மலரும் நினைவுகள் ! என் சிந்தனையில் விளைந்த முத்துக்களின் காட்சிக் கூடம் !

வெள்ளி, 22 ஜனவரி, 2021

அந்நாளை நினைக்கையிலே (05) சுடலைமாடன் சாமியின் முன் கணேசனின் மருளாட்டம் !

 

கோடைக் காலத்தில் எங்கள் ஊர்ப் பாசனக் குளங்கள் நீர்வரத்து குறைந்து வற்றிய நிலையில் காணப்படுவதால், சாமி சிலைகள் செய்வதற்கேற்ற பக்குவமான வெண் களிமண்னை நடுக் குளத்திலிருந்து மதுவும் ராஜூவும் எடுத்து வருவர் அதைப் பக்குவமாக நீர் தெளித்து குழைத்து நாங்கள் சுடலைமாடன் சாமி செய்வோம் !

 

நீரின் மேற்பரப்பில் இலை விரித்து தண்டுடன் மேலெழுந்து மாலையில் இதழ் விரித்து மலர்ந்து நிற்கின்ற அழகிய அல்லி மலர்களைத் தண்டுடன் பறித்து வருவான் மது. குளத்தை ஆக்ரமித்து படர்ந்து கிடக்கின்ற ஒருவகை நீர்த்தாவரத்தினடிப் பகுதியில் காய்த்துக் கிடக்கின்ற முள்ளுடன் கூடிய நுள்ளிக் காயை உடைத்து உள்ளிருக்கும் சுவை மிகுந்த வெண்மையான பகுதியை நாங்கள் விரும்பிச் சாப்பிடுவதுண்டு !

 

எங்கள் கொடை விழாவின் உற்சவரான கருட பகவானின் சிற்பத்தை நான் உருவாக்க கணேசன் வண்ணம் தீட்டுவான். ஆளுக்கு இருபத்தைந்து காசுகள் வசூல் செய்து சாமிக்கு வெத்திலை, பாக்கு, பழம், சூடம், பன்னீர், சாம்பிராணி, ஊதுபத்தி, எலுமிச்சை, ஏலக்காய் , பாளையங்கோட்டை பழம் ஆகியவற்றை வாங்குவோம். தேங்காய், சர்க்கரை, கருப்புக்கட்டி,புளி,நெய், மஞ்சள் போன்றவற்றை அம்மாவுக்கு தெரியாமல் வீட்டிலிருந்து கொண்டு வருவோம் !

 

பக்கத்து வீட்டு சிறுவர்களையும் கொடை விழாவில் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொள்கின்ற காரணத்தால் செவிப்பறை கிழிகின்ற சிறப்பு மேளத்திற்கு பெரிய அளவிலான எதிர்ப்பு கிளம்புவதில்லை !


குளத்தில் குளித்து விட்டு ஈரத்துண்டுடன் புன்னகை ததும்பும் வதனத்துடன் வருகின்ற கணேசனை ராஜு கைத்தாங்கலாக பிடித்து வருவான். சுடலை மாட சாமியின் முன் துள்ளிச்சாடி அட்டகாசமாக சிரித்துக் கொண்டே கூர் மழுங்கிய வெட்டுக் கத்தியுடன் ஆடத் துவங்குவான் !

 

கணேசனது ஆட்டம் தீவிரமடைவதன் பொருட்டு நாங்கள் டப்பாக்களை மேலும் பலமாக அடிப்போம். ஆடிக் கொண்டே வேண்டியவர்க்குக் குறி சொல்வான்.பானகத்தை மனக்கண்ணில் நிறுத்தி தாகத்திற்கு தண்ணீர் கேட்டாலும் சாமிக்கு பானகம் கிடைப்பதில்லை !


ஒருமுறை சுடலைமாடன் உக்கிரமாக ஆடிக் கொண்டிருக்கும் வேளையில் கணேசனின் அப்பா நாலாயுத மாமா கம்புடன் வரவே மாடன் சாமி தனது ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு பின்புறமாக தப்பி ஓடிவிட்டது !

 

சாமியின் முன் இருக்கும் நைவேத்தியமான திருமதுரத்தையும் பானகத்தையும் ஆட்டத்தினிடையில் கோமரத்தாடி கை வைத்து விடுவதைத் தவிர்க்கும் பொருட்டு தட்டால் மூடி வைத்து கண்காணிப்போம் !

 

மாலை நேரம் மரப்பலகை ஒன்றின் இருபுறமும் தண்டயத்தை வைத்துக் கட்டி நடுவில் எருக்கு மாலை மற்றும் அல்லித் தண்டினாலான மாலைகளணிந்த கருட சாமியை நிறுத்தி டப்பா மேளக் கலைஞர்களுடனும், இருபுறமும் தீப்பந்தங்களுடனும் திருவுலா வருவோம் !

 

அடைத்த அமுல் டப்பாவின் மேற்புறம் நீள வடிவில் ஓட்டையிட்டு காணிக்கைப் பெட்டியாக்கி உடைந்த சிறு பானை உடைசல்களை அதனுள் போட்டு (காணிக்கையிடுவதை ஊக்குவிக்கும் பொருட்டு) குலுக்கிய படியே மது வருவான். பயபக்தியுடன் பக்தர்களுக்கு திருநீர் வழங்குவான் ராஜு !

 

மறுநாள் பிற்பகல் மஞ்சள் நீராடும்போது நீரை இளஞ்சூடாக்கி வேப்பிலையில் தோய்த்தெடுத்து நன்றாக உதறி நீர்த்துளிகள் ஏதுமில்லையென உறுதி செய்த பின்னரே மாடன் சாமி சிரித்த படியே மஞ்சள் நீராடும் !

 

உற்சாக மிகுதியில் மஞ்சள் நீரின் சூட்டை நாங்கள் அதிகப் படுத்தும் பட்சத்தில் வேப்பிலையில் நீரை நன்றாகத் தோய்த்து சுற்றி நிற்கின்ற எங்கள் மீது ஊற்றி தொழில்முறை கோமரத்தாடியாகவே கணேசன் மாறி விடுவதால் எவரும் அதற்கு துணிவதில்லை !

 

நாகர்கோவில் நகரில் வசித்து வந்த எனது மைத்துனனுக்கு எங்கள் ஊரும் கொண்டாட்டங்களும் மிகவும் பிடித்தமானவை. விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது எங்கள் விழாவில் கலந்துகொண்டு டப்பாவை தட்டி சிறப்பிப்பான். பத்மனாபபுரத்திலிருந்து வருகின்ற எனது தம்பியும் (சித்தப்பா மகன்) எங்கள் விழாக்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கு கொள்வான் !

 

கோடை விடுமுறையில் பறக்கைக்கு வந்து பத்து நாட்களாகி விட்ட காரணத்தால், மகனைக் காணும் ஆவலுடன் மாமா வருகை தந்துள்ள செய்தியை எனது தம்பி ஓடிவந்து என்னிடம் தெரிவித்தான் !


தனது வீட்டிற்குத் திரும்ப சற்றும் மனமில்லாத மைத்துனன், கலக்கமுற்று "தான் இங்கு இல்லை" என்று தனது தந்தையிடம் தெரிவிக்குமாறு கட்டளையிடவே எனது வீட்டிற்குச் சென்று கிளிப் பிள்ளையைப் போன்று மைத்துனனின் செய்தியை மாமாவிடம் ஒப்பித்தேன் !

 

ஆசிரியரான அவர் "பரவாயில்லை எங்கு அவன் இல்லை என்பதை மட்டும் காண்பித்தால் போதும்" என என்னிடம் நிதானமாக சொன்னார். எனக்கும் அது நியாயமாகப்படவே, மாமாவை கொடைவிழாத் திடலான மது வீட்டுக் கொல்லைப் புறத்திற்கு அழைத்து வந்தபோது, கணேசனுடன் எனது மைத்துனன் உக்கிரமாக ஆடிக் கொண்டிருந்தான். மகனுக்குத் தெரியாமலேயே ஆட்டத்தை மறைந்து நின்று ரசித்தார் மாமா !

 

நகரத்திலுள்ள வீட்டினுள் கட்டுப்பாடுகள் காரணமாக கதவடைத்து ,வெளியே செல்லவியலாத நிலையில் வீட்டினுள்ளேயே முடங்கிச் சேட்டைகள் செய்து கொண்டிருந்த மைத்துனனுக்கு கட்டுப்பாடுகளற்ற சுதந்திரமான கிராமத்து வாழ்க்கை முறையும் விளையாட்டுக்களும் சிறந்த வடிகாலாக அமைந்தது எனலாம் !

 

மைத்துனனின் ஒரு வார கால பறக்கை வாச அனுமதி நீட்டிப்பை மாமாவிடம் நானும் தம்பியும் வேண்டிக் கேட்டுப் பெற்றோம் !

--------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

தி.சேதுமாதவன்.

[sethumathavan2021@gmail.com]

கூடுதல் ஆட்சியர்,

I.T.I. முகநூற் குழுமம்

{25-11-2010}

------------------------------------------------------------------------------