1981ல் கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் அரசாங்க வேலையின் பொருட்டு போட்டித் தேர்வுகளை எழுதிக் கொண்டிருந்த சமயம். மேலத்தெரு ஜவஹர் நூலகத்திற்குச் சென்று தினமணி நாளிதழை புரட்டி முடித்து வீட்டிற்கு வந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் செய்திகளைப் புரிந்து கொண்ட பின்னர் புரியாத ஆங்கில வார்த்தைகளை குறிப்பேட்டில் எழுதி வைத்து ஆங்கில அகராதியில் அர்த்தம் புரிந்து வந்தேன். என் போன்ற இளைஞர்களுக்கு ஜவஹர் நூலகம் அக்காலத்தில் ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்தது !
கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் பயின்ற தமிழ் -ஆங்கில
சுருக்கெழுத்தும் தட்டச்சு உயர்நிலையும் என் அக்காவுக்கும் தம்பிக்கும் பணியில்
விரைவாக பதவி உயர்வு பெற உதவிய நிலையில், சோம்பேறித்தனத்தால் சுருக்கெழுத்து கற்க
மறுத்தது மட்டுமன்றி குட்டையான கைகளைக் (Short hand) கொண்டவர்களுக்குகந்த
பயிற்சியெனக் கிண்டல் செய்ததன் பலனை பிற்காலத்தில் நான் அனுபவிக்க நேர்ந்தது !
தட்டச்சையும் தாமதமாகவே பயின்றதன் காரணமாக மத்திய அரசுப் பணி
வாய்ப்புகளை கைக்கெட்டும் தூரத்தில் இரு முறை கோட்டை விட்டதுண்டு. உயர் நிலை
அலுவலர்களுக்கான தேர்வுகளை மட்டுமே தேர்வு செய்து எழுதி ஓரிரண்டில் இறுதிச்
சுற்றில் கோட்டை விட்ட நான்,
மாநில தேர்வாணையத்தின் அமைச்சுப் பணியாளர் தேர்வுகளை மெத்தனத்துடன்
தவிர்த்து வந்தேன் !
வருடத்திற்கிரு முறை இராணிப்பேட்டையிலுள்ள எனது சின்ன மாமா வீட்டுக்குச் சென்று ஓரிரு மாதங்கள் தங்கி விட்டு ஊருக்கு திரும்புவேன். எங்கள் ஊரிலுள்ள தட்டச்சுப் பயிற்சி மையத்தில் தமிழ் ஆங்கில தட்டச்சு இளநிலை முடித்த நான் உயர்நிலை தட்டச்சை இராணிப்பேட்டையில் பயின்றேன் !
வட ஆற்காடு மாவட்ட வெயிலின் உக்கிரத்தில் வதனம் வாடி விடாமலிருக்க அக்காலத்தில் பிரபலமான மஞ்சள் வண்ண முகக் களிம்பைக் கட்டியாகத் தேய்த்து அதன் மேல் வெள்ளை பூசி முகத்தில் குளிர் கண்ணாடியை பொருத்தி இருசக்கர ஊர்தியில் தட்டச்சு நிலையத்திற்குச் சென்று வருவேன் . கட்டியாக களிம்பு பூசியும் கரி படிந்த விறகடுப்பு சமையலறையில் வெள்ளை வண்ணம் பூசியது போன்றே அமைந்தது !
இராணிப்பேட்டையிலிருந்து ஊர் திரும்பிய மறுநாள் காலை நேரம்
பறக்கை தெப்பக் குளத்தருகே என்னை கண்ட ஊர் பெரியவர் ஒருவர் " ஏய் ! என்ன ஆள
கொஞ்ச நாளா காணல ?
எங்க வேலை பார்க்க ?" என்று கேட்டதற்கு
சிரிப்பை மட்டுமே பதிலாக அளித்தேன் !
தொடர்ந்து விடாது கேள்விக்கணை தொடுத்ததற்கு "எம்.என்.ஓ.பி.யில்"
என்று பதிலளித்தேன் . "அது எங்கடே இருக்கு?" என்று
கேட்டதற்கு "என்ன மாமா எம். என்.ஒ.பி தெரியாத்த ஆளா இருக்கீங்க" என்று
கேட்டவுடன் சுதாரித்துக்கொண்டு "அது பெரிய கம்பெனினு தெரியும் டே ! எந்த
கிளையில வேலை பார்க்கன்னு தான் கேட்டேன்" என்று சமாளித்தார். "
ராணிப்பேட்டை" என்றேன்." சரி !
.. சரி.. ஒழுங்கா வேலய பாருடே" என்ற
அறிவுரையுடன் நகர்ந்தார் !
ஓரிரு வாரங்களுக்கு அவரைத் தூரத்தில் கண்டதுமே வேறு பாதை
வழியாக ஓடித் தப்பித்த நான்,
ஒரு நாள் பொறியில் மாட்டிக் கொண்டேன். "ஏய்
! வேலைக்கு போல்லியா ?" என்று கேட்க மேலும் ஒரு
வாரத்திற்கு விடுப்பை நீட்டித்துள்ளதாக சமாளித்தேன் !
சரியாக மறுவாரம் பாராமுகமாக சென்ற என்னை பின்பக்கமாகத் துரத்தி அருகில் வந்து மூச்சிரைக்க நின்றார் விடாக்கண்டன் மாமா. "இன்னுமா போல்ல ?" என்று அவர் கேட்டு முடிக்குமுன்னரே, "இ.எப்.ஜி" கம்பெனியில அதிக சம்பளத்தில வேலை கெடச்சிருக்கு. அடுத்த வாரம் மெட்ராஸ் போறேன்" என வேண்டா வெறுப்புடன் அளித்த பதிலில் திருப்தியுறாமலேயே மெல்ல நகர்ந்தார் மாமா !
ஓரிரு தினங்கள் கடந்த நிலையில் என்னை கண்ட மாமா "இன்னும்
நீ போல்லியா ?" என்று கேட்டவுடன் கோபத்தை அடக்கியவாறு "மாமா ! உங்களுக்கு இப்ப என்ன
பிரச்சனை ? " என்று கேட்டேன். 'பெற்றோர்
ஆதரவில் இருக்கும் நான், தங்களிடம் உணவுக்கு யாசித்து
நின்றால் இவ்வாறு நச்சரிப்பதில் அர்த்தமுண்டு. வேலைக்காக தொடர்ந்து முயன்று வரும்
என்னிடம் எனது பெற்றோர் கூட இதுவரை கேட்டிராத கேள்விகளைக் கேட்டு என்னைப் பொய் பேச
வைப்பது அழகல்ல' என அமைதியாகவும் கண்டிப்புடனும் கூறி
நகர்ந்த பின்னர், என்னைத் தூரத்தில் கண்டாலே வேறு பாதை வழியாகச்
சென்று விடுவார் விடாக்கண்டன் மாமா !
--------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக