மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

வெள்ளி, 4 ஜூன், 2021

அந்நாளை நினைக்கையிலே (30) அம்பது கேட்டதுக்கு பய நூறு அனுப்பியிருக்கான் மக்கா !


அன்புத் தூதுவர்களாக கடிதங்களமைந்த பால்யத்தில் ஐந்து ரூபாயுடன் அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று உற்றார் உறவுகளுக்கு எங்கள் அன்பைப் பகிர்ந்து கொள்ள தபால் அட்டைகள், இன்லெண்ட் தபால் மற்றும் தபால் உறைகளை நானும் தம்பியும் வாங்கி வருவோம் !

 

தபால் அட்டைகள் பத்து காசுக்கும் இன்லென்ட் இருபது காசுக்கும் உறைகள் முப்பது காசுகளுக்கும் அன்று கிடைத்தன. இராணிப்பேட்டையில் பணியாற்றிய எனது சின்ன மாமாவுக்கும், சென்னையில் பணியாற்றிய சித்திக்கும், விடுமுறை நாட்களில் அம்மா எழுதும் கடிதங்களில் இன்லென்டின் ஒட்டும் பாகத்தில் மை சரிவர பதியாத காரணத்தாலேயே அதை விட்டு வைப்பது வழக்கம் !

 

அன்று புழக்கத்திலிருந்த கேமல் மற்றும் பிரில் நீல நிற சிறு மைக்குப்பியொன்று வீட்டில் எப்போதும் இருப்பிலிருக்கும். அம்மா எழுதியது போக மீதமுள்ள பாகத்தை மூன்றாக பிரித்து நாங்கள் மூவரும் சிக்கனமாக எழுதுவோம் !

 

அம்மா தனது தம்பிக்கு எழுதும் கடிதங்கள் ஒவ்வொன்றும் 'காலையில் விழித்தெழு, எண்ணெய் தேய்த்து குளி, நேரத்திற்கு சாப்பிடு, தேவையின்றி சுத்தாதே', உடனே பதில் போடு போன்ற மாமாவால் அனுசரிக்கவியலாத பல்லவிகளால் நிறைந்திருக்கும் !

 

நாங்கள் எழுதும் போது ' தீபாவளிக்கு ஊருக்கு வரும் போது வாங்கப்பட வேண்டிய பட்டாசு, பேட்டரி கார் போன்ற அதிமுக்கியமான தேவைப்பட்டியல்களுடன் , 'எத்தனை நாள் எங்களுடன் தங்குவீர்கள் ?' என்ற கேள்வியும் தவறாமல் இடம் பெறும் !

 

சென்னையில் பணியாற்றும் சித்திக்கு அம்மா எழுதுகின்ற கடிதத்தில் 'வேளைக்குச் சாப்பிடு, வாரமொரு முறை சீயக்காய் தூள் பயன்படுத்து, பிரிவை நினைந்து வருந்தாதே' போன்ற வாசகங்கள் தவறாமல் இடம் பெறும். நாங்கள் சித்திக்கு எழுதும் போது கோழிகள் இட்ட முட்டை விபரங்களுடன் , எங்கள் மதிப்பெண் விவரம் குறித்தும் எழுதுவதுண்டு !

 

ஒவ்வொரு கடிதத்தையும் தூக்கணாங்குருவிக் கூட்டைப் போன்ற அந்த சிவப்பு நிறப் பெட்டிக்குள் போட்ட பின்பு உச்சியிலும் உடலிலும் தட்டிப் பார்த்து கடிதம் பத்திரமாக உள்ளே உள்ளதாவென உறுதி செய்வோம் !

 

ஒவ்வொரு நாளும் தபால் அலுவலர் மிதிவண்டியில் வீட்டைக் கடந்து செல்லும் போதும் கடிதமேதும் உள்ளதாவென ஆவலுடன் உற்று நோக்கத் தவறுவதில்லை !

 

மாமாவிடமிருந்தோ சித்தியிடமிருந்தோ பெறப்படும் கடிதங்களைப் படிப்பதற்கான போட்டியில் கடிதம் கிழிந்து விடாமலிருக்க எங்கள் அம்மாவே கடிதத்தைப் படித்து காண்பிப்பது வழக்கம். தனது உடன்பிறப்புகள் எழுதிய கடிதங்களை பொழுது கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் படிக்கும் வழக்கம் அம்மாவுக்கு உண்டு !

 

பக்கத்து வீட்டு தாத்தாவின் மகனுக்கு கடிதம் எழுதும் பணி என்னுடையது."நான் ஒருத்தன் இங்க உயிரோட இருக்கது ஞாபகம் இருக்கால ? எல ! ஒன்னத் தான் கேக்கேன். கடிதாசிய பாத்தவுடனே அம்பது ரூபா அனுப்பு ' என்று நேரில் தனது மகன் உட்கார்ந்திருப்பதாகவே பாவித்து அந்த அப்பாவி மனிதர் உணர்ச்சி வசப்பட்டுச் சொல்வதை கடித நடையிலாக்க வேண்டிய பெரும்பொறுப்பு என்னுடையது ! தாத்தாவின் தாம்பூலத் தூறலில் குளித்து விடாமலிருக்க ஐந்தடி தள்ளி உட்கார்ந்தே கடிதமெழுதுவேன் ! 

 

இருவார இடைவெளியில் தனது மகனிடமிருந்து நூறு ரூபாய் பணவிடையாகப் பெறப்பட்ட மகிழ்ச்சியில் காவியேறிய சொத்தைப் பற்களைக் காட்டியபடியே 'அம்பது கேட்டதுக்கு பய நூறு அனுப்பியிருக்கான் மக்கா ! கெட்டிக்காரப்பய ! ' என ஐம்பது ரூபாய் அதிகமாகக் கோரியது நானென்று அறியாமலேயே புளகாங்கிதமடைவார் தாத்தா !

 

பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ்,புத்தாண்டுப் பண்டிகைகளுக்கான வாழ்த்து அட்டைகள் வாங்குவதன் பொருட்டு சேர்த்து வைத்த காசுக்கேற்றவாறு உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்து அட்டைகளை தேர்வு செய்து அனுப்புவோம் !

 

எங்கள் தபால்காரர் தங்கையா அண்ணாச்சிக்கு பண்டிகை கால வாழ்த்து அட்டைகள் மீதான ஒவ்வாமை காரணமாக 'இந்தப் பயலுகளுக்கு வேற வேலயும் சோலியும் இல்ல' என அலுத்துக் கொண்டே தபால் அலுவலகத்திற்கு செல்பவர்களுக்கு மட்டும் வேண்டா வெறுப்பாக இடக்கையால் வாழ்த்து அட்டைகளை எறிவார் அந்த புண்ணியவான் !

 

தொலைக்காட்சிப் பெட்டிகளோ இதர பொழுதுபோக்கு அம்சங்களோ இல்லாத காலகட்டத்தில், தங்கள் அன்பைப் பரிமாறும் ஈடு இணையற்ற தூதுவனாக அஞ்சல் அலுவலகங்களை சாதாரண மக்கள் அன்று நோக்கினார்கள். எழுதப்படிக்கத் தெரியாதவர்களும் முதியவர்களும் தங்கள் வீட்டுப் பிள்ளையாக தபால் காரர்களை பானங்கள் கொடுத்து உபசரித்தனர் !

 

மனித நேயமுள்ள தபால்துறை பணியாளர்களும் பொறுமையாக கடிதத்தைப் படித்துக் காட்டி ஒப்பற்ற சேவை புரிந்தனர். மனிதநேயத்தின் வடிகாலாக அன்றிருந்த கடிதங்களும் வாழ்த்து அட்டைகளும் மனதநேயத்தைப் போலவே இன்று தொ(ல்)லைக் காட்சிப் பெட்டிக்குள் தஞ்சம் புகுந்து விட்டன.

 

--------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


தி.சேதுமாதவன்,

[sethumathavan2021@gmail.com]

கூடுதல் ஆட்சியர்

I.T.I. முகநூற் குழு,

{22-05-2021}

--------------------------------------------------------------------------

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக