மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

அந்நாளை நினைக்கையிலே (24) எங்கள் தெருவில் நடை பயிலும் பக்கத்து தெரு கருப்பழகி !


எங்கள் தெருவில் வசித்து வந்த ஒன் நாட் நயனின் (அ.நினைக்கையிலே பாகம் 7 ல் பதிவிடப் பட்டுள்ளது) மாநிறம் பொருந்திய மகளுடன், இலவச இணைப்பான மாமனாரைச் சுமக்கின்ற வலிமையின்மையும், ஒன் நாட் நயனிடம் தங்கள் காதல் படைப்புகள் சிக்கினால் சந்தி சிரிக்க வைத்து விடுவாரென்ற அச்சமும் இளைஞர்களைச் சிந்திக்க வைத்தது !


உற்சாக பானத்தின் உந்துதலில் ஒன் நாட் நயன் செய்யும் அட்டகாசங்கள் பிரசித்தமானதால், மகள் சாதுவாகவிருந்தும், கடிக்கும் மாமனாருக்கு மருமகனாக இளைஞர் எவரும் விரும்பவில்லை  !


காலையும் மாலையும் கோவில் சுவரை உரசியபடி எதிரே வருகின்ற கால்நடைகளையும் விலகச் செய்கின்ற - மண்பார்த்து நடக்கும் பெண்மைக்கு இலக்கணமாக ஊராரால் மெச்சப்பட்ட மங்கை திடீரென காணாமல் போனார். அவரைப் போன்றே அடக்க ஒடுக்கமான இளைஞன் ஒருவருடன் திருச்சியில் குடும்பம் நடத்தி வரும் விவரம் இளைஞர் குழு வாயிலாக அறிய நேர்ந்தது !


தினம் காலை ஒன்பது மற்றும் பிற்பகல் இரண்டு மணியளவில் காலில் கொலுசு, காதில் ஜிமிக்கி கம்மலுடன் எங்கள் தெருவில் நடை பயிலும் பக்கத்து தெரு கருப்பழகியின் தரிசனத்திற்காக குளிக்காமலேயே முகத்தில் வெள்ளை பூசி கண்ணாடி முன் நின்று தலையை வாரிக் கலைத்து முன் பக்கம் குருவிக்கூடு சுற்றி விடுமுறை நாட்களில் தெரு முனையில் தேவதை வரவுக்காக இளைஞர் கூட்டம் ஒன்று காத்திருக்கும் !


ஒன் நாட் நயனின் உறவினரான இவர் அவரது மகளுடன் உலக விசயங்களைப் அலசி விட்டு "போய் வருகிறேன்" என ஊருக்கே கேட்கும் படியாகச் சொல்லிக் கிளம்பும்போது 'அடக்கமான' இளைஞர்கள் சிலர் கலைந்த முடியை சரி செய்து தங்கள் வீட்டினுள் நின்றவாறே இலவச தரிசனம் பெறுவது வழக்கம் !


காலில் கொலுசுடன் கடைக்குச் செல்லும் மணமான பெண்ணொருவர் இதே நேரத்தில் தேவையின்றி நடை பயின்று அப்பாவி இளைஞர்களின் சாபத்தை ஏற்றுக் கொள்வார் !


தரிசனத்திற்காக பக்த கோடிகள் தயாராக நிற்கிறார்களாவென உறுதி செய்த பின்னர் புன்னகையை வீசியவாறே திருவுலா முடித்து வீட்டிற்கு திரும்பும் கொலுசுப்பெண் மறுமுனையை அடைந்தவுடன், முன்பக்கம் வைத்திருந்த குஞ்சலங்களுனான பின்னல் சடையை பின்பக்கத்திற்கு மாற்றியவாறே ஒயிலாகக் கழுத்தைத் திருப்பும் போது தெருமுனை இளைஞர்கள் தங்கள் விழிகளை கழற்றி விட்டு விடுவர் !


முரட்டுக் காளைகள் இருவரை சகோதரர்களாகக் கொண்ட கொலுசுப் பெண்ணுக்கு காதல் மடல் பரிமாறும் தைரியம் எங்கள் பகுதி இளைஞர்களுக்கு இல்லை !


பள்ளி - கல்லூரி மாணவ மாணவியரால் நிரம்பி வழியும் மாலை நேர அரசுப் பேருந்திற்குள் அங்குமிங்குமாக ஓடி பேருந்துச் சீட்டை குறித்த சமயத்தில் கொடுத்து முடித்து படிக்கட்டில் நின்றபடி கணக்கை வேகமாக முடிக்கின்ற அகவை ஐம்பதைக் கடந்த எனது தந்தையின் சிரமத்தை நன்குணர்ந்த காரணத்தால் கல்லூரி வகுப்புகள் முடிந்து வீடு செல்லும் வேளை அப்பா பணியாற்றும் பேருந்தில் ஏறுவதை நான் தவிர்ப்பதுண்டு !


தந்தை ஓய்வு பெறும் 1987 ற்குள் ஓய்வூதியம் ஏதுமில்லாத அப்பாவின் குடும்ப பாரத்தை ஏற்க வேண்டுமென்ற உணர்வு தேவையற்ற விஷயங்களின் பால் கவனம் சிதறாமல் தடுத்தது எனலாம் !


ஒரு சனிக்கிழமை காலை பத்து மணியளவில் 'அண்ணே" என்று பின்பக்கத்திலிருந்து வந்த பெண் குரல் கேட்டு கால்நடையாக கடைக்குச் சென்று கொண்டிருந்த நான் திரும்பிப் பார்த்தேன். எதிரே கொலுசுப் பெண். "கடைக்குப் போகிறீர்களா அண்ணே ? " என ஆரம்பித்து சிறிது தூரம் என்னுடன் பேசிக் கொண்டு வந்தார் !


நன்கு படித்து வேலையில் ஏற முயற்சிக்குமாறு அறிவுரை கூறிய களங்கமில்லாத அவ் வெகுளிப்பெண் ஒன்பதாம் வகுப்பில் தோல்வியுற்ற காரணத்தால் பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்தவர் !


சமையலறைப் பணிகளனைத்தும் முடித்த பின் சற்றே இளைப்பாறும் பொருட்டு தனது உறவினர் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும் விளக்கினார். படிப்பைத் தொடர மிகுந்த ஆவலிருப்பினும் சகோதரர்கள் சம்மதிக்கவில்லையெனவும் பேச்சிலிருந்து விளங்கியது !


மறுநாள் மாலை வேளை அக்கரை சிவன் கோவிலுக்கு நண்பன் முருகனுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது அடிவானில் பல உருவங்களுடன் காட்சியளித்த கலைந்த மேகக் கூட்டங்களுக்கிடையில் ஆதவன் கீழ் நோக்கி மெல்ல மறையத் துவங்கியிருந்தான். இறை தரிசனம் முடித்து எதிர்ப்பட்ட கொலுசுப் பெண் "கோவிலுக்கு போறீங்களா அண்ணே?" எனப் பரிவுடன் கேட்டதும் "ஆமாம்மா " என அன்புடன் பதிலளித்த என்னைக் கண்டு நண்பன் முருகன் "அண்ணன் வரிசையில் நீ சேர்ந்தது எப்போ ? என சற்று ஆச்சரியத்துடனே கிண்டல் செய்தான். மேகங்கள் நீங்கிய அடிவானம் நிர்மலமாகக் காட்சியளித்தது !


------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்,

[sethumathavan2021@gmail.com]

கூடுதல் ஆட்சியர்,

I.T.I. முகநூற் குழு,

{27-03-2021}

---------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக