மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

திங்கள், 21 பிப்ரவரி, 2022

அந்நாளை நினைக்கையிலே (42) சுவாமியே சரணமய்யப்பா !


நண்பன் மது வீட்டில் நடைபெற்ற கன்னிபூஜையில் உற்சாகத்துடன் நாங்கள் கலந்து கொண்டோம். பகவான் அய்யப்பனே கன்னிசாமியின் உருவில் பூஜையில் கலந்து கொள்ளக் கூடுமென்ற விசுவாசத்தால் இப்பூஜையை நடத்துபவர்கள் கன்னி அய்யப்பன்மார்களின் பாதங்களை கழுவ வேண்டும் என்பது ஐதீகம் !

 

ய்யப்ப சாமியை விட பூஜையின் முடிவில் பரிமாறப்படுகின்ற கமகமக்கும் சாம்பார் சட்னியுடன் கூடிய இட்லி, ரசவடை, சுண்டல், பஞ்சாமிர்தம், அரவணை, எலுமிச்சை கருப்பட்டி கலந்த பானகம் மீதே சிறுவர்களாகிய நாங்கள் அளவற்ற பக்தி பூண்டிருந்தோம் !

 

அய்யப்ப பூஜைகளை நடத்துவதில் சிறந்த அனுபவமிக்க மகாராஜ மாமா(ஆதியின் அப்பா),  பில் கலெக்டர் ஆறுமுகம் மாமா, போஸ்ட் மேன் அண்ணாச்சி ஆகியோர் பூஜைக்கான முன்னேற்பாடுகளை செய்து முடித்த பின்னர், இரவு எட்டு மணியளவில் குருசாமிகள் வருகை தந்தனர். வன்புலி வாகனனின் படத்தை மலர்களால் அழகுற அலங்கரித்து திருவிளக்குகளை ஏற்றிய பின்னர் பஜனை துவங்கியது !

 

மேற்குறிப்பிட்ட அனைவருமே சிறந்த குரல் வளம் கொண்டவர்களேயாயினும், மதுவின் அப்பா நல்லபெருமாள் மாமாவும் போஸ்ட் மேன் அண்ணாச்சியும் கம்பீரமான கணீரென்ற குரலுக்கு சொந்தக்காரர்கள் !

 

பாடகர் வீரமணி அவர்களின் "இரு முடி தாங்கி" எனத் துவங்கும் பாடலையும் "மாமலை சபரியிலே மணிகண்டன் சன்னிதானம்" என்ற பாடலையும் அவர்கள் உணர்ச்சி பொங்க உச்சஸ்தாயியில் இனிமையுடன் பாடுவார்கள்.அக்கால கட்டத்தில் அய்யப்ப பூஜைகளின் போது வடக்கு கிராமம் அய்யாவும் அவரது தம்பி மச்சுவும் கருப்பசாமி பாடலைக் கேட்டு உணர்ச்சி வசப்படுவது வழக்கம் !

 

முக்கண்ணன் போற்றியின் வீட்டில் வைத்து நடைபெற்ற கன்னி பூஜையின் போது  கோபாலன் போற்றி உணர்ச்சி வசப்பட தண்ணீர் தெளித்து அவரை பழைய நிலைக்கு கொண்டு வந்தனர் !

 

படிப்பாட்டு துவங்கும் போதே இரவு மணி பன்னிரெண்டாகி விட்டது. பூஜை விரைவில் முடிந்து விடுமென்ற உற்சாகத்துடன்,


" ஒன்றாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பா

சாமி பொன்னய்யப்பா.

சரணம் பொன்னய்யப்பா

அய்யனே பொன்னய்யப்பா சாமியில்லாதொரு சரணமில்லைய்யப்பா"


என்று துவங்கி பதினெட்டாம் படி வரை சிறுவர்களாகிய நாங்கள் உற்சாகத்துடன் பாடி முடித்ததும் அய்யப்பன்மார்கள் - அதிலும் குறிப்பாக கன்னி அய்யப்பன்மார்களின் சரணகோசத்திற்குப் பின்னர் தீபாராதனை துவங்கியது !

 

தீபாராதனையின் போதே 'ஹரிவராசனம்' பாடலை குருசாமிகளுடன் இணைந்து அனைவரும் பாடினர். தீபாராதனை முடிந்த பின்னர் சாஸ்தா பஞ்ச ரத்னப் பாடலான "பூத நாத சதானந்தா" துதியைப் பாடிய பிறகு 'தீபமங்கள ஜோதி நமோ நம' பாட்டை தீபம் மறையும் வரை பாடிக் கொண்டிருக்கும் போதே, பொறுமையிழந்த மது பசி மயக்கத்தில் "சீக்கிரமாக முடிங்கப்பா. பசிக்குது" என்று கூற நாங்களும் மௌனமாக ஆமோதித்தோம். பசியின் முன் பகவான் எம்மாத்திரம் !

 

கன்னிசாமிகளை முதல் பந்தியில் சாப்பிட வைப்பது மரபாகவிருந்த காரணத்தால், உற்சாகத்துடன் சாப்பிட உட்காருகின்ற சிறுவர்கள், அடுத்து வரும் பந்திகளில் உண்டவர்களின் இலையெடுக்கும் நிலை வரும் போது சோம்பல் கொள்வது வழக்கம் !

 

எங்கள் ஊர்க்காரர்கள் மட்டுமன்றி பக்கத்து ஊர்க்காரர்களும் சபரிமலைக்கு இருமுடி கட்டுவதும் புனித யாத்திரையைத் துவங்குவதும் பெருமாள் கோவிலில் வைத்து தான். மீன், புலால் வியாபாரிகளும் அய்யனைக் காணச் செல்கின்ற கார்த்திகை மார்கழி மாதங்கள் ஜாதி மத பேதமின்றி அனைவருக்குமே புனித மாதங்களாகும் ! கோட்டார் சவேரியார் கோவில் , சுசீந்திரம் தாணுமாலையப் பெருமாள் திருக்கோவில்களில் திருவிழாக்கள் நடப்பதும் இம்மாதங்களில் தான் !

 

இருமுடி தாங்கி மலைகள் பல கடந்து நெய்யபிஷேகப் பிரியனைத் தரிசனம் செய்வது பரவசமான ஆன்மீக அனுபவம். மலையேறும் தகுதியற்றவர்களாக நாம் சந்தேகிக்கின்ற குழந்தைகளும் முதியோர்களும் நமக்கு முன்னரே உற்சாகத்துடன் வேகமாக மலையேறிச் செல்லும் அதிசயத்தை கண்கூடாக காணலாம் !

 

எங்கும் நிறைந்த பரம்பொருள் உன்னிலுமிருப்பதால் நீயும் பரம்பொருளே என்றுணர்த்தும் வகையில் நீயே நானாகின்றாய் எனவுரைக்கும் "தத்வமசி" தத்துவத்தின்படி ,முழுமையான ஈடுபாட்டுடனும் பக்தியுடனும் மண்டல விரதமிருந்து கலியுக வரதனை மலையேறி தரிசிப்பவர்கள் பாக்கியவான்கள் !

 

உற்சாக பானத்திற்கும் தீய பழக்கங்களுக்கும் அடிமையான பலரும் சபரிமலை தரிசனத்திற்கு பின்னர் திருந்திய வரலாறுண்டு. பதினைந்து வருடங்களுக்கு மேலாக மக்கட்செல்வம் இல்லாதிருந்த போஸ்ட் மேன் அண்ணாச்சிக்கு பிறந்த ஆண் மகவை 'வீரமணி கண்டன்' என்று பகவானின் நாமத்தில் அழைத்த போது ஊரே எல்லையற்ற மகிழ்ச்சியில் மிதந்தது.கலியுக வரதன் அனைவரது வாழ்விலும் மலர்ச்சியை அருளட்டும் !

 

"சுவாமியே சரணமய்யப்பா "

 ------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்,

(sethumathavan2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப்புலம்” வலைப்பூ,

{25-12-2021}

--------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக