மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

சனி, 17 ஏப்ரல், 2021

அந்நாளை நினைக்கையிலே (26) "ரெண்டும் பீடி சுத்தி பொழச்சிக்கிடும் மக்கா " - மஸ்தான் அண்ணன் !


கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் வேலைக்காக முயன்று வந்த காலகட்டம். எனது சித்தப்பாவும் சித்தியும் நெல்லையில் பணியாற்றி வந்த காரணத்தால் 1984 ஆம் ஆண்டு என்.ஜி.ஓ.காலனியிலுள்ள சித்தி வீட்டின் கட்டுமான மேற்பார்வை என்னிடம் ஒப்படைக்கப்பட்டது !


தச்சுப் பணிகளை அப்பு அண்ணன் தலைமையில் முத்தையா அண்ணனும் நண்பன் முருகனும் கவனித்து வந்தனர். தங்கள் கருவிகளை தீட்டி கூர் நோக்கி பணியைத் துவங்கும் போது தேநீர் இடைவேளை வந்து விடுவதால், கூர் நோக்கும் பணிகளை விடுமுறை நாட்களில் மேற்கொள்தல் நலமென நாசூக்காக கூறினாலும் பணி நேரத்தின் பெரும்பகுதி தீட்டுவதில் கழிந்தது !


மிதிவண்டியில் தேநீர் விற்பனை செய்யும் நவாஸ் என்ற நண்பர் எங்கள் வீட்டின் அருகே வந்தவுடன் "லே ! அப்பன் வர்றது கூட தெரியாம அப்படி என்னல வேல ?" என்று இளைஞன் முருகனைப் பார்த்து கிண்டலடிப்பதைக் கேட்டு அப்பு அண்ணன், முத்தையா அண்ணன், மின் பணியாளர் மஸ்தான் அண்ணன் ஆகியோர் சிரிப்பதற்கு முருகன், ஆசாரி இனத்தைச் சாராதவர் என்பதே காரணம் !


தினமும் தேநீர் வேளைகளில் தொடர்ந்து வந்த நவாசின் அப்பன் - மகன் கிண்டலைத் தனது புன்னகையால் சமாளித்து வந்தான் முருகன். ஒரு நாள் நேருக்கு நேராக நின்ற நவாஸ் "அப்பன் நேரில வந்து நிண்ணா நிமிர்ந்து பாருல" எனப் பொய்க்கோபத்துடன் கூற "தேவையில்லாம தொந்தரவு பண்ணினா அப்பன்னு கூட பாக்காம ஒரே போடா போட்டிருவேன்" எனச் சிரித்துக் கொண்டே சுத்தியலை முருகன் தூக்கிக் காட்ட அனைவரும் அதனை சிரித்து இரசித்தனர் !


1984 ல் அமெரிக்காவில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டிருந்த நேரம் கவலை தோய்ந்த முகத்துடனும் கனத்த இதயத்துடனும் தனது பணியை செய்து கொண்டிருப்பார் அதிதீவிர எம்ஜிஆர் இரசிகரான அப்பு அண்ணன். தலைமைக் கொத்தனார் துரை அண்ணனோ தீவிர சிவாஜி இரசிகர் !


பணி முடித்து வீடு திரும்பும் வழியில் பறக்கை சந்திப்பு பெட்டிக் கடையில் இரகசியமாக விற்கப் படுகின்ற மாம்பட்டை கசாயத்தை விஷத்தைக் குடிப்பது போன்ற அருவருப்பான முகபாவத்துடன் குடித்த பிறகு காலிகண்ணாடிக் குவளையை சப்தத்துடன் வைத்த பின் அஷ்ட கோணலான முகத்துடன் நின்ற இடத்திலேயே உமிழ்ந்து வேட்டியால் வாய் துடைத்து வீட்டிற்கு சென்று மீன்கறியுடன் கஞ்சியைக் குடித்து அலுப்பு தீர குறட்டை விட்டு தூங்கி எழுந்து மறுநாள் காலையில் வேலைக்கு வருகின்ற துரை அண்ணனிடம் முந்தைய நாள் நெடி அப்படியே இருக்கும் !


என்னிடம் பாசம் கொண்ட அப்பு அண்ணனைத் தேற்றும் பொருட்டு எம்ஜிஆரின் உடல்நலம் தேறி வருவது குறித்த பத்திரிகை செய்திகளை நான் வாசித்துக் காட்ட வேட்டியின் முனையால் பெருகி வரும் கண்ணீரைத் துடைத்துக் கொள்வார். பள்ளி விடுமுறை தினங்களில் தனது மகன் நாகராஜனை துணைக்கு அழைத்து வருகின்ற அப்பு அண்ணனுக்கு அவனது வளமையான எதிர்காலம் குறித்த கனவு இருந்தது !


நல்ல உடற்கட்டுடைய அப்பு அண்ணனது கண்கள் எம்ஜிஆரின் உடல்நிலை குறித்து கலங்குவது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் அப்பு அண்ணனைப் போன்றே எம்ஜிஆர் மீது எல்லையற்ற பாசங்கொண்ட ஏராளமானோரைப் பிற்காலத்தில் நான் காண நேர்ந்தது !


மஸ்தான் அண்ணன் நுட்பமான வேலைக்காரர். பணிக்கு வந்து விட்டால் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து வேலை செய்வார். 'மக்கா' என அன்புடன் என்னை விளிக்கும் அவர் ,தொடர்ந்து பணிக்கு வராமல் அலைக்கழிக்கும் சந்தர்ப்பங்களில் பறக்கை விலக்கிலிருக்கும் பழைய மாடிக் குடித்தனத்திற்குச் சென்று மறுதினம் கண்டிப்பாக வேலைக்கு வந்து விட வேண்டும் என வெளியே நின்றபடியே கண்டிப்புடன் கூறுவது வழக்கம் !


பாசத்துடன் அண்ணி அழைத்தும் கோபத்துடன் வெளியே நிற்கும் என்னைக் கைகளைப் பிடித்து உள்ளே அழைத்து வந்து தரையில் அமரச் செய்து எனக்குப் பிரியமான உள்ளி வடையையும் தேநீரையும் தந்து அருகிருந்து உபசரிக்கும் அண்ணனிடம் கோபம் கொள்ள மனம் ஒப்பாது."நாளைக்கு நிச்சயமா வந்திருவேன் மக்கா" என்று உறுதி அளித்து விட்டால் தவறாமல் வந்து விடுவார் !


மின்சாரக் கம்பிகளை எவ்வித பாதுகாப்பு முறைகளையும் கடைப்பிடிக்காமல் நல்ல பாம்பை பிடித்து வருவதைப் போன்று தூக்கி வருவதைக் கண்டு "அண்ணே ! உங்களை நம்பி ரெண்டு குடும்பம் இருக்குண்ணே " என்று கிண்டல் செய்யும் போது "ரெண்டும் பீடி சுத்தி பொழச்சிக்கிடும் மக்கா " என்று நகைச்சுவையாக கூறுவார் மஸ்தான் அண்ணன். சிக்கன நடவடிக்கையாக தனக்கு உதவியாக ஒருவரை மட்டுமே பணியமர்த்துவது அவரது வழக்கம் !


காலச்சுழற்சியில் பதினைந்து வருடங்களாக முழு ஈடுபாடின்றி செய்து வந்த தச்சுத் தொழிலை கைவிட்ட நண்பன் முருகன் தனது உணவு விடுதியில் தொந்தியும் தொப்பையுமாக உட்கார்ந்து இருக்கிறார் !


மகனை அரசு பணியாளராக்கும் பகீரத முயற்சி பலனளிக்காத நிலையில் அப்பு அண்ணனின் மறைவுக்குப் பிறகு பாரம்பரிய தச்சுத் தொழிலில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வெற்றி நடை போடுகிறான் நாகராஜன் !


காலப்போக்கில் மாம்பட்டை கசாயம் காலாவதியாகி விட்ட காரணத்தால், உற்சாக பானத்துக்கு மாறிவிட்ட துரை அண்ணன் தற்போது அரசின் வருவாயை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறார் !


உற்சாக பானத்திற்கு அடிமையான சிறந்த பணியாளரான மஸ்தான் அண்ணனின் அகால மறைவுக்குப் பின்னர் அவரது குடும்பம் பீடி சுற்றத் துவங்கினாலும் , அவரது வாரிசுகள் குடும்ப பாரத்தைத் தாங்கி வருவதறிந்து ஆறுதலடைந்தேன் !

----------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


தி.சேதுமாதவன்,
[sethumathavan2021@gmail.com]
கூடுதல் ஆட்சியர்
I.T.I. முகநூற் குழு,
{17-04-2021}
------------------------------------------------------------------------------------------


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக