மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

திங்கள், 28 பிப்ரவரி, 2022

அந்நாளை நினைக்கையிலே (45) மேலத்தெரு அய்யர் கடை !


எனது சிறு பருவத்தில் மேலத்தெருவில் அய்யர் கடையும் (நண்பன் ராஜுவின் அப்பா ) கண்ண ஜனார்த்தனன் அண்ணன் கடையும் ஓரளவு வெற்றிகரமாக இயங்கி வந்த பலசரக்கு கடைகள். பறக்கை சந்திப்பில் நண்பர் சக்திவேலின் அப்பா (பாண்டிகாரர்) கடையும் மாமூட்டிலுள்ள ஒரு கடையுமாக இரு பலசரக்கு கடைகள் மட்டுமே செயல்பட்டு வந்தன !

 

ஜெ.பி.ஸ்டோர் என்ற ஜெய்னுலாப்தீன்- பகவதியப்பன் ஸ்டோர் (தற்போதைய தீபா ஸ்டோர் )சில ஆண்டுகளுக்குப் பின்னரே துவங்கப்பட்டது. வணிகர் தெருவில் மூக்கண்ணன் கடையும் (கிருஷ்ண மூர்த்தி ஸ்டோர்) துர்க்கை அம்மன் கோவிலருகே மற்றொரு பலசரக்கு கடையும் இயங்கி வந்தன !.

 

அய்யர் கடையில் (திரு. முத்து கிருஷ்ணன்) காலை நேரத்தில் ஐந்து காசுக்கு காபி வில்லையும் பத்து காசுக்கு கருப்புக் கட்டி வாங்குவதற்கு ஒரு கூட்டம் காத்து நிற்கும். காடேற்றி, கக்கன்சேரிக் காரர்களுக்கு தெற்குத் தெருவில் கடைகளேதும் இல்லாததால் பொருட்கள் வாங்க அய்யர் கடைக்கு வந்தாக வேண்டிய நிலை !

 

வெத்திலை பாக்கு, சொக்கலால் பீடி, அஞ்சு பூ பீடி, கோபால் பல் பொடி வாங்க நிற்கும் நடுத்தர வயதினரையும் , நன்கு பரிச்சயமானவர்கள் அகன்ற பின் சிசர்ஸ், சார்மினார், பெர்க்லி சிகரெட்டுகள் வாங்க காத்து நிற்கும் இளைஞர்களையும் காலைநேரம் காணமுடியும். வாடிக்கையாளர்களின் தேவைகளை சமய சந்தர்ப்பமறிந்து பூர்த்தி செய்வதில் கடை அய்யர் கைதேர்ந்தவர் !

 

அன்றைய முக்கிய குளிர்பானங்களான காளி மார்க் சோடாவுக்கும் களச்சி சோடாவுக்கும் வாடிக்கையாளர்கள் அதிகம். பால் பைகள் பலசரக்கு கடைகளுக்கு வராத காலமது. கடைகளின் வாசலில் தோரணங்களாகத் தொங்கிக் கொண்டிருக்கின்ற நவீன கால மல்லிப்பொடி,  மிளகு பொடி, சாம்பார் பொடி, ஆட்டா , மசாலாப் பொடியடங்கிய நெகிழிப் பைகள் அப்போது இல்லை !

 

ஜீரகம், கடுகு, வெந்தயம், பூண்டு, வத்தல் மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் பத்து என அன்றாடத் தேவைகளுக்கு சில்லறையாக வாங்கி வந்த அன்றாடங் காய்ச்சிகளுக்கு அபயமாக இருந்தது அய்யர் கடை மட்டுமே. கொள்முதல் செய்த பொருட்களுக்கான கணக்கை சிகரெட் கவரைக் கிழித்து காதில் சொருகி வைத்திருக்கும் பென்சிலால் வேகமாக குறித்துக் கொடுப்பது அய்யரின் வழக்கம் !

 

முந்நூறு மில்லிலிட்டர் கொள்ளளவு கொண்ட பித்தளை லோட்டா நிறைய கருப்புக் கட்டி காபியோ கொத்தமல்லி காப்பியோ குடித்த பின்னரே காலைக்கடன் கழிக்கச் செல்வோர் அன்று ஏராளம். இரசாயனக் கூடப் பரிசோதனையைப் போன்று காபி வெள்ளை வர்ணம் பெற்றவுடனே பால் ஊற்றுவதை நிறுத்திப் பரிமாறி விடும் அம்மா ஒரு அங்கீகரிக்கப்படாத விஞ்ஞானி!

 

ரொக்கமாக பணத்தைக் கொடுத்து வாங்குவோரை விட கடனுக்கு பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களே நிறைந்திருந்த காரணத்தால் பிரதி மாதம் பத்தாம் தேதிக்குள் கடன்காரர்களை விரட்டி வசூல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் கடை அய்யருக்கு உண்டு. கடனைத் திருப்பிக் கொடுக்காத பலரும் புதிய கடைகளில் வாடிக்கையாளர்களாக மாறி அய்யர் கண்ணில் படாமல் பாதை மாறி சஞ்சரிப்பது வழக்கம் !

 

கண்ணிமைக்கும் நேரத்தில் காகிதத்தில் கூடு செய்து பொருட்களை அளந்து வைத்து தொங்கிக் கொண்டிருக்கும் சணல் கண்டிலிருந்து துச்சாதனன் போல் சணலுருவி வேகமாக பொதிந்து கொடுப்பது அங்கு பணியாற்றி வந்த வேலுப்பிள்ளை மாமாவுக்கே கைவந்த கலை !

 

அய்யர் இல்லாத சந்தர்ப்பங்களில் அய்யரின் மூத்த மகனான சர்மா அண்ணன் கடையைக் கவனித்துக் கொள்வாரெனினும், பிறபணிகளின் பொருட்டு அண்ணன் வெளியே செல்லும் வேளைகளில் தனது தம்பி ராஜுவிடம் கடையை ஒப்படைத்துச் செல்வது வழக்கம் !

 

தன்னுடைய நண்பர்கள்- அதிலும் குறிப்பாக முக்கண்ணன் போற்றி மகன் சசியோ கணேசனோ விளையாட அழைக்கும் சந்தர்ப்பங்களில் விளையாட்டுக்கே முன்னுரிமை கொடுத்து கடையை விட்டு ஓடி விடுகின்ற ராஜுவை கோபம் தலைக்கேற நாக்கைத் துருத்தி "கருப்பட்டி" என திட்டிக் கொண்டு பொருட்களை வீசியெறியும் தந்தையைக் கண்டு கொள்ளாமல் செல்வது ராஜுவின் இயல்பு !

 

அப்பாவிற்கும் மகனுக்குமிடையே ராஜுவின் அம்மா படும் பாடு சொல்லி மாளாது. அய்யருக்கு கோபம் தலைக்கேறும் சந்தர்ப்பங்களை சாதகமாகப் பயன்படுத்தி வாங்கிய பொருட்களுக்கு காசு கொடுக்காமல் கழன்று விடும் பேர்வழிகள் அதிகம். வீட்டில் வாங்கச் சொல்லும் பொருட்களை சற்று அளவு குறைத்து வாங்கி மிஞ்சுகின்ற ஒரணவாவை  கல்கோனா, தேன் மிட்டாய், கடலை மிட்டாய்களாகவும் பொரிகடலையாகவும் உருமாற்றம் செய்யும் சிறுவர் கூட்டம் ஒன்றும் அப்போது உண்டு !

 

பத்து காசுக்கு வாங்கிய வெற்றிலை பாக்கை கடைமுன் ஓரமாக வைக்கப்பட்ட குழவிக்கல்லில் பதமாக இடித்து வாயில் ஒதுக்கி வைத்த பின் போதை நிறைந்த வியாட்பாணம் புகையிலையையும் வாயின் ஓரமாகத் திணித்துக் கடைமுன் நின்று கொண்டு தங்கள் பொக்கை வாய் நண்பர்களிடம் அட்டகாசமாகப் பேசிச் சிரித்து அக்கம்பக்கத்தில் நிற்பவர்களை சிவப்பு மனிதர்களாக்கி விடுகின்ற தாத்தாக்களின் அட்டகாசம் என அய்யர் கடையில் கலகலப்புக்குக் குறைவில்லை !

 ------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்,

(sethumathavan2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப்புலம்” வலைப்பூ,

{15-01-2022}

------------------------------------------------------------------------


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக