மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

திங்கள், 21 பிப்ரவரி, 2022

அந்நாளை நினைக்கையிலே (41) நெருங்கிய நண்பன் மது என்ற மதுசூதனன் !


கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே பறக்கை தெப்பக் குளத்து அரசமரத்தடித் துறையும் அதனையடுத்த படித்துறைகளும் நீல வண்ண வேஷ்டியணிந்த அய்யப்ப பக்தர்களால் களை கட்டிவிடும். அரசமரத்தடி வினாயகரையும் சாஸ்தாவையும் சூடமேற்றி வணங்கிய பின்னரே பக்தர்கள் பெருமாளை தரிசிக்க ஆலயத்திற்குள் அடியெடுத்து வைப்பர் !

 

திகாலை ஐந்து மணிக்கு ஒலிக்கும் மதுசூதனப் பெருமாள் திருக்கோவில் ஒலிபெருக்கி "கங்கையாறு பிறக்குந்நு முகிமவன் மலையில்- பம்பையாறு பிறக்குந்நு சபரிமலையில்" என்ற பாடலுடன் தனது சேவையைத் துவக்க, மனதை உருக்கும் கான கந்தர்வனின் கம்பீரக் குரலிலமைந்த அற்புதப் பாடல்களைக் கொண்ட தரங்கிணி நிறுவன இசைத்தட்டுகள் முத்துராமன் அண்ணனால் இயக்கப்படும் !

 

பட்டப் பெயருடன் விளிக்கப் பட்டவரெல்லாம் மண்டல காலம் முடியும் வரை பட்டப் பெயருடன் 'சாமி' என்ற அடைமொழியுடன் அன்புடன் அழைக்கப்படுவர். துளசிமணி மாலையுடன் திருக்கோவிலுக்குச் செல்பவர்கள் முக்கண்ணன் போற்றிக்கு தட்சிணை வழங்கி பெருமாள் பாதத்தில் சமர்ப்பித்த மாலையணிந்து தங்கள் மண்டல விரதத்தை துவக்குவார்கள் !

 

சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை சிரமத்துடன் நகர்த்துகின்ற போற்றிக்கும் பிற ஊழியர்களுக்கும் கார்த்திகை மார்கழி மாதங்கள் பட்டினியில்லா சிறப்புடையவை. திருக்கோவில் உட்பிரகாரத்தில் வலது புறம் அமைந்துள்ள சாஸ்தா சன்னதி காலையும் மாலையும் சரண கோஷம் முழங்குகின்ற அய்யப்ப பக்தர்களால் நிறைந்திருக்கும் !

 

பறக்கையில் அன்றைய பிரதான குருசாமிகளாகக் (பதினெட்டு முறை மலைக்குச் சென்றவர்கள் ) கருதப்பட்ட தெற்குத்தெரு இலட்சுமணன் மாமா, பூசாரி அண்ணாச்சி, அருணாசலம் அண்ணாச்சி ( தோழர் பழனியின் அப்பா) , மேலத்தெருவில் வசித்து வந்த உயரமான போஸ்ட் மேன் அண்ணாச்சி ஆகியோர் சுறுசுறுப்பானவர்கள் மட்டுமன்றி மிகுந்த ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள் !

 

தென்காசி வழியாகச் சென்று குற்றாலத்தில் நீராடி செங்கோட்டை, அச்சன் கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை , புனலூர், பத்தனம்தட்டை வழி எரிமேலி செல்லும் விதத்தில் இவர்கள் தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்வார்கள் !

 

மகிஷி என்ற அரக்கியை வீரமணி கண்டன் வதம் செய்த எரிமேலியில் அமைந்துள்ள வாபர் சன்னதியில் பேட்டை துள்ளி முடித்து, காளைகட்டி கடந்து செங்குத்தான அழுதா மலையேறி கல்லிடும் குன்றில் கல்லெறிந்த பின் கரிமலை ஏறி வலியான வட்டம், செறியான வட்டம் கடந்து பம்பா தீர்த்தத்தில் நீராடி கணபதி பகவானை வழிபட்ட பின் நீலிமலை, அப்பாச்சி மேடு, சபரிபீடம், சரங்குத்தி வழியாக பெரிய பாதையில் சன்னிதானத்திற்கு வழி நடத்துப் படுகின்ற சிஷ்யர்களும் குருசாமிகளைப் போன்றே செருப்பின்றி காய்த்துப்போன கால்களுடன் திடகாத்திரமானவர்களாக இருந்தார்கள் !

 

மண்டல பூஜைக்கும் மகர விளக்குக்குமாக இரு முறை சபரிகிரீசனைத் தங்கள் குழுவினருடன் தரிசிக்கும் அளவுக்கு ஆரோக்கியவான்களான இக்குருசாமிகளை மேல் சட்டையுடன் பார்ப்பது அபூர்வம் !

 

சபரிமலை தீர்த்தாடனத்துடன் பந்தளம், சோற்றாணிக்கரைகொடுங்ஙல்லூர், குருவாயூர் ஆகிய திருத்தலங்களையும் உள்ளடக்கியதாக இவர்களது நெடும் பயணம் அமைந்திருப்பதால் வீடு திரும்ப குறைந்த பட்சம் இருபது நாட்களாகும். சமையல் கலையில் நிபுணர்களாகிய இவர்கள் சொந்தமாக பப்படம் பாயாசத்துடன் சமைத்துச் சாப்பிடுவதால் கன்னிசாமிகளும் இளைஞர்களும் தங்கள் தலையிலும் தோள்களிலும் அண்டாக்களையும் பாத்திரங்களையும் சுமந்தபடி செல்ல வேண்டியிருக்கும் !

 

வண்டிக்குடியிருப்பு ஊரிலுள்ள பெரும்பாலான இளைஞர்களை பக்திமார்க்கத்தில் செலுத்திய குருசாமி அருணாசலம் அவர்கள் , ஊரில் நடைபெறுகின்ற அனைத்து வைபவங்களுக்கும் தவறாமல் அழைத்து கௌரவிக்கப் படுமளவிற்கு அவ்வூராரால் மதிக்கப்படுபவர் !

 

முதன் முதலாக மலைக்குச் செல்லும் கன்னிசாமிகளின் வீடுகளில் நடத்தப் படுகின்ற கன்னிபூஜை சிறுவர்களாகிய எங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.பக்கத்து வீட்டில் புதிதாக குடிவந்த அரசினர் தொழிற்பயிற்சி நிலைய கம்பியாள் தொழிற் பிரிவு உதவி பயிற்சி அலுவலர் திரு.நல்ல பெருமாள் அவர்களின் மக்களான மதுசூதனன், சுரேஷ், பரமேஷ் ஆகியோர் எங்கள் நெருங்கிய நண்பர்களாயினர் !

 

சேட்டை செய்வதற்கென்றே அவதரித்த மது என்ற மதுசூதனன் எங்கள் நெருங்கிய நண்பனானான். முதன்முதலாக மலைக்கு மாலையிட்ட மதுவின் வீட்டில் நடைபெற்ற கன்னிபூஜையில் சிறுவர்களாகிய நாங்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டோம் !

 ------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்,

(sethumathavan2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப்புலம்வலைப்பூ,

{18-12-2021}

--------------------------------------------------------------



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக