மளிகைப் பொருட்கள் வாங்கும் பொருட்டு கடைக்குச் செல்ல மிதி வண்டி டயர் எங்களுக்கு அத்தியாவசியத் தேவையாதலால் சைக்கிள் கடை முஸ்தபா அண்ணாச்சியிடமிருந்து வாங்கி வருவோம். பால் வாங்கச் செல்லும் போதும் டயரை கம்பால் தட்டிய படியே தூக்கு வாளியில் வாங்கி வருகின்ற அரை லிட்டர் பாலை முந்நூறு மில்லியாக்கி அம்மா கையில் பத்திரமாக ஒப்படைப்பது வழக்கம் !
சீக்காமடத்தெரு பத்மனாபன்
வீட்டில் சென்று பால் வாங்கி வருவதற்கு என்னுடன் என் தம்பியும் மதுவும் துணையாக
வருவார்கள்.எங்கள் பாட்டி வீட்டு வாசலின் முன்னால் மாலை நேரத்தில் ஒரு டயரும் அதன்
மேல் சிறிய குச்சியொன்றும் சுவரோடு சாய்த்து வைக்கப் பட்டிருப்பின், எனது
தம்பி வீட்டின் உள்ளே இருக்கிறார் என்று பொருள் !
இடுப்பில் கட்டியிருக்கும் கால்சட்டை பாதி வழியில் அவிழ்ந்து விடாமல் ஒரு கையால் மானம் காத்து சாமான்கள் அடங்கிய பையைத் தோளில் தொங்கப் போட்டு டயரை மறு கையால் ஓட்டிச் செல்லும் சிறுவர்களுக்கு ஒரு சர்க்கஸ் காரனின் சாதுர்யம் அவசியம். நானும் தம்பியும் வார் வைத்த கால்சட்டை அணிந்திருப்பதால் வழியில் அவிழ்ந்து விடுமோவென அச்சம் எங்களுக்கில்லை !
வீட்டில் ஒரு டயர் மட்டுமே இருந்த காரணத்தால் தம்பி அதனை எடுத்துச் செல்லும் வேளைகளில் கைகளாலேயே கற்பனையாக ஸ்டீயரிங் பிடித்து எரிபொருள் சிக்கனத்தைக் கடைப்பிடித்து வாயாலேயே ஊர்தியை இயக்கி சிறிய சந்து வழியாக நான் வேகமாக ஓட்டிச் செல்வேன் !
சந்துக்குள் இரண்டு கார்கள் எதிரும் புதிருமாக செல்லும். திருப்பங்களில் செல்லும்போது கீ..... கீ...... என சத்தமிட்டு லாகவமாக ஸ்டியரிங்கைப் ஒடித்து திருப்பி வேகத்தைக் குறைத்து கியரை மாற்றி நான் கடைக்கு செல்கின்ற வழியில் என் போன்று எரிபொருள் சேமிப்பு ஊர்திகள் பல எதிரில் வேகமாகச் செல்வதுண்டு !
சனி ஞாயிறு நாட்களில் வாடகை மிதிவண்டியில் பயிற்சி எடுப்போம். தெற்குத் தெரு ஜெகதீசனின் அண்ணன் கடையில் நியாயமான வாடகைக்கு மிதி வண்டிகள் கிடைக்கும். பெருமாள் பிள்ளை அண்ணன் தான் எங்கள் அனைவருக்கும் ஆஸ்தான குரு. மிதிவண்டி ஓட்டும் போது முதுகு சற்று வளைந்தால் கூட பலமாக அடித்து விடுவார். அடிக்குப் பயந்து நாங்கள் கவனமாக ஓட்டுவோம். மிதிவண்டிப் பயிற்சியின் ஆரம்பக் கட்டங்களில் எங்கள் தெருக் கோடியில் ஒருவர் நடந்து வந்தாலும் பிரேக்கை அழுத்தி விடுவோம் !
சிறிய மிதிவண்டி கிடைக்காத சந்தர்ப்பங்களில் பெரிய மிதிவண்டியை வாடகைக்கு எடுத்து இடைக்கால் போட்டு ஓட்டுவோம். பெருமாள் பிள்ளை அண்ணனிடம் பயிற்சி பெற்ற சசியும் கணேசனும் ராஜுவும் முதுகை வளைத்து மிதிவண்டி ஓட்டுகின்ற சிறுவர்களுக்கு பெருமாள் பிள்ளை அண்ணனிடம் தாங்கள் பெற்ற பரிசை வட்டியுடன் திருப்பிக் கொடுப்பார்கள் !
அக்காலத்தில் மிக அபூர்வமாக வயதான ஓரிருவருக்கு மட்டுமே நீரிழிவு நோய் காணப்படும். இந்நோய் உள்ள தாத்தா ஒருவர் புகழ் பெற்ற மருத்துவர்களான தனது மகன் மற்றும் மருமகளிடமிருந்து தப்பிப் பிழைத்து மருத்துவரல்லாத தனது மகள் வீட்டில் வசித்து வந்தார் !
மருந்து மாத்திரைகளை விட தாத்தாவுக்கு அத்தியாவசியத் தேவையான கருப்பட்டி, கல்கோனா ,தேன் மிட்டாய் போன்ற இனிப்புப் பண்டங்களை அவர்களது குடும்பத்தினருக்குத் தெரியாமல் இரகசிய வினியோகம் செய்கின்ற சிறார்கள் சிலர் தாங்களும் அதன் மூலம் பயன்பெற்றனர். பலத்த உணவு கட்டுப்பாடுகளுக் கிடையிலும் தாத்தாக்களுக்கு சர்க்கரை அளவு குறையாது பாதுகாத்து இறைவனடி சேர்த்த பெருமை எங்கள் தெரு சிறார்களையே சாரும் !
"ஒன் நாட் நயன் " என்று ஒரு அண்ணாச்சி எங்கள் தெருவில் வசித்து வந்தார். சாதாரண நிலையில் பரம சாதுவாகக் காட்சியளிக்கின்ற இம்மனிதர் அவரைவிட உயரமும் பருமனுமான மனைவியை சாதாரண கதியில் எதிர்த்துப் பேசாதவர். வெத்திலை பாக்கு, மிட்டாய் வகைகள், சிகரெட் ,பீடி ,பழம், போன்ற பொருட்களுடன் கூடிய சிறிய பெட்டிக் கடை ஒன்றை தனது வீட்டுடன் இணைந்தே நடத்தி வந்தார். !
நன்கு அறிமுகமானவர் களிடம் மட்டுமே சிறு புன்முறுவலுடன் அளவாக நகைச்சுவையாகப் பேசுவார் அண்ணாச்சி. மாதமொரு முறை தெங்கம்புதூர் சென்று உற்சாக பானம் அருந்தி விரிவடைந்த நிலையில் வருகின்ற சந்தர்ப்பங்களில் அன்றைய மாலைப் பொழுதை பொன்மாலைப் பொழுதாக மாற்றி விடுவார் !
தனது வீட்டின் முன் அஷ்ட கோணலாக நெளிந்து நின்று தொடை தெரிய வேட்டியை மடித்துக் கட்டி வலது கையால் தொடையைத் தட்டியவாறே "ஒன் நாட் நயன்" (இந்திய தண்டனை சட்டப்பிரிவு 109) தெரியுமாடி உனக்கு ? அடுப்பாங்கரையில் இருக்கும் உனக்கு என்ன தெரியும் ?" என மனைவியிடம் துணிச்சலாகக் கேட்டு விட்ட உலகின் முதல் கணவனாக எங்களைப் பெருமையுடன் பார்த்து ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரனைப் போல மந்தகாசப் புன்னகை புரிவார் !
" வாங்க மொதல்ல. எதுவானாலும் உள்ளே வந்து பேசிக்கலாம் " என அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அழைக்கின்ற மனைவியிடம் "கதவ சாத்திட்டு என்னைச் சாத்திடலாம்னு பாக்கிறியா ? நடக்காது. நடக்கவே நடக்காது மவளே! ஒன் நாட் நயனில் புக் பண்ணிருவேன் " என்று மீண்டும் கூறி விட்டு சற்றே பின் வாங்குவார் !
வேடிக்கை பார்ப்பவர்களை நோக்கி "காந்தி எனக்கும் சேர்த்து தான் சுதந்திரம் வாங்கித் தந்திருக்காரு. ஒருத்தனும் என்ன கேள்வி கேட்க முடியாது. பிரச்சினை எனக்கும் என் பொண்டாட்டிக்கும் தான். நீங்க உங்க வேலையை பாருங்க" என்று கூறி தனது விசிறிகளை விரட்டி விடுவார் ! நீண்ட நேரம் தெருவில் ஒற்றைக்காலில் நின்று அலுத்த பின் தனது வீட்டு வாசல் படியில் உட்கார்ந்து கொண்டு பழைய டி.எம்.எஸ் பாடல்களை இராகத்துடன் பாடுவார் !
"வரும் போது என்ன கொண்டு வந்தோம். போகும்போது என்னத்த கொண்டு போறோம் அன்பு சகோதரிகளே ! உங்களுக்கு ஓர் அறிவிப்பு. அதிரடி விற்பனையாக இன்று நமது கடையில் ஏத்தன் பழம் ஒன்றின் விலை பத்தே பத்து பைசா. ஓடி வாங்க" என்பார் !
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த எங்கள் தெருப் பெண்கள் சிலர் ஐம்பது பைசா எடுத்து வந்து ஐந்து ஏத்தன் பழங்களை சொந்தமாக்கி விடலாமென்ற பேராசையில் ஓடிச் செல்வர். ஆனால் உச்சக்கட்டப் போதையிலும் "செத்தாலும் நரியின் கண் கோழிக்கூடு மேலே தாம்மா தங்கச்சி ! நான் என்ன இளிச்சவாயனா ? ஐம்பது காசுக்கு ஐந்து தருவதற்கு. இந்தா பிடி ரெண்டு " என்று கூறி பழத்தை எடுக்காமலேயே காசுக்காக கையை நீட்டுவார் அண்ணாச்சி !
போதையிலும் விவரமாக
பேசுகின்ற அவரிடம் "ஒம்ம பழத்தை நீரே வெச்சுக்கிடும்" என்று
எரிச்சலுடன் திரும்புகின்ற பெண்களைப் பார்த்து "போனால் போகட்டும் போடா"
என்று இராகத்துடன் பாடுவார் அண்ணாச்சி !
பார்வையாளர்கள் கூட்டம் சற்று குறைந்ததுமே அண்ணாச்சியின் வீட்டுக் கதவுகள் திருவரங்க நாதனின் சொர்க்க வாசலைப் போன்று திடீரென்று திறக்கப்பட. அக்காவும் அவரது மகளும் சரசரவென்று அண்ணாச்சியை மின்னல் வேகத்தில் வீட்டின் உள்ளே இழுத்து கதவை அடைத்து விடுவர். பலத்த சப்தங்களுக்கிடையே குளிர்ந்த நீரால் அண்ணாச்சியை அபிஷேகம் செய்து அடித்துக் காயப் போட்டு விடுவார்கள் !
நெற்றியில் நீறு பூசி அமைதியே வடிவாக சிவப்பழமாக பெட்டிக் கடையில் மறுநாள் அமர்ந்திருக்கும் அண்ணாச்சி ஒரு மாத இடைவெளிக்குப் பின்னர் மெல்ல "ஒன் நாட் நயன்" என மீண்டும் தவங்கி விடுவார். தனது இல்லத்தரசியை எதிர்த்துப் பேசத் துணிவில்லாத அண்ணாச்சி அவரைத் திட்டுவதற்கான மனோதத்துவ ரீதியிலான ஒரு வடிகாலாகவே உற்சாக பானத்தைப் பயன்படுத்தினார் என்று அனுபவசாலிகள் பேசிக் கொண்டார்கள் !
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
தி.சேதுமாதவன்,
[sethumathavam2021@gmail.com]
கூடுதல் ஆட்சியர்
I.T.I.முகநூற் குழுமம்.
{02-12-2020}
-------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக