கவச குண்டலங்களுடன் அவதரித்த கர்ணனைப் போன்று இடுப்பில் செம்புக் குடத்துடன் தெருக்குழாயில் தண்ணீர் எடுப்பதற்காக பாவாடை தாவணியில் அங்குமிங்குமாக எப்போதும் அலைவதன் காரணமாக 1980 களில் எங்கள் தெருவில் வசித்து வந்த அந்த இளம்பெண் 'கொடம்' என்ற பெயரால் சிறப்பிக்கப்பட்டார் !
சுமாரான உயரமும் மாநிறமும் கொண்ட இருபத்தைந்து அகவை மதிக்கத்தக்க அப்பெண்ணின் சிரிப்பு மோனலிசாவைப் போன்றே மர்மமானது !
அங்கீகரிக்கப்பட்ட குழாயடி ராணிகளுக்கிணையாக வாய்ப்போர்
புரியுமளவிற்கு வாடகைக்கு குடி வந்த ஓரிரு மாதங்களிலேயே திறமையை வளர்த்துக் கொண்ட 'கொடம்', தான் வசித்துவந்த முந்தைய ஊர்களிலேயே இந்த அருங்கலையில் தேர்ச்சி
பெற்றிருக்கவும் வாய்ப்புண்டு !
குழாயடிகளுக்குச் செல்லும் 'பயிற்சியற்ற' பெண்கள்
சட்டம் குறித்து பேசினால் "உன்னைத் தெரியாதா ? " எனத்
துவங்கி கூச்சமின்றி அபாண்டமான - ஆபாச அர்ச்சனைகளால் ஆவேசத்துடன் ஆக்ரமிக்கின்ற
(பி) ராணிகளை எதிர்கொள்ளவியலாது தண்ணீருக்குப் பதிலாக கண்ணீருடன் திரும்ப
வேண்டியிருக்கும். சுயமரியாதை கொண்ட ஆண்கள் எவரும் அப்பக்கத்தில் தலை வைத்துப்
படுப்பதில்லை !
எங்கள் தெரு இளைஞர்களுக்கு 'கொடத்தின்' அழகின் பால்
ஈர்ப்பிருப்பினும், குழாயடி யுத்தங்களில் அவரால்
பிரயோகிக்கப்படும் நாகரிகமற்ற வார்த்தைக் கணைகள் அவர் பால் நெருங்க விடாமல்
தடுத்தது !
குழாயடி இராணிகள் தினசரி தண்ணீர் எடுப்பதில் தங்கள் முதுநிலையை
நிர்ணயிப்பதற்காக வரிசையில் வைத்திருக்கும் நிற்கத் திராணியற்ற அலுமினியக்
குடங்கள் அனைத்துமே களங்கள் பல கண்டதன் பலனாக தலை, வயிறு, கழுத்து, அடிப்பாகம் நசுங்கியவையாகவே இருக்கும். குழாயடி சண்டைகளின் போது இத்தகைய குடங்களுடனேயே
தொழில்முறை ராணிகள் களம் காண்பது மரபு !
' குட ' யுத்தத்தில்
வல்லமை பெற்றிருந்த 'கொடத்தின்' மாவீரம்
கண்டு அதிசயித்த ராணிகள் மெல்லமெல்ல அவர்களது கூட்டணியில் இவரையும் ஐக்கியப்
படுத்திக் கொண்டார்கள் !
தெருக் குழாயில் தண்ணீர் நின்ற பின்னரும் குடம் குடமாக குளத்திலிருந்து நீர் சேகரிக்கும் இவரது வீட்டினுள் நீச்சல் குளமேதும் பராமரிக்கப் படுகிறதாவென்ற பலத்த சந்தேகம் எங்கள் தெருக்காரர்களுக்குண்டு !
பிற பெண்களுடான இவரது அரட்டை கூட பெரும்பாலும் குழாயடி பிரதாபங்கள் பற்றியதாகவே இருக்கும் !
இடமாறுதலில் புதிதாக எங்கள் ஊருக்கு வந்த மத்திய வயது
தபால்காரர் "ஜொள்ளு " தங்கையா 'கொடத்தை' பார்த்து அசடு
வழிவது வழக்கம் !
ஒரு முறை ஜொள் விட்டவாறு மிதிவண்டியில் மெல்ல அருகில் வந்த
தங்கையா கிசுகிசுப்பான குரலில் " தண்ணி எடுத்துட்டுப் போறியா "என வினவ "குடத்திலே தண்ணி
எடுக்காம ம.......யா எடுத்துட்டுப் போவாங்க?" என்ற
எதிர்பாராத ' மயிர்க்' கூச்செறியும் பதிலால்
அதிர்ச்சியுற்ற தங்கையா, ஒரு வாரகாலம் தெருப் பக்கம் தலை
காட்டாதது மட்டுமன்றி கொடத்திற்கு வருகின்ற கடிதங்களை வேறு தெருக்களில் கொடுத்துச்
சென்று விடுவார் !
ஒரு நாள் எங்கள் தெருவிலுள்ள ஒரு வீட்டின் முன் கண்ணகியாக கையில் ஒரு மடலுடன் வந்த கொடம் " அக்கா ! ஒங்க மூத்த மகனைக் கூப்பிடுங்க " என்றார். இலக்கணப் பிழைகளில் குளித்த அந்த காதல் அபத்தத்தை மிகுந்த சிரமத்திற்கிடையில் பொறுமையாகப் படித்துக் காட்டிய பின்னர் " முதல்ல இரட்டை வரி ஏட்டில் கோணாம தப்பில்லாம ஒழுங்கா எழுதிப் படில ! சவம் ! " என "அன்புள்ள கதலிக்கு" எனத் துவங்கப்பட்ட அம்மடலை சுக்கு நூறாகக் கிளித்து அவனுடைய முகத்திலேயே எறிந்து விட்டு வேகமாகச் சென்று விட்டார் !
இச்சம்பவத்தின் தாக்கத்தால் எங்கள் தெருக் கலைஞர்களின் காதல் இலக்கிய படைப்புகள் பல பட்டுவாடா செய்யப்படாமலேயே அழிக்கப்பட்டது தமிழுக்கு பேரிழப்பு !
'கொடத்தின்' அறிவுரையை
சிரமேற்கொண்டு தவறுகளை குறைத்துக் கொண்ட காதல் மன்னன், வழக்கம்போல
பக்கத்து தெரு இளம் பெண்களுக்கு குறைந்த எழுத்துப் பிழைகளுடன் கூடிய காதல்
கடிதங்களை பகிர்ந்து கொண்டிருந்தான் !
தங்கள் வீட்டினுள்ளிருந்தபடியே 'கொடம்' எனக்
குரலெழுப்பும் இளைஞர்களின் கிண்டலுக்கு மதிப்பளித்து அவர்கள் வீட்டின் முன் சென்று
"இங்க வால ! காணிச்சு தரேன் " என மல்லுக்கு நிற்பது அவரது சிறப்பு !
நாகர்கோவிலிலுள்ள கடையொன்றில் காலையில் கணக்கெழுதச் சென்று
இரவு வீடு திரும்புகின்ற திருமணமாகாத அண்ணனின் வருமானத்தில் ஓடிக் கொண்டிருந்த 'கொடத்தின்' குடும்பத்தில் மூத்த உறுப்பினரான எதிர்நீச்சல் திரைப்பட 'இருமல் தாத்தா'வையொத்த நோய்வாய்ப்பட்ட தந்தையை தெருவிலுள்ள
எவருமே நேரில் கண்டதில்லை !
அதீத தண்ணீர் சேகரம் தந்தையின் உபயோகத்திற்கானதெனவும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகவே எங்கள் ஊருக்கு அவரது குடும்பம் குடி பெயர்ந்துள்ளதெனவும் தாமதமாகவே புரிந்தது. தங்கம் என்ற இயற்பெயரால் அவரை விளிப்பது அனேகமாக அவரது சகோதரரும் வயதான தாயாரும் மட்டுமே !
தெப்பக்குளத்தில் துணி மூட்டைகளுடன் துவைக்க வருகின்ற
மூதாட்டிகளுக்கு உதவுகின்ற கருணை உள்ளம் கொண்ட 'கொடம்' குற்றம்
புரிவதற்கும் தற்காப்புக்குமான ஆயுதமாக (Organ of offence and defence) பல்லிக்குதவுகின்ற வாலைப் போன்று தனது நாவைப் பயன் படுத்தினாலும் ,
அதீதமான பயன்பாடே அவ்விளம்பெண்ணை பிற பெண்களிடமிருந்து விலக்கி
வைத்தது !
இருமலிலிருந்து தாத்தாவிற்கு நிரந்தர விடை கிடைத்த பின் எங்கள் ஊரை விட்டு காலி செய்து நாகர்கோவிலுக்குச் சென்ற "கொடம்" அப்பகுதியிலுள்ள குழாயடியொன்றை கைப்பற்றியிருக்கக்கூடும் !
யுத்தங்கள் பல கண்டு தமிழுக்கு குழாய் இலக்கியமென்ற புதிய பரிமாணம் வகுத்த எங்கள் ஊர் குழாயடிகள் அப்பாவிப் பெண்களின் சாபமேற்று சிதிலமடைந்து இன்று நினைவுச் சின்னங்களாக நிற்கின்றன !
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
கூடுதல் ஆட்சியர்,
I.T.I. முகநூற் குழு.
{20-03-2021}
-------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக