மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

புதன், 20 ஜனவரி, 2021

அந்நாளை நினைக்கையிலே (02) விறகு கம்பால் என்னை அடித்துத் துவைத்து விட்டார் !

 

ஒரு நாள் மாலை பள்ளியிலிருந்து வழக்கம் போல வீட்டுக்குத் திரும்பும்போது காவல் துறையில் பணியாற்றும் தனது மீசை மாமா கையில் கம்புடனே எப்போதும் ரோந்து சுற்றி வருவாரெனவும், தேவையின்றி யாராவது உரக்கப் பேசினாலோ (அய்யப்பன் அண்ணனை குறி வைத்து சொன்னது) சிரித்தாலோ,பாடினாலோ, பாதையின் நடுவில் நடந்து சென்றாலோ, தடியினால் படாரென தலையில் ஓங்கி அடித்து விடுவாரெனவும் முத்துசாமி எங்களிடம் கதை விட்டான் !

 

"லே கிறுக்கா ! வேலை பாக்கும் போது மட்டும் தாம்ல உங்க மாமா ஓட்ட சைக்கிள்ல தொள தொளன்னு நிக்கர் போட்டு கிட்டு கம்போட ஊர் சுத்துவாரு. மத்த சமயத்தில எவனையும் தொடக்கூட அவருக்கு அதிகாரம் கிடையாதுல " என்று ஐயப்பன் அண்ணன் சட்ட விதிகளைச் சுட்டிக்காட்டி கிண்டலடிக்க நானும் அண்ணனுடன் சேர்ந்து சிரித்தது முத்துசாமிக்கு சற்றும் இரசிக்க வில்லை !

 

தனது மாமாவுக்கு எனது வீட்டை காண்பித்து வீட்டிலுள்ள அனைவரையும் தடியாலடித்து கைது செய்து சிறையில் தள்ளி விடப் போவதாக முத்துசாமி என்னை தனியாக அழைத்து மிரட்டி விட்ட காரணத்தால் எனது ஒரு வாரத் தூக்கம் பறிபோனது. ஐயப்பன் அண்ணன் காய்ச்சல் காரணமாக ஒரு வாரம் பள்ளிக்கு வரவில்லை. இரவு நேரத்தில் தெருவில் கேட்கின்ற சிறிய ஒலிகள் கூட முத்துசாமியின் காவலர் மாமாவை நினைவு படுத்த பெரிதும் கலவர முற்றேன் !

 

ஒரு வாரமாக முத்துசாமி என்னிடம் பேசவில்லை யெனினும் காலையிலும் மாலையிலும் எனது முன்னே வந்து நின்று உன்னிடம் "கா" வென்று தினமும் கூறிச் செல்வான். பேசுவோர் பட்டியலில் புதிதாக எனது பெயரையும் சேர்க்கத் துவங்கினான்..எனது வாடிய முகத்தைத் கண்டு மூன்றாம் வகுப்பு படிக்கின்ற எனது அக்கா விசாரிக்கவே தயக்கத்துடனே விவரத்தை வெளியிட்டேன் !

 

"இதுக்கு ஏம்ல பயப்படுக. பட்டாளத்தில இருக்கிற மாமாவுக்கு கடிதாசு போட்டாச்சு. அடுத்த வாரம் துப்பாக்கியோடு வருவாரு. முதல்ல சுடுகது ஒன்னோட மொட்ட மண்டயில தான்னு தைரியமா சொல்லுல ! பயந்தாங் கொள்ளி ! "என்று அக்கா தைரியமூட்டினாள். பட்டாளத்தில் நமது மாமா எவரும் பணியாற்ற வில்லையே என்று நான் யோசிக்கத் துவங்கினேன் !


தனது ஆலோசனையை மறு நாளே செயல்படுத்துமாறு அக்கா இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு அமல்படுத்தத் துவங்கினேன். மறு நாளிலிருந்தே முத்துசாமியும் என்னைப் போன்று ஒரு வாரத் தூக்கத்தை இழந்தான் !

 

விவரமறிந்த சமாதான தூதுவரான ஐயப்பன் அண்ணன் எங்கள் இரண்டு பேருக்கும் சமாதான உடன்படிக்கை செய்து வைத்த பின்னர் நிபந்தனைகளின்றி மீண்டும் நாங்கள் நண்பர்கள் ஆகி விட்டோம் !


ஒரு நாள் காலை பள்ளிக்கு வரும்போது லேசான காய்ச்சலுடன் வந்த நான் அன்று பிற்பகல் வாந்தி எடுக்கவே மாணவர் தலைவன் முத்துசாமி நண்பர்களுடன் வழக்கம் போல மண்ணை அள்ளி மேலே போட்டு விட்டு மூன்றாவது வகுப்பில் படிக்கும் எனது அக்காவுக்கு வகுப்பு முழுவதும் கேட்கும் படியாகச் சத்தமாகத் தகவலைச் சொல்லி அழைத்து வந்தான் !

 

பரிதாபமாக நின்ற என்னை வீட்டில் அம்மாவிடம் ஒப்படைக்கும் வரை வழியில் திட்டிக் கொண்டே வந்தாள் எனது அக்கா. தனது தம்பியின் சுகவீனத்தை விட 'வாந்தியெடுத்தவனின் அக்கா'வென்ற அவப்பெயர் வகுப்பில் தனக்கு ஏற்படுமென்ற அச்சத்தில் "மூணாங் கிளாசில அக்கா படிக்கான்னு ஏம்ல சொன்ன" என மிரட்டிய போது ஏண்டா வாந்தி எடுத்தோமென ஆகிவிட்டது எனக்கு !

 

எங்கள் அம்மாவும் அப்பாவும் எப்போதாவது ஒருமுறை நாகர்கோவிலிலுள்ள திரையரங்குக்குக்கு எங்களை அழைத்துச் செல்வதுண்டு. சம்பூர்ண ராமாயணம், லவகுசா, பக்த பிரகலாதா, கந்தன் கருணை, மகாகவி காளிதாஸ், திருவிளையாடல், கர்ணன், திருமால் பெருமை , திருமலை தென்குமரி போன்ற பக்தி ரசம் சொட்டும் படங்களுக்கு மட்டுமே எங்களை அழைத்துச் செல்வதால் எங்களுக்குக் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வந்த உணர்வு தான் இருக்குமேயன்றி திரைப்படம் பார்த்த உணர்வு சற்றும் ஏற்படாது  !

 

தீர்க்க சுமங்கலி, உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய இரு படங்கள் தான் நாங்கள் பார்த்த சமூக படங்கள்.எங்கள் வீட்டில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திலுள்ள எங்கள் அத்தை வீட்டுக்கு அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் மாலை நேரத்தில் சென்று ஒரு மணிநேரம் விளையாடி விட்டு திரும்புவது வழக்கம். *கோட்டாறு* சவேரியார் கோவில் திருவிழாவுக்கு வாங்கிய விலை உயர்ந்த இருபது காசு கடிகாரத்தை என்னை விட இரண்டு வயது இளையவனான எனது மைத்துனன் கையில் கட்டி அழகு பார்த்துக் கொண்டிருந்தான் !

 

ஒரு விசையை சுற்றினால் இரட்டையர்கள் போல ஒற்றுமையுடன் சேர்ந்தே சுற்றுகின்ற முட்களைக் கொண்ட நவீன கடிகாரத்தை கையில் கட்டி ஓயாமல் அதன் விசையை நோண்டிய படியே இருந்தான். பத்து காசுக்கான எனது கடிகாரத்தின் முள் ஆடாமல் அசையாமல் ஒரிடத்தில் சோம்பி நிலைத்து நின்ற காரணத்தால் மைத்துனனின் கடிகாரத்தை அடுத்த ஞாயிறன்று திருப்பித் தருவதான ஒப்பந்தத்தின் பேரில் குறுகிய கால கடனாக எனது பெற்றோருக்கும் அக்காவுக்கும் தெரியாமல் பெற்று வந்தேன் !

 

எங்கள் வீட்டிற்கு வந்தவுடன் கவிழ்த்து வைத்திருக்கும் அடிப்பாகம் உடைந்த சிமெண்ட் தொட்டியின் அடியில் பத்திரமாக பாதுகாத்து வந்தேன். அம்மா அப்பா இல்லாத தருணங்களில் கையில் கட்டி அழகு பார்த்து விட்டு மறுபடியும் மறைத்து வைத்து விடுவேன். இங்ஙனம் கடிகாரத்தின் அழகில் மயங்கி மதி மறந்து நின்ற நேரத்தில் திடீரென எனது அம்மா வந்து விட செய்வதறியாது திகைத்து நின்ற என்னை அம்மா கையும் கடிகாரமுமாக பிடித்து விட்டார் !

 

நான் கடிகாரத்தைத் திருடி விட்டதாக தவறாகக் கருதி விறகு கம்பால் என்னை அடித்துத் துவைத்து விட்டார். எனக்கு திக்குவாய் இருந்த காரணத்தால் பலமுறை உண்மையை கூற முயன்றும் பதட்டத்தின் காரணமாக வார்த்தைகள் வெளி வர வில்லை !

 

பொருளாதாரச் சவால்களை குடும்பம் எதிர் கொண்டிருந்தாலும் தனது மகன் பிறர் பொருளைத் திருடுமளவுக்கு தரம் தாழ்ந்து விட்டானே என்ற அவமானம் காரணமாக அம்மா என்னை பலமாக அடித்த போது , செய்யாத குற்றத்திற்கு கிடைத்த தண்டனை எனது இள மனதை மிகவும் பாதித்தது. அடுத்த ஞாயிறன்று எனது மைத்துனன் ஆபத்பாந்தவனாக உண்மை நிலையைக் கூறி குற்றச் சாட்டிலிருந்து என்னை விடுவித்தான் !

 

நான் நிரபராதி என அறிந்த பின்னர் எனது அம்மா என்னைத் தண்டித்தற்காக மிகுந்த வேதனையடைந்தார். நெஞ்சை விட்டகலாத இச்சம்பவம் எனக்கு வாழ்வில் ஒரு சிறந்த படிப்பினையைக் கொடுத்தது மட்டுமன்றி வாழ்வில் எந்தச் சூழலிலும் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்ற வைராக்கியத்தையும் ஏற்படுத்தியது !

 

---------------------------------------------------------------------------

                        ஆக்கம் + இடுகை,

                                                                          


தி.சேதுமாதவன்

ஆட்சியர்,

தமிழ்ப்புலம் வலைப்பூ

{14-11-2020}

---------------------------------------------------------------------------

 

2 கருத்துகள்:

  1. கட்டுரை முழுதும் நகைச்சுவை பொதிந்து கிடக்கிறது. தேர்ந்த எழுத்தாளராக உருவாவதற்கான வாய்ப்புகள் என் கண் முன்னே தெரிகிறது ! நல்வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு