மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

வெள்ளி, 4 ஜூன், 2021

அந்நாளை நினைக்கையிலே (31) தந்தி அலுவலர் சீருடையில் மிதிவண்டியில் வரும் போதே !

 

தெருவிலுள்ள எவருக்காவது டிரங்க் கால் வந்த தகவல் பெறப்பட்டவுடன் , சம்பந்தப்பட்டவர் மட்டுமன்றி தெருவே இனம் புரியாத உணர்வுடன் தபால் அலுவலகத்தில் குவிந்து விடும். உடற்தளர்ச்சியாலும் அச்சத்தாலும் கழிப்பறையிலேயே முடங்கி பக்கத்து வீட்டாரை தபாலகத்திற்கு அனுப்புவோருமுண்டு !

 

செய்தியின் தன்மையறியாது அழைப்பிற்காக தபால் அலுவலகத்தின் முன்பக்க இருக்கை விளிம்பில் திகைப்புடனும் பலத்த இதயத் துடிப்புடனும் சோர்ந்திருப்போர்க்கு காத்திருக்கும் நொடிகள் யுகமாகத் தோன்றும் !


அழைப்பு வந்தவுடன் நடுங்கும் கைகளுடன் ஒலிவாங்கியை பெற்றுக் கொள்ள, முகபாவத்தைக் கொண்டே கிடைத்த செய்தியை இனங்கண்டு காத்திருக்கும் உறவுகளையும் மகிழ்ச்சி தொற்றிக் கொள்வது கிராமங்களுக்கே உரித்தானது. ஒளியை விட வேகமாக ஊரெங்கும் செய்திகளைக் கொண்டு செல்வதில் கிராமத்துப் பெண்கள் கைதேர்ந்தவர்கள் !

 

தந்தி அலுவலர் சீருடையில் மிதிவண்டியில் வரும் போதே சம்பந்தப்பட்ட வீட்டின் முன் குவிந்து விடுகின்ற கூட்டம், தந்தி அலுவலரால் செய்தி விவரிக்கப்பட்ட பின்னரே அவ்விடத்தை விட்டு நகரும் !

 

கிடைத்த செய்தி நற்செய்தியாயினும் துயரத்தைத் தருவதாயினும் அக்குடும்பத்திற்கு வெளியூர் செல்வதற்கான ஏற்பாடுகள், பண உதவி , ஊர் திரும்பும் வரை குழந்தைகளை பாதுகாப்பது அனைத்தையுமே கேட்காமலேயே பொறுப்புடன் செய்து முடித்து பேருந்திலோ புகை வண்டியிலோ ஏற்றிவிடும் அக்கம்பக்கத்து சொந்தங்கள் இன்றும் ஊரிலுண்டு !

 

நேரடியாக தந்தியனுப்பும் வசதி பறக்கையில் இல்லாத காரணத்தால், நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்திற்கு தொலைபேசி வழியாக தபால் அலுவலரால் தகவலளிக்கப்படும். படிப்பறிவில்லாத பாமர மக்களிடம் தகவலை உள்வாங்கி தந்திச் செய்தியை இரத்தினச் சுருக்கமாக அனுப்புவதற்கு அன்றைய தபால் அலுவலர்கள் காட்டிய பொறுப்பும் பொறுமையும் அசாத்தியமானது !

 

காலப்போக்கில் ஊரிலுள்ள ஓரிரு நடுத்தரக் குடும்பங்களில் தரைவழி தொலைபேசி இணைப்பு வசதி வந்த பின்னரும் சிரமத்தைப் பொருட்படுத்தாது அத்தியாவசிய செய்திகளை சலிப்பின்றி வீடுகளுக்கு நேரில் சென்று தெரிவிக்கும் மனித நேயம் அன்று மக்களிடையே காணப்பட்டது !

 

கைபேசியின் வருகையால் உறவுகளுக்கு கடிதமெழுதும் பழக்கம் வழக்கொழிந்து விட்டதைப் போலவே, தீர்வை எதிர்நோக்கி கிராமங்களில் வசிக்கும் குடும்பத்தினர் கூறும் அதிமுக்கியமான குடும்பப் பிரச்சினைகளை பொறுமையுடன் கேட்கின்ற மனோபாவமோ அக்கரையோ நேரமோ , வேலை நிமித்தமாகப் பட்டினத்தில் வசிக்கும் வேர்களை மறந்த மெத்தப் படித்தவர்கள் பலருக்கு இல்லாதது துரதிர்ஷ்டம் !

 

தங்கள் விருப்பத் தொடர்களைக் காணும் பொருட்டு அவசர - அதிரடிச் சமையலை முடித்து விட்டு தொலைக்காட்சிப் பெட்டி முன் தவமிருக்கும் தருணங்களில் வீட்டிற்குச் செல்கின்ற விருந்தினர்களிடம் விளம்பர இடைவேளையின் போது தொலைக்காட்சி பெட்டியிலிருந்து விழிகளை அகற்றாமலேயே ஏதோ ஒப்புக்குப் பேசுகிறார்கள் !

 

பட்டணத்திற்கு புலம் பெயர்ந்த நண்பர் ஒருவரிடம் தொலைக்காட்சித் தொடரில் மனைவியுடன் மூழ்கியிருக்கும் மாலை வேளையில் அவரது தூரத்து உறவினரான மாமா நீண்ட நாளைய மருத்துவச் சிகிச்சைக்குப் பின் உடல்நலம் சற்றே தேறி நலமுடனிருக்கும் செய்தியைக் கூறினேன் !

 

விளம்பர இடைவேளையின் போது எங்களிருவருக்கும் தேநீர் வழங்கிய பின் வாயைத் திறந்த நண்பரின் மனைவி " மாமா இறந்த விவரம் எங்களுக்கு தெரிவிக்காதது ஏன் ?" என தொலைக்காட்சித் திரையிலிருந்து விழிகளை அகற்றாமலேயே கேட்ட போது நானும் நண்பரும் அதிர்ச்சியுற்றோம் !

 

தனக்கு விருப்பமில்லாத மாமியார் மருமகள் தொடர் சதி குறித்த நீண்ட காலத்தொடரில் மூழ்கியிருந்த மனைவியை இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கடிந்து கொண்டார் நண்பர் !

 

மாநகரங்களைப் போன்று இல்லாவிடினும் மனித நேயத்தை நீர்த்துப் போகச் செய்கின்ற ஆபத்தான- உடனடியாக களையப்பட வேண்டிய இத்தொற்று கிராமங்களிலும் வியாபித்து வெகு காலமாகி விட்டதென்பதை மறுக்கவியலாது !

 

----------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


தி.சேதுமாதவன்,

[sethumathavan2021@gmail.com]

கூடுதல் ஆட்சியர்

I.T.I. முகநூற் குழு,

{29-05-2021}

----------------------------------------------------------------------

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக