மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

அந்நாளை நினைக்கையிலே (09) மாங்கனியும் கம்பளிப் பூச்சி நச்சரிப்பும் !


மாம்பழக் காலங்களில் "மாம்பழம்.... மாம்பழம்... "எனக் கூவியவாறு ஓலைப் பெட்டிகளில்  சுமந்தபடி   தெருவில் செல்கின்ற வியாபாரிகளுக்கு சிறுவர்கள் சிவப்புத் கம்பள வரவேற்பளிப்பார்கள். பெண் வாடிக்கையாளர்களிடம் வணிகம் செய்ய வேண்டிய நிலையில் அவர்களது பேரங்களுக்கேற்ற வகையில் புத்திசாலித்தனமாக விலையை  நிர்ணயிப்பார்கள் !
       

பானைக்குள் வைத்திருக்கும் புளியைக் கூட விட்டு வைக்காத நாங்கள் கனிகளின் தரத்தைப் பற்றி கவலை கொள்வதில்லை, அம்மாவை விடாது நச்சரித்து மாங்கனிகளை வாங்க வைத்து விடுவோம். கூடையை இறக்கி வைத்த வியாபாரி சுவையான கனியெனச் சுயச் சான்றளித்து ருசியான மாங்கனியொன்றை  வெட்டித் தருவார். அதிசுவை மிகுந்ததாயினும் ருசித்து விட்டு "பரவாயில்லை.சுமார் ரகம் தான்" " எனச் பொய்ச் சான்றுரைத்து "என்ன விலை ?" என்று  பேரத்தைத்  துவங்குகின்ற பெண்களிடம் "ரூபாய்க்கு ஐந்தென"க் கூறுவார் வியாபாரி !


" பன்னிரண்டு கிடையாதா ?" என அடிமாட்டு விலைக்கு கேட்கின்ற பெண்களிடம் "கட்டுப்படியாகாது அம்மா "  என்று கூறி சுமையைத் தலையிலேற்றி சற்று தூரம் சென்ற பின் திரும்பி வந்து "ரூபாய்க்கு ஏழு" என்றால் தருகிறேன் என்று சுமையைத் திண்ணையில்  இறக்கியதும் துடிதுடிக்கும் எங்கள் இதயம் சற்றே சீரடைந்து நிம்மதிப் பெருமூச்சு விடுவோம் !
     

சற்று முன் ஒருவர் நீல மாம்பழம் ரூபாய்க்கு பத்து தர முன் வந்ததாக வழக்கமாகக் கூறுகின்ற ஒரு பொய்யை கூறி வைப்பார்கள் பெண்கள். அந்த மகானிடமே பழங்களை கொள்முதல் செய்திருக்கலாமே ? என்று கேட்க மனம் துடித்தாலும் விவரமான வியாபாரிகள் அதிகப்பிரசங்கித் தனமான கேள்விகளைக் கேட்பதில்லை !


மாங்கனிகள் வாங்குவதற்கு எங்களின் கம்பளிப்பூச்சி போன்ற நச்சரிப்பும் முக்கிய காரணம். செட்டிவுட்டு, செங்கவரிக்கை, நீலம்  போன்ற  தரமான மாங்கனிகள் சில சமயங்களில் வீதிக்கு வருவதுண்டு. செங்கவரிக்கை மாம்பழத்தின் மணமும் சுவையும் அலாதியானது !


தரமிக்க  மாம்பழங்களை  ரூபாய்க்கு மூன்று அல்லது நான்கிற்கு மேல் கொடுத்தால் வியாபாரிக்கு கட்டுப்படியாகாது !
     

ஆனால் கிராமத்துப்  பெண்களில் பெரும்பாலானோர் பொருளாதாரச் சூழல் மற்றும் உறுப்பினர் எண்ணிக்கை மிகுதி காரணமாக "கழுதை விட்டை கை நிறைய" என்று ரூபாய்க்கு பத்து விலையுள்ள புளி மாம்பழங்களை இரண்டு ரூபாய்க்கு வாங்கி ஏமாந்தாலும், தரமான கனிகளை வாங்க முன்வருவதில்லை. நண்பர்கள் வீட்டில் புளிசேரி  என்றாலே முந்தைய தினம்  பை நிறைய பழம் வாங்கி ஏமாந்த விபரத்தை  எளிதாகப் புரிந்து கொள்ளலாம் !


சிறுவர்களின் நச்சரிப்பைப் பார்த்து பெரும்பாலான வியாபாரிகள் தங்களுடைய பொருளின் விலையைக் குறைப்பதில்லை. சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள  மாம் பழங்களைப் பயன் படுத்தும் பழக்கம் குமரி மாவட்டத்திலுண்டு. அரிவாள் மனையின் உதவியோடு அகற்றப் படுகின்ற மாம்பழத்தின் தோலிலுள்ள  சிறு அம்சத்தைக் கூட, அம்மா தலையில் அடித்துக் கொள்வதையும் பொருட்படுத்தாது எலிகளை விடத் துல்லியமாக பல்லால் துருவி எடுத்து விடுவோம் !


மாங்கனித் துண்டுகளைத் துல்லியமாக பங்கு வகிப்பதில்  நிபுணரான எனது தம்பி தனக்கு மட்டும் ஒரு துண்டை அதிகமாக ஒதுக்கி  வைக்க ஒருபோதும் தவறியதில்லை. "உங்களைப் போன்று மாம்பழத்திற்கு சண்டை போடுபவர்கள் உலகில் எவரும் இருக்க முடியாது" என்ற அக்காவிடம் , பழனி ஆண்டவன் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுத்தியதே  மாம்பழம் தான் என்பதை மறந்து விடாதே என நாங்கள் பதிலிறுப்போம் !


நண்பன் (குஞ்சான்) முருகனின் கால் மூட்டு வீக்கத்திற்கான  காரணத்தை அவன் கூறிய போது நண்பர்கள் வீட்டிலும் இது போன்ற  "சண்டைகள் சகஜமப்பா" என  ஒரு ஆசுவாசம் !


தாமரைக்குளம், இரணியல்  ஆகிய ஊர்களிலிருந்து கருப்பட்டி பொரி, பொரி உருண்டை மற்றும் அவல் ஆகியவற்றை பெரிய பெட்டிகளில் தலையில் சுமந்தபடி வருகின்ற பெண் வியாபாரிகள் நெல்லுக்கு பண்டமாற்று முறையில் வியாபாரம் செய்வதற்கு முன்னுரிமை அளிப்பவர்களெனினும் எங்கள் வீட்டில் காசு கொடுத்து வாங்குவோம். அம்மாவின்  வழக்கமான ஒதுக்கீட்டிற்கு மேலாக , எலிகளைக் கூட ஏமாற்றி மண் பானையிலிருந்து நாங்கள் களவாடிச் செல்லும் பொரியின் அளவு அதிகம். அப்படி ஒரு அதீத ருசி கருப்பட்டிப் பொரிக்கு  உண்டு !


வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் மட்டுமே பெரும்பாலான வீடுகளில் சிற்றுண்டி தயாரிப்பார்கள். அடுத்த நாள் என்ன சிற்றுண்டி என்பதை முந்தைய நாள் சாப்பாட்டின் போதே அம்மாவை  நச்சரித்துத் தெரிந்து கொள்வோம். உணவில் காண்பிக்கின்ற அக்கறை படிப்பில் ஏன் இல்லை ? என்ற அம்மாவின் கேள்விக்கு விடை கண்டுபிடிக்க நாங்கள் ஒருபோதும் முயன்றதில்லை !

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

தி.சேதுமாதவன்,
[sethumathavan2025@gmail.cim]
கூடுதல் ஆட்சியர்,
I.T.I. முகநூற் குழுமம்.
09-12-2020
------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக