மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

வியாழன், 21 ஜனவரி, 2021

அந்நாளை நினைக்கையிலே (03) மைத்துனனுக்கு மாமா கொடுத்த தண்டனை !


என்னை விட இரு வயது இளையவனான மைத்துனன் செய்யும் அளவற்ற சேட்டைகளுக்கு வித விதமான தண்டனைகளை வழங்கி அலுத்து விட்ட ஆசிரியரான எனது மாமா ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை வீட்டு முற்றத்திலுள்ள மாமரத்தில் அவனை தலைகீழாக கட்டித் தொங்க விட்டிருந்தார். வினோதமான விளையாட்டாக அது அவனுக்குத் தெரியவே கயிற்றைப் பிடித்தவாறே மகிழ்ச்சியுடன் ஆடிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த என்னை வரவேற்றான் !

 

தனக்களித்த தண்டனையைக் கூட சிரித்த முகத்துடனே ஏற்று சித்தனைப் போன்று சித்தம் மகிழ ஆடி அனுபவித்துக் கொண்டிருந்த எனது மைத்துனனுக்கு புதிதாக என்ன தண்டனை வழங்குவதென்ற குழப்பத்தில் மாமா கட்டவிழ்த்து விட்டார் !

 

கோட்டயம் உருண்டை சர்க்கரையை தனது கால் சட்டைப்பையில் இருப்பு வைத்திருந்து அள்ளித் தின்று எனக்கும் சற்று கிள்ளித் தருவான். வெல்லத்தின் உறைவிடத்தை அறியாத நான், எங்கிருந்து கிடைத்ததெனக் கேட்டதற்கு பெரிய எறும்பு ஒன்று எடுத்துச் செல்லும்போது தட்டிப் பறித்ததாகக் கூறி என்னை நம்ப வைத்தான் !

 

என்னை விட நான்கு வயது சிறுவனான எனது தம்பி சேட்டைகளின் மொத்த குத்தகை தாரர். ஒரு முறை ஓரமாக வைத்திருந்த சிறுபயறு அரைக்கின்ற வட்ட வடிவிலான "திருவை"யின் நடுவிலுள்ள இரும்புக் கம்பியின் மேல் குப்புற விழுந்த காரணத்தால் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது !

 

பக்கத்து வீட்டு ஐயப்பன் அண்ணனின் அம்மா ராசம் அத்தை எனது அம்மாவிடம் காபிப் பொடியை எடுத்து வரச்சொல்லி முதலுதவியாக கால் கிலோ பொடியைக் காயத்தின் மேல் அழுத்தி இரத்தக் கசிவை நிறுத்திய பின்னர் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார் !

 

காப்பிப் பொடியை காப்பி தயாரிப்பதற்கு மட்டுமன்றி, முதலுதவிக்கும் உபயோகிக்க லாமென்ற அனுபவ அறிவு கொண்ட ராசம் அத்தையிடம், காயத்தின் மேல் கருப்பட்டியும் ஒளக்கு பாலையும் கலந்து காப்பி போட்டு குடித்திருக் கலாமே ? என்று தம்பியின் நெற்றியில் தையலிட்டவாறே நாசூக்காக வினவினார் மருத்துவர் !

 

நான் மூன்றாம் வகுப்பு முடித்த பின்னர் சொந்த ஊரான பறக்கைக்கு குடும்பத்தைக் குடி பெயரச் செய்தார் எனது பெரிய மாமா. நான்காம் வகுப்பு முதல் பறக்கையில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தேன். நாகர்கோவில் தோழர்களை குறிப்பாக முத்துசாமியையும், உடன் பிறந்த அண்ணனாக என் மேல் பரிவு காட்டிய ஐயப்பன் அண்ணனையும் பிரிவதற்கு மனம் மிகுந்த வேதனையுற்றது !

 

இரவில் அவசர வேலைகளின் காரணமாக கடைக்குச் செல்ல வேண்டியிருந்தால் எனது வீட்டு வாசலில் நின்று "மக்கா " என அன்புடன் துணைக்கழைத்துச் செல்கின்ற அண்ணனிடமும் அன்பு நண்பன் முத்து சாமியிடமும் கண்ணீர் மல்க பிரியா விடை பெற்றேன் !

 

புதிய இடத்தில் பறித்து நடப் படுகின்ற தாவரம் மண்ணுடனும் மாறுபட்ட சூழ்நிலைகளுடன் தன்னைப் பொருத்திக் கொள்ள தேவைப்படுகின்ற கால அவகாசம் சிறுவனான எனக்கும் தேவைப்பட்டது. புதிய சூழ்நிலை மற்றும் நண்பர்களுடன் பொருத்திக் கொள்ள ஆறு மாதங்களுக்கு மேல் ஆனது !

 

(குண்டு)மணி, சாஸ்தாங் குட்டி, கிருஷ்ணன், ஸ்ரீகுமார், பூவன் பிள்ளை, ஐயப்பன், முருகன், ரவி, வள்ளிநாயகம், சண்முகம், கணேசன்,பத்மனாப பிள்ளை, பத்மநாபன் , இராமசாமி, சின்னத்தம்பி, வேலப்பன், சகாயம், தயானந்தன், ஞானதாஸ், காளிதாஸ், விஜயகுமார், இராதா கிருஷ்ணன், தாணு மாலையன் என பல புதிய நண்பர்கள் எனக்குக் கிடைத்தனர் !

 

நான்காம் வகுப்பு வரை ஆரம்பப் பள்ளியின் பழைய கட்டிடத்தில் பயின்று வந்த நாங்கள் புதிய கட்டிடப் பணிகள் துவக்கப்பட்ட காரணத்தால், மேலத்தெரு நூலகம், பஜனை மடம் ,தெற்கு தெரு பஜனை மடம் என பல இடங்களிலாக நடந்து வந்த வகுப்புகளுக்கு மாற்றப்பட்டோம். சுப்பம்மா டீச்சர், வேலாயுதம் செட்டியார் , கோலப்பன் செட்டியார், ஜெஷ்டின் , செல்லத்துரை, பாண்டி, தாணம்மாள் டீச்சர், ஆகிய சிறந்த ஆசிரியப் பெருந்தகைகளிடம் கல்வி கற்கும் பேறு எங்களுக்குக் கிடைத்தது !

 

தாயம்மாள் என்ற பாட்டி எங்கள் பள்ளியின் முன் சர்க்கரைப் பாகில் செய்யப்பட்டு காகிதத்தில் சுற்றப்பட்ட தனது சொந்த தயாரிப்பான சௌவு முட்டாய், உப்பு மிளகு கலந்த மாங்காய், நெல்லிக்காய், கொய்யாப்பழம், அச்சு வெல்லம், தேன் மிட்டாய், கடலை மிட்டாய், கல்கோனா மிட்டாய் போன்றவற்றை வியாபாரம் செய்வார் !

 

எங்கள் நண்பர்கள் தங்கள் பழைய நோட்டுப் புத்தகங்களை வீட்டிற்குத் தெரியாமல் பாட்டியிடம் விற்று மிட்டாய் வாங்குவார்கள். மிட்டாய் தயாரிப்பிற்கான மூலப் பொருட்களை உணவு இடைவேளையின் போது கடைக்குச் சென்று வாங்கிக் கொடுத்து பிட்டுக்கு மண் சுமந்த ஈசனைப் போல் மிட்டாயை பாட்டியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு மாணவர்கள் மத்தியில் பலத்த போட்டி இருந்தது !

 

அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்கள் நன்கு அறிமுகமானவர்களாகையால் சேட்டை செய்வதற்கு மாணவர்கள் தயங்கினார்கள். இதற்கு விதிவிலக்காக பத்மநாப பிள்ளை, (குண்டு) மணி ஆகியோர் அஞ்சா நெஞ்சன்களாகவே வலம் வந்தனர். கோபம் வந்தால் கல்லைக் கையிலெடுக்கும் பழக்கம் கொண்ட இவர்களிடம் தண்டப்பிரயோகம் செய்கின்ற சில ஆசிரியர்கள் கவனமாகவே நடந்து கொள்வார்கள் !

 

முற்பகல் இடை வேளையின் போதும் மதிய உணவு இடைவேளையின் போதும் நடுத் தெருவிலுள்ள சின்னத் தம்பியின் வீட்டிற்குச் சென்று ஒட்டுப் போட்ட கால்சட்டை பை நிறைய புளியுடனே திரும்புவோம். சின்னத்தம்பி வீட்டிலுள்ள இனிப்புச் சுவை மிகுந்த புளியை நாங்கள் மிகவும் விரும்பி உண்போம். !

 

பத்மநாபன், கிருஷ்ணன், ராமசாமி, (குண்டு) மணி ஆகியோர் அக்கம் பக்கத்திலுள்ள மாமரங்களிலிருந்து மாங்காய்களை கல்லெறிந்து கவர்ந்து வருவது வழக்கம். பெரிய மாமரத்தின் உச்சியில் மறைவாகத் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு மாங்காய் கூட பத்மநாப பிள்ளை , மணி ஆகிய அர்ஜுனர்களின் குறிக்குத் தப்பியது கிடையாது !

 

மாங்காயைப் பார்த்தவுடனே அருகிலுள்ள தனது வீட்டிற்கு சென்று பரல் உப்பு, வத்தல் மிளகாயை சின்னத்தம்பி எடுத்து வருவான். மாங்காயைக் கல்லால் இடித்து உப்பு, வத்தல் மிளகு சேர்த்து நீர் நிறைந்த கண்களுடன் ரசித்து த் தின்போம் !

 

கணேசனுக்கு கருப்பட்டியில் கைவிஷம் வைத்தது போல ஓட்டைக் கால் சட்டைப் பையில் கணிசமான கருப்பட்டி இருப்பில் வைத்திருந்து தவணை முறையில் தின்று கொண்டிருப்பான். சின்னத்தம்பியின் புளியுடன் கணேசனின் கருப்பட்டியையும் சேர்த்து நாங்கள் ரசித்து ருசிப்பதுண்டு !


------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை


தி.சேதுமாதவன்,

{Sethumathavan2021@gmail.com}

கூடுதல் ஆட்சியர்,

I.T.I. முகநூற் குழுமம்,

[18-11-2020]

-----------------------------------------------------------------------------------

1 கருத்து:

  1. வெல்லத்தின் உறைவிடத்தை அறியாத நான், எங்கிருந்து கிடைத்ததெனக் கேட்டதற்கு பெரிய எறும்பு ஒன்று எடுத்துச் செல்லும்போது தட்டிப் பறித்ததாகக் கூறி என்னை நம்ப வைத்தான், என்பது போன்ற வரிகள் கட்டுரைக்கு மெருகூட்டுகின்றன ! மகிழ்ச்சி ! பாராட்டுகள் !

    பதிலளிநீக்கு