மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

வியாழன், 21 ஜனவரி, 2021

அந்நாளை நினைக்கையிலே (04) சேட்டைகள் செய்வதில் கணேசன் கில்லாடி !

மாலை நேரங்களில் ஊரிலுள்ள சிறுவர்களால் எங்கள் தெரு நிறைந்து விடும். களச்சி ( கோலி) விளையாட ஒரு கூட்டம்பம்பரம் விளையாடுவதில் ஆர்வமுள்ள ஒரு கூட்டம் என களை கட்டும். பம்பரத்திலுள்ள பலவீனமான ஆணிகளை மாற்றி வேறு தரமான ஆணியை பொருத்துவது சிலருக்கு மட்டுமே வாய்க்கின்ற ஒரு கலை !

 

கோவில் கற்சுவர்களின் இடைவெளியில் பம்பரத்தைச் செருகி சொத்தைப் பல்லைப் பிடுங்குவது போல் லாவகமாக பழைய ஆணியைப் அகற்றி புதிய ஆணியை கல்லினிடையே செருகி வைத்து சிறு கல்லின் உதவியோடு பம்பரத்தில் சரியாகப் பொருத்துகின்ற "ஆணி மாற்றுச் சிகிச்சை"யில் கைதேர்ந்தவர்கள் பாலன்கணேசன்சசி ஆகியோர் !


தரையில் ஒரு சதுரமான கட்டம் வரைந்து அதற்குள் குறிபார்த்து பம்பரம் விட இயலாதவர்களின் பம்பரங்கள் அந்தக் கட்டத்தினுள் வைக்கப் பட்டு பிரத்யேகமாகச் செய்யப்பட்ட தங்களுடைய கடைசல் பம்பரங்களால் ஆக்கர் போடுவதிலும் இரு துண்டுகளாக உடைப்பதிலும் பாலன்சசிகணேசன் ஆகியோர் கில்லாடிகள். உடைந்த பம்பரங்களுடன் அழுது கொண்டே செல்லும் சிறுவர்களுக்கு மறுமுறை இவர்களுடைய அணியில் சேர அனுமதி கிடையாது !

 

இவர்களுக்குப் பயந்தே புதிய பம்பரங்களை வைத்திருப்பவர்கள் இந்த பம்பர நிபுணர்களின் பக்கத்தில் செல்வது கிடையாது எங்கள் பம்பரங்கள் சில நொடிகள் மட்டுமே ஆடி ஓய்ந்து விடுகின்ற போது இவர்களுடைய கடைசல் பம்பரங்கள் மட்டும் முழக்கத்துடன் உள்ளங்கையில் நெடுநேரம் சுற்றிய பின்னரும்வேகம் குறையாமல் ஓசையுடன் விடாது சுற்றி ஓய்வது அதிசயமே !

 

குட்டிம்புள்(கில்லி) விளையாடுவதிலும் இவர்கள் கைதேர்ந்தவர்கள். "தள்"ளும் "புள்"ளும் என தந்தையும் மகனும் போன்ற பெரிதும் சிறிதுமான இரு கம்புகளை வைத்துக் கொண்டு இவர்கள் காட்டுகின்ற ஜால வித்தைகள் அதிசயிக்க வைக்கும். இவர்கள் குட்டிம்புள் விளையாடும்போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் தெருவில் மக்கள் நடமாட வேண்டும் !

 

தாயம்பரமபதம்பாண்டிவிளையாட்டு ,கயிறாட்டம்பல்லாங்குழிகேரம் போன்ற பெண் குழந்தைகளின் விளையாட்டுகளையும் பெருமழைக் காலங்களில் வெளியே செல்லவியலாத சந்தர்ப்பங்களில் நாங்கள் ஆடுவதுண்டு !

 

தாயம்,பரமபத விளையாட்டுகளில் தோற்று விட்டால் பொறுமையிழந்து களத்தைக் கலைத்து விடும் நல்ல பழக்கம் குடியிருந்த காரணத்தால் பலத்த நிபந்தனைகளுடனேயே பெண் குழந்தைகள் எங்களை விளையாட அனுமதிப்பார்கள் !

 

கணேசன் தனது தந்தையிடம் நாகஸ்வரமும் வாய்ப்பாட்டும் கற்று வந்தான். காலையிலும் மாலையிலும் தவறாமல் சாதகம் செய்ய வேண்டும் என்ற தந்தையின் கட்டளையை மீறியே தீருவதென சபதம் எடுத்திருந்தான் கணேசன் !

 

எனது நண்பன் ராஜுவிடம் பலசரக்கு கடையை பொறுப்பாக ஒப்படைத்து விட்டு அவனுடைய அப்பா மதிய உணவிற்குச் செல்லும் வேளையில்விளையாடுவதற்காக நாங்கள் கூப்பிட்டவுடன் புத்தரைப் போல கடையை விட்டு வெளியேறி விடுவான் ராஜு. கோபத்தின் உச்சியில் நாக்கைத் துருத்திக் கொண்டு அவனது‌ அப்பா உபயோகிக்கின்ற ஆங்கில வார்த்தைகளை "இதுவும் கடந்து போகும் " என ஏற்றுக் கொள்கின்ற ஜென் மனநிலை கொண்டவன் ராஜு !

 

கணேசனின் அப்பா மாலை நேரம் பெருமாள் கோவில் பணிக்குச் செல்லும் சமயத்திலும் காளி கோயில் பூஜைக்கு செல்லும் வேளைகளிலும் தருணம் நோக்கி காத்திருந்த மிருகக்காட்சி சாலை சிறுத்தையைப் போன்று வெளியே சாடி விடுவான் கணேசன். அப்பா வீட்டில் இல்லாத சிறு இடைவெளிகளைக் கூட சேட்டைகள் செய்வதில் உபயோகமாகச் செலவிடுவதில் கணேசன் கில்லாடி !

 

வீட்டிற்குள் சம்மணமிட்டு உட்கார்ந்து காலை லேசாக ஆட்டியபடியே "பூலோக வைகுண்ட வாசனே" என தனது சிறிய பயிற்சி நாதஸ்வரத்தில் வாசித்துக் கொண்டே எங்களைக் கண்ட குஷியில் "சித்தாடை கட்டிகிட்டு" என டப்பாங்குத்துக்குத் தாவி விடுவான் !

 

"சீவாளி"யை வாயில் வைத்து "பீப்பி "என மூன்று முறை சங்கேத ஒலி எழுப்பி வெளியே விளையாடிக் கொண்டிருக் கின்ற எங்களை நலம் விசாரிப்பது வழக்கம் !

 

"நகுமோ" என தியாகராஜ கீர்த்தனையை வாய்ப்பாட்டாகப் பாடிக் கொண்டே திடீரென "மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்" எனப் பாடி சேட்டை செய்வான். நாகஸ்வரத்திலும் வாய்ப் பாட்டிலும் கணேசனுக்கு இயல்பாகவே சிறந்த ஞானம் அமைந்திருந்தது !

 

நாலாயுத மாமாவைக் கண்டால் கணேசனுக்கு நல்ல பயமிருந்தாலும் அவர் கையால் உரிய சன்மானத்தை பெறா விட்டால் அன்றைய தினம் அவனுக்கு தூக்கம் வராது !

 

பள்ளி நாட்களில் காலையில் நாங்கள் தெப்பக் குளத்தில் குளிக்கும் போது குளிக்கும் நேரத்தை அதிகரிக்கும் பொருட்டு சோப்பு தேய்க்கும் நேரத்தைச் சேமிப்பதுண்டு. இதன் எதிரொலியாக சனிஞாயிறு விடுமுறை நாட்களில் எங்களை இரக்கமின்றி குளத்திற்கு இழுத்துச் சென்று சிவப்பு நிற தேங்காய் நார் உரு மாறி கறுத்து கரிக்கட்டையாகும் வரையிலும் அம்மாக்கள் திருவிளக்கை புளியால் தேய்ப்பது போல எங்களைத் தேய்த்தெடுப்பது வழக்கம் !

 

அன்றைய கால கட்டத்தில் வீடுகளில் கழிப்பறைகள் இல்லாத காரணத்தால் (தென்னந்)"தோப்புக்கு போகிறோம் " என்று பொய் கூறியே விடுமுறை நாட்களில் பல தடவைகள் குளத்தில் குளித்து கால்சட்டையால் தலை துவட்டுவதுண்டு. ஈரமான கால் சட்டையுடன் நடமாடுவதன் காரணமாக பின்பக்கத்தில் சொறிந்தபடித் திரிகின்ற சிறுவர்கள் அதிகம். மழைக் காலங்களில் நீர் நிறைந்த குளத்தில் குளிக்கும் போது கிடைக்கின்ற சுகமே அலாதியானது. இக்கரைக்கும் அக்கரைக்குமாக இரு தடவை நீந்துவது வழக்கம் !

 

ஆறாம் வகுப்பு செல்லும் வரை சுதந்திரமான குளியல் தான்.முற்றும் துறந்த நிலையில் மேலிருந்து சாடிக் குளிக்கின்ற எங்களைப் பார்த்து எங்களுடன் பயிலும் சிறுமிகள் சிலர் பொறாமையில் கேலி செய்ததன் காரணமாகவேண்டா வெறுப்புடன் கால்சட்டையுடன் குளிக்கின்ற கெட்ட பழக்கம் எங்களுக்கு ஏற்பட்டது. உடம்பில் புண்கள் ஏதும் இருந்தால் தேளி மீன்கள் பதம் பார்த்து விடும்  !

 

பெண்கள் குளிக்கும் நடுத்துறையை ஒட்டிய ஆண்களுக்கான ஓட்டுத் துறையில் (கோவிலில் பூஜை செய்கின்ற மேல்சாந்தி மற்றும் கீழ் சாந்திக்கான பிரத்யேக படித்துறையில் பிற்காலத்தில் அனைவரும் குளிக்கத் துவங்கி விட்டனர்) மூக்குக் கண்ணாடி அணிந்த சுமார் எழுபத்தைந்து வயதான தாத்தா ஒருவர் பெண்கள் குளிக்கின்ற பக்கத்துத் துறையில் தனது கண்களை கழற்றி விட்டு தலை நனையாமல் மிகுந்த சிரமத்துடன் மலந்து கிடந்து நீச்சலடிப்பதைக் கண்டு நாங்கள் பரிதாபப் பட்டதுண்டு. !

 

கருமமே கண்ணான தாத்தா எங்கள் பரிகாசத்தைக் கண்டுகொள்ளாமல் தனது திருப்பணியை இறைவனடி சேரும் வரையில் தொடர்ந்தார். மதுசூதன பெருமாள் திருக்கோயில் பங்குனி திருவிழா முடிந்த பின்னர் எங்களுக்கு இறுதித் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்படும் !

 

கணேசனின் தலைமையில் மதுவின் வீட்டின் பின்புறத்தில் உள்ள அத்திமர சுவட்டில் களிமண்ணாலான பெரிய சுடலை மாடன் சுவாமியை தயார் செய்வோம் !

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

தி.சேதுமாதவன்,

{sethumathavan2021@gmail.com]

ஆட்சியர்,

I.T.I. முகநூற் குழும்ம்.

{21-11-2020}

-------------------------------------------------------------------------------------

1 கருத்து:

  1. ஆறாம் வகுப்புச் செல்லும் வரை, தெப்பக்குளத்தில் நிகழ்த்திக் காட்டிய கட்டற்ற குளியல் காட்சி இப்போது நினைத்தாலும் மனக் கண் முன் படக் காட்சி போல ஓடுகிறது ! மகிழ்ச்சி ! பாராட்டுகள் !

    பதிலளிநீக்கு