு கம்பவுண்டர் மாதேவன் பிள்ளை!

 

எங்கள் ஊரில் சிறந்த மருத்துவ சேவையாற்றிய மருந்தாளுனர் மத்தியாஸ் மற்றும் பேதுரு வைத்தியரின் மறைவிற்குப்பின் சீக்காமடத் தெரு கம்பவுண்டர் மாதேவன் பிள்ளை அண்ணனால் அவ்விடம் நிரப்பப் பெற்றது !

 

அரசுப் பணியில் இருந்த போதிலும் எங்கள் ஊரில் மட்டுமன்றி சுற்று வட்டார மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் அவரே. அறிகுறிகளை வைத்தே நோயைச் சரியாகக் கண்டறியும் திறன் அவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தது !

 

1975 களில் உடல்நலக் குறைவென யார் அழைத்தாலும் பத்து நிமிடத்திற்குள் தனது மிதிவண்டியில் விரைந்து சிறந்த சிகிச்சை அளிப்பவர். மருத்துவ சேவைக்கான நியாயமான கட்டணத்தைக்கூட சிலர் வழங்காத நிலையிலும், சேவை மறுக்கப்பட்டதில்லை.


தனக்குச் சேர வேண்டிய தொகையை கறாராக வசூலிப்பதையோ, நிலுவையை முன்னிறுத்தி குறைப்பட்டுக் கொள்வதையோ சினங்கொண்டு திட்டுவதையோ அவர் ஒரு போதும் பின்பற்றியதில்லை !

 

அண்ணனது அயராத உழைப்பும் அர்ப்பணிப்புணர்வும் வியக்கத்தக்கவை. இச்சேவை வாயிலாக கணிசமான செல்வமீட்டும் வாய்ப்பு அமைந்த போதிலும் தொண்டுள்ளம் கொண்ட அவர் ஒரு போதும் அதைச் செய்ததில்லை !

 

நட்புக்களை சம்பாதித்த அவர் பணத்தின் மீது மிகை நாட்டமின்மையால் நிலுவை வைத்திருக்கும் ஏழைகளின் அழைப்பிற்கும் செவி சாய்த்தார். தனது சேவைக் கட்டணத்தையே கோரினால் மட்டுமே வெளியிடுவார்.


சேவை முடித்தபின் காசுக்காக ஒருபோதும் காத்திருப்பதில்லை. அவரது சிறந்த மக்கள் தொடர்பு சென்னையில் வசிக்கும் அவரது நெருங்கிய நண்பர்கள் வாயிலாக தனியார் காப்பீட்டு நிறுவனம் ஒன்றின் கள அலுவலராக்கியது !

 

மருத்துவ சிகிச்சையுடன் களப்பணியையும் இணைந்தே மேற்கொண்ட 1984 காலகட்டத்தில் , வேலை தேடிக் கொண்டிருந்த என்னை விடாமல் துரத்தி முகவராக்க அவருடனான நட்பு மேலும் வளர்ந்தது !


தேவையின்றி ஊர் சுற்றும் பழக்கமில்லாததால் பகல் பொழுதில் எனக்குப் பிடித்தமான ஜெயகாந்தன், ஜானகிராமன், கல்கி, புதுமைப்பித்தன், தாமரை மணாளன் படைப்புகளுடன் போட்டித் தேர்வுகளின் பொருட்டு பொது அறிவு புத்தகங்கள் படிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்த நான், மாலைப் பொழுதில் நண்பன் முருகனுடன் கோவில்களுக்கும் நூலகத்திற்கும் செல்வேன் !

 

என்னை முகவராக்கியது குறித்து நண்பர் ஒருவரிடம் விவரிக்கும் போது"உப்புக்கு சப்பாணியாக" தேர்வு செய்ததாக அண்ணன் நகைச்சுவையுடன் கூறினார். அதிகம் பேசாத குறைவான நட்பு வட்டம் கொண்ட என் மீதான நம்பிக்கையின்மையே அவ்வாறு அவரைக் கூற வைத்தது !

 

உறவினர்களிடம் பாலிசி கேட்ட போது பாலிசியேதும் வேண்டாமெனவும், ஐநூறோ ஆயிரமோ இனாமாகத் தருவதாகக் கூறி என்னை உழைக்காமல் பிழைக்க ஊக்குவித்ததால் ஆரம்பத்தில் சற்றே சோர்வடைந்தேன். வீதியில் ஓடி வரும் காளையை விட ஆயுள் காப்பீட்டு முகவர்களிடம் மிரண்ட மக்களே அதிகம் !

 

சப்பாணியாக என்னை உருவகப்படுத்தியது மனதில் வருத்தத்தை ஏற்படுத்த மாற்று வழியை ஆய்ந்தேன். அண்ணன் களப்பணியாற்றும் இடங்களைக் கண்டறிந்து அவரறியாமல் பின் தொடர்ந்து காகத்தின் கூட்டில் முட்டையிட்ட குயிலானேன். பல முறை விளக்கிப் புரிய வைத்தும் அண்ணனின் தூண்டிலில் சிக்காத மீன்களைக் குறிவைத்து சிறிது நேரம் பேசிப்புரிய வைப்பது எனக்கெளிதாக தோன்றியது. சந்திக்கும் நபர்களை சோர்வடைய வைக்காமல் மீண்டும் வருவதாகச் சொல்லிச் சென்று விடுவேன் !

 

‌‌தொடர்ந்து இம்சிக்காது சிறு இடைவெளி விட்டு இம்சித்தது கைமேல் பலன் தந்தது. தொழிலுக்குத் தொந்தரவின்றி அவர்களைத் தொடர்ந்ததன் வாயிலாக, வெற்றி என் கைகளில் மெல்ல எட்ட ஆரம்பித்தது.


எனக்குச் செய்யும் உதவி, பசித்தவனுக்கு வழங்கும் அன்னமெனவும் விருந்துண்டு முடித்த அண்ணனுக்கு வழங்கும் பாயாசத்தை விட வேலையில்லாப் பட்டதாரியான எனக்குச் செய்கின்ற உதவி மகத்தானதெனவும் சூசகமாக உணர்த்தினேன். எனது இம்முயற்சிக்கு அண்ணனின் ஆதரவும் இருந்தது !

 

ஒரு மாதத்திற்குள் பத்திற்கு மேற்பட்ட நல்ல பாலிசிகளை என்னால் பிடிக்க முடிந்தது கண்டு அண்ணன் மிகுந்த ஆச்சரியமுற்றார். திருநெல்வேலி அருணகிரி விடுதியில் மூர்த்தி அண்ணன் மற்றும் அவரது மாமனார் (கோசலா) சண்முகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற முகவர் கூட்டத்தில் தன்னம்பிக்கையுடன் நான் மேடையேறியது கண்டு அண்ணன் முகத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் மேலிட்டது !

 

உப்புக்குச் சப்பாணியென வர்ணிக்கப் பட்டதால் தூண்டப்பட்ட தன்மான உணர்வே என்னால் சிறிதளவேனும் சாதிக்கத் தூண்டியதெனவும், சாதிக்க உதவிய அண்ணனுக்கு நன்றியெனவும் மேடையில் கூறியது அண்ணனுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது..


மருந்தளவேனும் அழுக்காறில்லாத வெள்ளை உள்ளம் கொண்ட அண்ணன் எனது முன்னேற்றத்தைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார். அவரது நெருங்கிய நண்பர்களான தாணு அண்ணன், குமாரசாமி அண்ணன் ,மோகனன் அண்ணன்,மதுவைப் போலவே அவருடைய நெருங்கிய நட்பு வட்டத்திற்குள் நானும் இருந்தது எனக்குப் பெருமை !

 

எண்ணெயில் வறுத்த அசைவ உணவுகளின் தீவிரப் பக்தரான அண்ணனின் அயராத உழைப்பும், விடாத சைக்கிள் மற்றும் நீச்சல் பயிற்சியும் அவரது தொந்தியின் அளவைக் குறைக்க உதவவில்லை.தனிப்பட்ட விசயங்களையும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளும் அண்ணனது குடும்பத்தினரும் எங்கள் பால் மிகுந்த அன்பு கொண்டவர்கள் !

 

கடுமையான உழைப்பு, சிறந்த சேவையென தூய உள்ளத்திற்கு சொந்தக்காரரான அண்ணன் பணி ஓய்வு பெற்று ஓராண்டிலேயே மாரடைப்பின் காரணமாக இறைவனடி சேர்ந்தது எங்கள் ஊருக்கே பேரிழப்பு. அவருக்கென பறக்கை மக்கள் மனதில் இருக்கும் சிம்மாசனம் இன்றளவிலும் காலியாகவே உள்ளது !


--------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை

தி.சேதுமாதவன்

[sethumathavan2021@gmail.com]

கூடுதல் ஆட்சியர்

I.T.I. முகநூற் குழுமம்

{30-01-2021}

----------------------------------------------------------------------

 


அந்நாளை நினைக்கையிலே (18) சீக்காமடத்தெரு ஆண்டார் பிள்ளை தாத்தா !


காய்ச்சல் காரர்களுக்கு துளசி, ஆடாதோடை, கருப்பட்டி, சுக்கு , நல்லமிளகு கலந்த சூடான கசாயம் அருமருந்தானது போன்றே, அஜீரணத்திற்கு இஞ்சி- உப்பு கலந்த கரைசலும் ஓமத்தீனீரும் மருந்தானது. மாதமொரு முறை உட்கொண்ட ஆமணக்கு எண்ணெய் பூச்சிகளிடமிருந்து வயிற்றைப் பாதுகாத்தது !

 

விடுமுறை நாட்களை உபயோகமாக விளையாடிக் கழித்து , வீட்டுப் பாடங்களைப் பூர்த்தி செய்யாது ஆசிரியரின் தண்டப் பிரயோகத்திற்கஞ்சி சோகமாக முகத்தை வைத்து காய்ச்சலென நடித்தாலும் நெற்றியைத் தொட்டு உண்மை கண்டறிந்து பள்ளிக்கு துரத்தி விடுவார் அம்மா.பொய் சொன்ன பாவத்திற்கு அன்றைய இரவு காய்ச்சல் கசாயம் தவறாமல் புகட்டப்படும் !

 

ஒற்றைத் தலைவலிக்கு நெற்றியில் தேய்க்க இரத்தச் சந்தனம். கக்கொட்டிக்கு (கண் நோய்) கண்ணில் ஊற்ற பக்கத்து வீட்டு பாலூட்டும் தாயிடம் சிறு சங்கில் பெற்ற பால், மஞ்சள் காமாலைக்கு முற்றத்தில் முளைத்த கீழாநெல்லி , பல் வலிக்கு ஈறுகளை மரக்கச் செய்யும் கிராம்பு , தலைக்கு தேய்த்துக் குளிக்க குளிர்ச்சியான கொடுப்பை, கையாந்தலை, பூவும் குறுந்தல், கறிவேப்பிலைச் சாறு, மருதாணி கலந்த காய்ச்சிய நறுமணமிக்க தேங்காய் எண்ணெய் என கைக்கெட்டும் தூரத்தில் கிடைத்த இயற்கை வரங்கள் !

 

வாரமொரு முறை தலைக்கு சீகைக்காய் தேய்த்துக் குளிக்கும் பெண்கள் சில வேளைகளில் செம்பருத்தி இலைகளுடன் பூக்களின் சாறெடுத்து தலைக்குத் தேய்த்துக் குளிப்பதுமுண்டு !

 

அக்கரை சிவனை வழிபடக் கோயிலுக்குச் செல்பவர்கள் வயல் வரப்பில் செழிப்புடன் வளர்ந்து நிற்கும் வைட்டமின் ஏ நிறைந்த கொடுப்பைக் கீரையையும், ஆரைக் கீரையையும், வயிற்றுப் புண்ணாற்றுவதுடன் மறதிக்கு அருமருந்தான வல்லாரை யையும் வீட்டிற்கு எடுத்து வருவர் !

 

தோசை உண்டவுடன் வாந்தியெடுக்கும் குழந்தைகளைக் கொதிக்குத் தொடும் பொருட்டு சீக்காமடத்தெரு ஆண்டார் பிள்ளை தாத்தாவிடமும், தெற்கு கிராமம் முத்துராமண்ணனின் அம்மாவிடமும் அதிகாலையில் தோசையுடன் அழைத்துச் சென்று வெறும் வயிற்றில் அவர்களால் ஓதப்பட்ட பின் பாதிக்கப் பட்டவர் சீரடைவதற்கும் ஓதியவர் வாந்தியெடுப்பதற்கும் விஞ்ஞான விளக்கம் கிடையாது !

 

உடல் சூட்டினால் ஏற்படும் வேனல் கட்டி மீது சங்கு புஷ்ப இலைச் சாறு ஊற்றப்பட்ட தூய வெள்ளைத் துணியை ஒட்டி விடுவார்கள். கட்டி பெரிதாகி குவிந்த பின்னர் உயிலை இலைச் சாறு கலந்த துணியைக் கட்டி மீது ஒட்டும் போது பக்க விளைவுகளாக உளைச்சலும் காய்ச்சலும் தோன்றினாலும் மறுநாளே புண்ணிலிருந்து சீழ் முழுமையாக வெளியேறி விடும் !

 

தெப்பக்குளத்தில் பலமுறை நீராடித் தலை துவட்டிய கால்சட்டையை அணிந்து ஈரப் பதத்தில் பராமரிக்கப் படுகின்ற சிறுவர்களின் பின் புறத்தில் தோன்றும் சொறி சிரங்குகளைப் போக்க குப்பைமேனி இலையுடன் கொச்சங்காயை அரைத்து அலறும் படியாக அம்மாக்கள் தேய்த்தேடுத்து விடுவார்கள் !

 

சிறு உபாதைகளுக்கு மருத்துவமனைக்குப் படையெடுக்கும் வழக்கமின்மைக்கு மாசுபடா காற்று, தூய உணவு , உதவுகின்ற கிராமத்து உறவுகள், செருப்பில்லா நடைப் பயணம் , குளத்தில் நீந்திக் குளித்தல் ,மன அழுத்தமற்ற வாழ்க்கை, மாதமொரு முறை நல்லெண்ணெய் குளியல், பசித்தவுடன் புசித்தல், உடல் உழைப்பு தந்த அசதியின் கொடையாக சுக நித்திரை,பாட்டி வைத்தியம் இவையனைத்தும் ஈந்த எதிர்ப்பு சக்தி ஆகியவையே காரணிகள் !

 

எனது பெரிய மாமாவிற்கு ஒரு முறை இரவில் ஏற்பட்ட விக்கல் தண்ணீர் நிறைய அருந்திய பின்னரும் சீரடையாததால் , மாரடைப்பின் அறிகுறியாக இருக்கக் கூடுமென கணேசன் அண்ணனால் சந்தேகம் எழுப்பப்பட்டது !

 

மாமாவின் நண்பரான ஆயுர்வேத வைத்தியர் கிருஷ்ண பிள்ளை, அடுப்பில் சூடாக்கிய வாணலியில் போட்ட கடுகு நன்கு பொரிந்த பின்னர் ஊற்றிய தண்ணீரைக் குடித்ததும் நின்று விட்டால் அது சாதாரண விக்கலெனவும், இல்லையேல் இதயநோய் நிபுணரை உடன் அணுகும் படியும் கூறினார். எனது மாமாவின் விக்கல் இரண்டாவது வகையிலானது !

 

பாரம்பரியமாக பாதுகாக்கப் பட்டு வந்த பழங்கால ஓலைச்சுவடிகள் குழித்துறையருகில் பாகோடு என்ற கிராமத்தில் பரம்பரை வைத்தியரான எங்கள் முப்பாட்டனாரின் மரணத்திற்குப் பின்னர், கறையான் அரித்து விடக்கூடுமென்ற அறியாமை காரணமாக அவ்வீட்டில் வசித்த அறிவு ஜீவிகளால் வெந்நீருக்கு எரிபொருளானது. பாம்புக் கடியிலிருந்து பல உயிர்களை மீட்டு வாழும் தெய்வமாகப் புகழப் பெற்ற பாட்டாவின் ஆயுளோடு பண்டைய ஆயுர்வேத மருத்துவக் குறிப்புகளின் ஆயுளும் இனிதே முடிவுற்றது !


----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை


 

தி.சேதுமாதவன்

[sethumathavan2021@gmail.com]

கூடுதல் ஆட்சியர்

I.T.I. முகநூற் குழுமம்

{23-01-2021}

----------------------------------------------------------------------------------

 

சனி, 13 பிப்ரவரி, 2021

அந்நாளை நினைக்கையிலே (17) வெள்ளை ஜிப்பாக்கார மத்தியாஸ் தாத்தா !


1970 கால கட்டங்களில் ஊரிலுள்ள எவரேனும் உடல் நலம் பாதிக்கப்பட்டால் பறக்கை சந்திப்பிலுள்ள எழுபதைக் கடந்த பெருந்தலைவரைப் போன்ற கம்பீரத்தோற்றமுடைய வெள்ளை ஜிப்பாக்கார மத்தியாஸ் தாத்தாவிடம் செல்வது வழக்கம்.


ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சையளித்து வந்த மருந்தாளுனராகிய தாத்தா நாடி பார்த்துக் கணிப்பதில் வல்லவர். நாடி பிடித்து நோய் கண்டறிதலில் சிறந்தவரான மற்றொருவர் கட்டைப் பிரம்மச்சாரியான பேதுரு தாத்தா.இவர் ஆயுர்வேத வைத்தியர் மட்டுமன்றி ஆஞ்சனேய சித்தி கொண்டவரும் கூட !

 

ஊரில் சிறுமிகள் எவரேனும் செவ்வாய்- வெள்ளிக் கிழமைகளில் கண்களை உருட்டிக் கண்டபடி பிதற்றிய மறு நிமிடம் பேதுரு தாத்தா மிதிவண்டியில் அழைத்து வரப்பட்டு வெற்றிலையில் மை தடவ, சுற்றியிருக்கும் சிறு குழந்தைகளின் வாயிலாக வெற்றிலைத் திரையில் காண்கின்ற காட்சியை விவரித்து விடுவார் !

 

கோலுக்குட்டி எனச் செல்லமாக அழைக்கப் படுகின்ற குமார பிள்ளை மாமா மேலாங்கோட்டு அம்மன் கோவிலில் சாமி ஆடுவார். பேதுரு தாத்தாவின் மறைவுக்குப் பின்னர் சிறுவர் சிறுமிகளுக்கு ஏற்படும் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பவர் அவரே.


மறைந்த கன்னிகைகளுக்கு சிறுகோவில் கட்டி வழிபடும் வீடுகளின் முன்பு செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் தலை நிறைய மல்லிகைப்பூவுடன் செல்லக் கூடாதென அறிவுறுத்துவார். !

 

நமது சிற்றறிவுக்கு அப்பாற்பட்ட பல விஷயங்களைச் மிகச்சரியாக கணித்துச் சொல்கின்ற மாமா தனது சேவைக்கு பேதுரு தாத்தாவைப் போன்றே தட்சிணை தவிர வேறெதுவும் பெற்றுக் கொள்வதில்லை.


மருந்துகள் நிறைத்த பல வண்ணக் குப்பிகளிலிருந்து அடிவயிற்றைக் குமட்டும் ஒரு மருந்தை சிறு குப்பியில் பகர்ந்து நோயாளிகளுக்கு கொடுக்கும் மத்தியாஸ் தாத்தா மிக அபூர்வமாக தனது ஆணி போன்ற ஊசியைப் போட்டு பின் பக்கத்தை பதம் பார்த்து விடுவார். அழுகின்ற குழந்தைகளின் வாயடைக்க அக்காலத்தில் தாத்தாவின் பெயர் பயன்பட்டது !

 

குழந்தையை மடியில் படுக்க வைத்து கால் கைகளை இருவர் பிடித்துக் கொள்ள , முனை மழுங்கிய சிறு சங்கில் ஊற்றப்பட்ட தாத்தாவின் குமட்டு மருந்தை குழந்தை உமிழ்ந்து விடாமலிருக்க நாக்கை அமுக்கி மூக்கைப் பிடித்து தீவிரவாதிகளை விடக் கொடுமையாக ஊட்டி விட்டதனால் பாதிக்கப் பட்டவர்களில் அடியேனும் ஒருவன்.


வன்கொடுமை மூலம் புகட்டப் படும் காய்ச்சல் மருந்தை ஊட்டியவரின் முகத்திலேயே உமிழ்ந்து விடும் என் தம்பியை மீண்டும் மடியில் படுக்க வைத்து கொடுமைப்படுத்தும் பாட்டியை கோபத்தில் நான் கிள்ளி விட்டதுண்டு !

 

சுசீந்திரத்திலுள்ள பாரம்பரியமிக்க வட்டப் பள்ளி மடத்திற்கு ஆயுர்வேத சிகிச்சையின் பொருட்டு எங்கள் ஊரிலிருந்து செல்லும் தாத்தா பாட்டிகள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாதென்ற வைத்தியரின் கடும் நிபந்தனையை தெப்பக்குளத்தில் இருமுறை குளிப்பதன் வாயிலாக அனுசரிப்பர் !

 

புளித்த உணவு, மீன் தவிர்க்க வேண்டுமென்ற நிபந்தனை பழைய கஞ்சி ,புளித்த பசுமோர், வறுத்தரைத்த மீன்கறியுடன் உண்பதன் வாயிலாக தவறாமல் மீறப்படும். பத்தியங்களை புறந்தள்ளிய பின்னரும் பிணி நீங்கா மூட்டு வலித் தாத்தாக்கள் வலி குறையவில்லையென திண்ணையிலமர்ந்து அங்கலாய்த்து முட்டுகளைத் தடவிய படியே இருப்பினும் வைத்தியர் கூறுகின்ற தியாகங்களுக்கு ஒரு போதும் தயாராவதில்லை !

 

மூட்டு வலிக்கு தடவி ஆவி பிடிக்க கொட்டஞ் சுக்காதித் தைலமும் விழுப்புண்களுக்குத் தடவ நாகர்கோவில் கோபாலன் ஆசான் கடையில் வாங்கப்பட்ட காயத்திருமேனித்தைலமும் அனைத்து இல்லங்களிலும் தவறாமல் இருப்பு வைத்திருக்கப்படும். ஒரு விரலை மட்டும் குப்பியினுள் செலுத்தி லேசாக எடுத்த எண்ணயை காலுக்குத் தேய்த்து மருந்தின் அளவு குறையாமல் பராமரிப்பார்கள் !

 

சிறு குழந்தைகளுக்கு உடலில் அக்கி ( புண்கள்) ஏற்பட்டால் இடலாக்குடி பட்டினம் வைத்தியரிடம் அழைத்துச் செல்வர். அவர் வழங்கும் கசாயமும் கோழி இறகால் தடவப்படும் சிரங்குத் தைலமும் எப்படிப்பட்ட சிரங்குகளையும் குணப்படுத்திவிட வல்லது !

 

கை கால் முறிவுக்கு இருக்கவே இருக்கிறார் மாஞ்சாங்குடி வைத்தியர். எலும்பு முறிவுகளையும் தசைச் சிதைவுகளையும் கையால் தடவியறிந்து அதன் தீவிரத்திற்கேற்றபடி முறிந்த கால், கை எலும்புகளை பனை மட்டையால் கட்டி மருந்தெண்ணெய் கலந்த துணியால் கட்டுப் போட்டு எளிதில் குணப்படுத்தி விடுவதால் வெளி மாவட்ட - மாநில நோயாளிகள் அதிகம் !

 

சிறு முறிவுகளுடன் வருபவர்களின் கையில் எண்ணெய் தடவி எம்.ஜி.ஆர் பட வில்லனைப் போன்று சட்டெனக் கையை முறுக்கி பாதிக்கப்பட்டவர் எதிர்பாரா தருணத்தில் அலற வைத்து சட்டென சுளுக்கெடுத்த பின் ஐந்து நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தி அனுப்பி விடுவர் !

 

பெரும்பாலான நோய்களுக்கு அக்காலத்தில் பாட்டி வைத்தியம் கைகொடுத்தது. சிறிய வயிற்றுப்போக்குக்கு பசு மோரில் பெருங்காயத்தைக் கலக்கி உப்பு சேர்த்துக் குடிக்க செய்வதுண்டு.கடுமையான வயிற்றுப்போக்குக்கு மாங்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பைப் பொடி செய்து கட்டித் தயிரில் கலக்கி குடிக்கச் செய்வார்கள் !

 

இதே மாங்கொட்டைப் பொடி தொண்ணூறுகளில் டயோகேப் என்ற பெயரில் விற்பனைக்கு வந்ததுடன் நல்ல பலனையும் அளித்தது. பக்க விளைவுகளற்ற விலை குறைந்த அம்மருந்து ஓரிரண்டு ஆண்டுகளிலேயே சந்தைக்கு வருவது நின்று விட்டது !

 

-------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை


 தி.சேதுமாதவன்

[sethumathavan2021@gmail.com]

கூடுதல் ஆட்சியர்

முகநூற் குழுமம்

{20-01-2021}

-------------------------------------------------------------------------------------------