மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

அந்நாளை நினைக்கையிலே (10) பேயன் பழம்-புட்டு, சீனி கூட்டணியே வெற்றிக் கூட்டணி !


அரிசி வடித்த கஞ்சியை சற்று வென்னீர் கலந்து உப்பு சேர்த்து அருந்தியவாறு இடையிடையே கையில் பிடித்திருக்கும் கருப்பட்டித் துண்டை நக்கிச் சுவைப்பது ஆனந்தம். உத்வேகத்தை அளிக்கின்ற சூடு பானத்தின் பொருட்டு விடுமுறை நாட்களில் நாங்கள் அரிசி வடிப்பதற்காக காத்திருப்போம் !
 
உரலில் இடித்த நார்சத்து மிகுந்த கைக்குத்தல் சம்பா அரிசித் தவிடு சுவை மிகுந்தது மட்டுமன்றி, உடலுக்கு உரம் சேர்ப்பதுமாகும் !

சிரட்டையிலான சில்லுடன் கூடிய மூங்கில் குழாயில் தயாரிக்கப் படுகின்ற "குழாய்ப் புட்டின்" ருசியே அலாதி. அவித்த சிறுபயறு, பப்படத்துடன் இணைந்த புட்டு சுவை மிக்கது மட்டுமன்றி ஐந்து மணி நேரம் பசியைத் தாங்க வல்லதாயினும், பேயன் பழம்-புட்டு ,சீனி கூட்டணியே எனக்குப் பிடித்தமான வெற்றிக் கூட்டணி !

கேரள மாநிலத்தில் புட்டுடன் கடலைக் கறி, முட்டைக்கறி, காய்கறி குருமா, மாட்டுக்கறி, சிக்கன் கறி மற்றும் அவித்த ஏத்தன் பழம் ஆகியவற்றை காலையில் கடின வேலைகளுக்குச் செல்பவர்கள் பசி தாங்கும் பொருட்டு சாப்பிடுவார்கள் !

அரிசியும் உளுந்தும் அரைத்து செய்யப்படும் வட்ட வடிவ தட்டைக் கொழுக்கட்டை சுவை மிகுந்ததாயினும், கடுகு , உளுத்தம் பருப்பு, வத்தல் மிளகு ,கறிவேப்பிலை சேர்த்து தேங்காய் எண்ணெயில் தாளித்தெடுத்த சிறு உருண்டை வடிவ அரிசிக் கொழுக்கட்டை சிறுவர்களாகிய எங்களுக்கு மிகவும் பிரியமானது. கொழுக்கட்டை அவித்த தண்ணீரையும் வயிறு நிறையக் குடித்தாலே எங்களுக்கு முழுமையான திருப்தி ஏற்படும் !

பழைய சோற்றை அளவுடன் கலந்து பச்சரிசியோடு ஆட்டுரலில் அரைத்த ஆப்பம் மறுநாள் மிருதுவாக இருக்கும். ஆப்பத்தின் மிருதுத் தன்மைக்காக மாவுடன் கள் சேர்ப்போருமுண்டு !

கள் வாங்க கடைக்குச் செல்லும் வாண்டுகள், வாங்கி வருகின்ற வழியிலேயே, பிற்கால வாழ்க்கைக்கு முன்னோடியாக சற்றே அதனை ருசிப்பதுண்டு. சீனி சேர்த்த பால் மற்றும் உருளைக்கிழங்கு மசால் கறி ஆப்பத்திற்கு சரியான இணை. இடியாப்பமும் ஆப்பமும் ஒரு அம்மா வயிற்று இரட்டை சகோதரிகள் !

உளுந்து, துவரம் பருப்பு, அரிசி, உள்ளி, வத்தல் மிளகாய், கறிவேப்பிலை,பெருங் காயத்துடன் ஆட்டுக்கல்லில் அரைத்து அளவாக உப்பிட்டு தேங்காய் சேர்த்த மாவை கல்லில் லேசாகத் தேய்த்து செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயை பரவலாக ஊற்றி கம கம மணத்துடன் முறுவலாக வார்த்தெடுக்கின்ற அடையை சாப்பிடும் மணமறியா கொரானா நோயாளி கூட அதன் ருசியில் சொக்கிப் போவான் !

 மரச்சீனிக் கிழங்கு சேர்த்து அரைத்த கிழங்கு அடையின் ருசியே தனி. ஊற வைத்த உளுந்தையும் (அரிசிக்குப் பதிலாக) கோதுமையையும் ஆட்டுக்கல்லில் நன்கரைத்து செய்யப்படுகின்ற மிருதுவான கோதுமை தோசைக்கு தேங்காய்த் துவையல் சரியான இணை !

உரலில் இடித்த ஏலம், சுக்கு, சர்க்கரை கலந்த அவல் அக்காலத்தின் சிறந்த மாலை நேர உணவு. வெளியூர் பயணம் செல்பவர்கள் இதனை தங்களுடன் எடுத்துச் செல்வது வழக்கம். அவலை சற்று ஊற வைத்த பின்னர் மல்லிப் பொடி , மிளகாய் பொடி, உள்ளி, கறிவேப்பிலை, தேங்காய்,உப்பு இவற்றுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தயாரிக்கப்படும் கலவையும் (மிக்சர்) அக்காலத்தில் மட்டுமன்றி எக்காலத்திற்குமேற்ற உணவு !

தமிழ்ப் புத்தாண்டு (சித்திரை விஷு ) என்றாலே எங்களுக்கு அவல் தான் ஞாபகம் வரும். சர்க்கரை, ஏலம், சுக்கு ,தேங்காய் கலந்த அவல் தனியாகவும் , துவையல் கலந்த அவல் தனியாகவும் வீடுகளில் தயாரிப்பார்கள். இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கையென்பதை உணவின் வாயிலாக உணர்த்துவது போன்று தித்திப்பும் காரமும் கலந்த அவல் சித்திரை விஷு நாளில் குமரி மாவட்டத்தின் பிரசித்த காலை நேர சிறப்புணவு !

அதிகாலைத் துயிலெழுந்து பூஜையறையில் கண்ணபெருமானைக் கணிகண்ட பின் குளித்து கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்து வீட்டிலுள்ள முதியோர்களிடமும் உறவுகளிடமும் கைநீட்டத்துடன் (நாணயம்) ஆசிர்வாதங்களையும் ஒருங்கே பெற்று நடக்கப் போகும் நாட்களெல்லாம் நல்லதாக நடக்க வேண்டுமென்ற பிரார்த்தனையுடனும் வாழ்த்துக்களுடனும் துவங்குகின்ற மங்களகரமான தமிழ்ப் புத்தாண்டு இன்று தொ(ல்)லைக்காட்சி பெட்டிகளுக்குள் தஞ்சமடைந்து விட்டது காலத்தின் கோலம் !

மிழகத்தில் அரிசிப் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் கோதுமையும் காய்ந்த கிழங்கும் குறைந்த விலைக்கு சந்தைகளில் சகஜமாக விற்பனைக்கு வந்ததன் விளைவாக , வீடுகளில் கோதுமை தோசையும் கிழங்குப் புட்டும் காலை நேர உணவாக அறிமுகமாயின. கிழஙகுப் புட்டு சூடாக சாப்பிட அருமையாக இருக்கும் !

இட்லிக் கொப்பரையில் மாவை சிறிது ஊற்றி அதன் மேல் அவித்த சிறுபயறு, சர்க்கரை ,ஏலம், சுக்கு கலந்த கலவையை சேர்த்து வேக வைத்து தயாரிக்கப்படுகின்ற "சினை இட்லி" சுவை மிக்கது. சிறுபயறு சர்க்கரை கலவை இட்லியின் வயிற்றுக்குள் கருவிருப்பதாலேயே தாய்மையுற்ற இட்லிக்கு அக்காரணப் பெயர் ஏற்பட்டது போலும் !

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

தி.சேதுமாதவன்.

[sethumathavan2021@gmail.com]

கூடுதல் ஆட்சியர்,

I.T.I.முகநூற் குழுமம்.

[10-11-2020]

----------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக