அப்பாவின் ஏற்பாட்டில் ஷாகுல்
ஹமீது மாமா
பக்கத்து வீட்டிற்கு குடி வந்த போது எனது வயது
பன்னிரெண்டு. எங்கள் ஊரிலுள்ள கால்நடை மருத்துவமனையில் கம்பவுண்டராக மாறுதலில்
வந்த மாமாவின் சொந்த ஊர் இப்போதைய திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி !
மாதமொரு முறை மட்டுமே ஊருக்குச் செல்லும் வழக்கமுடைய அகவை ஐம்பதைக் கடந்த மாமா சொந்தச் சமையலில் நாட்களைக் கடத்தி வந்தார். அதிராமல் மெல்லப் பேசும் அவருக்கு சிறுவர்களாகிய நாங்கள் மெல்ல மெல்ல சிநேகிதர்களானோம் !
எங்கள் வசதிக்காக 'சண்முக மாமா' என்று விளிக்கத் துவங்கிய நாங்கள், முதல் மரியாதை படத்தில் வருகின்ற நடிகர் திலகத்தைப் போன்ற கால் சட்டையுடன் தெப்பக்குளப் படிக் கட்டிலமர்ந்து செம்பினால் தலையில் அபிஷேகம் செய்து வந்த மாமா குளத்து நீரை குடம் குடமாக குடித்தபின் வெற்றிகரமாக நீந்திய போது நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை !
மீன் குஞ்சுகளைப் போன்று குளத்தில் தவழுகின்ற எங்களைப் போலன்றி நீந்திப் பழக்கமில்லாத அவர் காய்ச்சலில் அவதிப்பட்ட போது சமயம் தவறாமல் சுடு கஞ்சியைக் வற்புறுத்திப் பருக வைத்து நெற்றியில் கைவைத்து கைதேர்ந்த மருத்துவர்களைப் போன்று பண்டுவம் பார்த்த என்னையும் தம்பியையும் பார்த்து கருணை பொங்க விழியோரம் கசிந்த சுடுநீரின் பொருள் எங்களுக்கு விளங்கவில்லை !
வில்லை போன்ற வட்ட வடிவ பிரிட்டானியா பிஸ்கட்டுகள் எங்களுக்காக எப்போதும் இருப்பு வைக்கப் பட்டிருக்கும். ஆண்குழந்தைகள் இல்லாத மாமாவுக்கு சிறுவர்களாகிய எங்கள் மீது கொள்ளைப் பிரியம். தொழுகையின் போது தொந்தரவு செய்யக் கூடாதென்று அப்பா அறிவுறுத்தியிருந்ததால், இதர நேரங்களில் விடாமல் அவரை இம்சை செய்வதுண்டு !
ஜெயகாந்தன் மற்றும் காண்டேகரின் தீவிர விசிறியான மாமா ஓய்வு நேரத்தில் புத்தகங்கள் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். உயர்தர இலக்கியமாக எங்கள் மனதில் நிறைந்து நின்ற அம்புலி மாமாவைத் தவிர்த்து பிற புத்தகங்களை நாங்கள் சீண்டுவதில்லை. கதை சொல்லித் தருமாறு நிர்ப்பந்திக்கும் போது 'பரமார்த்த குருவும் சீடர்களும்' கதையைச் சிரிக்காமல் கூறி வயிறு குலுங்கச் சிரிக்க வைப்பது மாமாவுக்குக் கைவந்த கலை !
பழம் பெரும் பாடகர் பிபி.சீனிவாஸின் தீவிர இரசிகரான மாமா தனது மெல்லிய குரலில் "மனிதனென்பவன் தெய்வமாகலாம்" ,"ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து", "பூஜைக்கு வந்த மலரே வா","ரோஜா மலரே ராஜகுமாரி" போன்ற பாடல்களைப் பக்கத்து வீட்டிற்கு கேட்கா வண்ணம் அற்புதமாகப் பாடுவார் !
விடுமுறை நாட்களில் மாமாவின் கைகளைப் பிடித்தபடியே பரந்து விரிந்த வயல்வெளியான தோப்படிப் பத்திற்கும் பாசனக் குளத்திற்குமிடையே அமைந்துள்ள பாதை வழியாக நடந்து சென்று ஆலமரத்தடியில் அமர்ந்து இயற்கையை இரசிப்பது வழக்கம் !
நீர் நிறைந்த விசாலமான குளத்தில் பூத்துக் குலுங்கும் ஊதாப் பூக்களுடன் கூடிய ஆகாயத் தாமரைகளுக்கிடையே தலையுயர்த்தி மனிதர்கள் பிடிக்குள் சிக்காமல் சாதுரியமாக மூழ்கி இரைதேடும் நீர்க்கோழிகள், நீர்த் தாவரங்களை விலக்கி மணிக்கணக்கில் நீராடிய பின் உடம்பைச் சொறியும் நிர்வாணச் சிறுவர்கள், வைக்கோலால் தேய்த்து வண்டி மாடுகளை குளிப்பாட்டிய பின் நீராடுகின்ற கோவண தாரி விவசாயிகள், குளத்து மேடுகளில் பெரிய அலகுடன் கூட்டமாக அமர்ந்திருக்கும் கூழக்கிடாக்கள் ஆகியவை கண்களுக்கு விருந்து !
பச்சைக் கம்பளம் விரித்தாற் போன்று மருந்துவாழ் மலை வரை நீண்டு கிடக்கும் நெற்பயிர்கள், வகுப்பறை முன் ஒற்றைக் காலில் சீருடையில் நிற்க வைக்கப் பட்ட சேட்டைக்கார மாணவர்களைப் போன்று வரப்புகளில் சிலையென நிற்கும் பால் வண்ணக் கொக்குகள், வளைகளிலிருந்து வெளியே வருகின்ற நண்டுக் குஞ்சுகளைக் கவ்விச் செல்லத் தருணம் நோக்கிக் காத்திருக்கும் நாரைகள், வானத்தில் வட்டமிடும் பருந்துகள் ஆகியவற்றை இரசித்த படியே பசியையும் பொழுதையும் மறந்து குளிர்ச்சியான இளங்காற்றைத் துய்ப்பது இதமான அனுபவங்கள் !
தென்னந் தோப்புப் பறவைகள் ஒலியையும் ஆலமரக் கிளிகளுடன் குருவிகளின் கொஞ்சல்களையும் இரசித்த படியே "தென்னங்கீற்று ஊஞ்சலிலே " என்ற ஜெயகாந்தன் பாடலை இரசித்துப் பாடும் மாமாவை வாய் பிளந்து நாங்கள் இரசித்ததுண்டு !
ஒரு முறை ஊருக்குச் சென்று திரும்பும் போது அத்தையையும் அழைத்து வந்த மாமா, கடிதங்களின் வாயிலாக அறிமுகமாயிருந்த எங்கள் ஒவ்வொருவரையும் நேரில் அறிமுகப் படுத்திய போது, இட மாற்றத்தில் சொந்த ஊருக்குச் செல்லும் காரணத்தாலேயே அழைத்து வந்துள்ளாரென தாமதமாகவே அறிந்தோம். மாமாவைப் பிரியப் போவதை அறிந்தவுடன் மனம் அடைந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்கவியலாது !
பேருந்து சந்திப்பில் மாமாவிடமும் அத்தையிடமும் பிரியாவிடை பெற்ற போது கண்களில் வழிந்த நீரை மாமாவால் மறைக்க இயலவில்லை. தயக்கத்துடன் எங்கள் கிராமத்திற்கு வந்தவர் எங்களையும் எழில் கொஞ்சும் கிராமத்தையும் மனமின்றி பிரிந்து சென்றார் !
எந்தச் சந்தர்ப்பத்திலும் கோபம் கொள்ளாமல் எல்லையற்ற அன்பைப் பொழிந்த- எங்கள் ஒவ்வொருவர் நலனிலும் அக்கறை காட்டிய ஷாகுல் ஹமீது என்ற சண்முக மாமா வாழ்வில் என்றும் மறக்க முடியாதவர் !
----------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
தி.சேதுமாதவன்,
ஆட்சியர்,
”தமிழ்ப்புலம்” வலைப்பூ,
{08-01-2022}
-------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக