மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

திங்கள், 26 ஜூலை, 2021

அந்நாளை நினைக்கையிலே (36) எதிர்காலம் குறித்த கேள்விகளும் இனம்புரியா கவலைகளும் !

  

மாலை வேளைகளில் குளித்து விட்டு நண்பன் முருகனுடன் மதுசூதனப் பெருமாள் தரிசனம் முடித்து அக்கரை பெருஞ்சடை மகாதேவரையும் தரிசித்த பின் ஜவஹர் நூலகம் செல்வது வழக்கம்.

 

அதன் பின்னர் மேலத்தெரு கணேஷ் வீட்டின் பக்கவாட்டில் அமைந்துள்ள தாணு அண்ணனின் மாஸ் காபி நிறுவனத்திற்குச் சென்று நண்பர்களுடன் அளவளாவிய பின்னர் இரவு எட்டு மணியளவில் வீடு திரும்புவது வழக்கம்.

 

கிழக்கு திசை நோக்கிய சிறு கற்கோவிலின் எதிர்ப்புறம் பச்சைக் கம்பளம் போர்த்திய அழகிய வயல் வெளிகள், நண்டுகளுடன் மீன்களும் ஆமைகளும் விளையாடும் நீர் நிறைந்த வாய்க்கால்கள்.

 

அதன் பின்னே இராவணனுடான போரில் மயங்கி வீழ்ந்த இலக்குவனையும் வானரர்களையும் காப்பாற்றும் பொருட்டு ஆஞ்சநேயரால் எடுத்து வரப்பட்ட மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலையின் உடைந்த பகுதியாக கருதப்படும் மருந்துவாழ் மலை, மனதையும் உடலையும் இதமாகத் தடவிச் செல்லும் தென்றல் காற்று என இன்றளவும் பழைமை மாறா ஆலயத்தினுள் ஏகனாகவும் அனேகனாகவும் அருள் பாலிக்கின்ற அக்கரை மகாதேவரது திருவடிகளைப் பற்றுகின்ற பேறு பெற்றவர்கள் புண்ணியவான்களே.

 

கம்மியர் மோட்டார் வண்டி தொழிற்பிரிவில் தேசிய தொழிற் சான்றுடன் தொழிற்பழகுனர் பயிற்சியும் முடித்தபின் வேலைக்காக முயன்று கொண்டிருந்த முருகனுடன் , 1981ல் பட்டப்படிப்பை முடித்த பின் கஜினி முகமதுவின் சாதனைகளைக் கடந்து போட்டித்தேர்வுகளில் பங்கெடுத்து வந்த நானும் இணைந்தேன்.

 

தெப்பக் குளத்திற்குச் செல்லும் வழியில் அமைந்திருந்தது எனது வீடு. தலை நிறைய எண்ணெய் தேய்த்துச் செல்பவர்கள், மண்வெட்டியுடன் செல்பவர்கள், ஒற்றைப் பிராமணர், கணவனை இழந்தோர் போன்றோர் தேர்வெழுதக் கிளம்பும் வேளை எதிரில் தோன்றுவதைத் தவிர்க்கவியலாது.

 

சகுனப் பிழை காரணமாக உத்தேசித்த காரியம் கைகூடாதென்ற பிற்போக்கான எண்ணம் மேலிட இத்தகையோர் எதிரில் தோன்றும் போது ஒதுங்கி நின்றேன்.

 

குறிப்பாக பெண்கள் மனம் உளவியல் ரீதியாக பாதிக்கப்படக் கூடுமென்ற பகுத்தறிவும் , சகுனங்களை விட சக்தி வாய்ந்த இறையருளும், உழைப்பும் இது போன்றோரின் உளப்பூர்வமான பிரார்த்தனையும் கரை சேர்க்குமென்ற எண்ணம் மேலிட்ட போது சகுனம் பார்க்கும் வழக்கம் நாளாவட்டத்தில் என்னால் கைவிடப்பட்டது.

 

அக்கால கட்டத்தில் அக்கரை மகாதேவரை இடைவிடாது தரிசித்த இளைஞர்கள் பலர் தொடர்ச்சியாக வேலை வாய்ப்புகளைப் பெற்று நற்கதியடைந்த நிலையில், மகாதேவரது திருவடிகளை சரணடைந்தால் வாழ்வில் கரையேறி விடலாமென்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் பெற்றோரால் வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்ட இளைஞர்களுடன் மெய்யன்பர்களும் பகவானை மொய்த்தனர்.

 

எதிர்பார்ப்புகளேதுமின்றி இளைஞர்களும் பெரியவர்களும் மிகுந்த ஆன்மீக ஈடுபாட்டுடன் சிவத் தொண்டில் ஈடுபட்டிருந்த நிலையில், பெற்றோரின் உந்துதலால் இணைந்த இளைஞர்களில் பலரும் இறை காருண்யத்தால் மெய்யன்பர்களானதை பூர்வ ஜென்ம புண்ணியம் என்று தானே கூறவியலும் ?

 

ஆன்மீகப் பாதையில் பயணிக்கும் இளைஞர்கள் பலரும் தீய பழக்கங்களிலிருந்து முழுமையாக விடுபட்டு நல்ல பழக்கங்களுக்கு தம்மையறியாமலேயே தாவி விட்டதை எனது அனுபவத்தில் கண்டு வியந்திருக்கிறேன்.

 

சுற்றுப்பிரகார தீப ஒளியிலும் மூலஸ்தானத்திலுள்ள திருவிளக்குகளின் பிரகாசத்திலும் ஜொலிக்கின்ற பரம்பொருளை - இமைப் பொழுதும் நெஞ்சைவிட்டு நீங்கானைக் கைகூப்பி மெய் மறந்து 'ஓம் நமசிவாய ' என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உதடுகள் உச்சரிக்கும் வேளை சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சர் குறிப்பிட்டது போன்று பக்தவத்சலனின் காருண்யத்தால் ஒளி பரவி இருள் விலகுவதை மனதால் உணர முடியும்.

 

இறை வழிபாட்டின் போது நம்மையறியாமலேயே மின்னலெனத் தோன்றி மறைகின்ற புதிரான எதிர்காலம் குறித்த கேள்விகளும் இனம்புரியா கவலைகளும் , இறை தரிசனம் முடித்து திரும்பும் வேளை சிவன் தாழ் சமர்ப்பித்த தைரியத்தில் மாயமாகி விடுவதை உணர்ந்ததுண்டு.

 

ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள அக்கரை மகாதேவர் ஆலயத்தில் மகளிர் வருகை மிகக் குறைவானதாகவே இருந்தது. இறைவனின் அருள் வீச்சு எண்ணற்ற பக்தர்களைச் சென்றடைய வேண்டுமென்ற நல்லெண்ணம் காரணமாக புகழ்பெற்ற சிவனடியார் ஒருவரை பத்மனாபன் சார், மாணிப் போற்றி, எனது அப்பா, ராசா அண்ணாச்சி, மாதேவன் பிள்ளை மாமா, கங்கை மாமா மற்றும் பக்தர்களடங்கிய குழுவொன்று ஆலயத்திற்கு அழைத்து வந்தது.

 

இறை முன் ருத்ரம் பாடியமர்ந்த சிவனடியார் நீண்ட பிரார்த்தனைக்குப் பின்னர் பிரதோஷ பூஜைகளின் சிறப்புகளை விவரித்து விட்டு இறைவனது அருள் பெரும்பாலான பக்தர்களைச் சென்றடைய பிரதோஷ பூஜைகள் வழிவகுக்குமென அருளியதை சிரமேற்கொண்டு பக்தர்கள் குழு அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியது.

-----------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்.

ஆட்சியர்,

தமிழ்ப் புலம் வலைப்பூ,

[தி.: 2052, ஆடவை  (ஆனி) 19]

{03-07-2021}

----------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக