மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

திங்கள், 26 ஜூலை, 2021

அந்நாளை நினைக்கையிலே (37) பிள்ளைகளுக்கு வேலை கிடைத்தால் பிரதோஷம் நடத்துகிறேன் !


பறக்கை அக்கரை பெருஞ்சடை மகாதேவர் ஆலயத்தில் பிரதோஷ பூஜைகள் துவங்கத் தீர்மானித்ததைத் தொடர்ந்து 1984 ல் முதலாவது பிரதோஷ பூஜையை ஏற்கும் பேறு அப்பாவுக்கு வாய்த்தது.

 

---------------------------

பிரதோஷ வரலாறு:

----------------------------

மகாதேவரின் அனுமதியின்றி மந்திரகிரி மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அசுரர்களுடன் சேர்ந்து தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது களைப்பின் மிகுதியால் வாசுகியால் வெளியிடப்பட்ட ஆலகால விஷத்தின் வீரியம் சமுத்திரத்தை பொங்கியெழ வைத்தது மட்டுமன்றி தேவர்களையும் துரத்த கலக்கமுற்ற தேவர்கள் கயிலைக்கு விரைந்து மகாதேவரிடம் அடைக்கலம் புகுந்தனர்.

 

வானுலக தேவர்களே இடுக்கண் வருங்கால் இறைவனை நாடுபவர்களெனில் கலியுக மானுடர் எம்மாத்திரம் ?

 

தேவர்களைக் காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தைப் பருகிய சிவபெருமானின் கழுத்தை பார்வதி தேவி பிடிக்க , தேவர்களைத் துயரத்திலிருந்து மீட்ட நீலகண்டருக்கு நன்றி செலுத்தும் பொருட்டும், பிழை பொறுத்தருள வேண்டியும் பிரார்த்தித்த தேவர்களுக்கு நந்தி தேவரின் கொம்புகளுக்கிடையே நர்த்தனமாடிய படியே மகாதேவர் தரிசனமளித்த சனிக்கிழமை மாலை நேரமே பிரதோஷம் (பிரபாதம் என்றால் காலை நேரம்) எனப் படுகிறது. பிரதோஷம் என்பதற்கு குற்றமற்ற என்ற பொருளும் உண்டு.

 

அதிமகத்துவம் வாய்ந்த பிரதோஷ பூஜைகளைத் தொடர்ந்து தொழுகின்ற பக்தர்களைத் துன்பங்கள் அணுகாததுடன், வாழ்வில் மலை போல் தோன்றுகின்ற தடைகள் யாவும் பனிபோல் மறைந்து போகும்.

 

எதிர்பார்த்தது போலவே அக்கரைக் கோவில் பிரதோஷ பூஜைகளில் பெண்களின் பங்களிப்பு திருப்தி கரமாக அமைந்தது. மகாதேவருக்கு அபிஷேக அலங்காரங்கள் முடிந்து மாலை ஆறரை மணியளவில் பிரதோஷ பூஜைகளுக்குப் பின் பக்தர்களுக்கு தீர்த்தமும் திருநீறும் வழங்கிய பிறகு அடுத்த பிரதோஷ பூஜைக்கான தேதியை உரக்க அறிவித்து உபயதாரருக்கு பிரசாதத்தை வழங்கத் தயாரானார் மாணிப் போற்றி.

 

பிரதோஷ பூஜைகள் மக்களிடையே பிரபலமாகாத காலகட்டமாதலால், உபயதாரர் இல்லாத நிலையில் பிரசாதத்தை ஏற்றுக் கொண்டு வீட்டையடைந்தார் அப்பா.

 

முந்தைய இரவு தடம் எண் 36 எ. பள்ளம் பேருந்தினுள் கொசுக்கடியுடன் தூங்கி எழுந்து பகலில் படிக்கட்டில் நின்ற படியே பணியாற்றும் நடத்துனரான ஐம்பத்தேழு வயது அப்பா அன்று இரவு சுமார் எட்டு மணியளவில் களைப்பாக சாய்வு நாற்காலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது' அடுத்த பிரதோஷமும் நமக்குத் தான் ' என அம்மாவிடம் பேச்சினிடையே மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

 

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அக்கா தற்காலிகப் பணியிலிருக்கும் நிலையில் , படிப்பை முடித்து ஐந்தாண்டுகள் கடந்த பின்பும் அரசுப் பணியேதும் எனக்கு அமையாத கவலையில் , சாய்வு நாற்காலியில் ஓய்வெடுக்க அமரும் சந்தர்ப்பங்களில் அப்பாவிடம் புலம்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் அம்மா.

 

1985- ல் கல்லூரிப் படிப்பை முடித்த தம்பி நாகர்கோவிலில் சுருக்கெழுத்துப் பயிற்சி எடுத்து வந்த நேரம். நவம்பர்.1987 ல் பணி ஓய்வு பெறும் நிலையிலுள்ள அப்பாவுக்கு குறைவான பணிக்காலமே அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இருந்த காரணத்தால் ஓய்வூதியம் கிடையாது.

 

அரசுப் பணியேதும் எனக்கு கிடைக்காத பட்சத்தில் , சமூகத்தில் மதிக்கப்படுகின்ற அப்பா , ஓய்வுக்குப் பின் ஏதாவது திருமண மண்டபத்தில் காக்கிச் சட்டையுடன் காவலராகப் பணியாற்ற வேண்டிய கதியேற்படுமோவென்ற கவலை எங்களை ஆட்கொண்டது.

 

சிக்கலான பொருளாதார நிலையில் இரண்டாவது பிரதோஷத்தையும் ஏற்று வந்த அப்பாவிடம் "பிள்ளைகளுக்கு வேலை கிடைத்தால் பிரதோஷம் நடத்துகிறேன் என வேண்டிக் கொள்வது தானே" என அம்மா கூறினார்.

 

மாம்பழக்காரரிடம் பேசும் பாணியில் மகாதேவரிடமும் பேரம் பேசும் மனநிலை கொண்ட சாதாரண குடும்பத் தலைவிகளின் பிரதிநிதியான அம்மா அங்ஙனம் கூறியதில் வியப்பேதுமில்லை. இறைவனுக்கு தொண்டு செய்வதையே கடமையாகக் கொண்ட அப்பாவுக்கு, நிபந்தனைகளுடனான சுயநலம் சார்ந்த பக்தியின் வெளிப்பாடான அம்மாவின் வார்த்தைகள் கடுங்கோபத்தை ஏற்படுத்தியது.

-----------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்.

ஆட்சியர்,

தமிழ்ப் புலம் வலைப்பூ,

[தி.: 2052, ஆடவை (ஆனி) 26]

{10-07-2021}

-----------------------------------------------------------------------------           

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக