மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

சனி, 19 பிப்ரவரி, 2022

அந்நாளை நினைக்கையிலே (40) கிச்சா மணி அண்ணா !


அரசுப் பேருந்தில் நடத்துனராகப் பணியாற்றிய அப்பாவுக்கு வாழை இலையில் பொதிந்த இரவு உணவுப் பொட்டலத்தின் மேல் 1038 என அடையாள எண்ணைக் குறிப்பிட்டு நாகர்கோவில் செல்லும் பேருந்து ஓட்டுனரிடம், இரவு சுமார் ஏழு மணியளவில் கொடுத்தனுப்புவது எனது முக்கிய பணி !

 

தம்பியையோ ,சசியையோ மதுவையோ பெரும்பாலும் துணைக்கு அழைத்துச் செல்வதால், நான் துய்க்கின்ற தற்காலிக விடுதலையை புத்தகங்களுடன் போரிடும் தங்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி பாராட்டுவதுண்டு !

 

பறக்கை பேருந்து நிறுத்தத்திற்கும் மேலத்தெரு சந்திப்பினுமிடையே அமைந்துள்ள அரசு ஆரம்பப் பள்ளி வரையிலான பாதையின் இருமருங்கும் திறந்த வெளிக் கழிப்பறைகளாகப் பயன்படுத்தப் பட்டு வந்தமையால் , இடையூறாக இருக்கும் அப்பகுதி தெரு விளக்குகள் உடனுக்குடன் உடைக்கப் படுவது வாடிக்கை !

 

அப்பாவின் இரவு உணவை அனுப்பிய பின் தன்னந்தனியாக வீடு திரும்ப நேர்கின்ற சந்தர்ப்பங்களில் இருட்டான இப்பகுதியைக் கடப்பதில் ஏற்பட்ட அச்சத்தால், நாகர்கோவிலிலிருந்து மணக்குடி ,பள்ளம் செல்லும் பேருந்துகளில் பறக்கை நிறுத்தத்தில் இறங்கும் பயணிகளுக்காகக் காத்திருந்து அவர்களுடனே அப்பகுதியைக் கடப்பதுண்டு !

 

தெங்கம்புதூர் சாஸ்தா கோவிலில் பூஜையை முடித்து விட்டு இரவு சுமார் எட்டு மணியளவில் பேரூந்தில் பறக்கைக்குத் திரும்புகின்ற கிச்சாமணி அண்ணா என் மீது பாசம் கொண்டவராதலால், என்னைக் கண்டால் காத்திருந்து அழைத்துச் செல்வார். கையில் வைத்திருக்கும் நீளமான டார்ச் விளக்கு சண்டித்தனம் செய்யும் போது தனது தொடையில் தட்டி பணிய வைக்கும் தொழில் நுட்பமறிந்த கிச்சா மணி அண்ணாவுக்கு பார்வைத் திறன் குறைவு !

 

‌எதிரே வருகின்ற பாதசாரிகளும் மிதிவண்டிக் காரர்களும் தன்மீது மோதி விபத்துக்குள்ளாகாமல் உயிர் பிழைத்துச் செல்வதற்காகவே, டார்ச் விளக்கு அவரால் பயன் படுத்தப்பட்டு வந்தது. அவருடன் இருட்டான பகுதிக்குள் நான் நுழைகின்ற சந்தர்ப்பங்களில் இயற்கை உபாதையின் பொருட்டு இரு மருங்கிலும் அமர்ந்திருக்கும் பெண்கள் கோபத்தில் எழுந்து நின்று திட்டுவதை என்னுடன் உரக்கப் பேசிய படியே வரும் கிச்சாமணி அண்ணா உணராமலேயே இலக்கின்றி வானத்தில் டார்ச் விளக்கை அடித்தபடியே நடப்பார் !

 

கால் ஸ்பரிசம் பட்டு படிகின்ற தொட்டால் சிணுங்கி இலைகள் கணப்பொழுதில் பழைய நிலைக்கு திரும்புவதைப் போன்று எழுந்து நிற்கும் மகளிர் அண்ணனை சபித்த பின்னர் தங்கள் பணியைத் தொடர்வார்கள் !

 

எனது பள்ளிப் பருவத்தில் தெப்பக்குளத்தில் அதிகாலை குளிக்கச் சென்ற நீச்சல் அறியாத அக்கா ஒருவரின் அகால மரணம், ஊருக்குள் மிகுந்த பரபரப்பையும் சிறுவர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது . இரவு பகல் வித்தியாசமின்றி குளிப்பதற்காகக் கூடுகின்ற கூட்டம் இச்சம்பவத்திற்குப் பிறகு வெகுவாக குறைந்தது !

 

இரவு நேரத்தில் கீழத் தெருவிலுள்ள பாட்டி வீட்டுக்கு அவசரப் பணி நிமித்தம் செல்ல நேர்கின்ற போது தெப்பக் குளத்தையும் தெருவிளக்கில்லாத தேரடிமாடன் கோவிலமைந்துள்ள இருட்டான பகுதியையும் திகிலுடன் தாண்டிச் செல்ல தம்பியையோ நண்பர்களையோ துணைக்கு அழைத்துச் செல்வேன் !

 

குறும்புக்காரனான சசி குளத்தின் ஓடிட்ட துறையருகே வந்தவுடன் நீரில் மூழ்கி மறைந்த அக்காவின் பெயரைச் சொல்லி பயமுறுத்தி விட்டு ஓடி விடுவான். எப்போதாவது மங்கலான ஒளி தருகின்ற தெப்பக்குளத்தினருகே அமைந்துள்ள தெருவிளக்கு பீதியைக் கிளப்புவதாகவே எனக்குத் தோன்றும் !

 

தன்னந்தனியாக பாட்டி வீட்டுக்கு செல்ல நேரும் சந்தர்ப்பங்களில் "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு.ஓடு ராஜா " பாடலை வீரத்துடன் துவங்கி தழுதழுத்த குரலில் ஓடிய படியே பாடிக் கடப்பேன். காரண காரியங்களேதுமின்றி கண்டதற்கெல்லாம் அச்சம் கொள்ளும் எனது சிறுவயது சுபாவத்திற்கு கீழ்க்கண்ட சம்பவம் முற்றுப் புள்ளி வைத்தது எனலாம் !

 

ஒரு வெள்ளிக் கிழமை நடு இரவில் சிறுநீர் கழிக்கும் பொருட்டு அச்சத்துடனே வீட்டின் கொல்லைப் புறத்திற்கு சென்று திரும்பும் போது, சிறு இடைவெளி விட்டு சீராக - மிக அருகாமையில் மணியோசை கேட்டவுடன் இதயத்துடிப்பு அதிகரிக்க அச்சத்தின் உச்சத்தில் கதவைத் தாளிட்டு வீட்டிற்குள் திரும்ப எத்தனித்தேன் !

 

மணியோசை மர்மத்தை அறியாமலேயே தூங்கச் சென்றால் அச்சம் தொடர் கதையாகி விடுமென்பதாலும், தொடர் ஜுரத்திற்கு வாய்ப்பு  ள்ளதாலும், மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மீண்டும் கொல்லைப் புறத்திற்குச் சென்ற நான், மணியோசை வந்த திக்கை உன்னிப்பாக நிதானத்துடன் கவனித்தேன். பக்கத்து வீட்டு பசு தலையாட்டும் போது ஏற்படுகின்ற கழுத்து மணியோசையே என்னை திகிலுறச் செய்ததென்ற தெளிவு பெற்ற பிறகு நிம்மதியாக தூங்கினேன்.

 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்,

(sethumathavan2021@gmail.com)

ஆட்சியர்,

”தமிழ்ப்புலம்” வலைப்பூ,

{11-12-2021}

-----------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக