மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

சனி, 13 பிப்ரவரி, 2021

அந்நாளை நினைக்கையிலே (15) சாமிய பிணயம் வெச்சு பிரச்சினை பண்ணாதீங்க !


எங்கள் ஊர் பங்குனித் திருவிழாவில் ஒன்று, ஐந்து,ஒன்பது மற்றும் பத்தாம் திருவிழாவிற்கான செலவினங்கள் ஏனைய தினங்களை ஒப்பிடுகையில் சற்றே அதிகம். கருட பகவான் கண் திறக்கும் ஐந்தாம் திருவிழாச் செலவினங்கள் ஊர் விவசாயிகள் புரவுக் கமிட்டியாலும் ,மேடை நிகழ்ச்சிகள் விழாக் குழுவினராலும் _மேற்கொள்ளப் படுவதால் ஸ்ரீ காரியம் இது குறித்து கவலை கொள்வதில்லை !

 

ஒன்பதாம் நாள் தேர்த் திருவிழா மற்றும் பத்தாம் நாள் ஆராட்டு வைபவ செலவினங்கள் கோவில் நிர்வாகத்திற்கு பாரமானவை. திருக்கோவிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள பள்ளம் ஆராட்டுத்துறைக்கு வெள்ளிக் கருட வாகனத்தில் எழுந்தருளிய அருள் மிகு மதுசூதனப் பெருமாள் போற்றிமார்களால் தாங்கப்பட்டு கடலில் ஆராடி முடிந்து மேள தாளத்துடன் வழியெங்கும் பக்தர்களின் திருக்கஞ்சார்த்தை ஏற்று திருக்கோவில் திரும்ப அதிகாலை மணி இரண்டு ஆகி விடும்  !

 

சந்தனம் அரைத்துக் காய்த்த கைகள்,பரந்த தோள்கள், விரிந்த மார்பு, உரமேறிய உடல் கொண்ட பத்து போற்றிமார்கள் சுழற்சி முறையில் சுமந்து சுறுசுறுப்புடன் திரும்புவார்கள். ஆராட்டு வாகனம் கோவிலுக்கு திரும்பிய பின்னர் வழங்கப்படும் ஊதியத்தில் திருப்தியடையாத போற்றிமார்கள் ஸ்ரீ காரியத்துடன் விவாதம் செய்வது ஆண்டு தவறாமல் நடைபெறும் ஓர் வைபவமே !

 

அப்பாவுக்கு பரிச்சமானவர்களென்ற எண்ணத்தில் இடியாப்பச் சிக்கலான பணப்பட்டுவாடாவை புத்திசாலித்தனமாக அப்பாவிடம் ஒப்படைத்து விடுவது ஸ்ரீ காரியத்தின் வழக்கம். பேருந்து நடத்துனர் என்ற முறையில் அப்பாவுக்கு பள்ளம் கடற்கரையை ஒட்டி நண்பர்கள் அதிகம். ஆராட்டு வாகனத்தை தோளில் தாங்கும் முன்னரே ஊதிய உயர்வு கோரி வழக்கிட்ட போற்றிமார்கள் பள்ளம் துறையில் ஆராட்டு முடிந்த பின்னர் பணி நிறுத்தம் செய்யக் கூடுமென்ற இரகசியத் தகவல் சுசீந்திரத்தைச் சேர்ந்த அப்பாவின் நண்பரான ஸ்ரீகாரியத்தால் சூசகமாகத் தெரிவிக்கப்பட்டது !

 

இறை நாட்டம் காரணமாக பணி நிறுத்தத்திற்கு உடன்படாத அப்பாவின் நெருங்கிய நண்பர் மாணிப் போற்றி , ஸ்ரீ காரியத்தின் சந்தேகத்தை உறுதிப்படுத்தவே, வெள்ளிக்கருட வாகனத்தின் முன்னால் வழக்கமாக நடந்து செல்கின்ற அப்பா , சில முன்னேற்பாடுகளின் பொருட்டு பள்ளம் துறைக்கு முன்னதாகவே சென்று விட்டார் !

 

ஆர்ப்பரிக்கும் அலைகளிடையே கருட பகவான் வானில் வட்டமிட நீராடி முடித்து கடற்கரையில் வேயப்பட்ட சிறு ஓலைப் பந்தலில் மஞ்சள் தூள் அபிஷேகத்திற்குப் பின் தீபாராதனை முடிந்தபிறகு ஆராட்டு மண்டபத்திற்கு சென்றார் உற்சவரான பெருமாள் !

 

பந்தலைப் பிரித்து ஓலைகளை எடுத்துச் செல்லும் மீனவர்களைக் கலைக்க சில தருணங்களில் காவல்துறையினர் தடியடி நடத்துவதுண்டு. ஆராட்டு மண்டபத்தில் சுத்த நீர் அபிஷேகம், பூஜைகள் முடிவுற்ற பின்னர் வெள்ளிக் கருட வாகனத்தில் பெருமாள் கிளம்பத் தயார் நிலையில் இருக்கவே "வாகனத்தை எடுங்க " என்ற குரல் கொடுத்த அப்பாவுக்கு. "எடுக்க முடியாது" என்ற‌ எதிர்ப்புக்குரல் இளம் போராளி ஒருவரிடமிருந்து வெளிப்பட்டது !

 

"ஊருக்குத் திரும்பிய பிறகு பேசிக்கொள்ளலாம். வாகனத்தை எடுங்கள்" என்ற அப்பாவின் கட்டளைக்கு " உங்க சோலிய நீங்க பாருங்க அண்ணாச்சி" என வெளியூர் கார இளவயது போற்றி ஒருவர் குரல் கொடுத்தார் !

 

எங்க அண்ணாச்சி சொல்றத கேளுங்க. சாமிய பிணயம் வெச்சு பிரச்சினை பண்ணாதீங்க " எனக் கண்டிப்புடன் கூறிய உள்ளூர் மீனவர்கள் கையில் கையடக்க ஆயுதமான திரைச்சி வால் மறைந்திருந்தது. "பிரச்சினை ஒண்ணுமில்ல. சாமிய அவங்க எடுப்பாங்க" என அப்பா கூறியவுடனே மீனவ நண்பர்கள் அமைதியடைய, தங்கள் திட்டத்தை முறியடித்த அப்பாவை மனதிற்குள் திட்டியவாறு வாகனத்தை எடுத்தார்கள் !

 

திருவுலா முடிந்து வாகனம் இறங்கிய அதிகாலை வேளையில் ஸ்ரீகாரியம் வழங்கிய தொகையுடன் விழாக்குழு அனுமதியுடன் போற்றிமார்கள் கோரிய அதிகத் தொகையைக் கொடுத்த பின்னர், "இறைவனைத் தாங்கும் பேறு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கோரிக்கைகளை வென்றெடுக்க போராட்டம் தேவையெனினும், இறைப்பணியில் சமரசமும் தேவை " என தொழிற்சங்க அனுபவம் மிக்க அப்பா இளம் போற்றிமார்களுக்கு அறிவுரை கூறினார் !

 

கிடைக்கவிருந்த மிகை ஊதியம், பணி நிறுத்தத்தை குலைத்ததன் வாயிலாக தடுக்கப் பட்டு விட்டதாக , வாகனம் சுமந்த அசதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இளம் போற்றிமார்கள் குறைப்பட்டுக் கொண்டனர் !

 

மறுநாள் அப்பா சற்று ஓய்வாக இருக்கும் போது " சில விஷயங்கள் உங்களிடம் பேச வேண்டும்" எனக் கூறிய என்னை புருவங்கள் விரிய நோக்கினார் அப்பா. சிறு வயதில் நேரில் நிற்கத் தயங்கும் தனது மகனுக்கு பதினெட்டு வயது தந்த துணிச்சல் ஆச்சரியத்தை அளித்திருக்கக் கூடும் !

 

வருடம் தவறாமல் வருகை தந்து இறைவனை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்த பின்னர் பணியைத் துவங்குகின்ற போற்றிமார்களின் பணிநிறுத்தம் , கோவில் நிர்வாகத்திடமிருந்து அதிக ஊதியத்தை பெறும் பொருட்டானது. மிகக் குறைந்த மாத வருமானமுடைய - இறைப் பணியையே பிழைப்பாகக் கொண்ட போற்றிமார்கள் தங்கள் குடும்பத்தைக் கரையேற்ற வருடமொரு முறை கிடைக்கின்ற இவ்வருமானம் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது !

 

அரைமணி நேரத்திற்கு மேல் பணி நிறுத்தத்தைத் தொடர இறை பக்தி அவர்களை நிச்சயமாக அனுமதிக்காது. உங்களைப் போன்றே தொழிலாளி வர்க்கத்தினரான அவர்களது அடிப்படை உரிமையை சிதைக்க இனி கோவில் நிர்வாகத்திற்கு துணை போதல் பாவமென்ற ' அழுத்தமான எனது கருத்தை அடுத்த திருவிழாவில் செயல் படுத்தினார் அப்பா !

 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

தி.சேதுமாதவன்

[sethumathavan2021@gmail.com]

கூடுதல் ஆட்சியர்

I.T.I.முகநூற் குழுமம்

{13-01-2021}

----------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக