வீட்டிற்கு வந்த விருந்தினரை குடிதண்ணீர் வழங்கி உபசரித்த பின்னரே சிற்றுண்டியோ உணவோ வழங்குவது
கிராமத்து மரபு. நண்பகல் வேளை வருகை தருகின்ற விருந்தினரையும் வற்புறுத்தி
விருந்தோம்பல் செய்யும் உயரிய பண்பு கிராமங்களில் இன்றும் உயிர்ப்புடன் உள்ளது !
அயல் வீட்டில் விருந்தினர் வருகையை அறிந்தவுடனேயே பின்பக்க வாசல் வழியாக குறிப்பறிந்து உதவுகின்ற பக்கத்து வீட்டு
உறவுகள் இருக்கும் தைரியத்தில் அஞ்சாமல் விருந்தோம்பல் செய்யும் வழக்கம்
கிராமங்களில் உண்டு !
தங்கள் வீட்டுக் கொல்லைப் புறத்தில் விளைகின்ற வாழைப்பூ, காய் மற்றும் தண்டு, கீரை, முருங்கை, மாங்காய், பலா, பப்பாளி, மரச்சீனி போன்ற காய்கனிகள் பக்கத்து உறவுகளுக்கும் பகிரப்படும் !
கடைக்குச் செல்லும் சிறுவர்கள் பக்கத்து வீட்டுக்குத் தேவையான
பொருட்களை வாங்கிக் கொடுக்க சற்றும் தயங்குவதில்லை. கடைக்குச் செல்வதையறிந்து மிதிவண்டியின் முன்பக்கத்தில் அயல் வீட்டு வாண்டுகள் தொற்றிக்
கொள்வதுண்டு !
மீன் கடைக்குச் செல்கின்ற பெண்கள் பக்கத்து வீடுகளுக்கும்
குறிப்பறிந்து வாங்கி வருவர். கிராமங்களில் தனிமையில் வாழ்கின்ற வயோதிகர்களும்
குழந்தைகள் இல்லாதவர்களும் தனிமையை ஒரு போதும் உணர்வதில்லை !
தங்கள் வீட்டில் சமைத்த சிறப்பு உணவு வகைகளும் தின்பண்டங்களும்
மட்டுமன்றி விருந்தினர் கொண்டு வந்த பண்டங்களும் அயல் வீடுகளுக்குப் பரிமாறும்
அளவுக்கு குடும்பங்களிடையே நெருக்கமான உறவு காணப்பட்டது !
பணிகள் முடித்தபின் வீட்டுத் திண்ணையில் ஓய்வாக அமர்ந்து குடும்பப்
பிரச்சனைகளை அக்கம் பக்கத்து உறவுகளிடம் வெளிப்படையாகப் பகிர்வதன் வாயிலாக
தீர்வுகள் பல ஏற்பட்டது. குடும்பத்தில் ஒருவராக அன்புடனும் அக்கரையுடனும் இரகசியம்
காத்து நெடிய அனுபவங்கள் வாயிலாக பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு கண்டனர் !
எங்கள் தெருவில் வசித்து வந்த முதியவர் ஒருவர் வீட்டிலுள்ள
பட்டறையில் தனது ஆண் மக்களுடன் பணி முடித்த பின்னர், மாலை நேரம் உற்சாக பான உந்துதலால் வயதிற்கு வந்த மக்கள் முன்னரே மனைவியை
உதைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார் !
தள்ளாடிய நிலையில் ஒரு நாள் வீட்டுக்குள் நுழைந்த முதியவரை
வாசலிலேயே தடுத்து 'அம்மாவைத் தொந்தரவு செய்யும் அப்பா எங்களுக்கு தேவையில்லை. மரியாதையாக இருப்பதானால் மட்டும்
வீட்டிற்குள் நுழைந்தால் போதுமென' கறாராகக் கூறி விட்டனர் தந்தையிடம்
எதிர்த்துப் பேசிப் பழக்கமில்லாத அவரது ஆண் மக்கள் !
அதிர்ச்சி வைத்தியத்தை சற்றும் எதிர்பாராது உடுத்தியிருந்த
உடையுடன் ஊரைவிட்டுச் சென்று ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு அதிகாலையில் வாசலில்
பரிதாபமாக நின்று கொண்டிருந்தார். 'மனம் திருந்தியிருந்தால் மட்டும்
வீட்டிற்குள் நுழையலாம்' என்றதும் கண்கலங்கிய அப்பாவை
ஆதரவுடன் அணைத்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர் அவரது ஆண் மக்கள். திண்ணை
மகளிர் சங்கத்தின் அற்புதத் தீர்வுகளில் இதுவும் ஒன்று !
நண்பர்களும் உறவுகளும் புடைசூழ எப்போதும் காணப்படுகின்ற உடல்
வலிமையுள்ள கிராமத்தினருக்கு மன இறுக்கமோ தனிமைச்சூழலோ எதிர்மறை எண்ணங்களோ
தலைதூக்குவதில்லை !
குற்றங்குறைகளை மறைக்காமல் நேருக்கு நேராகச் சொல்லும் துணிச்சல்
கிராமங்களில் அதிகம். பக்கத்து தெரு தாத்தா ஒருவர் மறைந்த பதினாறாம் நாள்
விசேஷத்தன்று அவரது புகைப்படத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த வகை வகையான
பதார்த்தங்களைப் பார்வையிட்டு " உயிரோட இருந்தப்போ இதில் கொஞ்சம்
கிடச்சிருந்தாக் கூட மாமா செத்திருக்க மாட்டாரு" எனப் பிறர் கூறத் தயங்கிய
உண்மையை அந்த வீட்டு மருமகளைப் பார்த்து போட்டுடைத்தார் ஒரு வாயாடி அக்கா !
ஆக்கம் + இடுகை,
தி.சேதுமாதவன்,
[sethumathavan2021@gmail.com]
கூடுதல் ஆட்சியர்
I.T.I. முகநூற் குழு,
{05-06-2021}
---------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக