சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு இனிமையான காலைப்பொழுதில் காற்றிலினிலே கீதமொன்று விசில் வடிவில் மிதந்து வந்தால் போத்தி வேல் அண்ணன் எங்கள் தெரு வழியாக தெப்பக்குளத்திற்கு குளிக்கச் செல்லுகிறாரென சிறு குழந்தைகளுக்கும் புரியும். "அழகன்றெ சொல்லுக்கு முருகா" , 'உள்ளம் உருகுதய்யா" "கற்பனை என்றாலும்", "மண்ணானாலும் திருச்செந்தூரில்" போன்ற பக்திப் பாடல்களையே பெரும்பாலும் காலைப்பொழுதில் பாடிச் செல்வார் !
பழைய பாடல்களை சுருதி சுத்தமாக அவரைப் போல் வேறெவரும் விசிலிசைத்து நான் கேட்டதில்லை. இசைக் கருவியேதும் வாய்க்குள் மறைத்து வைக்கப் பட்டுள்ளதாவென ஐயம் கொள்ளுமளவிற்கு பாடலினிடையே வருகின்ற இசைக்கருவிகளின் ஒலியைக் கூட துல்லியமாக இனம் பிரித்துப் பிசிறின்றி இசைப்பதில் நிபுணரவர்!
"இயற்கை என்னும் இளைய கன்னி, ஆயிரம் நிலவே வா, சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ, கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே, ஒரு பக்கம் பாக்கிறா ஆகிய பாடல்கள் அவருக்கு மிகவும் பிடித்தமானவை. மாலை நேரங்களில் தெற்குத் தெரு நுழைவிலுள்ள கலிங்கிலும் ஓய்வு நேரங்களில் தெற்குத் தெரு பஜனை மடத்தையொட்டிய நூலகத்திலும் மகிழ்ச்சி பொங்க இன்னிசை விருந்து படைக்கும் அண்ணனை இரசிகர்கள் சூழ காணவியலும் !
சிகையை குருவிக்கூடு போல சிரத்தையுடன் சுருட்டி வைத்திருக்கும் அண்ணன் பழகுவதற்கு இனிமையானவர் மட்டுமன்றி குழந்தை உள்ளத்திற்கு சொந்தக்காரர். அளவுக்கதிகமாகவே இரக்க குணம் அவரிடமுண்டு. இடலாக்குடி சந்திப்பிலுள்ள உணவு விடுதியில் பணியாற்றி வந்த அண்ணன் பறக்கை செட்டித்தெரு சந்திப்பில் சொந்தமாகத் துவங்கிய இட்லிக் கடைக்கு 2004 ஆம் ஆண்டு முதல் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் மாலை நேரங்களில் விஜயம் செய்து அரை மணி நேரத்தை செலவிடுவது எனது வாடிக்கையானது !
சூடான இட்லியையும் இரச வடையையும் ருசித்தபடியே கவியரசர் மற்றும் நடிகர் திலகத்தின் தீவிர இரசிகரான அண்ணனுடன் கடந்த கால நினைவுகளை அசை போடுவதுண்டு. இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் முன்பு போல் தன்னால் விசிலடித்துப் பாட இயலவில்லையே எனப் பேச்சினிடையில் ஆதங்கப்பட்டார் !
"நீ சிரித்த போது நல்ல மலர் சிரித்தது" என
இராசி நல்ல இராசி என்ற பாடலின் பல்லவியை மெலிதாக விசிலடித்து நேயர் விருப்பமாக
இனிமையாக
இசைத்துக் காட்டியதும் "வயதான பின்பும் மரம்
சாடுவதை அணில் மறக்க வில்லையே" என்ற எனது நையாண்டியை அண்ணன் மிகவும்
இரசித்தார் !
குறைந்த இலாபத்தில் தொழில் நடத்தி வந்த அண்ணன் சிறு குழந்தைகளுக்காக இட்லி வாங்கிச் செல்லும் தனது வாடிக்கையாளர்களின் நலனின் பொருட்டு உணவின் தரத்தில் சிறு சமரசத்தையும் செய்து கொள்வதில்லை.பழைய திரைப்படங்களின் வசனங்கள் மட்டுமன்றி பாடல்கள் ஒவ்வொன்றும் அவருக்கு அத்துப்படி. எனது நெஞ்சில் நிறைந்த பழைய சம்பவம் ஒன்றை நினைவு படுத்திய போது குழந்தையைப் போன்று மகிழ்ச்சியடைந்தார் !
1983 ல் ஒரு இனிய மாலை வேளை மேலத்தெரு ஜவஹர் நூலகத்திற்கு போத்தி வேல் அண்ணன் வருகை தந்த போது பெயிண்டர் சிவம் அண்ணன், கிட்டு, முருகன் ஆகியோருடன் நானும் அங்கிருந்தோம்.தீவிர ஜெய் சங்கர் இரசிகர்களான சிவம் அண்ணனும் கிட்டுவும் "அந்த சிவகாமி மகனிடம் செய்தி சொல்லடி" என்ற பாடலை நேயர் விருப்பமாக முன்வைக்க, அண்ணன் அற்புதமாக விசிலிசைக்க சிவம் அண்ணன் செவிக்குள் வைத்திருந்த ஐம்பது காசு நாணயத்தை விரலிடையில் வைத்து மேசையில் தாளமிட கிட்டு வாயாலேயே இசையமைக்க அற்புதமான இசை விருந்தோன்று அரங்கேறியது. வாயாலேயே வாத்தியக் கருவிகளை இசைப்பதில் அதீத திறமை வாய்ந்தவர் நண்பர் கிட்டு !
"அன்புள்ள மான் விழியே" , "இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது" பாடல்கள் தொடர்ந்து இசைக்கப்பட இளைஞர்களின் சிறு கூட்டம் ஒன்று கூடிவிட்டது. "வரதப்பா வரதப்பா கஞ்சி வரதப்பா " பாடலை பாடச் சொல்லி சிவம் அண்ணனும் கிட்டுவும் கெஞ்சவே "எனக்கு வேற வேலையில்லையால" எனப் போலியான கோபம் காட்ட "எங்களுக்கு வேலை இல்லியே" என இருவரும் கோரசாகப் பதிலளித்ததைக் கேட்டு சத்தமாக சிரித்த அண்ணன், நேயர் விருப்பத்தை நிறைவேற்றினார் !
பராமரிப்பு பணிகளின் பொருட்டு செட்டித்தெரு இட்லிக்கடையை காலி செய்த அண்ணன் 2017 ல் பறக்கை மேலத்தெருவில் வீட்டிற்கருகிலேயே சுமார் ஈராண்டுகள் நடத்திய இட்லிக் கடைக்கு கடையநல்லூரில் பணியாற்றிய என்னால் அடிக்கடி செல்லவியலவில்லை. உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் , தொழிலுக்கு ஓய்வு கொடுத்த அண்ணனை அவரது வீட்டில் ஒரு முறை காணச் சென்ற போது ,மாலை நேரங்களில் பெருமாளைச் சேவிப்பதில் மிகுந்த நிம்மதியடைவதாகக் கூறினார்!
எனது உடன் பிறவா சகோதரரான போத்தி வேல் அண்ணன் 2019 ல் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்த விவரத்தை தாமதமாகவே நான் அறிய நேர்ந்தது. அவரது எளிமையும் என்மீது காட்டிய பேரன்பும் அக்கறையும் என் நெஞ்சை விட்டென்றும் அகலாதவை !
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
தி.சேதுமாதவன்,
ஆட்சியர்,
”தமிழ்ப்புலம்” வலைப்பூ,
{01-01-2022}
-----------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக