காடேற்றி,
கக்கன்புதூர், புல்லுவிளை ஆகிய பக்கத்து கிராமங்களிலிருந்து
இயற்கை உரத்தில் உற்பத்தியான தரமான பேயன்பழம்,
ஏத்தன், மட்டி, செந்துழுவன், கதலி மற்றும் பாளையங்கோட்டை என வகைவகையான வாழைக்
குலைகள் (தார்கள்) அய்யர் கடையில் எப்போதும் கிடைக்கும் !
வாழைப்
பழங்களுக்கு சற்று அதிக விலை கோரும் அய்யரிடம் 'உங்கள் பழங்களுக்கு மட்டும் அப்படி என்ன கிராக்கி '
என வினவுவோருண்டு !
வாழையிலேயே
நின்று விளைந்து பழுத்த 'தன்பழம்'
என்பதாலேயே அதிக விலையெனத்
தன்னிலை விளக்கமளிக்கும்
அய்யரிடம், மாலை
நேரம் கடைமுன் நின்று பேச்சிற்கிடையே கையால்
சைகை காட்டி "சாமி ! உம்மகிட்ட தன்பழம் கெடக்கா" என நையாண்டி செய்யும்
சசியை "சவத்துக்குப் பொறந்த பய" என நாக்கைத் துருத்தி விரட்டுகின்ற
அய்யரிடம் பத்தே நிமிடங்களில் ஒன்றும்
நடவாதது போல் மீண்டும் வந்து நின்று கதை விடும் அளவு 'மிக்கி- மவுஸ்' உறவு அவர்களுடையது !
அடாது விரட்டினாலும் வாடிக்கையாளர்கள் விட்டுச் செல்லும் பழத் தோலுக்காக கடை முன் தவம் கிடக்கும் பசுக்களுடன், மிட்டாய் குப்பிகளை கண்ணால் மேய்ந்த பின் ஒரு காசுக்கு கல்கோனா வாங்கிச் செல்ல தீர்மானிக்கும் சிறுவர்களை கடையருகே அண்டவிடாது துரத்தும் சுடலைக்கு நேர்ந்த வளைந்த கொம்புகளுடைய சண்டியர் ஆடுகளையும் கடைமுன் காணலாம்!
தனது மகன் இராஜுவை பட்டப்பெயரால் கோபத்தில் திட்டுகின்ற அய்யருக்கு, மகனின் நண்பர்கள் அங்ஙனம் அழைப்பது ஒவ்வாதென்பதைத் தெரிந்தே "கருப்பட்டி இருக்கானா" எனக் குசலம் விசாரித்து அய்யரை துர்வாசராக்குவது தெற்குத் தெரு நீலகண்ட அய்யர் மகன் நண்பன் வரதராஜனுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு ! பட்டப்பெயரில் நண்பர்களால் அழைக்கப் படுவதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் நண்பன் ராஜுவுக்கு எப்போதும் உண்டு. !
"ரெண்டு அனாவசியம் குடுங்க சாமி" எனக்கோரும்
அப்பாவிப் பெண்களிடம் நாக்கைத் துருத்தி கையால் தலையிலடித்த பின் ஔஷதப்
பெட்டியிலிருந்து அனாசின் எடுத்துக் கொடுக்கும் அய்யர்,
ஆஸ்ப்ரோ, பாரசிட்டமால், என்ரோகுயினால், குளோரோஸ்டெப், ஆன்டி டெட்ராசைக்லின்,
அல்பென்டசோல்
அமிர்தாஞ்சன், அஞ்சால் அலுப்பு மருந்து,
ஓமத்திராவகம் , காயத்திருமேனி ஆகியவற்றை
தேவையறிந்து வழங்கும் அவசர கால மருத்துவர் !
தான்
வழங்கும் மருந்துகள் அவசர உதவிக்கானவையெனவும், மருத்துவரை அணுகுமாறும்
பலத்த நோய் அறிகுறிகள் உள்ளோரிடம் எச்சரிப்பது
அவரது வழக்கம் !
எவரிடமும் வம்புக்குப் போகாத நல்ல மனிதரான கடை அய்யர், இளைய மகன் இராஜுவிடம் அளவற்ற அன்பு கொண்டவரென்பதை மிகவும் பெருமையாக அவனைக் குறித்து எங்களிடம் பேசுவதிலிருந்து அறிந்து கொள்ளவியலும். இருப்பினும் அன்றைய காலத் தந்தைகளைப் போல மகனிடம் பாசத்தை வெளிக்காட்டாத மனிதரவர் !
புரட்டாசி சனிக்கிழமைகளில் சங்கரும் பக்கத்து வீட்டு கோபிநாதன் மாமா இளைய மகன் ராஜேஷும், தொழில் முனைவோர் ஆகிவிடுவது வழக்கம். அய்யர் கடையில் பத்து ரூபாய்க்கு சூடம் வாங்கி அதை இருபது சிறு பொதிகளாக்கி கோட்டாறிலிருந்து வாங்கி வைத்திருக்கும் நறுமணத் திரவியத்தை திருக்கிணற்றுத் தண்ணீருடன் பாத்திரத்தில் கலந்து சிறு குப்பிகளில் ஊற்றி பன்னீராக உருமாற்றி தங்கள் நண்பர்களையே ஒரு ரூபாய் சம்பளத்தில் தற்காலிகப் பணியமர்த்தி ஒவ்வொரு தெருமுனையிலும் விற்க வைத்து விடுவார்கள் !
திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுடன் சிறிது தூரம் பேசிய படியே நடந்து பொருட்களை வாங்க வைத்து விடுவது இவர்களுக்கு கைவந்த கலை.தேங்காய், பழம் வெற்றிலை, பாக்கு வாங்க விழையும் பக்தர்களை அய்யர் கடைமுன் நிறுத்தி அய்யர் கருணைக்கு ஆளாகி விடுகின்ற இச்சிறுவர்கள், துளசி மாலைகளின் மேல் தண்ணீர் தெளித்து கோவில் முன் வாடாமாலை விற்கின்ற மணி அண்ணனிடம் ரொக்கமாக காசைக் கொடுத்து பத்து மாலைகளை பதினேழு ரூபாய்க்கு கொள்முதல் செய்து மாலையொன்றுக்கு இரண்டு ரூபாய் வைத்து விற்று விடுவதுண்டு !
"நீங்க நெனச்ச காரியம் நடக்கும்மா. பெருமாளுக்கு துளசி மாலை வாங்கிட்டு போங்க" எனப் பெண்களை உணர்வுபூர்வமாக அணுகி கிடைக்கின்ற இலாபத்தை பாழாக்காமல் தங்கள் அம்மாவிடம் கொடுக்கின்ற இவர்கள் அடுத்த பண்டிகை வியாபாரத்திற்கான பணப்பதுக்கலுக்கு மட்டுமே பாடப்புத்தகங்களை பயன்படுத்துவது வழக்கம் !
கடை அய்யரின் இரு மக்களும் அரசு வேலைகளில் இணைந்த பின் வயது மூப்பு காரணமாக வியாபாரத்தை சரிவர நடத்தவியலாததால் அவரது வலங்கையான வேலுப்பிள்ளை மாமா பறக்கை சந்திப்பிலுள்ள ஜெ.பி.ஸ்டோர்ஸில் பணியில் இணைந்தார் !
கையில் காசு கிடைத்தவுடன் கல்கோனா, தேன் மிட்டாய், கடலை மிட்டாய் வாங்க அந்நாளில் அய்யர் கடைக்கு விரைந்தவர்களும் , தீபாவளித் திருநாளன்று இருப்பிலுள்ள பட்டாசுகளை காலி செய்த பின் அவசரத் தேவைகளுக்காக பொட்டு வெடி, கேப் வெடி, எறப்படக்கு, ஓலப்படக்கு வாங்கி வெடித்து அக்கம் பக்கத்திலுள்ள பெரியவர்களின் நிம்மதியைக் கெடுத்த அந்நாள் சிறுவர்களும் அய்யர் கடையை ஒரு போதும் மறக்கவியலாது !
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
தி.சேதுமாதவன்,
ஆட்சியர்,
”தமிழ்ப்புலம்” வலைப்பூ,
{22-01-2022}
------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக