மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

திங்கள், 28 பிப்ரவரி, 2022

அந்நாளை நினைக்கையிலே (46) அய்யர் கடை வேலுப்பிள்ளை மாமா !

 

காடேற்றி, கக்கன்புதூர், புல்லுவிளை ஆகிய பக்கத்து கிராமங்களிலிருந்து இயற்கை உரத்தில் உற்பத்தியான தரமான பேயன்பழம், ஏத்தன், மட்டி, செந்துழுவன், கதலி மற்றும் பாளையங்கோட்டை என வகைவகையான வாழைக் குலைகள் (தார்கள்) அய்யர் கடையில் எப்போதும் கிடைக்கும் !

 

வாழைப் பழங்களுக்கு சற்று அதிக விலை கோரும் அய்யரிடம் 'உங்கள் பழங்களுக்கு மட்டும் அப்படி என்ன கிராக்கி ' என வினவுவோருண்டு !

 

வாழையிலேயே நின்று விளைந்து பழுத்த 'தன்பழம்' என்பதாலேயே அதிக விலையெனத் தன்னிலை விளக்கமளிக்கும் அய்யரிடம்,  மாலை நேரம் கடைமுன் நின்று பேச்சிற்கிடையே கையால் சைகை காட்டி "சாமி ! உம்மகிட்ட தன்பழம் கெடக்கா" என நையாண்டி செய்யும் சசியை "சவத்துக்குப் பொறந்த பய" என நாக்கைத் துருத்தி விரட்டுகின்ற அய்யரிடம் பத்தே நிமிடங்களில் ஒன்றும் நடவாதது போல் மீண்டும் வந்து நின்று கதை விடும் அளவு 'மிக்கி- மவுஸ்' உறவு அவர்களுடையது !

 

அடாது விரட்டினாலும் வாடிக்கையாளர்கள் விட்டுச் செல்லும் பழத் தோலுக்காக கடை முன் தவம் கிடக்கும் பசுக்களுடன், மிட்டாய் குப்பிகளை கண்ணால் மேய்ந்த பின் ஒரு காசுக்கு கல்கோனா வாங்கிச் செல்ல தீர்மானிக்கும் சிறுவர்களை கடையருகே அண்டவிடாது துரத்தும் சுடலைக்கு நேர்ந்த வளைந்த கொம்புகளுடைய சண்டியர் ஆடுகளையும் கடைமுன் காணலாம்!

 

தனது மகன் இராஜுவை பட்டப்பெயரால் கோபத்தில் திட்டுகின்ற அய்யருக்கு, மகனின் நண்பர்கள் அங்ஙனம் அழைப்பது ஒவ்வாதென்பதைத் தெரிந்தே "கருப்பட்டி இருக்கானா" எனக் குசலம் விசாரித்து அய்யரை துர்வாசராக்குவது தெற்குத் தெரு நீலகண்ட அய்யர் மகன் நண்பன் வரதராஜனுக்கு பிடித்தமான பொழுதுபோக்குபட்டப்பெயரில் நண்பர்களால் அழைக்கப் படுவதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் நண்பன் ராஜுவுக்கு எப்போதும் உண்டு. !

 

"ரெண்டு அனாவசியம் குடுங்க சாமி" எனக்கோரும் அப்பாவிப் பெண்களிடம் நாக்கைத் துருத்தி கையால் தலையிலடித்த பின் ஔஷதப் பெட்டியிலிருந்து அனாசின் எடுத்துக் கொடுக்கும் அய்யர், ஆஸ்ப்ரோ, பாரசிட்டமால், என்ரோகுயினால், குளோரோஸ்டெப், ஆன்டி டெட்ராசைக்லின், அல்பென்டசோல் அமிர்தாஞ்சன், அஞ்சால் அலுப்பு மருந்து, ஓமத்திராவகம் , காயத்திருமேனி ஆகியவற்றை தேவையறிந்து வழங்கும் அவசர கால மருத்துவர் !

 

தான் வழங்கும் மருந்துகள் அவசர உதவிக்கானவையெனவும், மருத்துவரை அணுகுமாறும் பலத்த நோய் அறிகுறிகள் உள்ளோரிடம் எச்சரிப்பது அவரது வழக்கம் !

 

எவரிடமும் வம்புக்குப் போகாத நல்ல மனிதரான கடை அய்யர், இளைய மகன் இராஜுவிடம் அளவற்ற அன்பு கொண்டவரென்பதை மிகவும் பெருமையாக அவனைக் குறித்து எங்களிடம் பேசுவதிலிருந்து அறிந்து கொள்ளவியலும். இருப்பினும் அன்றைய காலத் தந்தைகளைப் போல மகனிடம் பாசத்தை வெளிக்காட்டாத மனிதரவர் !

 

புரட்டாசி சனிக்கிழமைகளில் சங்கரும் பக்கத்து வீட்டு கோபிநாதன் மாமா இளைய மகன் ராஜேஷும், தொழில் முனைவோர் ஆகிவிடுவது வழக்கம். அய்யர் கடையில் பத்து ரூபாய்க்கு சூடம் வாங்கி அதை இருபது சிறு பொதிகளாக்கி கோட்டாறிலிருந்து வாங்கி வைத்திருக்கும் நறுமணத் திரவியத்தை திருக்கிணற்றுத் தண்ணீருடன் பாத்திரத்தில் கலந்து சிறு குப்பிகளில் ஊற்றி பன்னீராக உருமாற்றி தங்கள் நண்பர்களையே ஒரு ரூபாய் சம்பளத்தில் தற்காலிகப் பணியமர்த்தி ஒவ்வொரு தெருமுனையிலும் விற்க வைத்து விடுவார்கள் !

 

திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுடன் சிறிது தூரம் பேசிய படியே நடந்து பொருட்களை வாங்க வைத்து விடுவது இவர்களுக்கு கைவந்த கலை.தேங்காய், பழம் வெற்றிலை, பாக்கு வாங்க விழையும் பக்தர்களை அய்யர் கடைமுன் நிறுத்தி அய்யர் கருணைக்கு ஆளாகி விடுகின்ற இச்சிறுவர்கள், துளசி மாலைகளின் மேல் தண்ணீர் தெளித்து கோவில் முன் வாடாமாலை விற்கின்ற மணி அண்ணனிடம் ரொக்கமாக காசைக் கொடுத்து பத்து மாலைகளை பதினேழு ரூபாய்க்கு கொள்முதல் செய்து மாலையொன்றுக்கு இரண்டு ரூபாய் வைத்து விற்று விடுவதுண்டு !

 

"நீங்க நெனச்ச காரியம் நடக்கும்மா. பெருமாளுக்கு துளசி மாலை வாங்கிட்டு போங்க" எனப் பெண்களை உணர்வுபூர்வமாக அணுகி கிடைக்கின்ற இலாபத்தை பாழாக்காமல் தங்கள் அம்மாவிடம் கொடுக்கின்ற இவர்கள் அடுத்த பண்டிகை வியாபாரத்திற்கான பணப்பதுக்கலுக்கு மட்டுமே பாடப்புத்தகங்களை பயன்படுத்துவது வழக்கம் !

 

கடை அய்யரின் இரு மக்களும் அரசு வேலைகளில் இணைந்த பின் வயது மூப்பு காரணமாக வியாபாரத்தை சரிவர நடத்தவியலாததால் அவரது வலங்கையான வேலுப்பிள்ளை மாமா பறக்கை சந்திப்பிலுள்ள ஜெ.பி.ஸ்டோர்ஸில் பணியில் இணைந்தார் !

 

கையில் காசு கிடைத்தவுடன் கல்கோனா, தேன் மிட்டாய், கடலை மிட்டாய் வாங்க அந்நாளில் அய்யர் கடைக்கு விரைந்தவர்களும் , தீபாவளித் திருநாளன்று இருப்பிலுள்ள பட்டாசுகளை காலி செய்த பின் அவசரத் தேவைகளுக்காக பொட்டு வெடி, கேப் வெடி, எறப்படக்கு, ஓலப்படக்கு வாங்கி வெடித்து அக்கம் பக்கத்திலுள்ள பெரியவர்களின் நிம்மதியைக் கெடுத்த அந்நாள் சிறுவர்களும் அய்யர் கடையை ஒரு போதும் மறக்கவியலாது !

 

 -----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்,

(sethumathavan2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப்புலம்” வலைப்பூ,

{22-01-2022}

------------------------------------------------------------------------------------------

அந்நாளை நினைக்கையிலே (45) மேலத்தெரு அய்யர் கடை !


எனது சிறு பருவத்தில் மேலத்தெருவில் அய்யர் கடையும் (நண்பன் ராஜுவின் அப்பா ) கண்ண ஜனார்த்தனன் அண்ணன் கடையும் ஓரளவு வெற்றிகரமாக இயங்கி வந்த பலசரக்கு கடைகள். பறக்கை சந்திப்பில் நண்பர் சக்திவேலின் அப்பா (பாண்டிகாரர்) கடையும் மாமூட்டிலுள்ள ஒரு கடையுமாக இரு பலசரக்கு கடைகள் மட்டுமே செயல்பட்டு வந்தன !

 

ஜெ.பி.ஸ்டோர் என்ற ஜெய்னுலாப்தீன்- பகவதியப்பன் ஸ்டோர் (தற்போதைய தீபா ஸ்டோர் )சில ஆண்டுகளுக்குப் பின்னரே துவங்கப்பட்டது. வணிகர் தெருவில் மூக்கண்ணன் கடையும் (கிருஷ்ண மூர்த்தி ஸ்டோர்) துர்க்கை அம்மன் கோவிலருகே மற்றொரு பலசரக்கு கடையும் இயங்கி வந்தன !.

 

அய்யர் கடையில் (திரு. முத்து கிருஷ்ணன்) காலை நேரத்தில் ஐந்து காசுக்கு காபி வில்லையும் பத்து காசுக்கு கருப்புக் கட்டி வாங்குவதற்கு ஒரு கூட்டம் காத்து நிற்கும். காடேற்றி, கக்கன்சேரிக் காரர்களுக்கு தெற்குத் தெருவில் கடைகளேதும் இல்லாததால் பொருட்கள் வாங்க அய்யர் கடைக்கு வந்தாக வேண்டிய நிலை !

 

வெத்திலை பாக்கு, சொக்கலால் பீடி, அஞ்சு பூ பீடி, கோபால் பல் பொடி வாங்க நிற்கும் நடுத்தர வயதினரையும் , நன்கு பரிச்சயமானவர்கள் அகன்ற பின் சிசர்ஸ், சார்மினார், பெர்க்லி சிகரெட்டுகள் வாங்க காத்து நிற்கும் இளைஞர்களையும் காலைநேரம் காணமுடியும். வாடிக்கையாளர்களின் தேவைகளை சமய சந்தர்ப்பமறிந்து பூர்த்தி செய்வதில் கடை அய்யர் கைதேர்ந்தவர் !

 

அன்றைய முக்கிய குளிர்பானங்களான காளி மார்க் சோடாவுக்கும் களச்சி சோடாவுக்கும் வாடிக்கையாளர்கள் அதிகம். பால் பைகள் பலசரக்கு கடைகளுக்கு வராத காலமது. கடைகளின் வாசலில் தோரணங்களாகத் தொங்கிக் கொண்டிருக்கின்ற நவீன கால மல்லிப்பொடி,  மிளகு பொடி, சாம்பார் பொடி, ஆட்டா , மசாலாப் பொடியடங்கிய நெகிழிப் பைகள் அப்போது இல்லை !

 

ஜீரகம், கடுகு, வெந்தயம், பூண்டு, வத்தல் மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் பத்து என அன்றாடத் தேவைகளுக்கு சில்லறையாக வாங்கி வந்த அன்றாடங் காய்ச்சிகளுக்கு அபயமாக இருந்தது அய்யர் கடை மட்டுமே. கொள்முதல் செய்த பொருட்களுக்கான கணக்கை சிகரெட் கவரைக் கிழித்து காதில் சொருகி வைத்திருக்கும் பென்சிலால் வேகமாக குறித்துக் கொடுப்பது அய்யரின் வழக்கம் !

 

முந்நூறு மில்லிலிட்டர் கொள்ளளவு கொண்ட பித்தளை லோட்டா நிறைய கருப்புக் கட்டி காபியோ கொத்தமல்லி காப்பியோ குடித்த பின்னரே காலைக்கடன் கழிக்கச் செல்வோர் அன்று ஏராளம். இரசாயனக் கூடப் பரிசோதனையைப் போன்று காபி வெள்ளை வர்ணம் பெற்றவுடனே பால் ஊற்றுவதை நிறுத்திப் பரிமாறி விடும் அம்மா ஒரு அங்கீகரிக்கப்படாத விஞ்ஞானி!

 

ரொக்கமாக பணத்தைக் கொடுத்து வாங்குவோரை விட கடனுக்கு பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களே நிறைந்திருந்த காரணத்தால் பிரதி மாதம் பத்தாம் தேதிக்குள் கடன்காரர்களை விரட்டி வசூல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் கடை அய்யருக்கு உண்டு. கடனைத் திருப்பிக் கொடுக்காத பலரும் புதிய கடைகளில் வாடிக்கையாளர்களாக மாறி அய்யர் கண்ணில் படாமல் பாதை மாறி சஞ்சரிப்பது வழக்கம் !

 

கண்ணிமைக்கும் நேரத்தில் காகிதத்தில் கூடு செய்து பொருட்களை அளந்து வைத்து தொங்கிக் கொண்டிருக்கும் சணல் கண்டிலிருந்து துச்சாதனன் போல் சணலுருவி வேகமாக பொதிந்து கொடுப்பது அங்கு பணியாற்றி வந்த வேலுப்பிள்ளை மாமாவுக்கே கைவந்த கலை !

 

அய்யர் இல்லாத சந்தர்ப்பங்களில் அய்யரின் மூத்த மகனான சர்மா அண்ணன் கடையைக் கவனித்துக் கொள்வாரெனினும், பிறபணிகளின் பொருட்டு அண்ணன் வெளியே செல்லும் வேளைகளில் தனது தம்பி ராஜுவிடம் கடையை ஒப்படைத்துச் செல்வது வழக்கம் !

 

தன்னுடைய நண்பர்கள்- அதிலும் குறிப்பாக முக்கண்ணன் போற்றி மகன் சசியோ கணேசனோ விளையாட அழைக்கும் சந்தர்ப்பங்களில் விளையாட்டுக்கே முன்னுரிமை கொடுத்து கடையை விட்டு ஓடி விடுகின்ற ராஜுவை கோபம் தலைக்கேற நாக்கைத் துருத்தி "கருப்பட்டி" என திட்டிக் கொண்டு பொருட்களை வீசியெறியும் தந்தையைக் கண்டு கொள்ளாமல் செல்வது ராஜுவின் இயல்பு !

 

அப்பாவிற்கும் மகனுக்குமிடையே ராஜுவின் அம்மா படும் பாடு சொல்லி மாளாது. அய்யருக்கு கோபம் தலைக்கேறும் சந்தர்ப்பங்களை சாதகமாகப் பயன்படுத்தி வாங்கிய பொருட்களுக்கு காசு கொடுக்காமல் கழன்று விடும் பேர்வழிகள் அதிகம். வீட்டில் வாங்கச் சொல்லும் பொருட்களை சற்று அளவு குறைத்து வாங்கி மிஞ்சுகின்ற ஒரணவாவை  கல்கோனா, தேன் மிட்டாய், கடலை மிட்டாய்களாகவும் பொரிகடலையாகவும் உருமாற்றம் செய்யும் சிறுவர் கூட்டம் ஒன்றும் அப்போது உண்டு !

 

பத்து காசுக்கு வாங்கிய வெற்றிலை பாக்கை கடைமுன் ஓரமாக வைக்கப்பட்ட குழவிக்கல்லில் பதமாக இடித்து வாயில் ஒதுக்கி வைத்த பின் போதை நிறைந்த வியாட்பாணம் புகையிலையையும் வாயின் ஓரமாகத் திணித்துக் கடைமுன் நின்று கொண்டு தங்கள் பொக்கை வாய் நண்பர்களிடம் அட்டகாசமாகப் பேசிச் சிரித்து அக்கம்பக்கத்தில் நிற்பவர்களை சிவப்பு மனிதர்களாக்கி விடுகின்ற தாத்தாக்களின் அட்டகாசம் என அய்யர் கடையில் கலகலப்புக்குக் குறைவில்லை !

 ------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்,

(sethumathavan2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப்புலம்” வலைப்பூ,

{15-01-2022}

------------------------------------------------------------------------


  

சனி, 26 பிப்ரவரி, 2022

அந்நாளை நினைக்கையிலே (44) சண்முக மாமா என்னும் ஷாகுல் ஹமீது !

 

அப்பாவின் ஏற்பாட்டில் ஷாகுல் ஹமீது மாமா பக்கத்து வீட்டிற்கு குடி வந்த போது எனது வயது பன்னிரெண்டு. எங்கள் ஊரிலுள்ள கால்நடை மருத்துவமனையில் கம்பவுண்டராக மாறுதலில் வந்த மாமாவின் சொந்த ஊர் இப்போதைய திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி !

 

மாதமொரு முறை மட்டுமே ஊருக்குச் செல்லும் வழக்கமுடைய அகவை ஐம்பதைக் கடந்த மாமா சொந்தச் சமையலில் நாட்களைக் கடத்தி வந்தார். அதிராமல் மெல்லப் பேசும் அவருக்கு சிறுவர்களாகிய நாங்கள் மெல்ல மெல்ல சிநேகிதர்களானோம் !

 

எங்கள் வசதிக்காக 'சண்முக மாமா' என்று விளிக்கத் துவங்கிய நாங்கள், முதல் மரியாதை படத்தில் வருகின்ற நடிகர் திலகத்தைப் போன்ற கால் சட்டையுடன் தெப்பக்குளப் படிக் கட்டிலமர்ந்து செம்பினால் தலையில் அபிஷேகம் செய்து வந்த மாமா குளத்து நீரை குடம் குடமாக குடித்தபின் வெற்றிகரமாக நீந்திய போது நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை !

 

மீன் குஞ்சுகளைப் போன்று குளத்தில் தவழுகின்ற எங்களைப் போலன்றி  நீந்திப் பழக்கமில்லாத அவர் காய்ச்சலில் அவதிப்பட்ட போது சமயம் தவறாமல் சுடு கஞ்சியைக் வற்புறுத்திப் பருக வைத்து நெற்றியில் கைவைத்து கைதேர்ந்த மருத்துவர்களைப் போன்று பண்டுவம் பார்த்த என்னையும் தம்பியையும் பார்த்து கருணை பொங்க விழியோரம் கசிந்த சுடுநீரின் பொருள் எங்களுக்கு விளங்கவில்லை !

 

வில்லை போன்ற வட்ட வடிவ பிரிட்டானியா பிஸ்கட்டுகள் எங்களுக்காக எப்போதும் இருப்பு வைக்கப் பட்டிருக்கும். ஆண்குழந்தைகள் இல்லாத மாமாவுக்கு சிறுவர்களாகிய எங்கள் மீது கொள்ளைப் பிரியம். தொழுகையின் போது தொந்தரவு செய்யக் கூடாதென்று அப்பா அறிவுறுத்தியிருந்ததால், இதர நேரங்களில் விடாமல் அவரை இம்சை செய்வதுண்டு !

 

ஜெயகாந்தன் மற்றும் காண்டேகரின் தீவிர விசிறியான மாமா ஓய்வு நேரத்தில் புத்தகங்கள் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். உயர்தர இலக்கியமாக எங்கள் மனதில் நிறைந்து நின்ற அம்புலி மாமாவைத் தவிர்த்து பிற புத்தகங்களை நாங்கள் சீண்டுவதில்லை. கதை சொல்லித் தருமாறு நிர்ப்பந்திக்கும் போது 'பரமார்த்த குருவும் சீடர்களும்' கதையைச் சிரிக்காமல் கூறி வயிறு குலுங்கச் சிரிக்க வைப்பது மாமாவுக்குக் கைவந்த கலை !

 

பழம் பெரும் பாடகர் பிபி.சீனிவாஸின் தீவிர இரசிகரான மாமா தனது மெல்லிய குரலில் "மனிதனென்பவன் தெய்வமாகலாம்" ,"ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து", "பூஜைக்கு வந்த மலரே வா","ரோஜா மலரே ராஜகுமாரி" போன்ற பாடல்களைப் பக்கத்து வீட்டிற்கு கேட்கா வண்ணம் அற்புதமாகப் பாடுவார் !

 

விடுமுறை நாட்களில் மாமாவின் கைகளைப் பிடித்தபடியே பரந்து விரிந்த வயல்வெளியான தோப்படிப் பத்திற்கும் பாசனக் குளத்திற்குமிடையே அமைந்துள்ள பாதை வழியாக நடந்து சென்று ஆலமரத்தடியில் அமர்ந்து இயற்கையை இரசிப்பது வழக்கம் !

 

நீர் நிறைந்த விசாலமான குளத்தில் பூத்துக் குலுங்கும் ஊதாப் பூக்களுடன் கூடிய ஆகாயத் தாமரைகளுக்கிடையே தலையுயர்த்தி மனிதர்கள் பிடிக்குள் சிக்காமல் சாதுரியமாக மூழ்கி இரைதேடும் நீர்க்கோழிகள், நீர்த் தாவரங்களை விலக்கி மணிக்கணக்கில் நீராடிய பின் உடம்பைச் சொறியும் நிர்வாணச் சிறுவர்கள், வைக்கோலால் தேய்த்து வண்டி மாடுகளை குளிப்பாட்டிய பின் நீராடுகின்ற கோவண தாரி விவசாயிகள்,  குளத்து மேடுகளில் பெரிய அலகுடன் கூட்டமாக அமர்ந்திருக்கும் கூக்கிடாக்கள் ஆகியவை கண்களுக்கு விருந்து !

 

பச்சைக் கம்பளம் விரித்தாற் போன்று மருந்துவாழ் மலை வரை நீண்டு கிடக்கும் நெற்பயிர்கள்,  வகுப்பறை முன் ஒற்றைக் காலில் சீருடையில் நிற்க வைக்கப் பட்ட சேட்டைக்கார மாணவர்களைப் போன்று வரப்புகளில் சிலையென நிற்கும் பால் வண்ணக் கொக்குகள், வளைகளிலிருந்து வெளியே வருகின்ற நண்டுக் குஞ்சுகளைக் கவ்விச் செல்லத் தருணம் நோக்கிக் காத்திருக்கும் நாரைகள், வானத்தில் வட்டமிடும் பருந்துகள் ஆகியவற்றை இரசித்த படியே பசியை‌யும் பொழுதையும் மறந்து குளிர்ச்சியான இளங்காற்றைத் துய்ப்பது இதமான அனுபவங்கள் !

 

தென்னந் தோப்புப் பறவைகள் ஒலியையும் ஆலமரக் கிளிகளுடன் குருவிகளின் கொஞ்சல்களையும் இரசித்த படியே "தென்னங்கீற்று ஊஞ்சலிலே " என்ற ஜெயகாந்தன் பாடலை இரசித்துப் பாடும் மாமாவை வாய் பிளந்து நாங்கள் இரசித்ததுண்டு !

 

ஒரு முறை ஊருக்குச் சென்று திரும்பும் போது அத்தையையும் அழைத்து வந்த மாமா, கடிதங்களின் வாயிலாக அறிமுகமாயிருந்த எங்கள் ஒவ்வொருவரையும் நேரில் அறிமுகப் படுத்திய போது, இட மாற்றத்தில் சொந்த ஊருக்குச் செல்லும் காரணத்தாலேயே அழைத்து வந்துள்ளாரென  தாமதமாகவே அறிந்தோம். மாமாவைப் பிரியப் போவதை றிந்தவுடன் மனம் அடைந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்கவியலாது !

 

பேருந்து சந்திப்பில் மாமாவிடமும் அத்தையிடமும் பிரியாவிடை பெற்ற போது கண்களில் வழிந்த நீரை மாமாவால் மறைக்க யலவில்லை. தயக்கத்துடன் எங்கள் கிராமத்திற்கு வந்தவர் எங்களையும் எழில் கொஞ்சும் கிராமத்தையும் மனமின்றி பிரிந்து சென்றார் !

 

எந்தச் சந்தர்ப்பத்திலும் கோபம் கொள்ளாமல் எல்லையற்ற அன்பைப் பொழிந்த- எங்கள் ஒவ்வொருவர் நலனிலும் அக்கறை காட்டிய ஷாகுல் ஹமீது என்ற சண்முக மாமா வாழ்வில் என்றும் மறக்க முடியாதவர் !

----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்,

(sethumathavan2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப்புலம்” வலைப்பூ,

{08-01-2022}

-------------------------------------------------------------------------


புதன், 23 பிப்ரவரி, 2022

அந்நாளை நினைக்கையிலே (43) போத்தி வேல் அண்ணனின் விசிலிசைப் பாடல் !


சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு இனிமையான காலைப்பொழுதில் காற்றிலினிலே கீதமொன்று விசில் வடிவில் மிதந்து வந்தால் போத்தி வேல் அண்ணன் எங்கள் தெரு வழியாக தெப்பக்குளத்திற்கு குளிக்கச் செல்லுகிறாரென சிறு குழந்தைகளுக்கும் புரியும். "அழகன்றெ சொல்லுக்கு முருகா" , 'உள்ளம் உருகுதய்யா" "கற்பனை என்றாலும்", "மண்ணானாலும் திருச்செந்தூரில்" போன்ற பக்திப் பாடல்களையே பெரும்பாலும் காலைப்பொழுதில் பாடிச் செல்வார் !

 

பழைய பாடல்களை சுருதி சுத்தமாக அவரைப் போல் வேறெவரும் விசிலிசைத்து நான் கேட்டதில்லை. இசைக் கருவியேதும் வாய்க்குள் மறைத்து வைக்கப் பட்டுள்ளதாவென ஐயம் கொள்ளுமளவிற்கு பாடலினிடையே வருகின்ற இசைக்கருவிகளின் ஒலியைக் கூட துல்லியமாக இனம் பிரித்துப் பிசிறின்றி இசைப்பதில் நிபுணரவர்!

 

"இயற்கை என்னும் இளைய கன்னி, ஆயிரம் நிலவே வா, சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ, கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே, ஒரு பக்கம் பாக்கிறா ஆகிய பாடல்கள் அவருக்கு மிகவும் பிடித்தமானவை. மாலை நேரங்களில் தெற்குத் தெரு நுழைவிலுள்ள கலிங்கிலும் ஓய்வு நேரங்களில் தெற்குத் தெரு பஜனை மடத்தையொட்டிய நூலகத்திலும் மகிழ்ச்சி பொங்க இன்னிசை விருந்து படைக்கும் அண்ணனை இரசிகர்கள் சூழ காணவியலும் !

 

சிகையை குருவிக்கூடு போல சிரத்தையுடன் சுருட்டி வைத்திருக்கும் அண்ணன் பழகுவதற்கு இனிமையானவர் மட்டுமன்றி குழந்தை உள்ளத்திற்கு சொந்தக்காரர். அளவுக்கதிகமாகவே இரக்க குணம் அவரிடமுண்டு. இடலாக்குடி சந்திப்பிலுள்ள உணவு விடுதியில் பணியாற்றி வந்த அண்ணன் பறக்கை செட்டித்தெரு சந்திப்பில் சொந்தமாகத் துவங்கிய இட்லிக் கடைக்கு 2004 ஆம் ஆண்டு முதல் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் மாலை நேரங்களில் விஜயம் செய்து அரை மணி நேரத்தை செலவிடுவது எனது வாடிக்கையானது !

 

சூடான இட்லியையும் இரச வடையையும் ருசித்தபடியே கவியரசர் மற்றும் நடிகர் திலகத்தின் தீவிர இரசிகரான அண்ணனுடன் கடந்த கால நினைவுகளை அசை போடுவதுண்டு. இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் முன்பு போல் தன்னால் விசிலடித்துப் பாட இயலவில்லையே எனப் பேச்சினிடையில் ஆதங்கப்பட்டார் !


"நீ சிரித்த போது நல்ல மலர் சிரித்தது" என இராசி நல்ல இராசி என்ற பாடலின் பல்லவியை மெலிதாக விசிலடித்து நேயர் விருப்பமாக  இனிமையாக இசைத்துக் காட்டியதும் "வயதான பின்பும் மரம் சாடுவதை அணில் மறக்க வில்லையே" என்ற எனது நையாண்டியை அண்ணன் மிகவும் இரசித்தார் !

 

குறைந்த இலாபத்தில் தொழில் நடத்தி வந்த அண்ணன் சிறு குழந்தைகளுக்காக இட்லி வாங்கிச் செல்லும் தனது வாடிக்கையாளர்களின் நலனின் பொருட்டு உணவின் தரத்தில் சிறு சமரசத்தையும் செய்து கொள்வதில்லை.பழைய திரைப்படங்களின் வசனங்கள்‌ மட்டுமன்றி பாடல்கள் ஒவ்வொன்றும் அவருக்கு அத்துப்படி. எனது நெஞ்சில் நிறைந்த பழைய சம்பவம் ஒன்றை நினைவு படுத்திய போது குழந்தையைப் போன்று மகிழ்ச்சியடைந்தார் !

 

1983 ல் ஒரு இனிய மாலை வேளை மேலத்தெரு ஜவஹர் நூலகத்திற்கு போத்தி வேல் அண்ணன் வருகை தந்த போது பெயிண்டர் சிவம் அண்ணன், கிட்டு, முருகன் ஆகியோருடன் நானும் அங்கிருந்தோம்.தீவிர ஜெய் சங்கர் இரசிகர்களான சிவம் அண்ணனும் கிட்டுவும் "அந்த சிவகாமி மகனிடம் செய்தி சொல்லடி" என்ற பாடலை நேயர் விருப்பமாக முன்வைக்க, அண்ணன் அற்புதமாக விசிலிசைக்க சிவம் அண்ணன் செவிக்குள் வைத்திருந்த ஐம்பது காசு நாணயத்தை விரலிடையில் வைத்து மேசையில் தாளமிட கிட்டு வாயாலேயே இசையமைக்க அற்புதமான இசை விருந்தோன்று அரங்கேறியது. வாயாலேயே வாத்தியக் கருவிகளை இசைப்பதில் அதீத திறமை வாய்ந்தவர் நண்பர் கிட்டு !

 

"அன்புள்ள மான் விழியே" , "இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது" பாடல்கள் தொடர்ந்து இசைக்கப்பட இளைஞர்களின் சிறு கூட்டம் ஒன்று கூடிவிட்டது. "வரதப்பா வரதப்பா கஞ்சி வரதப்பா " பாடலை பாடச் சொல்லி சிவம் அண்ணனும் கிட்டுவும் கெஞ்சவே "எனக்கு வேற வேலையில்லையால" எனப் போலியான கோபம் காட்ட "எங்களுக்கு வேலை இல்லியே" என இருவரும் கோரசாகப் பதிலளித்ததைக் கேட்டு சத்தமாக சிரித்த அண்ணன், நேயர் விருப்பத்தை நிறைவேற்றினார் !

 

பராமரிப்பு பணிகளின் பொருட்டு செட்டித்தெரு இட்லிக்கடையை காலி செய்த அண்ணன் 2017 ல் பறக்கை மேலத்தெருவில் வீட்டிற்கருகிலேயே சுமார் ஈராண்டுகள் நடத்திய இட்லிக் கடைக்கு கடையநல்லூரில் பணியாற்றிய என்னால் அடிக்கடி செல்லவியலவில்லை. உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் , தொழிலுக்கு ஓய்வு கொடுத்த அண்ணனை அவரது வீட்டில் ஒரு முறை காணச் சென்ற போது ,மாலை நேரங்களில் பெருமாளைச் சேவிப்பதில் மிகுந்த நிம்மதியடைவதாகக் கூறினார்!

 

எனது உடன் பிறவா சகோதரரான போத்தி வேல் அண்ணன் 2019 ல் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்த விவரத்தை தாமதமாகவே நான் அறிய நேர்ந்தது. அவரது எளிமையும் என்மீது காட்டிய பேரன்பும் அக்கறையும் என் நெஞ்சை விட்டென்றும் அகலாதவை !

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்,

(sethumathavan2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப்புலம்வலைப்பூ,

{01-01-2022}

-----------------------------------------------------------