மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

செவ்வாய், 1 மார்ச், 2022

அந்நாளை நினைக்கையிலே (47) சுங்குவார் சத்திரம் சுதாகர் !

 

சபரிமலை தரிசனம் முடித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பேருந்திற்காக பம்பையில் காத்திருக்கும் பெருங்கூட்டம் புழுதியை கிளப்பிக் கொண்டு வந்து நின்ற புனலூர் செல்லும் இரு சிவப்பு நிற கேரள மாநிலப் போக்குவரத்து கழகப் பேருந்துகளைக் கண்டவுடன் ஓட்டுனரது பிரத்யேக வாசல் வழியாகவும் இதர வாசல்கள் மற்றும் ஜன்னல்கள் வழியாகவும் உள்ளே நுழைய அலைமோதியது !

 

உடைமைகளைப் பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்ளுமாறு மலையாளத்திலும் மலையாளம் கலந்த தமிழிலுமான போக்குவரத்துக் கழக ஒலிபெருக்கி எச்சரிக்கையையும் மீறி முண்டியடித்த கூட்டத்தில் பக்தர்கள் வேசத்தில் ஏறிய திருடர்களும் அடங்கும் !

 

1989 ல் முதல் முறையாக சித்தப்பாவுடன் சபரிமலை அய்யப்பனைத் தரிசித்த நான் ஓரிரு மாதங்களுக்கு முன்பு அரியலூரிலிருந்து மாறுதலில் திருச்செந்தூரில் பணியேற்றிருந்தேன். பம்பையில் ஒவ்வொரு நிமிடமும் கூடிக் கொண்டிருக்கும் பெருங்கூட்டத்தைக் கண்டு அடுத்த பேருந்து ப்போதென்றறியா நிலையில் பேருந்தின் பின்பக்கம் படிக்கட்டின் மேல் கால் வைக்க கிடைத்த இம்மியிடத்தை ஒரு வழியாகத் தக்க வைத்துக் கொண்டேன் !

 

கரகாட்டக்காரன் திரைப்பட காயலாங்கடை வண்டியாகக் காட்சியளிப்பினும், மலைச் சரிவுகளில் சீரான வேகத்தில் இயக்குவதில் அனுபவம் வாய்ந்த முன்னாள் இராணுவத்தினரது சிறந்த சேவையும் சிறப்பான இயந்திரப் பராமரிப்புமே கேரள யானை வண்டிகளை பயணிகள் விரும்பக் காரணம் !

 

கதவுகள் அடைக்கப்பட்ட பின் அளவிற்கு மேலான பயணிகளுடன் இடப்பக்கம் சாய்ந்த நிலையில் புறப்பட்ட பேருந்தில் பயணச் சீட்டுகளை பெற்றுக் கொண்ட பின்னர் சகஜ நிலைக்குத் திரும்பிய பயணிகள் தரையிலும் படிக்கட்டிலுமாக அமர்ந்து சக பயணிகளிடம் தரிசன அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கையில் சோகமே உருவாக தனித்திருந்த சுதாகர் என்ற இளைஞரின் பால் எனது கவனம் சென்றது !

 

சென்னையை அடுத்த சுங்குவார் சத்திரத்தில் சொந்தமாக பேன்சி ஸ்டோர் நடத்தி வரும் சுதாகர் நண்பர்களுடன் தனியார் பேருந்தில் தரிசனத்திற்கு வந்த போது சன்னிதானத்தில் வைத்து வழி தவறி தனியாக மாட்டிக் கொள்ள நேர்ந்தது !

 

பேருந்தை தவற விட்ட அவர் குழுவின் திட்டப்படி குற்றாலத்தில் இணைந்து கொள்ளும் எண்ணத்தில் எங்களுடன் பயணித்தார். சரண கோஷம் முழங்கி வந்த அய்யப்ப பக்தர்கள் தங்களைத் தழுவிய குளிர் காற்றில் மெல்ல மெல்ல அசதியில் மயங்கினர் !

 

இடுப்பில் உடுத்திய நீல வேட்டி, கழுத்தில் துளசி மணி மாலை, துண்டு, புனலூருக்கு பயணச்சீட்டு எடுத்தது போக கால்சட்டைப் பையில் மீதமிருந்த இருபத்திரண்டு ரூபாய், கையில் இருமுடிக் கட்டு ஆகியவற்றுடன் பயணித்த சுதாகருக்கு, குற்றாலத்தில் நண்பர்களை சந்திக்கவியலாத சூழல் ஏற்படும் பட்சத்தில் ஊர் சென்று சேர மேலும் முப்பது ரூபாய் அதிகமாக தேவைப்படுமென பேச்சினூடே தெரிவித்தாரெனினும் எங்கள் எவரிடமும் நேரடியாக பணம் கோரவில்லை !

 

சிகப்பு நிறம், களையான முகம், தேவையைத் தெளிவாகத் தெரிவிப்பதில் கூச்சம் போன்ற குணாதிசயங்கள் நடுத்தர குடும்பத்திலிருந்து வந்தவரென சுதாகரை அடையாளம் காட்டியது. மனமறிய தவறேதும் செய்யவில்லையெனினும், மண்டல விரதத்தின் போது தான் அறியாமல் செய்த பிழைகளேதும் தனக்கு இந்நிலை ஏற்பட்டதற்கு காரணமாக இருக்கக்கூடுமெனவும் தொடரந்து புலம்பிக் கொண்டு வந்தார் சுதாகர் !

 

மாலை நேரம் புனலூர் நிறுத்தத்தை பேருந்து அடைந்த செய்தியை நடத்துநர் உரக்கத் தெரிவித்ததுடன் தூக்கத்திலிருந்து விழித்த பக்தர்கள் கூட்டம் தென்காசி பேருந்தை நோக்கி விரைந்தது. பேருந்தை விட்டு இறங்கிய நான், திருடர்களுக்கு அஞ்சி கால்சட்டை பைக்குள் பதுக்கி வைத்திருந்த ஐம்பது ரூபாயுடன் சுதாகரைத் தேடினேன் !

 

எனக்காகக் காத்திருக்காமல் சென்ற சுதாகரை ஒரு வழியாக தேடிப்பிடித்து அவரது கையில் காசைக் கொடுத்தவுடன், எனது முகவரியை நிர்ப்பந்தமாகக் கோரிய சுதாகருக்கு திருச்செந்தூர் அலுவலக முகவரியைக் கொடுத்தேன் !

 

மறு தினம் அலுவலகம் சென்ற நான் மஞ்சள் காமாலை பீடிக்கப்பட்டு, மருத்துவ விடுப்பில் தொடர்ந்ததால் சுதாகரால் அனுப்பப் பட்ட ஐம்பது ரூபாய் பண விடையையும் கடிதத்தையும் தாமதமாகவே பெறமுடிந்தது !

 

பதிலேதும் என்னிடமிருந்து பெறப்படாத காரணத்தால் முத்தான கவிதை வடிவிலான கையெழுத்தில் - எனது உதவியை பேருதவியாக சித்தரித்திருந்த சுதாகரின் இரு கடிதங்களையும் மருத்துவ விடுப்பு முடிந்து பணியேற்ற நான் படித்ததுடன், பதிலெழுதுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணத்தையும் விவரித்து எழுதினேன் !

 

சுதாகர் எழுதிய உணர்ச்சி பூர்வமான கடிதங்களை அடிக்கடிப் படித்து ஆனந்திக்கும் அளவிலான முதிர்ச்சியையே அன்று நான் பெற்றிருந்தேன். கையறு நிலையிலுள்ள சக மனிதனுக்கு எந்தவொரு சாதாரண மனிதனும் செய்யக்கூடிய உதவியே நான் செய்ததென்ற பகுத்தறிவு மேலிட, கடிதங்களை அசைபோடும் சிறுபிள்ளைத் தனத்தைக் கைவிட்டாலும், ஒவ்வொரு மண்டல காலமும் சுதாகரின் நினைவுகள் மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை !

 -------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

தி.சேதுமாதவன்,

(sethumathavan2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப்புலம்” வலைப்பூ,

{29-01-2022}

--------------------------------------------------------------------------