மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

அந்நாளை நினைக்கையிலே (18) சீக்காமடத்தெரு ஆண்டார் பிள்ளை தாத்தா !


காய்ச்சல் காரர்களுக்கு துளசி, ஆடாதோடை, கருப்பட்டி, சுக்கு , நல்லமிளகு கலந்த சூடான கசாயம் அருமருந்தானது போன்றே, அஜீரணத்திற்கு இஞ்சி- உப்பு கலந்த கரைசலும் ஓமத்தீனீரும் மருந்தானது. மாதமொரு முறை உட்கொண்ட ஆமணக்கு எண்ணெய் பூச்சிகளிடமிருந்து வயிற்றைப் பாதுகாத்தது !

 

விடுமுறை நாட்களை உபயோகமாக விளையாடிக் கழித்து , வீட்டுப் பாடங்களைப் பூர்த்தி செய்யாது ஆசிரியரின் தண்டப் பிரயோகத்திற்கஞ்சி சோகமாக முகத்தை வைத்து காய்ச்சலென நடித்தாலும் நெற்றியைத் தொட்டு உண்மை கண்டறிந்து பள்ளிக்கு துரத்தி விடுவார் அம்மா.பொய் சொன்ன பாவத்திற்கு அன்றைய இரவு காய்ச்சல் கசாயம் தவறாமல் புகட்டப்படும் !

 

ஒற்றைத் தலைவலிக்கு நெற்றியில் தேய்க்க இரத்தச் சந்தனம். கக்கொட்டிக்கு (கண் நோய்) கண்ணில் ஊற்ற பக்கத்து வீட்டு பாலூட்டும் தாயிடம் சிறு சங்கில் பெற்ற பால், மஞ்சள் காமாலைக்கு முற்றத்தில் முளைத்த கீழாநெல்லி , பல் வலிக்கு ஈறுகளை மரக்கச் செய்யும் கிராம்பு , தலைக்கு தேய்த்துக் குளிக்க குளிர்ச்சியான கொடுப்பை, கையாந்தலை, பூவும் குறுந்தல், கறிவேப்பிலைச் சாறு, மருதாணி கலந்த காய்ச்சிய நறுமணமிக்க தேங்காய் எண்ணெய் என கைக்கெட்டும் தூரத்தில் கிடைத்த இயற்கை வரங்கள் !

 

வாரமொரு முறை தலைக்கு சீகைக்காய் தேய்த்துக் குளிக்கும் பெண்கள் சில வேளைகளில் செம்பருத்தி இலைகளுடன் பூக்களின் சாறெடுத்து தலைக்குத் தேய்த்துக் குளிப்பதுமுண்டு !

 

அக்கரை சிவனை வழிபடக் கோயிலுக்குச் செல்பவர்கள் வயல் வரப்பில் செழிப்புடன் வளர்ந்து நிற்கும் வைட்டமின் ஏ நிறைந்த கொடுப்பைக் கீரையையும், ஆரைக் கீரையையும், வயிற்றுப் புண்ணாற்றுவதுடன் மறதிக்கு அருமருந்தான வல்லாரை யையும் வீட்டிற்கு எடுத்து வருவர் !

 

தோசை உண்டவுடன் வாந்தியெடுக்கும் குழந்தைகளைக் கொதிக்குத் தொடும் பொருட்டு சீக்காமடத்தெரு ஆண்டார் பிள்ளை தாத்தாவிடமும், தெற்கு கிராமம் முத்துராமண்ணனின் அம்மாவிடமும் அதிகாலையில் தோசையுடன் அழைத்துச் சென்று வெறும் வயிற்றில் அவர்களால் ஓதப்பட்ட பின் பாதிக்கப் பட்டவர் சீரடைவதற்கும் ஓதியவர் வாந்தியெடுப்பதற்கும் விஞ்ஞான விளக்கம் கிடையாது !

 

உடல் சூட்டினால் ஏற்படும் வேனல் கட்டி மீது சங்கு புஷ்ப இலைச் சாறு ஊற்றப்பட்ட தூய வெள்ளைத் துணியை ஒட்டி விடுவார்கள். கட்டி பெரிதாகி குவிந்த பின்னர் உயிலை இலைச் சாறு கலந்த துணியைக் கட்டி மீது ஒட்டும் போது பக்க விளைவுகளாக உளைச்சலும் காய்ச்சலும் தோன்றினாலும் மறுநாளே புண்ணிலிருந்து சீழ் முழுமையாக வெளியேறி விடும் !

 

தெப்பக்குளத்தில் பலமுறை நீராடித் தலை துவட்டிய கால்சட்டையை அணிந்து ஈரப் பதத்தில் பராமரிக்கப் படுகின்ற சிறுவர்களின் பின் புறத்தில் தோன்றும் சொறி சிரங்குகளைப் போக்க குப்பைமேனி இலையுடன் கொச்சங்காயை அரைத்து அலறும் படியாக அம்மாக்கள் தேய்த்தேடுத்து விடுவார்கள் !

 

சிறு உபாதைகளுக்கு மருத்துவமனைக்குப் படையெடுக்கும் வழக்கமின்மைக்கு மாசுபடா காற்று, தூய உணவு , உதவுகின்ற கிராமத்து உறவுகள், செருப்பில்லா நடைப் பயணம் , குளத்தில் நீந்திக் குளித்தல் ,மன அழுத்தமற்ற வாழ்க்கை, மாதமொரு முறை நல்லெண்ணெய் குளியல், பசித்தவுடன் புசித்தல், உடல் உழைப்பு தந்த அசதியின் கொடையாக சுக நித்திரை,பாட்டி வைத்தியம் இவையனைத்தும் ஈந்த எதிர்ப்பு சக்தி ஆகியவையே காரணிகள் !

 

எனது பெரிய மாமாவிற்கு ஒரு முறை இரவில் ஏற்பட்ட விக்கல் தண்ணீர் நிறைய அருந்திய பின்னரும் சீரடையாததால் , மாரடைப்பின் அறிகுறியாக இருக்கக் கூடுமென கணேசன் அண்ணனால் சந்தேகம் எழுப்பப்பட்டது !

 

மாமாவின் நண்பரான ஆயுர்வேத வைத்தியர் கிருஷ்ண பிள்ளை, அடுப்பில் சூடாக்கிய வாணலியில் போட்ட கடுகு நன்கு பொரிந்த பின்னர் ஊற்றிய தண்ணீரைக் குடித்ததும் நின்று விட்டால் அது சாதாரண விக்கலெனவும், இல்லையேல் இதயநோய் நிபுணரை உடன் அணுகும் படியும் கூறினார். எனது மாமாவின் விக்கல் இரண்டாவது வகையிலானது !

 

பாரம்பரியமாக பாதுகாக்கப் பட்டு வந்த பழங்கால ஓலைச்சுவடிகள் குழித்துறையருகில் பாகோடு என்ற கிராமத்தில் பரம்பரை வைத்தியரான எங்கள் முப்பாட்டனாரின் மரணத்திற்குப் பின்னர், கறையான் அரித்து விடக்கூடுமென்ற அறியாமை காரணமாக அவ்வீட்டில் வசித்த அறிவு ஜீவிகளால் வெந்நீருக்கு எரிபொருளானது. பாம்புக் கடியிலிருந்து பல உயிர்களை மீட்டு வாழும் தெய்வமாகப் புகழப் பெற்ற பாட்டாவின் ஆயுளோடு பண்டைய ஆயுர்வேத மருத்துவக் குறிப்புகளின் ஆயுளும் இனிதே முடிவுற்றது !


----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை


 

தி.சேதுமாதவன்

[sethumathavan2021@gmail.com]

கூடுதல் ஆட்சியர்

I.T.I. முகநூற் குழுமம்

{23-01-2021}

----------------------------------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக