மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

புதன், 30 ஜூன், 2021

அந்நாளை நினைக்கையிலே (35) சண்டியர் போல் வீதிகளில் நடை பயிலும் பசுக்கள் !

 

றுவடைக் காலம் வந்துவிட்டாலே கலகலப்புக்குப் பஞ்சமில்லை. வீட்டு முற்றங்கள் கொல்லைப் புறங்கள் மட்டுமன்றி வீதிகளும் மாடு கட்டி சூடடிக்கும் களங்களாக மாற, இரட்டை மாட்டு வண்டிகளில் மூட்டை மூட்டையாக பாட்டக்காரர்கள் (குத்தகைதாரர்கள் ) நில உடைமையாளர்களுக்கு நெல் கொண்டு செல்வதும், தெற்குத்தெரு மணியண்ணனைப் போன்ற அனுபவமிக்க அளவையாளர்கள் நெல்மணிகளைப் பாட்டாகப் பாடியே மரக்காலில் கண்ணிமைக்கும் நேரத்தில் அளந்து கொடுப்பதும், கண் கொள்ளாக்காட்சி !

 

தேரோடும் வீதியில் காய்ந்து கொண்டிருக்கும் வைக்கோல் மீது தங்கள் எதிர்ப்பையும் புறந்தள்ளி குட்டிக்கரணம் போடுகின்ற வாண்டுகளை "சவத்துக்குப் பொறந்த பயலுக" எனத் திட்டிய படியே கம்புடன் துரத்துகின்ற தாத்தாக்கள். வீதியில் மறுநாளும் உலர வைக்கும் பொருட்டு மலையெனக் குவித்து வைக்கப்பட்ட சரிவரக் காயாத வைக்கப்போர் மீது சறுக்கு விளையாடி அக்கப்போர் செய்யும் சிறுவர்கள் !

 

பூமிப்பந்து உங்களுக்கானது மட்டுமல்ல. எங்களுக்கும் அதில் உரிமையுண்டென முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொரிக்க வசதியாக வைக்கோலை அள்ளிச் செல்லும் காகங்கள் மற்றும் குருவி இனங்கள்.


'சொல் பேச்சு கேட்காவிட்டால் உங்களுக்கும் இதே கதி தான் ' என சூடடிக்கும் மாடுகளின் பின்பக்கத் தளும்புகள் இரண்டையும் காட்டி சிறு குழந்தைகளை சூசகமாக மிரட்டுகின்ற அம்மாக்கள் !

 

சூடடித்த பின் அதிகாலையிலேயே துணியில் கட்டி வந்த தேங்காய் துவையலுடனான கட்டிச்சோற்றை தெப்பக்குளத் தண்ணீரில் நனைத்து அரச மர நிழலிலமர்ந்து கோரப்பசியுடன் விழுங்குகின்ற தொழிலாளிகள்.


மிதிவண்டிச் சக்கரங்களின் இரும்புப் பற்களில் சிக்கிய வைக்கோலை விடுவிக்கும் போது இடம் மாறுகின்ற சங்கிலியை சரி செய்தபின் கைகளில் படிந்த கருப்பு மையை கால் சட்டைகளின் பின்புறம் தடவியபடியே வாடகை மிதிவண்டிகளில் பயிற்சி எடுக்கும் சிறுவர் கூட்டம் !

 

சண்டியர் போல் வீதிகளின் நடுவில் நடை பயிலும் பசுக்களும் எருமைகளும் காளைகளும் பொறுப்பின்றி விட்டுச் செல்லும் சாணத்தைப் பொறுப்புடனே அள்ளி வீட்டையும் முற்றத்தையும் மெழுகியது போக மிஞ்சியதை உமியுடன் கலந்து வீட்டுச் சுவர்களிலேயே வறட்டி அடிக்கும் கிராமத்து மங்கையர்கள் !

 

வைக்கோலில் புரண்ட நமைச்சல் தாங்காது பிறந்த கோலத்தில் தெப்பக்குளத்தில் குட்டிக்கரணம் அடித்துக் குளித்து கரைக்கு வந்த சிறுவர்களைப் புடைக்கக் காத்திருக்கும் அம்மாக்களிடம், பிடி கொடுக்காமல் கையிலேந்திய துகில்களுடன் ஓடுகின்ற விட்டில் பூச்சிகளையொத்த சிறுவர் கூட்டம் !

 

வீதியில் கிடக்கின்ற நெல் மணிகளைப் பொறுக்கித் தின்னும் குருவிகளையும் காகங்களையும் அணில்களையும் போட்டியாளர்களாக எண்ணி விரட்டுகின்ற குஞ்சுகளுடன் கூடிய கோழிக் கூட்டம். நிம்மதியாக உண்ண விடாமல் தங்கள் குஞ்சுகளைக் கண்வைத்து வானத்தில் வட்டமிடும் பருந்துகளிடமிருந்து பாதுகாக்க சிறகுகளை விரித்த படியே அலைபாயும் தாய்க் கோழிகள் !

 

அளவில் பெரிய அறுவடைக் கால கோழி முட்டைகளில் உபயோகித்தது போக மிஞ்சியவற்றை அக்கம் பக்கத்து வீடுகளில் விற்பவர்கள். விற்பனையின் பொருட்டுக் கடைக்கு எடுத்துச் செல்லும் முட்டைகளை வழியிலேயே உடைந்து விட்டதாக அம்மாவிடம் பச்சையாகச் புழுகி பச்சை முட்டை குடிக்கும் நிபுணர்கள் !

 

நீண்ட நாட்களாக குறி வைத்திருந்த அறுவடை வருமானத்தின் சிறு பகுதியை அப்பாவின் சட்டைப் பையிலிருந்து கவர்ந்து புத்தகப் பையினுள் உடைகளுடன் தலை துவட்டத் துண்டையும் முந்தைய நாளே பத்திரப்படுத்தி பள்ளி முடிந்தவுடன் பறக்கத் தயாராகின்ற பறவைகள் !

 

அறுவடை முடிந்த வயல்களில் மேய விடப் படும் ஆட்டு மந்தையை சங்கேதக் குரலால் கட்டுப்படுத்தும் மேய்ப்பர்கள். உயர்ந்து வளர்ந்த எழில்மிகு தென்னந் தோப்புகளில் அமைக்கப்படும் கூடாரங்கள். மேய்ப்பவருக்குத் தெரியாமலேயே தாமதமாகச் செல்லும் கறவை ஆட்டின் மடியில் இதமாகப் பால் கறந்து புழுதி படிந்த கையிலேந்தி ஒருவர் பின் ஒருவராக அருந்துகின்ற பள்ளிச் சிறுவர்கள் !

 

சுத்தமான நெல் மணிகள் சேகரித்து வைக்கப்படுகின்ற எலி வளைகளேதும் வரப்புகளில் உள்ளதாவென தங்கள் கையிலுள்ள கம்பினால் தட்டி ஆராய்ச்சி செய்கின்ற வயல் வரப்பின் மேல் நடந்து செல்லும் இளம் ஆராய்ச்சியாளர்கள் !

 

அறுவடை முடிந்த நீர் நிறைந்த வயல்களில் அழகுடன் அணி வகுக்கும் வெள்ளை நிற வாத்துக் கூட்டம். மேய்ந்த தடம் கணித்து வாத்து முட்டைகளைக் கண்டெடுக்க தேர்வுகளில் முட்டைகளெடுத்த அனுபவம் கைகொடுக்க முக மலர்ச்சியுடன் வீடு திரும்பும் வழியில், உடைகளைக் கழற்றி வைத்து பாசனக் குளத்தில் நீராடித் தலை துவட்டாமல் சேறு படிந்த ஆடைகளையே மீண்டுமணிந்து அம்மாக்களிடம் அடி வாங்கும் சிறுவர்கள் என அறுவடைக் காலம் அந்நாளில் எங்களுக்கு இன்பமயமாகவே அமைந்தது !

---------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்,

கூடுதல் ஆட்சியர்,

I.T.I..முகநூற் குழு,

[தி.பி.2052, (ஆடவை (ஆனி) 12]

{26-06-2021}

---------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக